திமுக தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கையைப் படித்தால் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
“உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட தற்கு பிறகு ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 437ன்படி கனிமொழி போன்றவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கின்றனர். சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரைகளையும் சிந்தித்துப் பார்க்கும்போது, கருத்தியல் அடிப்படையிலானதும், நிலை நிறுத்த முடியாததுமான அனுமானங்கள் ஆழமாய் பதிந்து விட்டனவோ என்ற அய்யப்பாடும், நீதி தாமதிக்கப்படுகிறதோ என்ற வேதனையும் நமக்கு நெருடலை ஏற்படுத்தத் தான் செய்கிறது.
இந்தியத் திருநாட்டின் ஜனநாயகம் இற்றுப் போய் விடாமல் தாங்கி நிற்கும் மிக முக்கிய தூணாகவும், இந்திய மக்களின் இறுதி நம்பிக்கையாகவும் விளங்கும் நீதிமன்றங்கள் சட்ட ரீதியான உரிமையை வழங்கிடவும், சட்டத்தின் அடிப்படை அம்சங்களைக் காப்பாற்றிடவும், தயக்கம் காட்டுமானால் இந்திய ஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்ற வினாவும் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையும் எல்லோரது உள்ளங்களிலும் எழுவது தவிர்த்திட இயலாத ஒன்றாகும்.” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய ஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறதாம்…. என்ன ஒரு கவலை.
கருணாநிதி ஆட்சி காலத்தில், 2010ல் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை முன் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் என்ன சொல்லப் பட்டிருந்தது தெரியுமா ?
நளினி விடுதலை பெற்றபின், ராயப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்குவார். அந்தப் பகுதி, அமெரிக்க தூதரகம் மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி. ஆகையால் நளினி அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதால், நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சொல்லப் பட்டிருந்தது.
நளினியை விடுதலை செய்தால் ‘தியாகத் திருவிளக்கின்’ மனம் நோகும் என்பதற்காகத் தான் கருணாநிதி நளினியை விடுதலை செய்யவில்லை என்பது பச்சிளம் குழந்தைக்குக் கூட தெரியும். 21 ஆண்டுகளான ஒரு பெண் தன் குழந்தையிடமிருந்து பிரிந்து சிறையில் இருக்கிறார்.
நேற்றைய தனது அறிக்கையில் கருணாநிதி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவருவதற்கான உரிமை உள்ளது என்று ஒரு வழக்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அளித்துள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டி, அந்த நடை முறையை நீதித் துறை கவனத்திலே கொள்ள வேண்டும் என்ற திக்விஜய் சிங் சொன்னதாகச் சொல்லியிருக்கிறார்.
இதே கிருஷ்ணய்யர் தானே மாருராம் என்ற வழக்கில் ஒரு சிறை வாசி, ஆயுள் தண்டனையில் 14 ஆண்டுகளை கழித்தால் விடுதலை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். ஐந்து மாதங்கள் தன் மகள் சிறையில் இருப்பது பொறுக்காமல் புலம்பும் கருணாநிதி 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பெண்ணைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டாமா ?
1997ம் ஆண்டு ஒரு வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப் பட்ட அப்துல் ரஹீம், குணங்குடி ஹனீபா, முபாரக் அலி உள்ளிட்டோரை ஜாமீனே கொடுக்காமல் 12 ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது இதே கருணாநிதி அரசு தானே…. அவர்கள் மீது போதுமான ஆதாரங்கள் இல்லாததால், வழக்கையும் நடத்தாமல் இழுத்தடித்தது கருணாநிதியின் காவல்துறைதானே…..
இன்று கனிமொழி சிறையில் இருப்பதற்கு யார் காரணம் ? கருணாநிதிதானே… தன் இரண்டாம் தாரத்து மகன்களுக்குப் போட்டியாக, மூன்றாம் தாரத்து வாரிசான கனிமொழியை போட்டி போட்டுக் கொண்டு அரசியலில் இறக்கியது நாங்களா ?
நானும் கவிதை எழுதுகிறேன் என்று, இலக்கிய வியாபாரம் செய்து கொண்டிருந்தவரை, அரசியலில் இறக்கி விட்டது யார் தவறு ?
2008 அக்டோபர் மாதத்தில் கனிமொழி மந்திரி பதவிக்காக காத்திருக்கிறார் என்று ஒரு விமர்சனக் கட்டுரை வந்தது. அந்தக் கட்டுரையில் கருணாநிதி கவிதை எழுதுவதையும் விமர்சித்திருந்தனர்.
கருப்பாயி; கருப்பாயி; நீ சிவப்பாகிக்
கட்டுரை யொன்று தீட்டியதைக் கண்டேன் ஜன சக்தியிலே
கவிதை நான் எழுதுவதைக் கிண்டல் கேலி செய்துள்ளாய்-
“காலுக்கு செருப்புமில்லை; கால் வயிற்றுக் கூழுமில்லை
வீணுக்குழைத்தோமடா எந்தன் தோழா” என்று அண்ணன் ஜீவா
எழுதியதும் கவிதை தானே!
“சொத்துரிமை இல்லாத மக்கள்
சொறி நாய்போல் எரி நெருப்பின்
பெரு நாக்கில் சிக்கிவிட்ட சீரழிவை
ஒரு நாக்கால் சொல்வதற்கா முடியுமய்யா?”
இப்படி நான் எழுதியது மட்டும் கவிதையல்ல; கத்தும் “கழுதை” என்று!
செப்பிடுவீர்; இந்த ஜெகம் சிரிக்கட்டும் உமைப்பார்த்து
கனிமொழி என் கண்மணி நான் பெற்றெடுத்த பொன்மணி-
கம்யூனிஸ்ட் விழாக்களில் எல்லாம் அவர் கலந்து கொள்ள வேண்டுமென்று
கனிவுடனே அழைத்துச் சென்றீர்-இன்று அவர்
கழக நாடாளுமன்ற உறுப்பினர்-களைப்பின்றி அலுப்பின்றி
கடமை ஆற்றுகின்றார் சமூக சேவையில்-
கலை, இலக்கியம், கல்வித்துறைகளிலே
கடுமையாய் உழைக்கின்றார் மகளிர் சிறந்திடவே
கம்யூனிஸ்டு ஏடு ஜனசக்திக்கு அதேன் கசக்கிறதோ?
கனிமொழி காத்திருப்பது மந்திரி பதவிக்காக என்று
கம்யூனிஸ்ட் ஜனசக்தியில் கருப்பாயி கட்டுரை தீட்டுகிறார்-
அண்டை நாடு ஈழத்தில் இனச் சண்டை இன்னும்
அடங்காத காரணத்தால் – இங்குள்ள கட்சிகளிடை
அரசியல் மோதல் வேண்டாமென்று
அடக்கமாக இருப்போம் என்றால்
அம்மாவின் அடியொற்றி
ஆரம்பம் செய்கின்றார் அமளிக்கென்றால்;
பூகம்பம் ஒன்றும் வந்துவிடாது;-நாம்
பொறுமையாகத் தொடர்ந்து இருப்பதாலே;
ஆனாலும் அமைச்சர் பதவி குறித்து
அவதூறு கூறுவோர்க்கு அவர் வாய் மூட
அவர்கள் வரலாறே சான்று கூற வந்து நிற்குமய்யா!
குமாரமங்கலம் ஜமீன்தார் சுப்பராயன்
அமைச்சராக இருந்ததும்-பின்னர்
அவர் மகன் மோகன் குமாரமங்கலம்
அமைச்சராகப் பதவி பெற்றதும்-பிறகு
அவர் மகன் ரெங்கராஜன் குமாரமங்கலம்
அமைச்சராகப் பொறுப்பு வகித்ததும் அவரவர் திறமையினாலா?
அல்லால்; அவர் குடும்பப் பெருமையினாலா?
“ஜனசக்தியில் சமுத்திரம் கட்டுரை;”
“ச முத்திரத்தில் நெடில் மிகுந்து”
“நெடியேறும் விதமாக;” எமைத் தாக்கி
வந்தது தான் அவலம், அவலம்!
இதுதான் அந்தக் கவிதை. மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரத்தைப் பற்றிய கருணாநிதியின் விமர்சனத்தைப் பாருங்கள். இந்தக் கவிதை வரிகளில் கருணாநிதி
கனிமொழி என் கண்மணி நான் பெற்றெடுத்த பொன்மணி-
கம்யூனிஸ்ட் விழாக்களில் எல்லாம் அவர் கலந்து கொள்ள வேண்டுமென்று
கனிவுடனே அழைத்துச் சென்றீர்-இன்று அவர்
கழக நாடாளுமன்ற உறுப்பினர்-களைப்பின்றி அலுப்பின்றி
கடமை ஆற்றுகின்றார் சமூக சேவையில்-
கலை, இலக்கியம், கல்வித்துறைகளிலே
கடுமையாய் உழைக்கின்றார் மகளிர் சிறந்திடவே
எப்படி உழைக்கிறாராம்….. களைப்பின்றி…. அலுப்பின்றி….. மகளிர் சிறந்திட உழைக்கிறாராம்….. இப்படி கனிமொழியை கட்சியின் மீதும், தமிழக மக்களின் மீதும் திணித்த காரணமே இன்று கனிமொழிக்கு துளியும் அனுதாபம் இல்லாமல் செய்து உள்ளது.
கனிமொழியை பெரிய சுதந்திரப் போராட்ட தியாகி போல சித்தரிக்க வேண்டும் என்பதற்காக மீனவர்கள் கொல்லப் பட்ட போது, இலங்கைத் தூதரகத்தை கனிமொழி முற்றுகை இடுவது போலவும், கருணாநிதியின் காவல்துறை அவரை கைது செய்தது போலவும், அதைத் தொடர்ந்து “கனிமொழி கைது.. கனிமொழி கைது..” என்று பத்திரிக்கைகளில் இவர்களாகவே செய்தியை வரவைத்தது, மக்களிடையே கனிமொழியின் மீது வெறுப்பைத் தான் உண்டாக்கியது.
சென்னை சங்கமம் என்ற பெயரில், போலிப் பாதிரியோடு கனிமொழி சேர்ந்து கொண்டு நடத்திய கூத்தும், போலிப் பாதிரியின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதும், அதன்பிறகு நடந்த விழாவுக்கு தனது சொந்தப் பணம் ஒரு கோடி ரூபாயை கருணாநிதி கொடுத்ததும், கனிமொழியின் மீது மக்களின் வெறுப்பை கோபமாக மாற வைத்தது.
அறுபதுகளில் காவல்துறையில் சேர்ந்த அதிகாரிகளிடம் பேசியபோது அவர்கள் அனைவரும் தவறாமல் சொன்ன ஒரே கருத்து, கருணாநிதியைப் போன்ற சிறந்த நிர்வாகியை பார்க்க முடியாது என்பதுதான். ஸ்ரீபால் என்ற ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் சொன்னது, கருணாநிதியைப் போல அறிவுடைய ஒரு அரசியல் தலைவரைப் பார்க்கவே முடியாது என்பதுதான்.
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று எழுத்தாளர் ஞாநி ஓ பக்கங்களில் எழுதினார். அவ்வளவுதான்…. பார்ப்பனன் திராவிடனைத் திட்டி எழுதி விட்டான் என்று அதற்காக திமுக காகங்களின் கூட்டத்தைக் கூட்டி, தலைவர் கலைஞர் இன்னும் 100 ஆண்டுகளுக்கு முதல்வராக இருப்பார் என்று ஞாநியை ஆசை தீர திட்டித் தீர்த்தார்கள். அன்று ஞாநி சொன்னதைச் செய்திருந்தால் இன்று கருணாநிதிக்கு இந்த நிலைமை வந்திருக்காது. வயதுக்கு ஏற்றார் போல நடந்து கொள்ள வேண்டும். நமது வீட்டிலேயே 70 வயது முதியவர்கள் சொல்வதை நாம் அப்படியே கேட்டு விடுகிறோமா என்ன…. ? இதுதானே 87 வயது முதியவரின் வீட்டிலும் நடக்கும்… ?
கருணாநிதியின் அறிவுடைமை மழுங்கி விட்டது என்பதை 2006ல் அவர் பதவியேற்றவுடனேயே தெரிந்து விட்டது. கருணாநிதி எப்படிப் பட்ட அதிகாரி என்றால், ஒரு அதிகாரி, அதிமுக அனுதாபி, ஜெயலலிதா நலம் விரும்பி என்று தெரிந்தாலும், அவர் திறமையான அதிகாரி என்றால், அவரை முக்கிய பொறுப்பு கொடுத்து அவரிடம் வேலை வாங்குவார். இதுதான் கருணாநிதி. ரமணி, ஆர்.கே.ராகவன் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவோடு நெருக்கம் என்பது தெரிந்தும், அவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தி வேலை வாங்கியவர் கருணாநிதி.
கருணாநிதியின் திறமைக்கு முக்கிய சான்று, நடிகர் ராஜ்குமார் கடத்தப் பட்ட விவகாரத்தை அவர் கையாண்டது. தற்போது டிஜிபியாக இருக்கும் ராமானுஜம் அப்போது உளவுத்துறையின் தலைவராக இருந்தார். அவர் கீழே மிக திறமையான அதிகாரிகள் பணியாற்றினார்கள். அந்த அதிகாரிகளின் ஒட்டு மொத்த உழைப்பு தான் ராஜ்குமாரை மீட்டெடுக்க வைத்தது. அந்த விவகாரம் சரிவர கையாளப் படவில்லை என்றால், பெங்களுரு தமிழர்களின் கதி அதோகதிதான். அந்த விவகாரத்தையும், மற்ற விவகாரங்களையும், உளவுத்துறையும், அதன் தலைவர் ராமானுஜமும் எப்படிக் கையாண்டார்கள் என்பதை கருணாநிதி மறந்திருக்க மாட்டார்.
உளவுத்துறை அதிகாரிகள் கருணாநிதியைப் பற்றி எப்போதும் சொல்வது என்னவென்றால், உளவுத்துறையிலிருந்து வரும் அறிக்கையை கருணாநிதி முழுமையாக நம்பமாட்டார் என்பதுதான். உளவுத்துறையிலிருந்து வரும் அறிக்கையையும், கட்சியினரிடம் விசாரித்து அறிந்தவைகளையும் ஒப்பிட்டு, அதன் பிறகே ஒரு முடிவெடுப்பார் என்பது கருணாநிதியைப் பற்றி காவல்துறை அதிகாரிகள் வியந்து சொன்ன விஷயம்.
ஆனால், இதே கருணாநிதி 2006ல், ஜாபர் சேட் என்ற ஒரே அதிகாரியை நம்பி சீரழிந்தார் என்பதுதான் வேதனையான விஷயம். கருணாநிதி ஜாபர் சேட்டை முழுமையாக நம்பியதற்கு காரணம், அவரது முதுமையே தவிர வேறில்லை. இதே 96ல் இருந்த கருணாநிதியாக இருந்திருந்தால், ஜாபர் சேட்டை பட்டாபட்டி அண்டர்வேரோடு உட்கார வைத்திருப்பார். மிகச் சிக்கலான அரசியல் போராட்டங்களையெல்லாம் வென்று வந்த கருணாநிதி, தன்னுடைய தலையெழுத்தையும், தன் கட்சியின் தலையெழுத்தையும், தன் குடும்பத்தின் தலையெழுத்தையும், ஜாபர் சேட்டை நம்பி ஒப்படைத்ததே அவரது படு பாதாள வீழ்ச்சிக்கு காரணம்.
உலகத்தில் யாராவது தன் மகனின் தொலைபேசியையும், மனைவியின் தொலைபேசியையும் ஒட்டுக் கேட்கச் சொல்வார்களா ? கருணாநிதி அதைச் செய்தார். அழகிரியின் தொலைபேசியையும், ராசாத்தி அம்மாளின் தொலைபேசியையும் ஒட்டுக் கேட்கச் சொல்லி ஜாபர் சேட்டுக்கு உத்தரவிட்டார் கருணாநிதி. இத்தனை ரகசியங்களையும் ஒரே ஒரு நபரிடம், அதுவும் ஒரு காவல்துறை அதிகாரியை நம்பி ஒப்படைக்கும் அளவுக்கு கருணாநிதி நிதானம் இழந்ததற்கு காரணமும், அவரது முதுமைதான்.
ஜாபர் சேட்டைப் பற்றி கருணாநிதிக்கு தொடர்ந்து எச்சரிக்கைகள் விடப்பட்டுத்தான் வந்தது. உபாத்யாயா மற்றும் திரிபாதி இடையே நடந்த உரையாடல் வெளி வந்த போது, அது உளவுத்துறை மீதுதான் குற்றச்சாட்டாக வெளி வந்தது. ஆனால் கருணாநிதி ஜாபர்சேட்டைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தாரே ஒழிய ஜாபர் சேட் செய்யும் அயோக்கியத்தனங்களை கவனிக்க மறந்தார்.
2008ல் திமுக கூட்டணியை விட்டுப் பிரிந்த ராமதாஸ், ஜாபர் சேட் மீது நேரடியாக குற்றம் சாட்டினார். என்னுடைய தொலைபேசிகளும், என் உறவினர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக கேட்கப் படுகிறது என்றார். ஓட்டுக்களையும், எம்எல்ஏ சீட்டுகளையும் பெற்றுத் தரும் ஒரு அரசியல் கட்சித் தலைவரை உதாசீனப் படுத்தி விட்டு, ஒரு காவல்துறை அதிகாரியை கருணாநிதி ஆதரித்தற்கு ஒரே காரணம் அவரது முதுமையே.
இன்று ஒரு 200 கோடிக்காக அவர் மகள் கனிமொழி ஐந்து மாதமாக சிறையில் இருக்கிறார். ஆனால், இந்த 2ஜி ஊழலில் ஜாபர் சேட் சம்பாதித்தது மட்டும் 500 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். அனைவரையும் மாட்டி விட்டு விட்டு, ஜாபர் சேட், சஸ்பென்ஷனில் இருந்தாலும் ஆனந்தமாக இருக்கிறார். 2ஜி ஊழலில் ஊறித் திளைத்த, அந்தப் பணத்தை பதுக்கி வைத்துள்ள அத்தனை பேரும் இன்று வெளியில் இருக்கிறார்கள். சிக்கியது கனிமொழி மட்டுமே.
இந்த விஷயமும் கருணாநிதிக்கு தெரிந்ததால்தான் அவரது வேதனை பல மடங்கு அதிகமாகிறது.
1993ல் வைகோ பிரிந்த போதே, நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பசப்பியவர் கருணாநிதி. அப்போதே விலகியிருந்தால், இன்று அவரின் பிள்ளைகளில் யாரோ ஒருவர் கையில் கட்சியை ஒப்படைத்து விட்டு பின்னால் இருந்து வழிகாட்டியிருக்கலாம்.
இன்று நீதித்துறையை குற்றம் சாட்டும் அளவுக்கு கருணாநிதி நிதானம் இழந்து விட்டிருக்கிறார். அவரின் இந்த அறிக்கைகள் தேசிய ஊடகங்களில் செய்தியாகி, நீதிபதிகளின் கண்களுக்கும் செல்லும். இந்தச் செய்திகள், அவர் மகள் மேலும் பல நாட்கள் சிறையில் இருப்பதை உறுதி செய்யுமே தவிர, கனிமொழியை வெளியில் கொண்டு வருவதற்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை.