தலைப்புக்கு பிறகு வருவோம். கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் மட்டுமல்லாமல், நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் வந்த செய்தி. அந்த செய்தியை எளிதான மொழியில் சொன்னால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் என்பவரை உயர் சாதியைச் சேர்ந்த யாரோ ஒரு நீதிபதி எட்டி உதைத்து விட்டார் என்பதுதான்.
கர்ண மஹாராஜா
கேட்டவுடன் பதை பதைப்பாக இருக்குமே….. ஒரு நீதிபதிக்கே இந்த கதியா… அய்யகோ…… நெஞ்சு பொறுக்குதில்லையே…. என்று தோன்றுமே…. அவசரப் படாதீர்கள். வெளியிலிருந்து பார்த்தால் இப்படித்தான் தோன்றும். நீதிமன்ற வட்டாரத்துக்குள்ளே இருந்து பார்த்தால் விஷயமே வேறு.
கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக இருக்கும் சி.எஸ்.கர்ணன் என்பவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவருக்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர், விசாரணை நடத்தும் போது முழுமையான ஆதாரங்களை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். எதற்கான ஆதாரங்கள் என்றால், அவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை அவமானப் படுத்தி விட்டார்கள் என்று கூறுகிறார்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும் அவமானங்கள் என்ன என்பது கிராமங்களில் வசித்து பழகியவர்களுக்கு தெரியும். வாயைத் திறந்தாலே “பறப்பய மாதிரி நடந்துக்காத” என்றுதான் பெற்ற பிள்ளைகளைக் கூடத் திட்டுவார்கள். அதாவது, இருப்பதிலேயே கேவலமானவர்கள் அவர்கள்தானாம். மேலவளவு படுகொலையை எடுத்துக் கொண்டீர்களேயானால், ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவன் பஞ்சாயத்து தலைவராக, அதுவும் ஒரு தனித் தொகுதியில் ஜெயித்து விட்டானே என்ற ஒரே காரணத்துக்காக நடந்த கொலை அது. இது போல சம்பவங்களை பட்டியலிடத் தொடங்கினால் தலித் சமுதாயத்தினர் மீதான வன்கொடுமைகளுக்கு எல்லையே கிடையாது. இந்த கணம் வரை தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது.
அப்படியே விட்டு விடுங்கள். நீதிபதி கர்ணன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். கர்ணனின் வரலாறை எடுத்துக் கொண்டீர்களேயென்றால் படிக்கும் உங்களுக்கே கண்ணீர் வரும். (ம்ஹூம்.. ம்ஹூம்.. அழுகை பாஸ்) அவர் தான் உண்டு தன் வழக்கறிஞர் தொழில் உண்டு என்று சிவனே என்று இருக்கையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப் படுகிறார் நீதியரசர்களுக்கெல்லாம் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன். அவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் போது, அவரது தாயாரின் உடல்நிலை மோசமாகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள தானாக முன் வந்து வழக்கறிஞராக இருந்த கர்ணன் வருகிறார்.
எனக்கு இது ஒரு சத்திய சோதனை சார்…. சத்திய சோதனை……
இரவும் பகலும், கடலூர் மாவட்டத்தில் தன்னைப் பெற்றெடுத்த தாயருக்கு கொடுக்காத பாசத்தை பொழிகிறார். தலைமை நீதிபதியின் தாயாரல்லவா ? விளையாட்டா ?
இதனால் மனமகிழ்ந்த அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். எனக்கு, உயர்நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு கவுரவமான பதவி கொடுங்கள் என்று கேட்கிறார். கவுரவமான பதவி என்ன…… உன்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக்குகிறேன் பார் என்று கர்ணனை உயர்நீதிமன்ற நீதிபதியாக்குகிறார். இதுதான் கர்ணன் நீதிபதியான வரலாறு என்று கூறுகிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.
சரி. இப்போது கர்ணன் அவர்கள் (மரியாதை கொடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் பாஸ்…..) கொடுத்த புகாரில், ‘நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு நான் சுதந்திரமாக நீதிப் பரிபாலனம் செய்து வந்தேன். ஆனால், இது சில நீதிபதிகளுக்கு பிடிக்கவில்லை. சில நீதிபதிகள் ஒரு குழுவாகச் சேர்ந்து (group) எனக்கு எதிராக சதி செய்து என்னை வீழ்த்த வேண்டும் என்று சதி செய்கின்றனர். என்னை பலிகடாவாக்கி அதன் மூலம் நீதித்துறைக்கே களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம். இன்னும் குறிப்பாக சொல்லப் போனால், எனது சொந்த ஊரில் இரண்டு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளாமல் தடுக்கப் பட்டேன் (என்ன நிகழ்ச்சி சார், டாஸ்மாக் பார் திறந்து வைக்கிறதா ?)
இன்னும் சொல்லப் போனால், சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சி. ஒரு நீதிபதி எனக்கு அருகில் அமர்ந்திருந்தார். காலை மாற்றிப் போடுவது போல, வேண்டுமென்றே என்னை உதைத்தார். அது மட்டுமல்ல. என் பெயர் எழுதி என் சேரின் கைப்பிடியில் ஒட்டியிருந்த பெயர் ஸ்லிப்பை சேரிலிருந்து கிழித்து அவர் சேரின் கீழே ஒட்டினார்.
இன்னொரு நிகழ்ச்சியில், குடியரசு தின நிகழ்ச்சியில், என் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு நீதிபதி என்னை வெறுப்பேற்ற வேண்டுமென்று என் நாற்காலியை ஆட்டிக் கொண்டே இருந்தார்.”
அய்யோ.. என் கால்ல யாரோ ஒதச்சுட்டாங்களே…… (ஜட்ஜு சார்… கைல இருக்கற ப்ரேஸ்லட்ட புடுங்காம உட்டாங்களேன்னு சந்தோஷப்படுங்க)
இதுதான் நீதியரசர் கர்ணன் தேசிய தாழ்த்தப் பட்டோர் உரிமை ஆணையத்திடம் அளித்த புகாரின் சாரம். இந்தப் புகாரை நீதிபதி கர்ணன் செப்டம்பர் மாதத்திலயேயே அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் இன்று தனது சேம்பரில் செய்தியளர்களை நேரடியாக சந்தித்து டிவிக்கு வேறு பேட்டியளித்தார் கர்ணன். அந்தப் பேட்டியில், அவர் “சென்னை உயர்நீதிமன்றத்தில் சில குறுகிய மனம் படைத்த நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்கள் சில வழக்கறிஞர்களையும் தூண்டி விடுகிறார்கள். அந்த நீதிபதிகளின் பெயர்களை நான் தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் விசாரிக்கும் போது சொல்வேன். உரிய விசாரணை நடத்தப் பட வேண்டும். இன்னும் பல சம்பவங்கள் உள்ளன. (என்ன சார் உங்க பல்பத்த புடுங்கிட்டாங்களா ?) இத்தனை நாட்களாக நான் அமைதியாக இருந்ததன் காரணம், நீதித்துறையின் மாண்பை காக்க வேண்டும் என்பதற்காகவே… ஆனால் என்னால் இப்போது பொறுக்க முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி சொல்கின்றேன்.
எனக்கு முன்னாலும் சில நீதிபதிகள் என்னைப் போலவே அவமானப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் பி.டி.தினகரன், அஷோக் குமார், கனகராஜ் போன்றோர். அவர்களுக்கும் தங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு விடுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் நீதித்துறையின் மாண்பை காப்பதற்காக அமைதி காத்திருக்கிறார்கள்.”
இதையெல்லாம் படித்தவுடன், என்ன கொடுமை சரவணன் இது…… என்றுதான் உங்களுக்குத் தோன்றும்.
இதன் பின்னணி என்ன என்று பார்ப்போம். ஒரு 15 நாட்களுக்கு முன்னதாக ஒரு தகவல் வந்தது. வெளி உலகத்துக்கு தெரியும் முன்பாகவே சவுக்குக்கு வந்தது. நீதிபதி கர்ணன் மீது, சிபிஐ விசாரணை என்று. விசாரித்துப் பார்த்ததில், அது போல எந்த விசாரணையும் இல்லை என்பது தெரிய வந்தது. பிறகு என்னவென்று விசாரித்தால், நீதிபதி கர்ணன் ஜாமீன் வழங்கும் பிரிவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த போது, ஜாமீன் வழங்குவது தொடர்பாக ஒருவரிடம் பேரம் பேசும் போது, அவர் அந்த பேரத்தை முழுமையாக ரகசிய வீடியோவில் பதிவு செய்து, அதை தலைமை நீதிபதியிடம் கொடுத்து விட்டார் என்றும், அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமை நீதிபதி உடனடியாக கர்ணனை அழைத்து விடுமுறையில் போகச் சொன்னார் என்பதும் தான் செய்தி. அதன் அடிப்படையில் கர்ணனும் விடுப்பில் சென்று விடுகிறார்.
இந்த சம்பவம் நடந்த பிறகு, நீதிபதி கர்ணன், சென்னை உயர்நிதிமன்றத்தில் உள்ள தலித் வழக்கறிஞர்களை அழைத்துள்ளார். இதில் தலித் அல்லாத, பல நீதிபதிகளுக்கு இடைத் தரகராக (ப்ரோக்கர்) உள்ள யானை ராஜேந்திரன் என்பவர் முதன்மையானவர். அவர்களை அழைத்து “பாருங்கள், ஒரு தலித் நீதிபதியை….. எப்படி வடநாட்டைச் சேர்ந்த ஒருவர் (தலைமை நீதிபதி) பழி வாங்குகிறார். இதைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா ….. ?” என்று ஆவேசப் படுகிறார். இதைக் கேட்டதும் தலித் வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், கவலைப் படாதீர்கள் என்று ஒரு கூட்டமாகச் சென்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியைச் சந்திக்கிறார்கள். அவரை மிரட்டும் விதமாக “மைலார்ட் (மரியாதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. நடத்தைதான் சரியில்லை) ஜஸ்டிஸ் கர்ணனுக்கு திருப்பி வேலை கொடுத்துடுங்க. இல்லைன்னா… இது கம்யூனல் ப்ராப்ளமா ஆகும்” என்று கூறுகிறார்கள். தலைமை நீதிபதி அவர்களை சமாதானப் படுத்தும் விதமாக பதில் சொல்லி அனுப்பி விட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நடந்த அத்தனை விஷயங்களையும் அறிக்கையாக அனுப்பியதோடல்லாமல், தன்னை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறேன் என்று மிரட்டிய வழக்கறிஞர்கள் பங்கேற்ற வீடியோவையும் அனுப்பியுள்ளார்.
பணத்த வாங்கி இந்த டேபிள் ட்ராயர்லதான் வச்சேன்… அதப் போய் வீடியோ எடுத்துட்டான்
இதையறிந்த நீதிபதி கர்ணன் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கிறார். இனி சும்மா இருந்தால் நம் வேலையைக் காலி செய்து விடுவார்கள் என்று உணர்ந்த கர்ணன், இதைச் சாதிப் பிரச்சினையாக திரித்தால் மட்டுமே தாம் தப்பிக்க முடியும் என்று முடிவெடுக்கிறார்.
அதையடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் சீனியர் கரஸ்பாண்டென்ட்டை தன் அறைக்கு அழைத்துப் பேசுகிறார். அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.
மறுநாள், டைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்கத்தில், “சாதி ரீதியாக ஒடுக்குமுறை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகார்” என்று செய்தி வெளியாகிறது. அந்தச் செய்தியில் நீதிபதி கர்ணனை ஷு காலால் உதைத்தது, கிள்ளியது, சொரிந்தது, பெயர் ஸ்டிக்கரை கிழித்தது என்று கர்ணனின் கர்ண கொடூர பொய்களை முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இந்த செய்தி மறுநாள் இந்து நாளேட்டிலும் பிரதானமாக வெளியிடப் பட்டிருந்தது. வழக்கமாக சென்னை உயர்நீதிமன்றச் செய்திகளை எடுக்கும் அந்த செய்தியாளர் வராத நிலையில், இந்தச் செய்தியை மற்றொரு செய்தியாளர் வெளியிட்டிருப்பது, இச்செய்தியில் உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது.
முதலில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவர்கள், ஒரு சக நீதிபதி தலித் என்பதற்காக தங்கள் வெறுப்பை வெளிக்காட்ட வேண்டுமென்றால் மிக மிக எளிதாக பல காரியங்களைச் செய்ய முடியும். இப்படி, ஒரு நீதிபதி பக்கத்தில் உட்காரும்போது ஷு காலால் இடித்துத்தான் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவசியமே இல்லை. அதுவும், ஒரு பெயர் அடங்கிய ஸ்டிக்கரை கிழித்து தரையில் போட்டு நசுக்கிறார்கள் என்பது நம்பும் படியாக இல்லை. மிக மிக ரகசியமாக யாருக்கும் தெரியாமல் ஒரு பெயர் ஸ்டிக்கரை நசுக்க முடியும்தான். இப்படிப் பட்ட ஒரு செயலைச் செய்யும் அளவுக்கு இழி மனம் படைத்த நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருப்பதாக சவுக்குக்கு தெரியவில்லை. அப்படி இருப்பார்க ளேயானால், அவர்கள் பெயரை வெளியிடாத வரை கர்ணன் சொல்வது பொய்யுரையாக மட்டுமே இருக்க முடியும். மேலும், கர்ணனின் இந்த புகாரால், அத்தனை சென்னை உயர்நிதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளின் மீதும் சந்தேகப் பார்வை விழும் என்பது யதார்த்தம் அல்லவா ? ஒரு நபரின் பழியுரைக்காக அத்தனை நீதிபதிகளும் கூனிக் குறுகி நிற்க வேண்டுமா ?
நீங்களே பாருங்க.. ஒரு சாமி விடாம எல்லா சாமியையும் கும்புட்றேன்….
ஆனா என்ன அந்த ஜட்ஜு ஒதைக்கும்போது எந்த சாமியும் காப்பாத்துல
அடுத்தபடியாக கர்ணன் சொல்லியிருக்கும் புகார்கள், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரியன. அப்படி ஒரு நீதிபதி நடந்து கொண்டிருப்பாரேயானால், அவர் மீது, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யும் அளவுக்கு மிக மிக சீரியஸான குற்றம். ஏப்ரல் 2009ல் இந்தச் சம்பவங்கள் நடந்தன என்று சொல்லும் கர்ணன், இத்தனை நாள் ஏன் அமைதி காத்தார் என்பது யாருக்கும் புரியாத ஒரு புதிர். கர்ணன் சொல்லும் சமாதானம் என்னவென்றால், நீதித்துறையின் மாண்பைக் காப்பதற்காக இத்தனை நாள் அமைதியாக இருந்தாராம். இப்போது கர்ணன் இந்தப் புகார்களை வெளிப்படையாக தொலைக்காட்சிக் கேமராக்களின் முன்னால் சொன்ன பிறகு, நீதித்துறையின் மாண்பு உயர்ந்து விட்டதா ?
கர்ணன் அவர்களே…. நீங்கள் யார்… என்ன செய்து கொண்டிருக் கிறீர்கள் என்ற எல்லா விபரங்களும் எங்களுக்குத் தெரியும். இன்று சொன்னீர்களே…. எனக்காக எந்த வழக்கறிஞர்களும் போராட்டம் நடத்த வேண்டாம்…. நான் என் சொந்த முயற்சியில் இந்தப் பிரச்சினையில் வென்று காட்டுவேன் என்று….. நீங்கள் யாரை அணுகி உங்கள் சார்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தீர்கள் என்பதும், யார் யாரை அணுகி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும், யார் சொல்லி இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தீர்கள் என்பதும் நன்றாகத் தெரியும்.
தலித் என்று இன்று உங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் நீங்கள், தலித்துகள் மீதான வன் கொடுமைகள் குறித்த வழக்குகள் வந்த போது ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகவே நின்றீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் படும் வழக்குகளுக்கு முன் ஜாமீன் வழங்க சட்டத்தில் இடம் இல்லாத காரணத்தால், அந்த வழக்கில் சிக்கிய ஆதிக்கச் சாதியினர், சட்டத்தை வளைத்து, உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டப் பிரிவு 482ன் கீழ், கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிடும் நூதனமான ஒரு உத்தரவைப் பெற்று அவ்வழக்கில் இருந்து தப்பிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. கர்ணன் அவர்கள் 482 தொடர்பான வழக்குகளைக் கையாளும் நீதிமன்றத்தில் அமர்ந்து கொண்டிருந்த போது, மற்ற நீதிபதிகளைப் போலவே, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைப் புரிந்த ஆதிக்க சாதியினர் தப்பிக்க உத்தரவுகளைப் பிறப்பித்தவர் என்பதையும் மறுக்க முடியாது.
தலித் நீதிபதிகளை விட, தலித் அல்லாத நீதிபதிகள் தலித்துகளின் மீது மிக மிக கருணையாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். இன்று சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரைப் போல நடிக்கிறீர்களே….. என் மீதான புகார்களுக்கு வெளிப்படையான விசாரணைக்கு நான் தயார் என்று அறைகூவல் விடும் கர்ணன் அவர்களே… வீடியோ ஆதாரத்தை நீதிமன்றத்தில் உடைத்து விடலாம் என்ற நம்பிக்கை தானே உங்களை இப்படி பேச வைக்கிறது…. ?
ராசாவும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியதும் தன்னை தலித் என்பதால் அலைகழிக்கிறார்கள் என்றுதானே சொன்னார் ? ஜாபர் சேட் கூட, சிறுபான்மையினர் என்ற போர்வையைப் போர்த்தி தப்பிக்க பார்க்கவில்லையா ? பி.டி.தினகரன் தலித் என்று தப்பிக்க முயலவில்லையா ? இந்த பாட்டி வடை சுட்ட கதையை நீங்கள், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்.
நீங்கள் சொல்லும் இந்த சிலுவையில் அறையப்பட்ட தலித் என்ற கதையை உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, உங்களுக்கு உதவினால் நாளை நீங்கள் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுப்பீர்கள், அதனால் நிறைய சம்பாதிக்கலாம் என்று அலையும் வழக்கறிஞர்களிடம் சொல்லுங்கள்.
திரும்பி எனக்கு பெயில் போர்ட்போலியோ குடுங்க. வாயத் தொறக்கவே மாட்டேன்.
இந்திய நீதித்துறை வரலாற்றில், ராமசாமி, பி.டி.தினகரன், சவுமித்ரா சென்னை அடுத்து, பதவி நீக்கம் செய்யப் படப் போகும் நீதிபதியாக நீங்கள் ஆகும் நாள் வெகு தூரம் இல்லை. மறந்து விடாதீர்கள்.
உங்களுக்கு சொல்லிக் கொள்வதற்கு சவுக்குக்கு பழைய பாடல் மட்டும்தான் நினைவுக்கு வருகிறது.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…..
வல்லவன் வகுத்ததடா…. கர்ணா……
வருவதை எதிர்கொள்ளடா…