வணக்கம் கனிமொழி அவர்களே…. நாளை முதன் முறையாக சிறையை விட்டு நீங்கள் வெளியே வரும்போது எப்படி உணர்வீர்கள் என்பது சவுக்குக்கு நன்றாகத் தெரியும். சவுக்கு அதை உணர்ந்திருக்கிறது.
கடந்த காலங்களில் சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக நீங்கள் புழல் சிறைக்கு சென்று நிகழ்ச்சி நடத்திய போதெல்லாம், அந்தக் கைதியோடு கைதியாக இருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். காலம் எப்படியெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது !!!
சிறை என்பது மனிதர்களை பக்குவப் படுத்தவும் செய்யும், அழிக்கவும் செய்யும். ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த போதுதான் தன் மகளுக்கு கடிதங்கள் வாயிலாக, உலக சரித்திரத்தை எழுதினார். சவுக்கு அந்தப் புத்தகத்தை புழல் சிறையில்தான் படிக்க நேரிட்டது. அதே நேரத்தில் சிறை ஒரு மனிதனுக்கு தன்னுடைய நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண உதவும். சிறைக்குக் சென்றவுடன் நண்பர்கள் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் நடந்து கொள்ளும் தன்மையே வித்தியாசமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய நண்பர்கள் காலா காலத்துக்கும் நண்பர்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு.
உங்கள் விஷயத்தில், உங்கள் தந்தையின் கட்டாயத்திற்காக வேறு வழியின்றி உங்களை சிறையில் வந்து சிலர் பார்த்திருக்கக் கூடும். ஆனால் உண்மையில் நீங்கள் சிறையில் இருப்பதற்காக வருத்தப் பட்டவர்கள் யார் என்பதை புத்திசாலிப் பெண்ணான நீங்கள் கண்டு பிடித்திருப்பீர்கள்.
2ஜி விஷயத்தில் உங்களை விட தப்பு செய்தவர்கள் வெளியில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் 2ஜி விவகாரத்தில் உங்களுக்குப் பங்கே இல்லை என்பதை ஏற்க முடியாது. அந்த 200 கோடிப் பணத்தை நீங்கள் வாங்கவில்லை என்பதையும், அது லஞ்சப் பணம் என்பதையும், சிபிஐ நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தவறலாம். ஆனாலும் உண்மை என்ன என்பதை உங்கள் மனசாட்சி அறியும். உங்களை நீங்களே எந்தக் காலத்திலும் ஏமாற்ற முடியாது.
எம்.பி பதவிக்கு வருவதற்கு முன்பெல்லாம், உங்களை மிக மிக நல்ல மனிதர் என்றே சொல்லுகிறார்கள், உங்களோடு பழகியவர்கள். பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் பேசிய போது, உங்களை ஒரு அறிவுஜீவித் தளத்திலேயே வைத்துப் பார்க்கிறர்கள். ஒரு பத்திரிக்கையாளர் உங்களை ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று குறிப்பிட்டார்.
சவுக்குக்கு உங்களைப் பற்றி முதலில் கேள்விப் பட்ட சம்பவம் உங்கள் முதல் கவிதைத் தொகுதி வெளியீட்டின் போது. உங்கள் கவிதைத் தொகுப்பு வெளியிடப் பட்டவுடன், சவுக்கு மதிக்கக் கூடிய தமிழாசிரியர் ஒருவர், அதைப் படித்து விட்டு, கருணாநிதி மகள் என்பதற்காக அல்லாமல், தனிப்பட்ட முறையிலேயே ஒரு நல்ல கவிஞராக வரக் கூடியவர் என்ற குறிப்பிட்ட போது உங்கள் மீது நல்ல மரியாதை ஏற்பட்டது. கருணாநிதியின் கலை உலக வாரிசாக முயற்சித்து, உங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின், குறிஞ்சி மலர் கதாநாயகன் அரவிந்தனாக தொலைக் காட்சித் தொடரில் நடித்து வெற்றி பெற முடியாமல் போனதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.
இரண்டாம் தாரத்து வாரிசுகளுக்கு எப்போதுமே இரண்டாம் இடம்தான். முதல் தாரத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் தாரத்து வாரிசுகளை, சொத்தில் தேவைப்படாத ஒரு பங்கு என்றே பார்ப்பார்கள். பெரிய இடத்துக் குடும்பமான உங்கள் குடும்பத்தில் இந்தப் பகையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அண்ணாமலை ரஜினிகாந்த் போல உங்கள் குடும்பம் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தக் குடும்பம் ஆனது. இதனால் உங்கள் மீதான வெறுப்பு முதல் குடும்பத்திடம் அதிகமாகவே ஆகியிருந்திருக்கும். ஆனாலும், உங்கள் தந்தை கருணாநிதி உங்கள் மீது வைத்திருந்த பாசம், உங்களை இத்தனை நாட்களும் நம்பிக்கை இழக்காமல் வளர வைத்தது.
இரண்டாம் தாரத்துப் பிள்ளை என்பதால், நீங்களும் அரசியலில் பெரிய அளவில் இறங்காமல், நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்றுதான் இருந்து வந்தீர்கள்.
ஆரம்பகாலத்தில் உங்களோடு பழகியவர்கள் உங்களை மிகச் சிறந்த பெண்ணியவாதி என்று குறிப்பிட்டதைக் கூறுகிறார்கள். 2002ம் ஆண்டில் குஜராத் கலவரம் மிகப் பெரிய அதிர்ச்சியை நாடெங்கும் ஏற்படுத்தியது. நான்கு பண்டாரங்கள் சேர்ந்து தொடங்கிய கட்சி என்று பிஜேபியை விமர்சித்த உங்கள் தந்தை பின்னாளில் அக்கட்சியோடு கூட்டு சேர்ந்து அப்போது மத்திய பிஜேபி அரசில் அங்கம் வகித்துக் கொண்டிருந்தார். அப்போது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று ஞாபகம். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம், சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்றது. அப்போது அந்த அரங்கில் பேசிய பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன், உங்கள் தந்தையை பிடி பிடியென பிடித்தார். நாடே பதை பதைக்கும் அளவுக்கு நடந்திருக்கும் ஒரு கலவரத்தை “அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை” என்று வர்ணிக்கும் ஒரு தலைவர் எப்படி தன்னை சுயமரியாதைக் கட்சியின் தலைவன் என்று அழைத்துக்கொள்ள முடியும். இவர் என்ன பகுத்தறிவு வாதி என்றே வெளிப்படையாக உங்களை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார். அவருடைய கருத்தில் உடன்பாடு உள்ளதோ என்று தோன்றுவது போலவே, நீங்கள் ஒரு சுயமரியாதைக் கட்சியின் தலைவர் எப்படிப் பேசுவாரோ அப்படியே பேசினீர்கள். உங்கள் தந்தையைப் பற்றி டி.என்.கோபாலன் பேசியதை நீங்கள் பொருட்படுத்தவில்லை. ஒரு கை தேர்ந்த மேடைப் பேச்சாளருக்கு உள்ள சொல் அலங்காரம் இல்லாமல், உணர்வோடு நீங்கள் பேசியதைக் காண முடிந்தது. அப்போது உங்கள் மீதான மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நீங்கள் ஒரு ஆட்டோவில் சென்றதாக நினைவு.
உங்கள் முதல் திருமண வாழ்வில் உங்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி இல்லாததோடு மட்டுமல்லாமல், கடும் சித்திரவதைகளையும் அனுபவித் திருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். ஒரு முதலமைச்சர் மகளையே சித்திரவதை செய்கிறேன் பார் என்ற வெற்று ஈகோவுக்காகவே நீங்கள் வதைக்கப் பட்டீர்கள் என்று சொல்கிறார்கள்.
இன்று திராவிட இயக்கத்தின் மூத்த முதுபெரும் தலைவராக உருவெடுத்திருக்கும், தமிழ்த் தாய் குஷ்பூ “கற்பு” கட்டுரையால் சர்ச்சையில் சிக்கிய போது உங்கள் தந்தை உங்களுக்கு நேர்மாறான நிலைபாடு எடுத்தார் என்பதை நீங்கள் மறந்திருக்க முடியாது. குஷ்பூ பேசியதை வெளிப்படையாக எதிர்க்காவிட்டாலும், மறைமுகமாக அதை கடுமையாக எதிர்த்தார். இந்த நிலைபாட்டை எதிர்த்து நீங்கள் ஆனந்த விகடனில் தந்தையோடு இதனால் மனக்கசப்பு என்று பேட்டியே கொடுத்தீர்கள். நீங்கள் வெளிப்படையாகவே குஷ்பூவை ஆதரித்தீர்கள். இதே கருணாநிதி, குஷ்பூ கட்சியில் சேரும்போது குஷ்பூ கருத்தை ஆதரித்து சங்க இலக்கியத்திலே “களவொழுக்கம்” என்ற பிரிவே உண்டு என்று பசப்பியது வேறு விஷயம்.
அந்த நேரத்தில் உங்கள் தந்தை உங்களோடு பேசாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று தெளிவாக கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தவர் நீங்கள். உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளாமல், உங்கள் தந்தையே உங்களிடம் வந்து பேசியவுடன் தான் நீங்கள் பேசினீர்கள். அதையொட்டித் தொடங்கப் பட்டதுதானே கருத்து என்ற இணையதளம் ?
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உங்களுக்கு மிக நல்ல பெயர் இருக்கிறது. நல்ல பத்திரிக்கையாளர்கள் மத்தியில். இன்று உங்களுக்கு நண்பராக இருக்கும் இரா.சரவணன் அல்ல. மிக மிக தன்நம்பிக்கை உடைய பெண் என்றே உங்களை வர்ணிக்கிறார்கள்.
உங்களின் சரிவு தொடங்கியதே இந்த 2ஜி விவகாரத்தால் தான் என்பதை நீங்கள் சற்றே யோசித்துப் பார்த்தீர்களென்றால் தெரியும். அது வரை அமைதியாக நதியினில் ஓடமாகத்தான் போய்க் கொண்டிருந்தது உங்கள் வாழ்க்கை. 2ஜியில் வந்த பணம் உங்கள் வாழ்க்கையை புயலில் சிக்கிய தோணியாக மாற்றிப் போட்டு விட்டது.
2004 பொதுத் தேர்தலின் போதே உங்களுக்கு எம்.பியாக போட்டியிட வாய்ப்பு வந்தது. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல உங்கள் இயல்பு உங்களை அரசியலையும், பதவியையும் உதாசீனப் படுத்த வைத்தது.
16 மே 2007ல் ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகிறார். அவர் அமைச்சரான மறுநாளே ஒரு பெரும் தொகையை கருணாநிதியிடம் கொண்டு வந்து கொடுத்தாக டெல்லி வட்டாரங்களிலும், சென்னையிலும் சொல்லப் படும் தகவல். உங்கள் குடும்பத்தை சாராதவராக இருப்பதால், தன்னுடைய அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ராசா உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நம்புகிறார். ராசா கொண்டு வந்து கொடுத்த பணத்தைப் பார்த்த உங்கள் தாயாரின் பேராசை கொழுந்து விட்டு எரிகிறது. ராசாவே இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால், நம்முடைய பெண் அமைச்சரானால் எவ்வளவு சம்பாதிப்பார் என்ற மனக்கணக்கோடு, உங்களை எம்.பியாக்க வேண்டும் என்று உங்கள் தந்தையை நிர்பந்திக்கிறார். உங்கள் தந்தையும் வேறு வழியின்றி, உங்களை ஜுலை 2007ல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குகிறார். திமுகவே உங்கள் குடும்ப சொத்துதானே… உங்களைத் தவிர வேறு யார் வர முடியும் ?
இதன் பிறகுதான் கனிமொழி உங்களிடத்தில் ஒரு அசுரத்தனமான மாற்றம். இத்தனை மென்மைத் தன்மையாடு இருந்த நீங்கள் உங்களின் மறுபக்கத்தைக் காட்டுகிறீர்கள். நீங்களா இது என்று உங்களோடு நெருக்கமான நட்போடு இருந்த இலக்கியவாதிகளும், நல்ல நண்பர்களும் விலகி ஓடுகின்றனர். கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்ட கொள்ளைக் காரர்கள் உங்களோடு நெருக்கமாகிறார்கள். அப்படி உங்களோடு நெருக்கமானவர்கள் தான் போலிப் பாதிரி ஜெகத் கஸ்பர், ஜாபர் சேட், ரவிக்குமார் போன்றவர்கள் எல்லாம்.
இவர்களோடு சேர்ந்து நீங்கள் நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சியைப் பார்த்து எரிச்சலடைந்தவர்களே அதிகம். அதுவும் அந்தப் போலிப் பாதிரியை அருகில் வைத்துக் கொண்டு நீங்கள் அரசு அதிகாரத்தை தாறுமறாக துஷ்பிரயோகம் செய்தது பலருக்கும் உங்கள் மீது வெறுப்பையே ஏற்படுத்தியது.
ஒரு எம்.பி. பதவியைக் கூட வேண்டாம் என்று புறந்தள்ளிய நீங்கள், 2009 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீரா ராடியாவோடு உரையாடியதைக் கேட்டவர்கள் அதிர்ந்து போனார்கள். இப்படிப் பட்ட பதவி வெறி பிடித்த பெண்ணா இந்தக் கனிமொழி என்று. அரசியலே வேண்டாம் என்று விலகி இருந்த உங்களை ஒரு தரகரோடு திரை மறைவு பேரங்கள் நடத்த வைத்தது எது என்பது உங்களோடு பழகியவர்கள் அனைவருக்குமே புரியாத புதிராக இருந்தது.
{music}images/stories/29_November_2011{/music}
இத்தனை பேரங்களை நீங்கள் நடத்தினாலும், சமுதாயத்தைப் போலவே அரசியலிலும் பெண் வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்பதையே உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது காட்டியது.
குஷ்பூ குறித்த சர்ச்சை வந்த போது வெளிப்படையாக உங்கள் தந்தையையே எதிர்க்கத் துணிந்த நீங்கள், ஈழப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது உங்கள் தந்தையோடு சேர்ந்து நடத்திய நாடகம், உங்களை ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக, மாற்றியது. உங்கள் தந்தை நடத்திய எம்.பி.பதவி ராஜினாமா நாடகத்தின் போது முதல் ஆளாக ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பாமல், உங்கள் தந்தையிடம் அளித்து விட்டு நல்ல பிள்ளை போல கை கட்டி இருந்தீர்கள்.
இது மக்களிடத்தில் உங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அபிப்பிராயத்தையும் அடியோடு நீக்கியது. வெள்ளைக் கொடியோடு நடேசன் சென்ற போது அவர் கொல்லப் பட்டதன் பின்னணியில் உங்கள் பங்கு என்ன என்பது நன்கு தெரிந்தாலும், இப்போது அதைச் சொல்ல விரும்பவில்லை.
இதற்குப் பிறகு, சென்னை சங்கமம் நடத்திய போது மக்களுக்கு உங்கள் மேல் கோபம் தான் வந்தது. அதை நீங்கள் உணரத் தவறினீர்கள். அப்போது உங்களுக்கு நெருக்கமாக இருந்த போலிப் பாதிரியும், ஜாபர் சேட்டும், உங்களுக்கு தைரியம் கொடுத்து, உங்களின் மெல்லிய உணர்வுகளையெல்லாம் பட்டுப் போக வைத்து உங்களை முழு நேர அரசியல்வாதியாக்கினார்கள்.
2ஜி விவகாரம் முழுமையாக வெளியான போது, நீங்கள் கைது செய்யப் படுவீர்களா இல்லையா என்று சர்ச்சைகள் எழுந்த போது, பெரும்பாலான கருத்து நீங்கள் சிறை செல்ல வேண்டும் என்பதுதான். நீங்கள் சிறைக்கு சென்ற போது, எத்தனை பேர் அகமகிழ்ந்தார்கள் தெரியுமா ? இந்த மகிழ்ச்சிக்கு காரணம் உங்களின் கடந்த கால நடவடிக்கைகள் தான். இறுதியாகக் கூட, கைது செய்வதற்கு முன்பாக, மீனவர்கள் கொல்லப் பட்ட செய்தி கேட்டு, நீங்களே ஒரு போராட்டத்தை அறிவித்து, உங்கள் தந்தையின் காவல்துறையை வைத்து கைது செய்யப் பட்டு, பி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் ஒரு நாள் இருந்து, கனிமொழி கைது, கனிமொழி கைது என்று நீங்களே செய்தியைப் பரப்பினீர்களே…. நினைவிருக்கிறதா ? அது போன்ற நடவடிக்கைகள் உங்கள் மீதான வெறுப்பை அதிகரித்தது.
சரி பழசையெல்லாம் விடுவோம். இனி நீங்கள் விரும்பாவிட்டாலும் அரசியலை விட முடியாது. அப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளீர்கள். 2ஜி வழக்கு விசாரணை எப்படிப் போகிறதோ அப்படிப் போகட்டும். நீங்கள் இனி செய்ய வேண்டியதெல்லாம் உங்களை கட்சியில் பலப்படுத்திக் கொள்வதுதான். கட்சியில் உங்கள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுபவர்கள் உங்கள் சகோதரர்களும், உறவினர்களும் தானே தவிர, வேறு யாரும் அல்ல. கட்சியின் மூத்த தலைவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.
உங்கள் தந்தை சொன்னாரே… கூடா நட்பு என்று. ஜெகத் கஸ்பர், ஜாபர் சேட், இரா.சரவணன் போன்ற கூடா நட்பை விட்டு ஒழியுங்கள். நாளை நீங்கள் சென்னை வந்தவுடன், இரா.சரவணனும், ஜாபர் சேட்டும், ஜுனியர் விகடனில் தொடர்ந்து செய்தி வருவதற்கு நாங்கள் தான் காரணம் என்று சொல்லக் கூடும். ஆனால், இந்த ஜாபர் சேட்டால் தான் இன்று திமுகவே நிலைகுலைந்து போய் உள்ளது என்பது மற்ற யாரையும் விட உங்களுக்கு நன்கு தெரியும்.
உங்களோடு நண்பர்களாக இருந்தவர்களை தேடிப் போய் சந்தியுங்கள். பழைய நட்பு வட்டாரத்தை புதுப்பியுங்கள். கட்சியின் தொண்டர்களை சந்தியுங்கள். இன்றுதான் புதிதாக அரசியலில் இறங்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள். நேற்று நீங்கள் கைது செய்யப் படும் வரை ஆரவாரமாக ஆர்ப்பரித்து கவர் ஸ்டோரி வெளியிட்ட இதழ்கள் உங்களுக்கு இன்று கொடுக்கும் ஆதரவை நம்பி விடாதீர்கள். அதே இதழ்கள் உங்கள் சகோதரரோடு சேர்ந்து உங்களை கவிழ்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும். அவற்றை நம்பாதீர்கள். உங்களின் உண்மையான பலம் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதுதான்.
உங்கள் அரசியல் வளர்ச்சிக்கு ஜெயலலிதாவின் ஆட்சி நிச்சயம் உதவி செய்யும்.
ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று உங்களிடம் ஒரு பேட்டியில் கேட்ட போது, “அவரது துணிச்சல்” என்று சொன்னீர்கள். அந்தத் துணிச்சல் உங்களுக்கு நிச்சயம் வேண்டும்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
சவுக்கு.