தமிழக காவல்துறையில் பதவி படுத்தும் பாடு இருக்கிறதே … அப்பப்பா. சொல்லி மாளாது.
ஐபிஎஸ் அதிகாரிகள் என்றால் குறைந்த பட்சமாக சில விஷயங்கள் தவறாமல் கிடைக்கும். அவை ஒரு அலுவலகம். ஓட்டுனரோடு கூடிய வாகனம். குடியிருப்பு. சில நேர்வுகளில் பெர்சனல் பி.ஏ. இது போன்ற வசதிகள், தமிழகத்தில் எந்த இடத்தில் நீங்கள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும் உண்டு. அது மாநகர காவல் ஆணையாளர் பதவியாக இருந்தாலும் சரி. ஊர்க்காவல் படையாக இருந்தாலும் சரி. மனித உரிமை ஆணையப் பணியிடமாக இருந்தாலும் சரி.
எனக்குத் தான் குறைந்த பட்ச தேவைகள் பூர்த்தியாகி விட்டனவே. வாங்கும் சம்பளத்திற்கு வேலையைச் செய்கிறேன் ஐபிஎஸ் அதிகாரிகள் முடிவெடுத்து விட்டால், அரசியல் வாதிகள் வாலைச் சுருட்டிக் கொண்டு அடங்கி இருப்பார்கள்.
உதாரணத்திற்கு ஒரு சூழலை எடுத்துக் கொள்வோம். திமுக ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் 80 சதவிகித ஐபிஎஸ் அதிகாரிகள், மாறுதலைப் பற்றி கவலைப் படாதவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆட்சியாளர்கள், ஒரு சிலர் மீது பொய் வழக்கு போடு என்பார்கள். சிலர் மீது போடாதே என்பார்கள். இது போன்ற சட்ட விரோத உத்தரவுகளை பெரும்பாலான அதிகாரிகள் கேட்க மறுக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுவார் கருணாநிதி ? மாறுதலுக்கு எங்களுக்கு பயம் இல்லை என்று ஐபிஎஸ் அதிகாரிகள் முடிவெடுத்து விட்டனரோயானால், ஒரு சட்ட விரோத உத்தரவைக் கூட, கருணாநிதி மட்டுமல்ல, எந்த ஒரு அரசியல்வாதியும் பிறப்பிக்க முடியாது.
ஆனால், உதாரணத்துக்காகச் சொன்ன இது போன்ற நிகழ்வு கனவு தான். 2006 தேர்தல் நடந்து முடிந்த மறுநாள், தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பாகவே சத்தம் போடாமல் கருணாநிதியையும், ஸ்டாலினையும் சந்தித்த பல அதிகாரிகளை சவுக்குக்கு தெரியும். பத்திரிக்கையாளர்கள் கண்ணில் படாமல் கருணாநிதி காலில் விழுந்தவர்கள் சில பேர். ஊர் பார்க்க காலில் விழுந்தவர்கள் சில பேர்.
யூனிபார்மோடு கருணாநிதி காலில் விழுந்ததற்கான பலனாக கடந்த நாலரை ஆண்டுகளாக மாறுதல் எதுவும் இல்லாமல், அதிகாரம் வாய்ந்த ஒரே பதவியில் இருந்து வருகிறார் ஒரு அதிகாரி. ஜாபர் சேட் முயற்சி செய்து கூட அவரை தூக்க முடியவில்லை.
ஒரு நேர்மையான அதிகாரி, சவுக்கிடம் இந்த ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி பேசும் போது, நல்ல பதவி வேண்டும் என்பதற்காக கொலை கூட செய்வார்கள் இந்த அதிகாரிகள் என்று சொன்னது மிகையான வார்த்தை அல்ல என்பதை சவுக்கு தனது அனுபவத்தில் கண்டிருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையில் தற்போது திமுக அமைச்சரவையில் மந்திரியாக இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன் மீது அவர் எம்எல்ஏவாக இருந்த காலத்ற்கு உண்டான ஒரு சொத்துக் குவிப்பு வழக்கு இருந்தது. இந்த வழக்கில் 1988ல் வந்த லஞ்ச ஒழிப்புச் சட்டம் பொருந்துமா பொருந்தாதா என்று ஒரு விவாதம் வந்து, ஒரு அதிகாரி 1947ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படியும், இது குற்றம் தான் என்று அந்த வழக்கு கோப்பில் ஒரு குறிப்பு எழுதினார்.
2006 வந்தது. ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து மாற்றம் வரப்போவது உறுதி என்பது தெரிந்தும் அடுத்து நல்ல பதவியை எப்படிப் பிடிப்பது, யார் காலில் விழுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்கில் அந்த அதிகாரி எழுதிய குறிப்பை நகல் எடுத்து, ராதாகிருஷ்ணனின் தங்கக் கம்பிகள் இருவர் இருக்கிறார்கள் அல்லவா ? அவர்களிடம் கொடுத்தனுப்பி, அந்த அதிகாரி இது போல உங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். நம்ப அண்ணன் தான் உங்க மேல நடவடிக்கை இல்லாம பாத்துக்கிட்டார். அதனால் அண்ணனுக்கு நல்ல போஸ்டிங் போடச் சொல்லி தலைவர் கிட்ட சொல்லுங்க என்று சாத்தூர் ராமச்சந்திரனிடம் ஆட்சி மாறிய முதல் வாரத்திலேயே லாபி செய்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணன்.
இப்படிப் பட்ட பதவிப் போட்டியைப் பற்றியதுதான் இந்தப் பதிவு. ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியின் கனவு என்ன தெரியுமா ? சென்னை மாநகரின் கமிஷனராக ஆக வேண்டும் என்பதுதான். சென்னை மாநகர கமிஷனர் பதவி அப்படி என்ன கவுரவமான பதவியா ? மற்ற பதவிகள் எல்லாம் இந்தப் பதவியை விட கீழானதா என்றால் ஆம். கீழானதுதான். அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
சென்னை மாநகரம் மும்பை, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரம். இங்கே கோடிக்கணக்கில் பணம் எப்படிப் புழங்குகிறதோ, அதே போல பணம் தொடர்பான சிக்கல்களும் அதிகம்.
இந்தச் சிக்கல்களில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள் எல்லாம், கருப்புப் பணத்தை மூட்டையில் கட்டி வைக்கும் அளவுக்கு பணக்காரர்கள். இது போன்ற நபர்களின் நெருக்கம், கமிஷனராக இருக்கும் அதிகாரிக்கும் சாதகம். அந்த நபர்களுக்கும் சாதகம். கமிஷனருக்கு, அவர்கள் கொடுக்கும் விலை உயர்ந்த அன்பளிப்புகள் சாதகம் என்றால், அந்த நபர்களுக்கு கமிஷனரை எனக்குத் தெரியும் என்று கூறிக் கொள்வதே சாதகம்.
அடுத்த விஷயம். டாஸ்மாக் கடைகள் இரவு பத்து மணியோடு பூட்டப்பட்ட பிறகு சரக்கு கிடைக்காது என்பது பரவலாக தெரியும். அதையும் மீறி கிடைக்கிறது என்றால், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும்.
ஆனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் விடியற் காலை 5 மணி வரை சரக்கு கிடைக்கும் தெரியுமா ? புதிதாக யாராவது நட்சத்திர ஹோட்டல் பாருக்குள் நுழைந்தால் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அங்கே தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கும், கொழுத்த பணக்காரர்களுக்கும் காலை 5 மணி வரை சரக்கு தாராளமாக வழங்கப் படும். 11 மணிக்கு பாரை மூட வேண்டும் என்ற விதி நட்சத்திர ஓட்டல்களுக்கும் தானே பொருந்தும் ? எப்போதாவது, ஏதாவது நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்களில் காவல்துறை ரெய்டு என்ற செய்தியை படித்திருக்கிறீர்களா ? இருக்காது. ஏனென்றால் என்றுமே ரெய்டு நடக்காது.
ரெய்டு நடக்காமல் இருப்பதற்கு அந்த நட்சத்திர விடுதிகள் ஏதாவது செலவு செய்ய வேண்டுமல்லவா ? அது தான் சென்னை மாநகர கமிஷனரை கவனிப்பது. ஒரு ஓட்டலுக்கு தலா 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை கமிஷனருக்கு மாதந்தோறும் மாமூல் வழங்கப் படும். இது, லத்திக்கா சரண் உள்ளிட்ட அனைத்து கமிஷனர்களுக்கும் பொருந்தும். அந்த நட்சத்திர ஓட்டல்களுக்கு இந்தத் தொகை ஒரு பெரிய செலவே அல்ல. ஏனென்றால், ஒரு லார்ஜ் 500 முதல் 700 வரை சார்ஜ் செய்யும் ஓட்டல்களுக்க மாதந்தோறும் 7 லட்சம் என்பது ஒரு பெரிய செலவு அல்ல.
அடுத்து, டிஸ்கோத்தே என்று அழைக்கப் படும் இரவு மற்றும் பகல் நேர நடனங்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்த டிஸ்கோத்தேக்கள் தங்கு தடையின்றி நடப்பதற்கும், அந்த டிஸ்கோத்தேக்களில் ஏற்படும் கைகலப்புகள், மற்றும் பிரச்சினைகளைப் பற்றி செய்தி வெளியே கசியாமல் இருப்பதற்கும், 2 முதல் 4 லட்சம் வரை ஓட்டலுக்கேற்றார் போல தொகை நிர்ணயிக்கப் படும்.
அடுத்ததாக, முக்கியப் புள்ளிகள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமானவர்களோடு, நட்சத்திர விடுதிகளில் தங்குவதை கேள்விப் பட்டிருப்பீர்கள். வளசரவாக்கத்தில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடந்ததை கேள்விப் பட்டு அங்கு சென்ற விபச்சாரத் தடுப்பு போலீசார், நான்கு அழகிகளையும், ஒரு ப்ரோக்கரையும் கைது செய்தனர் என்று தினத்தந்தியில் செய்தி வெளியிடுகிறார்களே, சென்னை மாநகர போலீசார்…. ? என்றாவது நட்சத்திர ஓட்டலில் சென்னை மாநகர காவல்துறை ரெய்டு நடத்தி அழகிகளை கைது செய்தார்கள் என்று தகவல் வந்திருக்கிறதா ?
அந்த நட்சத்திர ஓட்டல்களிலும் இது போன்ற தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மும்பை, பெங்களுரு, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெண்கள் இந்த நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரவழைக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் ஐந்து நட்சத்திர விடுதியில் காவல்துறை அதிரடி சோதனை என்று செய்தி படித்திருக்கிறீர்களா ? இருக்காது. ஏனென்றால் இந்தச் சோதனைகள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் எப்பொழுதுமே நடை பெறாது. நடைபெறாமல் இருப்பதற்கு ஒரு பெரும் தொகை மாநகர கமிஷனருக்கு வழங்கப் படும்.
இது போல அனாமத்தாக சென்னை மாநகர கமிஷனருக்கு வழங்கப் படும் தொகை மட்டும் மாதம் ஒரு கோடியைத் தொடும். இது தவிர, மத்தியக் குற்றப் பிரிவில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளின் மதிப்பை பொறுத்து தொகை மாறுபடும். இதற்காகத் தான் கமிஷனர் போஸ்டுக்கு இத்தனை அடிதடி.
கமிஷனர் பதவிக்கு அடுத்தபடியாக அதிக அடிதடி இருப்பது காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்குத் தான். கமிஷனர் போஸ்டில் இருப்பது போல பல்வேறு வசதி வாய்ப்புகள் இதில் இல்லையென்றாலும் கூட, மாநில காவல்துறையின் உயர்ந்த அதிகாரி என்ற வகையில் இந்தப் பதவிக்கு கூடுதல் மரியாதை உண்டு.
தமிழகத்தைப் பொறுத்த வரை கருணாநிதி ஆட்சியில், தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளிலேயே மிக மூத்தவரை டிஜிபியாக நியமிப்பது வழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் 2006 முதல் இந்தப் போக்கு மாறியது. இதற்கு பெரும் காரணம் கருணாநிதி நிதானம் இழந்ததும், ஜாபர் சேட் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதும் என்று சொல்லுகிறார்கள்.
1971ம் பேட்சைச் சேர்ந்த கே.பி.ஜெயின் தான் லத்திக்கா சரணுக்கு முன்பாக டிஜிபியாக இருந்தார். டிஜிபி ஆக வேண்டும் என்று, அவரை விட இளையவரான கே.நடராஜன், ஆற்காடு வீராச்சாமி மூலமாக
எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அப்போது, கருணாநிதி பணியில் அனைவரையும் விட மூத்தவரான கே.பி.ஜெயினை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்கள்.
கே.பி.ஜெயினின் பதவிக் காலம் ஏப்ரல் 2010 வரை இருந்தாலும் ஜனவரி மாதத்திலேயே அவர் விடுப்பில் செல்லும் படி கட்டாயப் படுத்தப் பட்டார். அவர் விடுப்பில் சென்றதற்கான காரணம் என்னவென்று விசாரித்த போது, ஜாபர் சேட்டை மதிக்காமல் அவர் இரண்டு முறை கருணாநிதியை நேரடியாக சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
டெல்லியிலிருந்து வந்த ஒரு முக்கிய தகவலை கருணாநிதியிடம் கூற வேண்டும் என்று, கே.பி.ஜெயின் கருணாநிதியை சந்திக்கச் சென்ற போது அங்கிருந்த தள்ளுவண்டி பாண்டியன், ஜாபர் சேட்டுக்கு உடனடியாக போன் போட்டு சொல்லி விட்டார். பாண்டியனிடம் என்ன பேசினார்கள் என்று விசாரித்த போது பாண்டியனுக்கு விபரம் தெரியவில்லை. பிறகு கருணாநிதி, ஜாபர் சேட்டிடம் “என்னய்யா… ஜெயின் இப்படிச் சொல்றாரு ? “ என்று கருணாநிதியே கேட்கவும், ஜாபர் சேட்டுக்கு, இந்தத் தகவலை ஜெயின் தன்னிடம் சொல்லித் தானே கருணாநிதியிடம் சொல்லியிருக்க வேண்டும், நேரடியாக சொல்ல என்ன துணிச்சல் என்று கருவியிருக்கிறார். இதற்குப் பிறகு மற்றொரு சந்தர்ப்பத்திலும் ஜெயின் நேரடியாக கருணாநிதியை சந்தித்தது ஜாபர் சேட்டுக்கு பிடிக்கவில்லை.
இதனால் உடனடியாக கே.பி.ஜெயின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பு வளையத்தில் கொண்டு வருகிறார் ஜாபர் சேட். இந்த சமயம் பார்த்து ஆழ்வார்க்குறிச்சியில் உதவி ஆய்வாளர் ஒருவர் ரவுடிகளால் வெட்டப் பட்டு அமைச்சர்கள் கண் முன்னிலையிலேயே துடிதுடிக்க இறக்கிறார். திமுக ஆட்சியில் காவல்துறையினரின் உயிர் இவ்வளவு துச்சமாகப் போய் விட்டதே என்று கே.பி.ஜெயின் ஒரு சக அதிகாரியிடம் போனில் புலம்புகிறார். இதை ஒட்டுக் கேட்ட ஜாபர் சேட், கருணாநிதியிடம் போட்டுக் காட்டவும், கருணாநிதி கடும் கோபம் அடைகிறார். நான் போட்ட பிச்சையில் பதவியை அனுபவிக்கும் அதிகாரிக்கு என் ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல என்ன துணிச்சல் என்று உடனடியாக ஜெயினை விடுப்பில் செல்லச் சொல்கிறார்.
லத்திக்கா சரண் அடுத்த டிஜிபி ஆகிறார். கே.பி.ஜெயின் 1971 பேட்சை சேர்ந்தவர் என்றால், லத்திக்கா சரண் 1976ம் பேட்சை சேர்ந்தவர். லத்திக்கா சரண் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டவர்.
லத்திக்கா சரணை விட பணியில் மூத்தவர்கள் என்.பாலச்சந்திரன், விருமாண்டி என்று அழைக்கப் படும் ஆர்.நட்ராஜ், கே.விஜயக்குமார், எஸ்.கே.உபாத்யாய் மற்றும் வி.பாலச்சந்திரன். லத்திக்கா சரண் பேட்சை சேர்ந்த அவரை விட இளையவர்கள் போலாநாத் மற்றும் திலகவதி.
ஏப்ரலில் ஜெயின் ஓய்வு பெற்றதும் மற்ற சீனியர்களை முந்தி தான் டிஜிபி ஆக வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்துகிறார் லத்திக்கா சரண்.
2008ல் லத்திக்கா சரண் நிர்வாக கூடுதல் டிஜிபியாக இருக்கிறார். நவம்பர் 2008ல் சிபிஐ அலுவலகத்திலிருந்து வி.பாலச்சந்திரன் மற்றும் டி.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் காவலர் தேர்வில் விடைத் தாள் வெளியான விவகாரத்தில் பெரிய அளவில் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் வருகிறது. இந்தக் கடிதத்தில் கே.பி.ஜெயின் Initiate the process and complete within 4 weeks என்று குறிப்பு எழுதுகிறார்.
நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருக்கும் லத்திக்கா சரணிடம் இந்தக் கோப்பு வருகிறது. துறை நடவடிக்கை தொடங்கப் பட்டால் விரைவாக முடிந்து வி.பாலச்சந்திரனின் பெயர் க்ளியராகி, அவரும் டிஜிபி பதவிக்கு தகுதியானவராகி விடுவார் என்று, அந்தக் கோப்பை ஒரு வருடத்திற்கு மேல் கட்டி வைக்கிறார் லத்திக்கா. அதாவது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் அவர் அந்தப் பதவிக்கு தகுதியில்லாதவராம்.
என்.பாலச்சந்திரனை கருணாநிதிக்கு பிடிக்காது. ஆகையால் அவருக்கு வாய்ப்பில்லை. அடுத்ததாக உள்ள விருமாண்டியும், கே.விஜயகுமாரும், அதிமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகள் என்று அறியப் படுபவர்கள். ஆகையால் வி.பாலச்சந்திரன் வந்து விடக் கூடாது என்று லத்திக்கா சரண் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்.
மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் திலகவதி, பதவி உயர்வு பெற்று தனக்கு போட்டியாக வந்து விடப் போகிறார் என்று, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கோப்பையும் நிலுவையில் வைக்கிறார் லத்திக்கா.
உபாத்யாய் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கி பதவி உயர்வு இல்லாமல் இருப்பதால் அவர் பற்றிய பிரச்சினையே இல்லை.
எவ்வித புகாருக்கும் ஆளாகாத போலாநாத் வந்து விடப் போகிறார் என்று ஜாபர் சேட்டிடம் சென்று Jaffer, Bhola Nath is not flexible. He may not toe the government line. He is also a bit cranky என்று கூறி, தன்னை டிஜிபியாக ஆக்க வேண்டும் என்று கோருகிறார்.
இந்தத் தகவல் ஒரு டிஜிபி தன்னிடம் வந்து இப்படி பேசுகிறார் என்று ஜாபரே பெருமையடித்துக் கொண்ட விஷயம்.
ஜெயின் விடுப்பில் சென்றதும் இப்படித் தான் டிஜிபியாக ஆகிறார் லத்திக்கா. அதற்கு விசுவாசமாக தன்னை பெயருக்கு டிஜிபியாக வைத்திருங்கள் எனக்கு அதிகாரம் வேண்டாம் என்று ஓரமாக உட்கார்ந்திருக்கிறார். இன்று உண்மையில் அதிகாரம் செலுத்துவது ஜாபர் சேட்டும், கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனும் தான்.
விருமாண்டி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் லத்திக்கா டிஜிபி ஆனதை எதிர்த்து வழக்கு தொடர்கிறார். வழக்கமாக எதிர் மனுதாரர்களை பதில் அளிக்கச் சொன்ன பிறகு வழக்கை முடிவு செய்யும் தீர்ப்பாயம். இந்த வழக்கில் யாருக்கும் நோட்டீஸ் அனுப்பாமலேயே அட்மிஷன் ஸ்டேஜிலேயே தள்ளுபடி செய்கிறது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களுள் ஒருவர் சதபதி. இவர் தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர் விளையாட்டு ஆணையராக இருந்த போது, கோயம்பேடு அருகில் உள்ள SAF Games Village கட்டுமானப் பணிகளில் ஊழல் புரிந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் 1996ல் வழக்கு இருந்தது. அப்போது லத்திக்கா சரண் லஞ்ச ஒழிப்புத் துறையில் டிஐஜியாக இருந்ததையும் வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டதையும் முடிச்சு போடக் கூடாது.
இந்த சதபதி பற்றிய ஒரு கூடுதல் தகவல். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெறும் முன்னரே, தகவல் ஆணையராக வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து, அந்த நோக்கம் நிறைவேறாமல் மண்ணைக் கவ்வியதால், நிர்வாகத் தீர்ப்பாயத்தில் உறுப்பினராக பதவியேற்றார் என்பது ஒரு கூடுதல் தகவல்.
இப்படி டிஜிபி பதவியை பெற்று விட்டு பொம்மை போல ராதாகிருஷ்ணனையும், ஜாபர் சேட்டையும் அதிகாரம் செலுத்த விட்டு விட்டு லத்திக்கா சரண் என்ன செய்து கொண்டிருக்கிறார். மாதந்தோறும் ரகசிய நிதியிலிருந்து லத்திக்காவுக்கு ஒரு லட்சம் எடுத்துக் கொள்ள eligibility உண்டு என்றாலும் ஒரு பைசா கூட எடுப்பதில்லை என்று கூறுகிறார்கள். அவ்வளவு நேர்மையானவரா என்று அவசரப் பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒரு பைசா கூட எடுக்காமல் தன்னை நேர்மையானவராக காட்டிக் கொண்டு, பொம்மை போல உட்கார்ந்திருப்பதற்கு பிரதி பலனாக ராதாகிருஷ்ணனிடம் ஒரு லட்சமும், ஜாபர் சேட்டிடம் ஒரு லட்சமும் மாதந்தோறும் பெற்றுக் கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.
மாலை ஏழு மணிக்கு மேல் கேம்ப் கிளர்க் கூட உள்ளே செல்லக் கூடாது என்று உத்தரவாம். இரவு ஒன்பது மணிக்கத் தான் வெளியே வருகிறாராம். ஏழு மணிக்கு மேல் வறுத்த முந்திரியும், சிக்கன் 65ம் லத்திக்கா சரணின் டிஜிபி அலுலவக அறைக்குள் செல்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஐட்டங்களைப் பார்த்தால் சைட் டிஷ் போல இருக்கிறதே, அப்போ மெயின் டிஷ் என்ன என்றெல்லாம் சவுக்கு மாதிரி அதிகப் பிரசங்கித் தனமா கேள்வி கேட்கக் கூடாது. (லத்திக்கா மேடம், அந்த முந்திரியிலே கொஞ்சம் கேம்ப் கிளர்க்குக்கு குடுத்தாத் தான் என்ன ? ரகசிய நிதியிலேர்ந்து தானே வாங்கறீங்க ?)
இப்போது புரிகிறதா, பதவி படுத்தும் பாடு ?