கடந்த சில நாட்களாக விக்கிலீக்ஸின் நிறுவனர், ஜுலியன் அசாஞ்சை அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகள் என்ன பாடு படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
2006ல் தொடங்கப் பட்ட விக்கிலீக்ஸ், இது வரை உலக அரசாங்கங்கள் பலவற்றை ஆட்டங் காண வைத்திருக்கிறது. உலகத்திற்கு நாகரீகத்தையும் மனித உரிமைகளையும் போதிக்கும் அமெரிக்கா க்வென்டனமோ பே தீவில் 779 கைதிகளை சித்திரவதை செய்து, கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது விக்கிலீக்ஸ்.
பெரு நாட்டு அரசியல்வாதிகளின் ஊழல்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்த தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டது. காங்கோ நாட்டில் அமைதியை நிலைநாட்டச் சென்ற ஐ.நா அமைதிப் படை குழந்தைகளையும் பெண்களையும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான ஆதாரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. கொலம்பிய நாட்டில் நடைபெற்ற கொலைகளையும், ஐவரி கோஸ்ட் பகுதியில் சுற்றுச் சூழலை பாதிக்கக் கூடிய ரசாயன நச்சுக் கழிவுகள் கொட்டப் படுவதையும், விக்கிலீக்ஸ்தான் வெளியிட்டது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக விக்கிலீக்ஸ் டிப்ளமாட்டிக் கேபிள்கள் எனப்படும், அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் இருந்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பப் படும் ரகசிய கேபிள்களை வெளியிட்டதுதான் அமெரிக்காவை கடுஞ்சினம் கொள்ள வைத்தது.
ஒவ்வொரு நாடுகளைப் பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும் அமெரிக்கா எத்தனை இளக்காரமான கருத்தை வைத்திருந்தது என்பதையும், இந்திய அரசியல் தலைவர்கள் எப்படி முட்டாள்த்தனமாக அமெரிக்கர்களிடம் உளறியிருக்கிறார்கள் என்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தியது. இந்த ரகசிய கேபிள் வெளியீடுகள் அமெரிக்க அரசாங்கத்தை அதிர்ச்சி அடைய வைத்தன.
அமெரிக்க கேபிள்கள் வெளியானதும், அமெரிக்க அரசாங்கம் விக்கிலீக்ஸ் மீது நவம்பர் 2010ல் கிரிமினல் நடவடிக்கை தொடர்ந்தது. அமெரிக்க துணை அதிபருக்கான தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர் சாரா பாலின், விக்கிலீக்ஸ் அல் கொய்தாவைப் போல வேட்டையாடப் பட வேண்டும் என்றார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜுலியன் அசாஞ்சை கொலை செய்ய வேண்டும் என்று 30 நவம்பர் 2010ல் அழைப்பு விடுத்தனர். மற்றொரு எம்.பி விக்கிலீக்ஸை தீவிரவாத இயக்கமான அறிவிக்க வேண்டும என்றார். டிசம்பர் 1 அன்று அமேஸான் இணைய தளம், விக்கிலீக்ஸை தரவேற்றுவதை நிறுத்தியது. அதே நாளில், ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் செய்தி நிகழ்ச்சியை நடத்தும் பில் ஓ ரீலி, ஜுலியன் அசாஞ் இருக்கும் இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, பே பால், போஸ்ட் பைனான்ஸ், விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் விக்கிலீக்ஸுக்கு தங்கள் சேவைகளை நிறுத்தின. செர்வர் ஸ்பேஸ்களை வழங்கும், எவ்ரிடிஎன்எஸ் தனது சேவையை நிறுத்தியது.
விக்கிலீக்ஸின் செயல்பாடுகளுக்கு மிக முக்கிய காரணியாக விளங்குபவர் ஜுலியன் அசாஞ் என்ற விஷயத்தை உணர்ந்த அமெரிக்க அரசாங்கம், ஸ்வீடன் அரசின் உதவியுடன், அசாஞ்சை ஒரு பாலியல் வழக்கில் சிக்கவைக்க முயற்சிக்கிறது.
அந்த வழக்கை எடுத்துக் கொண்டால் அது ஒரு வினோதமான வழக்கு. 2010 ஆகஸ்ட் 11ல் ஸ்டாக்ஹோம் நகருக்கு ஒரு விரிவுரைக்காக சென்ற அசாஞ் அன்று இரவு சாரா என்ற ஒரு பெண்ணோடு தங்குகிறார். அந்த சாராவோடு அசாஞ்சுக்கு ஈமெயில் மூலம் நட்பு இருந்திருக்கிறது. அந்த சாரா, தானாக முன்வந்து, அசாஞ்சை சந்தித்து பேசியிருக்கிறார். அன்று இரவு சாரா அசாஞ்சோடு தங்குகிறார். அவர்கள் உடலுறவு கொள்கின்றனர். அதன் பிறகு ஒரு பார்ட்டிக்கு செல்லும் சாரா, பிறகு ட்விட்டரில், Sitting outside … nearly freezing, with the world’s coolest people. It’s pretty amazing!’ என்று ட்வீட் செய்கிறார். இந்த ட்விட்டர் பதிவை பிறகு சாரா அழிக்க முயற்சி செய்து தோற்றிருக்கிறார்.
அதற்கு மறுநாள் அசாஞ்சை ஜெஸ்ஸிகா என்ற பெண் சந்திக்கிறார். அசாஞ்சும் ஜெஸ்ஸிகாவும் டீப் சீ என்ற திரைப்படத்துக்கு செல்கிறார்கள். பிறகு பிரிந்து செல்கிறார்கள்.
மறுநாள் ஜெஸ்ஸிகா அசாஞ்சை சந்திக்க வேண்டும் என்று கேட்கிறார். என்கோபிங் என்ற இடத்தில் உள்ள ஜெஸ்ஸிகா வீட்டுக்கு, அசாஞ்சும் ஜெஸ்ஸிகாவும் செல்கின்றனர். ஜெஸ்ஸிகாவே இருவருக்கும் டிக்கெட் எடுக்கிறார். அங்கே ஜெஸ்ஸிகா வீட்டில் இருவரும் உடலுறவு கொள்கின்றனர்.
ஜெஸ்ஸிகா அசாஞ்சை ஆணுறை அணியச் சொல்கிறார். ஆனால் அசாஞ் அதற்கு மறுக்கிறார். மறுநாள் விடியற்காலை மீண்டும் உடலுறவு கொள்கின்றனர். மறுநாள் காலையில் இருவரும் சென்று காலை உணவு உண்கின்றர்.
இந்த இரு பெண்களுடனான அசாஞ்சின் உறவு தனித் தனியாக நடக்கிறது. அசாஞ் ஸ்டாக்ஹோம் சென்ற பிறகு, சாராவும், ஜெஸ்ஸிகாவும் பேசிக் கொள்கின்றனர். இருவரும் சேர்ந்து, அசாஞ் தங்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதாக ஒரு முடிவுக்கு வந்து, இருவரும் ஸ்டாக்ஹோம் காவல்நிலையம் சென்று அசாஞ் மீது என்ன புகார் கொடுக்கலாம் என்று விவாதிக்கிறார்கள். காவல்நிலையத்திலிருந்த அந்த பெண் அதிகாரி, இருவரும் பாலியல் வன்புணர்சசிக்கு உள்ளாகியதாக முடிவுக்கு வருகிறார்.
இந்தப் புகார் குறித்து, அசாஞ் இருவரோடும் விருப்பத்தோடே உடலுறவு கொண்டதாக தெரிவிக்கிறார். மறுநாள் மாலை அசாஞ்சை காவல்துறை தேடுகிறது. அதற்கு மறுநாள் பத்திரிக்கைகளுக்கு அசாஞ்ச இரு பெண்களை கெடுத்து விட்டார் என்று தகவல் அனுப்பப் படுகிறது. சாரா பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, முதலில் சம்மதத்தோடு தொடங்கிய உடலுறவு பிறகு வன்புணர்ச்சியாக மாறியது என்கிறார்.
செப்டம்பர் 2010ல் இந்த வழக்கு வன்புணர்ச்சி வழக்காக மாற்றப் பட்டு, அசாஞ்சுக்கு எதிராக சர்வதேச வாரண்ட் பிறப்பிக்கப் படுகிறது.
சுவீடிஸ் உச்ச நீதிமன்றம், அசாஞ்சுக்கு எதிரான வாரண்டை ரத்து செய்ய மறுத்தது.
இதற்குள் அசாஞ் லண்டன் சென்று விட்டிருந்தார். அவருக்கு எதிராக இன்டர்போல் மூலமாக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப் படுகிறது. லண்டன் போலீஸ் முன்பு சரணடைந்த அசாஞ் வீட்டுக்காவலில் வைக்கப் படுகிறார். அவரை ஸ்வீடன் நாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று லண்டன் உயர்நீதிமன்றத்தில் அசாஞ் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது.
இதை எதிர்த்து அசாஞ் உச்ச நீதிமன்றம் செல்கிறார். இதுதான் தற்போதைய இந்த வழக்கின் நிலைமை. ஸ்வீடன் நாட்டில் உள்ள அந்த வழக்கை அசாஞ் எதிர்கொள்ளலாமே என்ற கேள்வி எழும். ஸ்வீடன் நாட்டுக்கு அசாஞ் அனுப்பப் பட்டால், அங்கிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டு ராணுவ ரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றத்துக்காக நிச்சயம் மரண தண்டனை விதிக்கப் பட்டு கொல்லப் படுவார். சதாம் உசேனுக்கு நேர்ந்தது ஞாபகம் இருக்கிறதா ?
மனித உரிமைகள் அதிகமாக மதிக்கப் படுகிறது என்றும் நாகரீகம் வளர்ந்து நாடுகள் என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் நாடுகளின் நடத்தையை பார்த்தீர்களா ?
அரசுகள் என்றுமே தங்களை எதிர்த்து கலகக் குரல்கள் எழுப்புபவர்களை விரும்புவதில்லை. வர்க்க மோதல்கள் உச்ச கட்டத்தை அடைந்து சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்ட போது, ஆளும் வர்க்கம் தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக உருவாக்கிய அமைப்பே அரசு என்கிறார் ஏங்கெல்ஸ். அரசு என்பது வெறும் ரா ணுவ அதிகாரம் மட்டுமல்ல, சிறைகள், மிரட்டல்கள், என்று அத்தனையையும் அடக்கியதே அரசு. ராணுவமும், காவல்துறையும் அரசு அதிகாரத்தின் உறுப்புகள். தொடக்கம் முதலாகவே அரசு வன்முறையின் வடிவமாகவே இருந்து வருகிறது. என்கிறார் ஏங்கெல்ஸ்.
தோழர்.லெனின், “ உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காக உருவானதே அரசு என்ற அமைப்பின் நோக்கம். சமுதாயத்தில் அதிகாரம் மிக்கவர்களும், பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்களும் அரசு என்ற அமைப்பின் அங்கமாக இருப்பதால், ஒடுக்கப் பட்ட மக்களை மேலும் ஒடுக்குவதற்கு அரசு என்ற அமைப்பு பயன்படுகிறது. அந்த கால அரசுகள் அடிமைகளை அடக்கி ஒடுக்க பயன்பட்டதென்றால், நவீன அரசு, உழைப்பாளி மக்களை அடக்கி ஒடுக்க பயன்படுகிறது.
இருப்பதிலேயே மிகச் சிறந்த வடிவம் பெற்ற அரசு ஜனநாயக அரசு என்று அழைத்துக் கொள்கிறது. முதலாளித்துவத்தின் நவீன வடிவமே ஜனநாயக அரசு. மூலதனம் தனக்கான அடைக்கலமாக ஜனநாயக அரசை பார்க்கிறது. அந்த அரசு அதிகாரம் கையில் கிடைத்தவுடன் முதலாளித்துவம் தன் அதிகாரத்தை தீர்மானமாக நிலை நாட்டுகிறது. எத்தனை மாற்றங்கள் வந்தாலும், நபர்கள் மாறினாலும், தனது அதிகாரத்துக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்கிறது அரசு என்ற அமைப்பு என்கிறார் தோழர் லெனின்.
இதுதான் அரசு என்ற அமைப்பு. ஜார்ஜ் புஷ் இருந்தாலும் சரி, ஓபாமா இருந்தாலும் சரி. அரசு என்ற அமைப்பு இப்படித்தான் செயல்படும். ஓபாமா அதிபரான போது, உலகமே மகிழ்ந்தது. கறுப்பினத்திலிருந்து வந்திருக்கக் கூடிய ஒருவர் மனித உரிமைகளை அதிகமாக மதிப்பார் என்று. ஆனால், ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது இருந்ததை விட, அதிகமான நபர்கள் ரகசியங்களை வெளியிட்டார்கள் என்ற காரணத்துக்காக அமெரிக்க சிறைகளில் இருக்கிறார்கள். ஓபாமா போய் வேறு ஒருவர் அதிபராக ஆனாலும் அரசுகள் இப்படித்தான் நடந்து கொள்ளும்.
தங்கள் அதிகார மையத்தை ஆட்டம் காண வைக்கும் நபர்களையோ அமைப்புகளையோ விட்டு வைக்க மாட்டார்கள். அதனால்தான் உலக நாடுகள் அத்தனையும் ஒன்று சேர்ந்து, விக்கிலீக்ஸை ஒழித்துக் கட்ட அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இந்த நெருக்கடிகளால், அசாஞ் விக்கீலீக்ஸின் அத்தனை நிதி ஆதாரங்களும் தீர்ந்து விட்டன என்றும், விக்கிலீக்ஸின் வெளியீடுகளை நிறுத்தி வைத்து விட்டு, நிதி திரட்டும் பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸூக்கு மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. சவுக்கை நடத்துவதிலும் எத்தனை சிரமங்கள் உள்ளது என்பதை ஓரளவுக்கு வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
திமுக ஆட்சி மாறி, அதிமுக ஆட்சி வந்ததும், சவுக்குக்கும் அதன் குழுவினருக்கும் புதிய ஆட்சியிலும் நெருக்கடிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆட்சி மாறியதும், அதிமுக ஆட்சிக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று நெருக்கடிகள் தரப்பட்டன. எத்தனை மோசமான முடிவுகளை அதிமுக அரசு எடுத்தாலும் எதிர்த்து எதுவும் எழுதக் கூடாது என்று கோரிக்கைகள், அன்பாகவும், அன்பு இல்லாமலும் விடுக்கப் பட்டன.
மனசாட்சிப் படி உயிரை விடும் வரையிலும் எழுத வேண்டும் என்பதுதான் சவுக்கின் லட்சியம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது சவுக்கின் எண்ணமாக இருந்திருந்தால், எதுவும் செய்யாமல், வாயை மூடிக் கொண்டு, கண் முன்னே நடக்கும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல், நான், எனது வேலை, எனது குடும்பம், என்று மட்டுமே சிந்தித்திருந்தால், இன்று நீங்கள் சவுக்கை சந்தித்திருக்க மாட்டீர்கள். “எஸ் சார். வெரி வெல் சார். வாட் தி ஐஜி / டிஐஜி / ஏடிஜிபி சேஸ் ஈஸ் அப்சல்யூட்லி ரைட் சார்” என்று சொல்லிக் கொண்டு, சில அதிகாரிகளின் முட்டாள்த்தனமான உத்தரவுகளை நிறைவேற்றிக் கொண்டிருந்து இருக்கலாம். இப்படி நிறைவேற்றிக் கொண்டிருந்தால், இன்றைய தேதிக்கு குறைந்தது 45 ஆயிரம் சம்பளமாக கிடைத்திருக்கும்.
இப்போது இருப்பது போல, பாதி சம்பளம் வருமா இல்லையா, பத்திரிக்கையில் எழுதினால் பணம் கொடுப்பார்களா இல்லையா, கையில் காசு தீர்ந்து விட்டதே, செல்போனை ரீசார்ஜ் செய்யவில்லையே, க்ரெடிட் கார்டுக்கு பணம் செலுத்த வேண்டுமே என்ற கவலைகளெல்லாம் இருக்காது. வாயை மூடிக் கொண்டு அதிகாரிகளுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு இருந்தீர்களேயென்றால், சம்பளத்தோடு சேர்ந்து சட்ட பூர்வமாக ரகசிய நிதியிலிருந்து வேறு உங்களுக்கு பங்கு கொடுப்பார்கள். ஒரு நபர் பிரச்சினை செய்வார் என்பதை அறிந்தால், அவரை அழைத்து தனியாக ரகசிய நிதியிலிருந்து பணம் கொடுப்பார்கள். அதையும் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். சாலையில் நாம் சந்திக்கும் ஏழைகள், பஞ்சைகள், பராரிகள் என்று யாரைப் பற்றியும் கவலைப் படாமல் என் குடும்பம் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று இருந்திருக்கலாம். நாம் வாங்கும் ஊதியம் உழைப்பாளி மக்களின் வரிப்பணம், சாக்கடையை சுத்தம் செய்பவனின் வரிப்பணம் என்ற எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருக்கலாம்.
சவுக்குக்கு தெரிந்த ஒரு அதிகாரி சொன்ன விஷயம் என்ன தெரியுமா ? ஒரு அரசு ஊழியர், அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் வந்து, தனது வேலையை ஒழுங்காக செய்வதே சமூகப் பணி என்றார். அவர் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், தங்கள் வேலை நேரத்தில் தங்கள் பணியை ஒழுங்காகச் செய்தால் மட்டுமே, பெரும்பலான பொதுமக்கள் அலைகழிக்கப் படாமல் இருப்பார்கள். அந்த அதிகாரி, மேலும் சொன்னது, இரவு 8 மணி வரை வேலை செய்கிறேன், வீட்டுக்கு கோப்புகளை எடுத்துச் செல்கிறேன் என்ற பசப்பு வேலைகளைச் செய்யாமல், அலுவலக நேரத்தில், ஒழுங்காக வேலையைச் செய்தாலே போதும் என்று சொன்னது, மிக மிக சரியான ஒரு விஷயம்.
ஆனால் அரசு ஊழியர்கள் இப்படித்தான் வேலை செய்கிறார்களா என்பதை, அரசு அலுவலகங்களுக்கு சென்று வந்திருக்கும் சவுக்கு வாசகர்கள் அறிவார்கள்.
சரி…. அரசு வேலையும் செய்ய முடியாது. ஏதாவது பத்திரிக்கையில் வேலை செய்யலாம் என்றால், ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒரு முதலாளியின் கையில் உள்ளது. அந்த முதலாளிக்கு லாபம் மட்டுமே நோக்கமாக உள்ளது. திமுக ஆட்சியில் கருணாநிதியின் காலை நக்கியவர்கள், அதிமுக ஆட்சியில், ஜெயலலிதாவை எதுவும் சொல்லாமலேயே, ஜெயலலிதா கோபித்துக் கொள்வாரோ என்ற ஊகத்தின் அடிப்படையில், செய்திகளை தணிக்கை செய்கிறார்கள். சமீபத்தில் சவுக்கு கேள்விப் பட்ட ஒரு விஷயம், ஒரு பிரபல நாளிதழில், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கைப் பற்றி ஒரு செய்தி எழுதிய செய்தியாளரை, அப்பத்திரிக்கையின் ஆசிரியர் அழைத்து, “என்னப்பா.. வேலையில இருக்கனும்னு ஆசையா இருக்கா இல்லையா. இந்த மாதிரி செய்தியேல்லாம் ஒரு ஆறு மாசத்துக்கு குடுக்காத. க்ளைமேட் சேன்ஞ் ஆனதும் பாக்கலாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்” இந்தச் செய்தியைப் போடாதே என்று ஜெயலலிதா சொல்லவில்லை. ஆனால், கடந்த ஆட்சியில் ஜாபர் சேட் பத்திரிக்கைகளையும், பத்திரிக்கை ஆசிரியர்களையும், பத்திரிக்கை முதலாளிகளையும் மிரட்டியதன் விளைவை இன்று பார்க்கிறோம்.
இது பாவ்லோவ் (Pavlog) என்ற ரஷ்ய மனவியல் ஆய்வாளர் 1927ம் ஆண்டில் உருவாக்கிய “கண்டிஷனிங் தியரி”. பாவ்லோவ் தனது ஆய்வகத்தில் ஒரு நாய்க்கு தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மணியடிக்கிறார். மணியடித்த அடுத்த நிமிடம் அந்த நாய்க்கு உணவு வைக்கப் படுகிறது. இது சில நாட்கள் தொடர்ந்ததும், அந்த நாயின் நடவடிக்கைகளை ஆராய்கிறார் உணவைப் பார்த்தவுடன் நாய் எச்சில் ஊற்றுகிறது. இது சில நாட்களுக்கு தொடர்கிறது.
மேலும் சில நாட்கள் கழித்து, அந்த உணவு வைக்க சில நிமிடங்கள் தாமதப் படுத்தி மணியை மட்டும் அடிக்கிறார் பாவ்லோவ். மணியின் ஓசையைக் கேட்டவுடனே நாய் எச்சில் ஊற்றுவதைப் பார்க்கிறார் பாவ்லோவ். அதாவது, மணி அடித்தவுடன் உனக்கு உணவு என்று நாய்களை பழக்கப் படுத்த முடியும் (conditioning) என்று தனது ஆய்வின் முடிவை அறிவிக்கிறார் பாவ்லோவ்.
இந்த பாவ்லோவின் தியரிக்கும், தற்போதைய பத்திரிக்கைகளின் நிலைமைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஜாபர் சேட் உளவுத் துறை தலைமை பொறுப்பை வகித்த வரையில், பத்திரிக்கைகள், அரசுக்கு எதிராக எழுதினால் நமக்கு விளம்பரம் வராது, மேலும், ஆசிரியர்களின் அந்தரங்கம் வெளியாகும் என்ற அச்சத்தில் செய்தி வெளியிடாமல் இருந்தன. இன்று சவுக்குக்கு தெரிந்த வரையில், சவுக்கின் தொலைபேசியைத் தவிர, வேறு எந்த தொலைபேசியையும் சட்டவிரோதமாக அரசு உளவுத்துறை ஒட்டுக் கேட்கவில்லை. ஆனாலும், பாவ்லோவின் நாயைப் போல, பத்திரிக்கைகள் அரசு எதிர்ப்பு செய்திகள் என்றாலே அஞ்சுகின்றன. அரசு எதிர்ப்பு செய்திகளை வெளியிடும் தங்கள் நிருபர்களை கடிந்து கொள்கின்றன. இப்படி அரசுக்கு அஞ்சும் பத்திரிக்கைகளின் பெயரை வெளியிடலாம் என்றால், எந்தப் பத்திரிக்கையின் பெயரை வெளியிடுவது ? திமுக சார்பு பத்திரிக்கைகளைத் தவிர, அனைத்து செய்தி சேனல்களும், அனைத்து நாளிதழ்களும், வாரமிருமுறை இதழ்களும், வார இதழ்களும், அரசின் விளம்பரம் என்ற எலும்புத் துண்டை நம்பியே இருக்கின்றன.
கடந்த திமுக ஆட்சியில் பத்திரிக்கைள் இருந்த நிலைமை மீண்டும வந்து விட்டது.
சரி நமக்கு என்ன வந்து விட்டது ? நாம் நமது வேலையைப் பார்த்து விட்டுப் போகலாமே…. புதிதாக அமைந்த அதிமுக அரசில், அதிகார மையங்கள் யாரென்று கண்டறிந்து அவர்களைச் சந்தித்து, நமது சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதோடு, பணம் சம்பாதிக்கவும் வழி தேடலாமே என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு. இதைச் செய்வதில் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை.
ஆனால், இதைத் திமுக ஆட்சியிலேயே செய்திருக்கலாமே… இரா.சரவணன் போல ஜாபர் சேட்டின் கைப்பாவையாக ஆகியிருந்தால், ஜாபர் சேட் பணத்தால் குளிப்பாட்டியிருப்பார். உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்பார்.
சமூகத்துக்காக போராட்டத்தில் இறங்குவது என்பது கிட்டத்தட்ட புலிவாலைப் பிடித்த கதைதான். விடவே முடியாது.
உங்கள் முன்னால் இருப்பது இரண்டே வழிகள். ஒன்று சரணாகதி அடைந்து சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பது. சரணாகதி அடைந்தீர்கள் என்றால், பகட்டும், பஞ்சுமெத்தையும், பணமும், சுகபோகங்களும் உங்களைத் தேடி வரும். யாருக்காகவும் அஞ்ச வேண்டியதில்லை. ஏனென்றால் ஊழல் சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கமாக நீங்கள் ஆகி விட்டீர்கள்.
இரண்டாவது வழி போராட்ட வழி. இந்த வழியில் இறுதி வரை போராட்டம் தான். உங்களுக்கு உதவ யாருமே இருக்க மாட்டார்கள். திமுக ஆட்சியை எதிர்த்ததால் உங்களுக்கு அதிமுக ஆட்சி உதவும் என்று நினைத்தீர்களேயானால் நீங்கள் ஒரு முட்டாள். திமுக ஆட்சியின் போது, தொடர்ந்த பொது நல வழக்குகளின் அபிடவிட்களைக் கேட்டு கெஞ்சிக் பெற்ற வழக்கறிஞர்கள் இன்று அரசு வழக்கறிஞர்கள். “சார். அபிடவிட் காப்பி குடுங்க. கார்டன்ல கேக்குறாங்க. நம்ப ஆட்சி வந்தா எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சுடும்” என்று பசப்பிய வழக்கறிஞர்கள் இன்று அரசு வழக்கறிஞர்களாகி, நேரில் பார்த்தால் கூட பார்க்காதது போலப் போகிறார்கள்.
இதுதான் உலகம்.
ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் எப்போதும் மாறுவது இல்லை. ஆஸ்கர் விருது கிடைத்த போது, அதைப் பெற்றுக் கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது. “இசை வாழ்க்கையை தொடங்கிய போது என் முன்னால் இருந்தது இரண்டு வழிகள். ஒன்று வெறுப்பு. மற்றொன்று அன்பு. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். இன்று உங்கள் முன்னே நிற்கிறேன்” என்றார்.
அதைப் போலவே, சரணாகதி, அல்லது போராட்டம் என்ற இரண்டு வழிகள் தான் சவுக்கின் முன்பு உள்ளது. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது ?
எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை மாவோ சொல்லியிருக்கிறார்.
மரணம் பொதுவானது
சில நேரங்களில் இறகை விட லேசானது
சில நேரங்களில் மலையை விடக் கடினமானது
மக்களுக்காக வாழ்ந்து மடிதல் என்பது
மலையை விடக் கடினமானது
ஏகாதிபத்தியத்திற்கம், எதேச்சாதிகாரத்திற்கும்
அடிமைப் பட்டுச் சாவதென்பது
இறகை விட லேசானது
ஆக மரணம் பொதுவானது.
பொருளாதார நெருக்கடி காரணமாகவோ, அல்லது வேறு நெருக்கடிகள் காரணமாகவோ, சவுக்கை நிறுத்த நேரலாம். அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் ஜால்ரா போட்டுக் கொண்டு சவுக்கை நடத்துவதை விட, அப்படிப்பட்ட நெருக்கடிகளால் சவுக்கை நிறுத்துவது சாலச் சிறந்தது. “ஊருக்கு நல்லது சொல்வேன். எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்” என்றான் பாரதி. எனக்குத் தெரிந்த உண்மைகளை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம்.
இதைப் போன்ற விருப்பமே ஜுலியன் அசாஞ்சுக்கும் இருக்கிறது. மற்ற பத்திரிக்கைகள் வெளியிட தயங்கும் ஆதாரங்களை வெளியடவே அவரும் விக்கிலீக்ஸை துவக்கினார்.
அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும், சவுக்கு தன்னால் முடிந்த வகையில் ஊழலையும், அயோக்கியத்தனங்களையும் வெளியிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. முடியலாம், முடியாமல் போகலாம். அரசாங்கங்களை எதிர்ப்பது எளிதல்ல.