பிரமோத் குமார். பீகார் மாநிலம் இவர் சொந்த ஊர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி இவர். மிக மிக திறமையானவர். எதில் ? பெண்கள் விஷயத்தில். தனக்கு கீழே பணியாற்றும் பெண் காவலராக இருந்தாலும் சரி…. வழக்கில் சம்பந்தப் பட்ட குற்றவாளியாக இருந்தாலும் சரி. பேசியோ, மிரட்டியோ, பலவந்தப் படுத்தியோ… வளைக்காமல் விட மாட்டார். காவல் துறை வட்டாரங்களில் இவருக்கு செல்லப் பெயர் என்ன தெரியுமா ? “நிரோத் குமார்” என்பதுதான்.
திருப்பூரில் பாஸி பாரெக்ஸ் ட்ரேடிங் என்று ஒரு நிறுவனம் தொடங்கப் படுகிறது. அந்த நிறுவனம் கோல்ட் க்வெஸ்ட் போலவே ஒரு மோசடி நிறுவனம். குறுகிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்று அலைவார்களே…. அப்படி பேராசைப் பிடித்தவர்கள் விளக்கில் விழும் ஈசல் போல அந்த நிறுவனத்தின் வலையில் விழுகிறார்கள். அவர்கள் வெளியிட்ட ஸ்கீம் என்னவென்றால் 50 ஆயிரம் டெப்பாசிட் செய்தீர்கள் என்றால் ஒரே வருடத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 944 ரூபாயாக திருப்பித் தருவோம் என்பதுதான் அந்தத் திட்டம். உலகத்தில் எவனாவது இவ்வளவு வட்டி தர முடியுமா என்று யாருமே சிந்திக்கத் தயாராக இல்லை.
இந்த ஸ்கீம் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இதில் விளையாடும் பணத்தைப் பற்றி அறிந்த காவல்துறையினர், இந்நிறுவனத்தை அணுகி மாமூல் கேட்கத் தொடங்குகிறார்கள். அந்த நிறுவனத்தாரும் மாமூல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, இந்நிறுவனம் கொடுத்த செக்குகள் பணமில்லாமல் பவுன்ஸ் ஆகத் தொடங்குகின்றன.
புகார்கள் குவிந்தவுடன் காவல்துறை இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்கிறது. இந்த மூவரும் முன் ஜாமீன் கேட்டு செய்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இதையடுத்து திருப்பூர் காவல்துறையில் பணியாற்றிய டிஎஸ்பி ராஜேந்திரன் இந்த மூவரையும் மிரட்டி கோடிக்கணக்கில் வசூல் செய்கிறார். இன்ஸ்பெக்டர்கள் சண்முகையா மற்றும் மோகன்ராஜும் வசூலில் இறங்குகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் பின்புலமாக இருந்து செயல்பட்டது அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத் குமார். பிரமோத் குமார் உத்தரவின் பேரில், பாஸி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கமலவள்ளியை கடத்தி மூன்று நாட்கள் ஒரு இடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த மூன்று நாட்கள் அடைத்து வைத்த சமயத்தில் பிரமோத் குமார் களத்தில் இறங்கியிருக்கிறார். கமலவள்ளிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறார் என்று கமலவள்ளி கூறுகிறார். மேலும், கமலவள்ளியை அரை நிர்வாணக் கோலத்தில் வீடியோ எடுத்து, இந்த விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோ வெளியிடப் படும் என்றும் மிரட்டியுள்ளார்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கமலவள்ளி, அத்தனை விவகாரங்களையும் நீதிபதி முன்பு வாக்குமூலமாக கொடுத்து விடுகிறார். இதன் பிறகு இந்த வழக்கு சிபி.சிஐடிக்கு மாற்றப் படுகிறது.
சிபி.சிஐடி வசம் விசாரணை சென்ற பிறகு, இன்ஸ்பெக்டர் சண்முகையாவும் மோகன்ராஜும் கைது செய்யப் படுகின்றனர். சிபி.சிஐடி விசாரணையின் போது மோகன்ராஜ் நீதிபதி முன்பு வாக்குமூலம் கொடுக்கிறார். அந்த வாக்குமூலத்தில் பிரமோத் குமாரின் வண்டவாளங்கள் அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்.
இன்ஸ்பெக்டர் மோகன்ராஜின் வாக்குமூலம்
சண்முகையாவின் வாக்குமூலத்தோடு இந்த வழக்கி சிபி.சிஐடியில் இழுத்து மூடப் படுகிறது. சிபி.சிஐடியின் கூடுதல் டிஜிபியாக இருந்தவர் அர்ச்சனா ராமசுந்தரம். அர்ச்சனா ராமசுந்தரம் வேலூர் சரக டிஐஜியாக இருந்த போது, பிரமோத் குமார் சேலம் மாவட்ட எஸ்.பி. அப்போதெல்லாம் வேலூர் சரக கட்டுப்பாட்டில்தான் சேலம் மாவட்டம் வரும். அப்போதே அர்ச்சனா ராமசுந்தரத்துக்கும் பிரமோத் குமாருக்கும் நல்ல நட்பு உண்டு.
இந்த நட்பின் அடிப்படையில், சிபி சிஐடியில் பிரமோத் குமார் மீதான வழக்குக் கட்டில் போடப் பட்ட கட்டை அவிழ்க்கவே கூடாது என்று அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவு போட்டிருந்தார். அதை மீறி அந்தக் கட்டை அவிழ்ப்பதற்கு எந்த அதிகாரிக்கு துணிச்சல் வரும் ?
அர்ச்சனா ராமசுந்தரம், ஐபிஎஸ்
இதன் நடுவே பாஸி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டதன் அடிப்படையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப் படுகிறது.
தமிழக காவல்துறையை எப்போதும் பீடித்திருக்கும் ஒரு கொடிய வியாதி…. குழு மனப்பான்மை. இந்தக் குழுக்கள் எப்படி உருவாகிறது என்றால், நேரடியான மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பட்ட அதிகாரிகள் ஒரு குழு. டிஎன்பிஎஸ்சி மூலம் க்ரூப் 1 தேர்வின் மூலம் டிஎஸ்பியாக சேர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரு குழு. நேரடி ஐபிஎஸ் அதிகாரிகள், க்ரூப் 1 அதிகாரிகளை இளப்பமாகவே நடத்துவார்கள். மதிக்க மாட்டார்கள். இது ஐஏஎஸ்ஸிலும் உண்டு.
இந்த நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்குள்ளாகவே ஒரு உபக் குழு உண்டு (Sub-Committee). அது வட இந்தியா, தென்னிந்தியா என்ற பிரிவு. இந்த இரண்டு குழுக்களுக்குள்ளும் மேலும் ஒரு பிரிவு. அது பேட் மேட் என்ற பிரிவு. அதாவது ஒரே பேட்சைச் சேர்ந்த அதிகாரிகளுக்குள் நெருக்கம் இருக்கும். இதையும் தாண்டி, சாதீயப் பிடிமானம் இந்தக் குழுக்களுக்குள் அடங்காது.
இதில் இந்த வட இந்தியக் குழு மிக மிக பலம் வாய்ந்தது. இந்த வட இந்தியக் குழுக்களுக்கு காவல் துறை தவிர்த்து, ஐஏஎஸ், ஐஆர்எஸ் என்ற மற்ற பணிகளில் இருக்கும் ஆட்களோடும் நெருக்கமான தொடர்பு உண்டு. இவர்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு எதிராக சதிகளிலும் ஈடுபடுவார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு.
சிபிஐக்கு விசாரணை மாற்றப் பட்டதும் விசாரணை நேர்மையான முறையில் நடக்கும் என்று பெரும்பாலானவர்கள் கருதினார்கள். அது போலவே, சிபிஐயும், இதில் சம்பந்தப் பட்ட கமலவள்ளி, மோகன்ராஜ் என்ற அனைவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்தது. ஏற்கனவே சிபி.சிஐடியில் கொடுத்த வாக்குமூலங்களை அவர்கள் உறுதி செய்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், பிரமோத் குமாரைக் காப்பாற்ற புதிய முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வந்துள்ளது. பிரமோத் குமார் காப்பாற்றப் படுவாரோ என்ற வதந்திகள் பரவிய போது அவ்வாறு நடக்காது என்றே கூறப் பட்டது ஆனால் 15 நாட்களுக்கு முன்பாக பிரமோத் குமார், இந்தியாவின் வெளிநாட்டு உளவுப் பிரிவான “ரா” வுக்கு (Research and Analysis Wing RAW) அயல் பணி நிமித்தம் செல்வதாக தகவல்கள் வந்ததும் இது குறித்து விசாரிக்கப் பட்ட போது அந்தத் தகவல் உண்மை என்றும், மாநில அரசில் உள்ள வட இந்திய அதிகாரிகள், பிரமோத் குமாரை அயல் பணிக்கு அனுப்பவதற்காக தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார்கள் என்ற விபரமும் தெரிய வந்தது.
தற்போது, பிரமோத் குமாருக்காக களத்தில் இறங்கியுள்ளவர் ஒரு புதிய நபர். இவர் யாரென்று இவர் பின்னணியை விசாரித்தால் அதிர்ச்சி கரமாக உள்ளது.
சென்னையில் கேபிள் டிவி பாலா என்கிற ஸ்டார் டிவி பாலா என்ற ஒரு நபர் இருக்கிறார். இந்த நபர்தான் தற்போது பிரமோத் குமாரை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.
1996ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அருணா இன் ஹோட்டல் வளாகத்தில் ஹெல் ப்ரீஸஸ் ஓவர் ஹெச் எப் ஓ என்ற ஒரு கேளிக்கை விடுதியை கேடி சகோதரர்கள் நடத்தி வந்தார்கள். அந்த விடுதியில் சரக்கு மற்றும் டிஸ்கோத்தேக்கள் நடைபெற்று வந்தன. 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அதே நாளில் இந்த ஹெச்எப்ஓ மூடப் பட்டது. அப்போது சென்னையில் கேளிக்கை விடுதிக்கு ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்த கேபிள் டிவி பாலா, ஹேடோஸ் சாலையில் உள்ள ஹேடோஸ் கிளப்பை லீசுக்கு எடுத்து நடத்த முயற்சிக்கிறார்.
ஹேடோஸ் கிளப்பை நடத்தி வந்தது, லவக்குமார் குஷ் குமார் என்ற இரட்டையர்கள். அவர்கள் இந்த விடுதியை பல வருடங்களாக நடத்தி வந்தனர். இந்த இரட்டையர்களில் குஷ் குமார் ஒரு விபத்தில் காலமாகிறார். இரட்டைச் சகோதரனின் மரணத்தால் லவக் குமார் மிகவும் மனமுடைந்து போகிறார். இந்த நேரத்தில் கேபிள் டிவி பாலாவும், கிஷோர் என்பவரும் லவக்குமாரை அணுகி, தாங்கள் இந்த விடுதியை நடத்துவதாகவும் 10 ஆண்டுகளுக்கு லீசுக்கு தரும்படியும் கோருகின்றனர். அதன்படி இவர்களுக்கு இந்த விடுதியை லீசுக்கு வழங்கினார் லவக் குமார். 10 ஆண்டுகள் முடிந்த பிறகும், லவக்குமாருக்கு இடத்தைத் தராமல் தனக்கு இருக்கும் அதிகார பலத்தை வைத்து மிரட்டி இடத்தையே பறித்துக் கொண்டார் பாலா.
இந்த கேபிள் டிவி பாலா 2001ல் ஜெயா டிவியோடு நெருக்கமாகிறார். ஜெயா டிவியில் மூத்த நிர்வாகியாக இருந்த முரளிராமன் என்பரோடு நெருக்கமாகிறார். இந்த நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, தன்னை ஜெயா டிவியின் டெக்னிக்கல் அட்வைஸர் என்று கூறிக் கொண்டு அதே பெயரில் ஒரு விசிட்டிங் கார்டையும் அச்சடிக்கிறார். இந்த விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு, அதிமுக மந்திரிகளைப் பார்ப்பது அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பது என்ற வேலையில் ஈடுபடுகிறார். இந்த விஷயம் ஜெயா டிவி நிர்வாகத்துக்கு தெரிய வந்து, உடனடியாக அவரை ஜெயா டிவி அலுவலகத்துக்குள் நுழையக் கூடாத என்று தடை விதிக்கின்றனர். பிறகு அப்படியும் இப்படியும் தனது ப்ரோக்கர் தொழிலை ஓட்டிய பாலா, 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், திமுகவில் ஒட்டிக் கொண்டார்.
பாலாவின் கவனம் எப்போதுமே அரசியல்வாதிகளின் பக்கம் இருக்காது. எப்போதுமே அவரது கவனம் அதிகாரிகளின் பக்கம் தான். கேரளாவில், பில்லி சூனியம், மந்திரிப்பது போன்ற வேலைகளிள் ஈடுபடும் இசுலாமியப் பிரிவு ஒன்று உண்டு. இந்தப் பிரிவைச் சேர்ந்த “பாய்” என்று அழைக்கப் படும் ஒரு சாமியாரோடு இந்த கேபிள் டிவி பாலா நெருக்கம். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் பணியாற்றும் வட இந்திய அதிகாரிகளில் பெரும்பாலானோரை தனது வலைக்குள் வீழ்த்தி விட்டார் பாலா. பாலாவின் ஸ்டைல் எப்படி என்றால், முதலில் சம்பந்தப் பட்ட அதிகாரியை தனக்கு தெரிந்த மற்றொரு அதிகாரி மூலமாக சந்திப்பது. அந்த அதிகாரிக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, அவரிடம் கேரளா பாயைப் பற்றி எடுத்து விடுவது. அவரை ஒரு முறை பார்த்து வந்தால் நீங்கள் தான் டிஜிபி என்பது போல கப்ஸா விடுவது. உங்கள் குடும்பத்தில் உள்ள பிணி எல்லாம் நீங்கி விடும், உங்கள் எதிரிகளை பாய் துவம்சம் செய்து விடுவார் என்று அள்ளி விடுவது. பெரும்பாலான அதிகாரிகள் இதை நம்பி, ‘சரி… பாயை போய் பார்த்து விட்டுத்தான் வருவோமே’ என்று கிளம்பினால், அதோடு அவர்கள் கதை முடிந்தது. தமிழக அதிகாரிகளிடம் கேபிள் டிவி பாலாவின் பாச்சா பலிக்கவில்லை போலிருக்கிறது. தமிழக அதிகாரிகளிடம் கேரளா பாயைப் பற்றிச் சொன்னால், எனக்கு பத்தமடை பாயே போதும், கேரளா பாய் தேவையில்லை என்று சொல்லி விடுகிறார்கள் போலும்.
அந்த அதிகாரியோடு நட்பு ஏற்படுத்திக் கொண்டு, மெல்ல அந்த அதிகாரியின் மனைவியையும் தாயையும் சந்திப்பது. அவர்களுக்கு, கேரளா பாய் கொடுத்தார் என்று தாயத்து, தகடு என்று சென்னை நகர குப்பைத் தொட்டிகளில் பொறுக்கிய ஏதாவது ஒரு பொருளை கொடுப்பது. அவர்களும் அதை வாங்கிக் கொண்டு, “பாலா ரொம்ப நல்லவர். அவர் சொல்வதை செய்து கொடுங்கள்” என்று தங்களது வீட்டுக் காரர்களை நச்சரிப்பார்கள்.
இந்த தொடர்புகளை பயன்படுத்திக் கொள்ளும் பாலா, அந்த அதிகாரிகளால் பாதிக்கப் பட்ட நபர்களை சென்று சந்திப்பார். உதாரணத்துக்கு, சமீபத்தில் சிபிஐயால் கைது செய்யப் பட்ட அண்டாசு ரவீந்திரா பாலாவின் வாடிக்கையாளர். (அவர் கைது செய்யப் படும்போது கேரளா பாய் ஏன் காப்பாற்றவில்லை ?) வருமான வரியில் சிக்கல் ஏற்பட்டு அண்டாசு ரவீந்திராவிடம் மாட்டிக் கொண்ட தொழில் அதிபரைச் சென்று சந்திப்பார் பாலா. அந்த தொழில் அதிபரிடம் அண்டாசு ரவீந்திரா நான் என்ன சொன்னாலும் கேட்பார். பார்க்கிறீர்களா என்று கேட்டு விட்டு, அவர் முன்பாக சம்பந்தப் பட்ட அதிகாரிக்கு போன் போடுவார். போனைப் போட்டு, “சார் வர்ற சனிக்கிழமை மேடத்த கேரளா வரச் சொல்லுங்க சார். பாய் கிட்ட ஸ்பெஷல் தரிசனம் ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று சொல்லுவார். பாதிக்கப் பட்ட தொழில் அதிபர், அடப்பாவி இவனுக்கு இத்தனை செல்வாக்கா என்று வியந்து, உடனடியாக பாலா கேட்கும் தொகையை கொடுத்து விடுவார். கேபிள் டிவி பாலா பல நேரங்களில் விடுவது கப்ஸா என்றாலும், சில நேரங்களில் இவரால் காரியத்தை சாதித்துக் கொடுக்க முடிந்திருக்கிறது என்பது உண்மையே….
இந்த கேபிள் டிவி பாலாவின் கஸ்டமர்களாக இருக்கும் அதிகாரிகளின் பட்டியலைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாகவும், மன வருத்தமாகவும் இருக்கிறது. சங்கர் ஜிவால், அம்ரேஷ் பூஜாரி, ஜாங்கிட், என்று இந்தப் பட்டியல் நீளுகிறது. சில நல்ல அதிகாரிகளின் பெயர்களை சவுக்கு குறிப்பிட விரும்பவில்லை. அவர்கள் இந்த ப்ரோக்கர் பாலாவின் பின்புலம் தெரியாமல் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சவுக்கு கருதுகிறது.
ஒரு முறை சாரங்கன் துணை ஆணையராக இருந்த போது இந்த ப்ரோக்கர் பாலாவை மிரட்டலாம் என்று ஒரு ஆய்வாளரை அனுப்பி டிசி வரச் சொல்லுகிறார் என்று அழைத்திருக்கிறார். அடுத்த ஐந்தாவது நிமிடம் சங்கர் ஜிவாலிடமிருந்து போன் வந்திருக்கிறது. என்ன சாரங்கன்… ஹேடோஸ் க்ளப்புக்கு ஆள் அனுப்பினீங்களா ? என்று ஜிவால் கேட்டதுமே அலறிய சாரங்கன், சார் தெரியாமல் நடந்து விட்டது நான் என்னவென்று விசாரிக்கிறேன் என்று கூறி விட்டு, பாலாவிடம் சரணடைந்துள்ளார். ப்ரோக்கர் பாலாவின் செல்வாக்கு அப்படிப் பட்ட செல்வாக்கு.
தற்போது இந்த ப்ரோக்கர் பாலா, தனது வாடிக்கையாளர்களில் ஒருவரான சிபிஐ இணை இயக்குநர் அஷோக் குமாரை, பிரமோத் குமாருக்காக அணுகியிருப்பதாகவும், இதன் மூலம் சிபிஐ பிடியிலிருந்து தப்பித்து விடலாம் என்று பிரமோத் குமார் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இல்லையே அஷோக் குமார் அப்படிப்பட்ட அதிகாரி இல்லையே என்று கூறினால், 2002ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் நடந்த ஒரு விவகாரத்தை அஷோக் குமாரின் நேர்மைக்குச் சான்றாக கூறுகிறார்கள்.
சிபிஐ இணை இயக்குநர் அஷோக் குமார்
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் ஜார்ஜ் இருந்தார். சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக அஷோக் குமார் இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர், பத்திரிக்கைகளில் செய்தி வர வைப்பார்கள். ஒரு வாரம் ஜுனியர் விகடனில் ஜார்ஜைப் பற்றி செய்தி வந்தால் அடுத்த வாரம் குமுதம் ரிப்போர்டரில் அஷோக் குமாரைப் பற்றி செய்தி வரும். இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி செய்தி வெளியிட்டுக் கொள்வார்கள். ஆனால் அப்போதைய இயக்குநர் நாஞ்சில் குமரன், அலுவலகத்தில் உள்ள அமைச்சுப் பணியாளர்களை அழைத்து, “பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. யார் காரணம் என்பதை கண்டு பிடித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்” என்று அஷோக் குமாரையும், ஜார்ஜையும் வைத்துக் கொண்டு மிரட்டுவார்.
அப்போது, ஜாங்கிட்டைப் பற்றி ஏராளமாக புகார்கள் தொடர்ச்சியாக வரும். இந்தப் புகார்களை பார்த்த ஜார்ஜ், இதன் மீது ஒரு ரகசிய விசாரணையை நடத்துமாறு, அப்போது தென் சரக எஸ்.பியாக இருந்த திருஞானம் என்ற அதிகாரிக்கு உத்தரவிடுகிறார். திருஞானம் தன் விசாரணையை தொடங்கியவுடன் அவரை அழைத்த அஷோக் குமார், ஜாங்கிட் மீது விசாரணை நடத்தக் கூடாது என்று உத்தரவிடுகிறார். ஜார்ஜின் நேரடிக் கட்டுப்பாட்டில் பணியாற்றிய திருஞானத்துக்கு அஷோக் குமார் சொல்வதைக் கேட்பதா, ஜார்ஜ் சொல்வதைக் கேட்பதா என்று பெரும் குழப்பம். ஒரு கட்டத்தில் அஷோக் குமாரிடம் பேசுவதையே திருஞானம் நிறுத்தி விட்டார்.
இவர்தான் அஷோக் குமார். ஆகையால், தற்போது பிரமோத் குமாரை அஷோக் குமார் காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று எழுந்துள்ள இந்தப் புகார் – பிரமோத் குமாரை இது வரை சிபிஐ விசாரிக்கவில்லை, அவர் ரா நிறுவனத்துக்கு அயல் பணிக்குச் செல்லும் முயற்சியில் ஏறக்குறைய வெற்றி பெற்று விட்டார், பிரமோத் குமாரை தற்போதைய பணியில் இருந்து மாற்றுவதற்குக் கூட இது வரை சிபிஐ முயற்சி எடுக்கவில்லை, பாசி வழக்கின் விசாரணை தற்போது தேக்க நிலையை அடைந்திருக்கிறது, மேலும் கேபிள் டிவி பாலாவின் செல்வாக்கு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சந்தேகங்கள் வலுப்பெறத்தான் செய்கின்றன.
அண்மைச் செய்தி : கேபிள் டிவி பாலாவுக்கு தற்போது சின்னம்மாவின் தொடர்பு கிடைத்துள்ளது. சின்னம்மாவை நேரில் சந்தித்து பேசி பல்வேறு விஷயங்களுக்காக வசூல் செய்யும் வேலையிலும் இறங்கியிருக்கிறார் கேபிள் டிவி பாலா.
2 Responses
[…] […]
[…] […]