மாற்றத்தைத் தவிர மாறாதது எதுவுமில்லை என்பது இயக்கவியல் விதி. ஆனால், அந்த விதியை மாற்றுவேனே ஒழிய, நான் மாற மாட்டேன் என்பதை ஜெயலலிதா மீண்டும் நிரூபித்து உள்ளார்.
நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பணியாற்றி வந்த 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள், ஒரே அரசாணையில் வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
இந்த மக்கள் நலப் பணியாளர்கள் முதன் முறையாக 1990ம் ஆண்டில் திமுக அரசால் நியமிக்கப் பட்டனர். ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், பணியாற்றும் இந்த அரசு ஊழியர்கள், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தக் கூடிய வேலை வாய்ப்புத் திட்டங்கள், மற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகளுக்கு உதவியாக செயல்படும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். 1990ல் இவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாய் ஊதியமாக கொடுக்கப் பட்டு வந்தது.
1991ல் அதிமுக ஆட்சி வந்ததும், கருணாநிதியால் வேலை கொடுக்கப் பட்டவர்களை எப்படி வேலையில் வைக்கலாம் என்று அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா. 1996ல் திமுக ஆட்சி வந்ததும், வேலையிழந்த அத்தனை பேருக்கும் மீண்டும் வேலை கொடுக்கப் பட்டது. 2001ல் அதிமுக ஆட்சி வந்தது. விடுவாரா ஜெயலலிதா…. ? மீண்டும் அத்தனை பேரும் நீக்கப் பட்டனர்.
2006ல் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள் நலப் பணியாளர்கள் அமர்த்தப் பட்டனர். அவ்வாறு அமர்த்தப் பட்டவர்களைத் தான் ஜெயலலிதா தற்போது பணி நீக்கம் செய்திருக்கிறார். தற்போது பணி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் ஊதியமாக கொடுக்கப் பட்டு வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களான தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் களப்பணியாளர்களாக இவர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 12 ஆயிரம் பேர் ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
‘எளிதல்ல’ என்ற பதிவுக்கு பின்னூட்டமாக மின்னஞ்சலில் சவுக்கு வாசகர், அருள் விக்டர் சுரேஷ் என்பவர் “திமுக அரசின் இறுதி நாட்களில், அதிமுக அரசு அமையும் பட்சத்தில் தமிழக நிர்வாகம் பெரிய அளவில் மாற்றம் பெறும் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கினீர்கள். நீங்களே உண்மையில் அப்படி நம்பினீர்கள் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால், புதிய அரசிற்கு ஆலோசனைகள் வழங்குங்கள் என்றெல்லாம் முயற்சிகள் எடுத்திருக்க மாட்டீர்கள்.
2006 – 2011 திமுக அரசின் மேலுள்ள கடுமையான விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டு நோக்கும் போது, சுதந்தரமான கருத்துக்களை முடக்குவதில் அதிமுக, திமுகவை விட ஆயிரம் மடங்கு மோசமானது என்பது வரலாறு. எனவே, தங்களது தற்போதைய நிலைமை எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஏன் இதை நீங்கள் முன்னமே எதிர்பார்க்கவில்லை என்ற வியப்பைத்தான் அளிக்கிறது.” என்று எழுதியிருந்தார்.
தற்போது மிக முக்கியமான நபராக இருக்கும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் 1993ம் ஆண்டில் எழுதிய கட்டுரையில், கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு சொல்லுகையில் “கருணாநிதியைப் பார்க்கும் போதெல்லாம் புடவை கட்டிய ஜெயலலிதாவாகவும், ஜெயலலிதாவைப் பார்க்கும் போதெல்லாம் வேட்டி கட்டிய கருணாநிதியுமாகவே எனக்குத் தெரிகிறது” என்று எழுதியிருந்தார்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது ஊரறிந்த விஷயம். நயமான வார்த்தைகளைப் பேசி, இனிப்பு தடவி விஷத்தை ஊட்டும் கலையில் கருணாநிதி வல்லவர். ஜெயலலிதாவுக்கு அந்தக் கலை தெரியாது. தடாலடியாக நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் எதிர்ப்பை நேரடியாக சந்தித்துக் கொள்பவர் ஜெயலலிதா. அதே நடவடிக்கைகளை நாசூக்காக எடுத்து, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல செய்பவர் கருணாநிதி.
அருள் விக்டர் சுரேஷ் சொல்லியது போல, ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பரவாயில்லை என்பதையே ஏற்றுக் கொள்ளள முடியாது. பின் ஏன் 2011 தேர்தலில் வெளிப்படையாக அதிமுகவை ஆதரிக்க வேண்டும் ?
அப்போது இருந்த திமுக ஆட்சியை அகற்றுவதற்கு அதிமுகவை ஆதரிப்பதை விட வேறு ஏதாவது வழி இருந்ததா ? இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், வீரபாண்டி ஆறுமுகம், கேபிபி சாமி, கே.என்.நேரு, பொன்முடி, சக்சேனா என்று ஊரை அடித்து உலையில் போட்ட மக்கள் விரோதிகள் சிறிது காலமாவது சிறையில் இருக்கிறார்கள். ஒரு வேளை திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் ? குறைந்த பட்சம் கனிமொழி கூட சிறை சென்றிருக்க மாட்டார். இவர்களின் அடாவடிகள் இன்று வரை தொடர்ந்திருக்கும். சிறிது காலமாவது சிறையில் இருந்தால் தான் இவர்களுக்கு சாமான்ய மக்களின் வலி என்ன என்பது புரியும். மேலும் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தில், கொஞ்சமாவது கோர்ட்டு கேஸ் என்று செலவு செய்வார்கள்.
திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால், நீங்களும் நானும் சாலையில் நடமாடக் கூட முடிந்திருக்காது என்பதே உண்மை. இந்த ஒரே காரணத்துக்காகத் தான் அதிமுக ஆட்சி வர வேண்டும் என சவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகமும் விரும்பியது.
அதற்காக ஜெயலலிதா மிகச் சிறந்த ஆட்சியைத் தரப்போகிறார் என்று நம்பியதாக கருதக் கூடாது. மிகச் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என்ற ஆதங்கமே… இரண்டு முறை மிக மோசமான தேர்தல் தோல்விகளைச் சந்தித்த ஜெயலலிதா பாடம் கற்றுக் கொள்வார், ஓரளவாவது திருந்துவார் என்று எதிர்ப்பார்த்தது தவறா ?
இவர் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை என்பதை அவரது தொடர்ச்சியான நடவடிக்கைகள் காட்டுகின்றன.
சமச்சீர் கல்வி என்ற திட்டத்தை ரத்து செய்ததற்கு ஒரே காரணம் அது கருணாநிதியால் கொண்டு வரப் பட்டது என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. உயர்நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி, மாணவர்களின் வாழ்க்கையில் அரசியலைப் புகுத்தாதீர்கள் என்று உத்தரவிட்ட பின்னரும், ஏறக்குறைய இரண்டு மாத காலத்திற்கு பிள்ளைகள் பாடப்புத்தகங்களே இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தார் ஜெயலலிதா. இதற்கு ஒரு கமிட்டியைப் போட்டு, ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிப்பவர்களாகப் பார்த்து அந்த கமிட்டியின் உறுப்பினர்களாகப் போட்டு, அவர்களை வைத்து, சமச்சீர் கல்வி, மனித குலத்திற்கே விரோதமான ஒரு திட்டம் என்று அறிக்கை அளிக்க வைத்தார்.
அழகான ஒரு நூலகக் கட்டிடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுகிறேன் என்று, பெரும்பாலான மக்கள் விரோதத்தைச் சந்தித்திருக்கிறார் ஜெயலலிதா. அவரின் பிடிவாதமான மக்கள் விரோத நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இன்று 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.
அரசு ஊழியர்களோடு, 18 ஆண்டு காலம் பழகியதால், அவர்களின் மனநிலை சவுக்குக்கு அத்துப் படி. அரசு ஊழியனுக்கு, வேலைதான் உலகம், உயிர், எல்லாமும். சாதாரணமாக ப்யூன் வேலைப் பார்ப்பவன் கூட, ‘கவர்மென்ட் வேலை’ என்று பெருமையாக கூறிக்கொள்வான். அந்த அரசு வேலைக்கு ஏதாவது ஒரு சிறு ஆபத்து என்றால் கூட அரசு ஊழியர்களுக்கு உயிரே போய் விடும். ஒரு சாதாரண மெமோ கொடுத்தற்கே ராத்திரி பகலாக தூங்காமல், அதிகாரிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்கள்.
அரசு ஊழியர்கள் அனைவருமே கடுமையான உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் என்று சொல்லவில்லை. 80 சதவிகித அரசு ஊழியர்கள் நிச்சயமாக கடினமாக வேலை செய்யக் கூடியவர்கள் தான். மீதம் உள்ள 20 சதவிகிதத்தினர் எங்கே லஞ்சம் கிடைக்கும் என்று, அரசுப் பணியை லஞ்சத்துக்காகவே பயன்படுத்துபவர்கள். இப்படி அரசுப் பணியை உயிராக நினைக்கும் அரசு ஊழியர்களில் ஒன்றரை லட்சம் பேரை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா. அரசு ஊழியர் என்றால் அவர்களின் பின்னால் ஒரு குடும்பம் உண்டு என்பதை ஜெயலலிதா அன்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒன்றரை லட்சம் பேரை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல், அவர்கள் குடியிருந்த அரசுக் குடியிருப்பிலிருந்து அவர்களை இரவோடு இரவாக காலி செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது ஜெயலலிதா அரசு. ஆயிரக்கணக்கானோர் ரவுடிகளையும் திருடர்களையும் போல, இரவோடு இரவாக வேட்டையாடி கைது செய்யப் பட்டனர். இதற்கு காரணம் அவர்கள் ஒன்றும் பெரிய தேசத் துரோகத்தை செய்து விடவில்லை. ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த, பஞ்சப்படி, விடுப்பு காலச் சலுகை, பண்டிகை முன்பணம், சரண் விடுப்பு போன்ற சலுகைகளை நிறுத்தியதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
அந்தச் சலுகைகளை நிறுத்தி விட்டு அரசு ஊழியர்களை சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்றார் ஜெயலலிதா. 94 சதவிகித அரசு வருவாயை 2 சதவிகிதம் இருக்கும் அரசு ஊழியர்கள் பறித்துக் கொள்கிறார்கள் என்றார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா, அதே 2 சதவிகித அரசு ஊழியர்களுக்கு அந்தச் சலுகைகளை மீண்டும் வழங்கினார். அரசு ஊழியர்கள் சரியாக பணியைச் செய்யவில்லை, அவர்களை சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று சொன்ன ஜெயலலிதா, முதலமைச்சராக கோப்புகளைப் பார்க்கும் தனது பணியை எப்படிச் செய்தார் என்பதை 2006ல் முதலமைச்சராக வந்த கருணாநிதி வருடக் கணக்கில் ஜெயலலிதா கோப்புகளை எப்படி கட்டி வைத்திருந்தார் என்பதை பட்டியலிட்டார்.
அந்தத் தேர்தலில் கிடைத்த படிப்பினைகள், ஜெயலலிதாவை பக்குவப் படுத்தியிருக்க வேண்டும். திருத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தோல்விகளும், அதற்குப் பிறகு கிடைத்த தோல்விகளும் கொடுத்த பாடத்தை விட, 2011 தேர்தலில் கிடைத்த வெற்றி ஜெயலலிதாவுக்கு அகந்தையை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது.
12 ஆயிரம் ஊழியர்களுக்கு மாதந்தோறும் தலா 2500 ரூபாய் கொடுக்கப் படுவது என்பது ஒன்றும் அரசுக்கு பெரிய செலவினம் இல்லை. அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்பது ஜெயலலிதாவுக்கு பெரிய குறையாக இருக்குமேயானால், அவர்களிடம் சரி வர வேலை வாங்காத அதிகாரிகள் மீதல்லவா ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் ?
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்திய சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. அவர்களோடு இருக்கும் மற்ற அதிகாரிகள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.
இன்று ஆயிரக்கணக்கில் நில அபகரிப்புப் புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது எனது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பெருமையாக கூறிக் கொள்ளும் ஜெயலலிதா, இந்தப் புகார்கள் திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப் பட்ட போது, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் ? பத்திரப் பதிவுத் துறை மற்றும் காவல்துறையினர் உதவி இல்லாமல் இத்தனை நில அபகரிப்புகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா ?
தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லாத ஜெயலலிதா, 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது, அவர்கள் கிள்ளுக் கீரைகள் என்ற நினைப்புதானே ?
அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் எத்தனை பெரிய செல்வத்தையும் தேய்க்கும் படை.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும் என்கிறார் அய்யன் வள்ளுவர். உங்களுக்கு தமிழ் பிடிக்காது. அதனால் உங்களுக்காக ஆங்கிலத்திலும் இந்தக் குறள் வழங்கப் படுகிறது.
‘Tis ruin if man do an unbefitting thing;
Fit things to leave undone will equal ruin bring.
He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.
செய்யக் கூடாதவற்றைச் செய்தால் வரும் கேடு, எந்த வடிவிலும் வரும். பெங்களுரு நீதிமன்ற வடிவத்திலும் வரும்.