WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political;LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all
FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்ற உறுதி ஏற்றுள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரை சொல்கிறது.
கடந்த ஒரு வாரமாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விமானங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை ரத்து செய்யப் பட்டுள்ளன. கிங்பிஷர் விமான நிறுவனம் நொடித்துப் போகும் அளவை எட்டியுள்ளது.
நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி, விஜய் மல்லையா என்னிடம் பேசினார். நான் இது தொடர்பாக நிதி அமைச்சரிடம் பேசி, வங்கிகளிடம் பேசி, கிங்பிஷர் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள கடன்களை மாற்றி அமைத்து, அந்நிறுவனத்தை மாற்றியமைக்க முடியுமா என்று பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கிங்பிஷர் நிறுவனத்துக்கு தற்போது இருக்கும் மொத்த கடன் 7057 கோடி ரூபாய். கிங்பிஷர் நிறுவனம் தற்போது சந்தித்துள்ள மொத்த நஷ்டம் மார்ச் 31 அன்று உள்ளபடி 4283 கோடி ரூபாய். இந்நிறுவனம் 2005ல் தொடங்கியதிலிருந்து இது வரை ஒரு பைசா கூட லாபமாக சம்பாதிக்கவில்லை. 20011 தொடக்கத்தில், கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்ட கடன் திரும்ப வசூல் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளை, கடனுக்கு பதிலாக கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ளச் சொல்லி பரிந்துரைத்தது.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், தேசியமயமாக்கப் பட்ட 13 வங்கிகள் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கு 63 ரூபாய்க்கு (அப்போதைய கிங் பிஷர் பங்கு மதிப்பு ரூ.40) தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.19.65. வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் தொகை போக, கிங்பிஷர் நிறுவனம், தேசிய எண்ணை நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை என்ன தெரியுமா ? இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்துக்கு 600 கோடி. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி (BPCL) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு (IOCL) 200 கோடி. எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற காரணத்தால், வாரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தும் நிதி அமைச்சகமும், பெட்ரோலியத் துறை அமைச்சகமும் மல்லையாவிடம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தான் தெரியும்.
இந்த மல்லையா யாரென்பது, தெரியுமா ?
மிகப் பெரிய சாராய அதிபர். யுனைட்டட் ப்ரூவரிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். 2005ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்குகிறார். இவர் ஒரு சோக்காளி. பணக்காரர்களையும் பெண்களையும் அழைத்து அவ்வப்போது பார்ட்டி கொடுப்பது இவரது பொழுது போக்கு. இவரது பார்ட்டிகளில் கலந்து கொள்ளாத நடிக நடிகைகளே இல்லை எனலாம். ஆண்டுதோறும் கிங்பிஷர் காலண்டர் என்ற பெயரில் மாடல் அழகிகளை வைத்து காலண்டர் தயாரித்து வெளியிடுவார்.
எல்லா தொழிலிலும் இறங்கி விட்டோம். அரசியலிலும் இறங்கலாம் என்று 2000த்தில் ஜனதா கட்சியில் சேர்ந்து கர்நாடகா முழுவதும் வேட்பாளர்களை களத்தில் இறக்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், இவர் கட்சி மண்ணைக் கவ்வியது. ஆனால் பின்னாளில் ராஜ்ய சபா எம்பி தேர்தலில், பணம் கொடுத்து, ஜனதா தளக் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, சுயேட்சையாக எம்.பி ஆனார்.
பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரில் ஐபிஎல் டீமை சொந்தமாக வைத்துள்ளார். எப் 1 பார்முலா ரேசில், போர்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு டீம் வைத்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் இந்தியக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்ற போது, இந்தியாவில் இருந்து சொந்த விமானத்தில் பல்வேறு எம்பிக்களை அழைத்துச் சென்றார்.
இந்த மல்லையாவுக்குத் தான் தற்போது நெருக்கடி. இவருக்குத் தான் உதவி செய்ய வேண்டும் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பரிந்து பேசியுள்ளார்.
இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம். 1995 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,56,913. இது வேலை வெட்டி இல்லாத சமூக ஆர்வலர்கள் தொகுத்த கணக்கீடு அல்ல. மத்திய அரசின் தேசிய குற்றவியல் கணக்கிடும் பிரிவு வெளியிட்டுள்ள எண்ணிக்கை இது.
கடன் தொல்லைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி வரும்போதெல்லாம் கண் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய மாநில அரசுகள், விவசாயிகளின் கடன் பிரச்சினையையும், அவர்கள் தற்கொலையையும் வெறும் எண்ணிக்கையான மட்டுமே பார்க்கின்றன என்பதே வேதனை தரும் விஷயம்.
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் கண்களுக்கு மல்லையாக்களும், ரத்தன் டாடாக்களும், அம்பானிகளும் மட்டுமே குடிமக்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் வேதனை.
இது மக்கள் ஆட்சியாம்…….!!!!!!