பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சொக்கனுக்கு விழுந்த அடி போல மக்களுக்கு அடி விழுந்திருக்கிறது. 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அப்போதும் சொன்னது “கஜானா காலி” என்பதுதான். உடனே தமிழினத் தலைவர் நான் கஜானாவை காலியாக வைத்திருந்தாலும், அரிசியாக கிடங்குகளை நிரப்பியிருக்கிறேன் என்றார். ஜெயலலிதா உடனே, அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்றார். விழுப்புரம் உணவுக் கிடங்கில் நுழைந்த திமுக எம்எல்ஏ பொன்முடி, நிருபர்களை அழைத்துச் சென்று, இது புழுத்த அரிசி அல்ல…. என்று கூறினார். உடனே, ஜெயலலிதா, லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு, அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்று நிரூபிக்க கட்டளையிட்டார்.
கஜானா காலி என்பதை மீண்டும் வலியுறுத்திய ஜெயலலிதா அப்போது தன் கவனத்தை திருப்பியது, அரசு ஊழியர்கள் மீது. அரசு ஊழியர்களின் சலுகைகள் அத்தனையையும் பறித்தார். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கிய உடன், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார். அப்போது ஜெயலலிதா அடித்த அடி, அரசு ஊழியர்கள் மீது மட்டும் விழுந்தது. இப்போது மக்கள் அத்தனை பேர் மீதும் விழுந்துள்ளது.
இன்று காலை முதல் பேருந்தில் பயணம் செய்தவர்கள் “கருணாநிதி எவ்வளவோ தேவலாம்” என்ற வார்த்தையைக் கேட்டிருக்க முடியும். மக்களின் புலம்பல் கொஞ்ச நஞ்சம் இல்லை. நேற்று பால்விலை, பேருந்துக் கட்டணம் மற்றும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான காரணங்களை தெரிவித்த, ஜெயலலிதா மனம் உருகும் வகையில் தொலைக் காட்சியில் பேசினார்.
போக்குவரத்துக் கழகங்கள் குறித்து பேசிய ஜெயலலிதா, “அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன. எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. 2001 ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்” என்று கூறினார்.
புதிய அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யப் பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், போக்குவரத்து என்ற தலைப்பில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை என்னவென்று பார்ப்போம்.
போக்குவரத்து
119. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. தற்போது 21,169 மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாயை ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
ஆகஸ்ட் 4 அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப் படும், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்கப் படும் என்று, ஆடம்பரமாக அறிவித்து விட்டு, நான்கு மாதங்களில் அப்படியென்ன நெருக்கடி முற்றி விட்டது ?
நிதி நிலைமை மோசமாகி விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம்தான் என்றாலும், மன்னார்குடி மாபியா சார்பில், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்காக 450 கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டு கடந்த வாரம் கொடுக்கப் பட்டுள்ளது என்று நம்பகமாக வட்டாரங்களிடமிருந்து வரும் தகவல்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை. மே மாதமே பொறுப்பேற்ற அதிமுக அரசு, ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறை சார்பாக ஏராளமான அறிவிப்புகளைச் செய்து விட்டு, இன்று போக்குவரத்துக கழகங்களே திவாலாகி விட்டன என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இயக்கப் படும் வெளியூர் பேருந்துகள், தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் வகையில் இயக்கப் படுகின்றன. சென்னையிலிருந்து பெங்களுருக்கு விடப்படும் ராஜஹம்ஸா என்ற வகைப் பேருந்துகள், மிகச் சிறப்பாக செயல்படுவதால், பெங்களுர் செல்வதற்கு பயணிகள் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இப்போது கட்டணத்தை உயர்த்திய பிறகு, தனியார் பேருந்துகளின் ஆதிக்கத்தை குறைத்து அரசுத் துறை பேருந்துகள், தனியார் பேருந்துக்கு இணையாக போட்டி போடும் அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. தமிழகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் அரசியல் பலத்தோடு உள்ளனர். அரசின் அனுமதி இன்றி, ரகசியமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு, கடந்த ஆட்சியில் ஜாபர் சேட் மற்றும் போலிப் பாதிரி ஜெகத் கஸ்பர் தலைமையில் நடந்த வசூல் வேட்டையைப் பற்றி சவுக்கில் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளது.
பேருந்து போலவே, தனியார் பால் உற்பத்தியாளர்களிடமும், மன்னார்க்குடி கும்பல் வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களுமே வசூல் வேட்டையில் இறங்கி மன்னார்குடி மாபியாவுக்கு வசூலித்துத் தர வேண்டும் என்ற உத்தரவு வழங்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கோவையில் உள்ளாட்சித் துறையின் கீழ் பாதாள சாக்கடை தொடர்பான பணியில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது திமுக அரசில். அப்போது கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த அன்சுல் மிஷ்ரா என்ற இளம் அதிகாரி, ஒப்பந்தக் காரர்களை அழைத்து, யாருக்கும் ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டாம், கொடுக்கவும் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
புதிய அரசு பொறுப்பற்றதும், மூன்று மாதங்களுக்கு முன், டி.கே.பொன்னுச்சாமி என்ற ஐஏஎஸ் அதிகாரி கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் படுகிறார். ஒப்பந்தக்காரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முடிந்தவுடன் ரன்னிங் அக்கவுண்ட் என்ற முறையில் பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பணம் கொடுப்பதற்கு முன்பாக, வேலைகள் எப்படி நிறைவேற்றப் பட்டுள்ளன என்பதை பொறியாளர்கள் சான்றளிக்க வேண்டும். பொன்னுச்சாமி கோவை மாநகராட்சி ஆணையராக ஆனதும், மாதந்தோறும் கொடுக்கப் படும் பணம் நிறுத்தப் படுகிறது. ஒவ்வொரு மாதமும் காண்ட்ராக்டருக்கு வழங்கப் படும் பணம் 2 கோடி ரூபாய்.
மாநகராட்சி அலுவலகத்தை அணுகியதும், அந்த அலுவலகத்தில் இருந்த லட்சுமணன் என்ற உதவிப் பொறியாளர், நீங்கள் கோவை மாவட்ட அமைச்சரான எஸ்.பி.வேலுமணியை பார்த்து விட்டு வாருங்கள். பிறகுதான் உங்கள் பணம் பட்டுவாடா செய்யப் படும் என்று கூறுகிறார். அமைச்சரை நேரடியாக சந்திக்க முடியுமா ? மூலவரைப் பார்த்த பிறகுதானே உற்சவரை பார்க்க வேண்டும்….. மூலவர் யாரென்றால், அமைச்சரின் தம்பி சங்கர் என்பவர். அவரை சந்தித்ததும், கட்சி நிதியாக 40 லட்ச ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். 40 லட்ச ரூபாயைக் கொஞ்சம் குறைத்து 37 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் பங்குக்கு 5 லட்சம் கறக்கிறார்கள். அந்த மாதத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அடுத்த மாதமும் பணம் நிறுத்தப் பட்டதும் மீண்டும் உதவிப் பொறியாளர் லட்சுமணனை சந்திக்கின்றனர். அவர், “சார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியையும் பார்த்து விடுங்கள். அவர்தான் இந்தத் துறைக்கு பொறுப்பு” என்கிறார். அமைச்சர் முனுசாமியை கிருஷ்ணகிரி சுற்றுலாத் துறை பங்களாவில் வைத்துப் பார்க்கிறார்கள். பார்த்ததும், ஏற்கனவே வேலுமணிக்கு பணம் கொடுக்கப் பட்ட விபரத்தை சொல்லுகிறார்கள். வேலுமணி ஏன், என்னுடைய துறையில் பணம் வாங்கினார் என்று ஆச்சர்யப்பட்ட முனுசாமி, சரி எனக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், நீங்கள் செல்லலாம். பணம் கொடுக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார். முனுசாமியின் பி.ஏ சேகர் என்பவர், கோவை மாநகராட்சி கமிஷனரிடம் தொலைபேசியில் பணத்தை வழங்குமாறு தெரிவித்ததும் அந்த மாதத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.
டி.கே.பொன்னுச்சாமி, ஐஏஎஸ்
அடுத்த மாதமும் பணம் நிறுத்தப் படுகிறது. மீண்டும் ப்ரோக்கர் லட்சுமணனை அணுகியதும், அவர் மேயர் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவரையும் பார்த்து விட்டு வாருங்கள் என்று உத்தரவிடுகிறார். இந்தச் சூழலில் பொறுமை இழந்த காண்ட்ராக்டர், “சார் நான் தொழில் நடத்துவதா இல்லையா… என்னுடைய வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாமா … என்று சத்தம் போடுகிறார். சத்தம் போட்டவுடன், பணப் பட்டுவாடா செய்ய வேண்டிய கோப்பை தலைமை கணக்கு அதிகாரிக்கு அனுப்பி விடுகிறார்கள் (சிஏஓ). அவரை சென்று சந்தித்ததும், நீங்கள் அனுப்பிய பட்டியலில் ஏராளமான பிழைகள் இருக்கிறது, அதனால் நிறைய தாமதம் ஆகும் என்று தெரிவித்து விடுகிறார்.
இதனால் விரக்தி அடைந்த காண்ட்ராக்டர், பேசாமல் வேலையையே நிறுத்தி விடலாமா என்று புலம்புகிறார்.
ஆட்சி நிர்வாகத்தை செம்மையாக நடத்த வேண்டும், கடனை அடைக்க வேண்டும் என்று தீவிரமாக இருப்பதாகக் கூறும் ஜெயலலிதா, இது போல நடக்கும் ஊழல்களை தடுத்து நிறுத்தினாலே, அரசுக்கு வர வேண்டிய வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுரை கூறும் ஜெயலலிதா, முதலில் அந்த அறிவுரையை தன்னுடைய உயிர்த் தோழிக்கு கூறினால், தமிழக மக்கள் இந்தப் பிரம்படியிலிருந்து தப்பிப் பிழைப்பார்கள்.