எந்தத் துறையில் தான் கருப்பு ஆடுகள் இல்லை ? எல்லா துறைகளிலும் உள்ளது போலவே, கருப்பு ஆடுகள் வழக்கறிஞர்களிலும் இருக்கின்றன. அப்படிப்பட்ட கருப்பு ஆடுகள் சில வெள்ளியன்று தீக்கதிர் பத்திரிக்கையின் புகைப்படக் கலைஞரை கடுமையாக தாக்கின.
சவுக்கு இரண்டு பிரிவினருக்கு தன் வாழ்க்கையில் மிகவும் கடன் பட்டிருக்கிறது. ஒன்று பத்திரிக்கையாளர்கள். மற்றொன்று வழக்கறிஞர்கள். வழக்கறிஞர்கள் மட்டும் இல்லையென்றால், கருணாநிதி அரசு, சவுக்கின் கதையை என்றோ முடித்திருக்கும். அப்படி வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு சவுக்கு கடமைப் பட்டிருந்தாலும், அவர்கள் தவறிழைக்கையில் அதை சுட்டிக் காட்டத் தவறுவது, மனசாட்சிக்கு செய்யும் துரோகம்.
வெள்ளிக் கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. குடும்ப நீதிமன்றத்தின் அருகே விவாகரத்து வழக்கு தொடுத்திருந்த ஒரு வழக்கறிஞருக்கும், ஒரு கணவருக்கும் தகராறு. இந்தத் தகராறில் கைகலப்பு ஏற்பட்டு, அந்த கணவரை 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து அடித்து உதைத்தனர். அப்போது அந்த இடத்தில் இருந்த பிரகாஷ் என்ற இளைய புகைப்படக் கலைஞர் படம் எடுத்தார்.
அவ்வளவுதான் !!!. அத்தனை வழக்கறிஞர்களும் சேர்ந்து அந்த புகைப்படக் கலைஞரை தாறுமாறாக அடிக்கத் தொடங்கினர். கேமராவை பிடுங்கிக் கொண்டனர். அப்போது அருகே இருந்த ஒரு இன்ஸ்பெக்டர் தலையிட்டு, அந்தப் புகைப்படக் கலைஞரை காப்பாற்றி எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
தகவல் அறிந்த பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணனும் செயலார் அறிவழகனும் வந்தார்கள். இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில், சேதமடைந்திருந்த கேமராவை மீட்டுக் கொடுத்தனர் காவல்துறையினர். மோகனகிருஷ்ணன், இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று உறுதியளித்தார். அந்த உறுதியின் அடிப்படையில் பத்திரிக்கையாளர்களும் வழக்கறிஞர்களும் கலைந்து சென்றனர். காவல்துறை அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதைப் பார்க்க முடிந்தது.
ஆனால் அடி வாங்கிய பிரகாஷின் கண்களில் கண்ணீர். தன் வேலையைச் செய்ததற்காக தன்னை அடித்த வழக்கறிஞர்களை எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற ஆற்றாமை தெரிந்தது.
இந்தச் சம்பவத்தை ஒரு தனிப்பட்ட சம்பவமாக பார்க்க முடியாது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இது போல எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம். வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் கொலை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வழக்கு முடிந்ததும் திடீரென்று சலசலப்பு. அந்த நீதிமன்றத்தில் பார்வையாளர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் இருந்தார் என்று யாரோ சொல்ல, உடனடியாக அந்த நபர் பிடிக்கப் பட்டு வழக்கறிஞர்களால் சூழப்பட்டார். அவர் நான் காவல்துறையில் பணியாற்றும் கான்ஸ்டபிள் என்று சொன்னது யார் காதிலும் ஏறவில்லை. ஒரு வழக்கறிஞர் அவர் சட்டையைப் பிடித்து இழுத்தார். ஒருவர் அவரை அடிக்க முயற்சி செய்தார். அவரின் பாக்கெட்டிலிருந்த செல்போன்கள், பர்ஸ், அடையாள அட்டை உள்ளிட்டவை பிடுங்கப் பட்டன. இதற்குள், அந்த கான்ஸ்டபிள் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு தகவல் போனதும் அவர் அந்த இடத்துக்கு வந்தார். இன்ஸ்பெக்டர் வந்ததும், கான்ஸ்டபிளை விட்டு விட்டு இன்ஸ்பெக்டரை அடிக்க பாய்ந்தார்கள். இதைத் தடுக்க தலையிட்ட வழக்கறிஞர் புகழேந்தி இழுத்து தள்ளப் பட்டார்.
இவ்வாறு நடக்க காரணம் என்னவென்றால் சங்கரசுப்புவின் மகன் வழக்கில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்கு யாரோ உளவு பார்க்க வந்திருக்கிறார்களாம்.
எத்தனை அற்பத்தனமாக இருக்கிறது ? இன்று இருக்கும் தகவல் சாதனங்களால், தொலைபேசியில் இதைச் சொல்லி விட முடியாதா ? மேலும், நீதிமன்றத்தில் நடப்பதைப் பார்ப்பதால் என்ன தெரிந்து விடப் போகிறது ? இந்தச் சம்பவத்தில் முன்னணியில் நின்று அந்த இன்ஸ்பெக்டரை தாக்குவதில் முன்னணியில் நின்ற வழக்கறிஞர் தன்னை மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று அழைத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத் தக்கது. பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அந்த காவலரின் செல்போனும், பர்ஸூம் கிடைத்தது.
இது போல சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக குடும்ப நீதிமன்றத்துக்கு வரும் கணவனோ, மனைவியோ இது போன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு ஆளான நேர்வுகள் ஏராளம். இந்தச் சம்பவங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை வெகு குறைவு. ஆனால் இவர்கள் தங்களின் இந்த வன்முறைச் செயலின் மூலம் நினைத்ததைச் செய்ய முடியும் என்ற எண்ணத்தோடே இருக்கிறார்கள். காரணம், இவர்களை காவல்துறையோ, வழக்கறிஞர் சங்கமோ எதுவுமே செய்ய முடியாது என்ற துணிச்சலே. உண்மையில், ஒரு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் என்று அடையாளம் காணப்பட்டாலும் கூட, அந்த வழக்கறிஞரை கைது செய்வது என்பது நடக்கவே நடக்காத காரியம். ஒரு வழக்கறிஞரை கைது செய்தால் உடனே நூற்றுக்கணக்கில் வழக்கறிஞர்கள் திரண்டு சென்று போராட்டம் நடத்தும் வழக்கம் இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது.
இது போல காவல்துறையினரை பல முறை தாக்கியும், அவதூறாகப் பேசிய சம்பவங்களும் பல்வேறு முறை நடந்துள்ளதன் தொடர்ச்சியாகவே 19/2 அன்று வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் தொடுக்கச் சொல்லி ராதாகிருஷ்ணன் நாயுடு உத்தரவிட்டதும் தங்கள் நெடுநாளைய கோபத்தை வழக்கறிஞர்கள் மீது கொட்டித் தீர்த்தார்கள் காவல்துறையினர். அப்பாவி வழக்கறிஞர்கள் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப் பட்ட போதும் கூட, பொது மக்கள் மத்தியில் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு இல்லாமல் போனது வழக்கறிஞர்களின் இந்த நடத்தை காரணமாகவே…
நம்மில் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கினால், அவர்கள் அடித்துத் துவைப்பதும், உயர்நீதிமன்றத்தில் ஒரு காவல்துறையினரோ, பொதுமக்களோ சிக்கினால் அவர்களை அடிப்பதும், படித்த நாகரீகமான மனிதன் செய்யும் செயலா ? மிருகங்கள் தானே இப்படிப் பட்ட வேலையில் ஈடுபடும். தன்னுடைய ஏரியாவுக்குள் நுழைந்த ஒரு நாயை, மற்ற நாய்கள் அனைத்தும் சேர்ந்து கடித்துக் குதறுவதைப் போல அல்லவா உள்ளது இது ?
காவல்துறையினரின் பல்வேறு மனித உரிமை மீறல்களை, நீதிமன்றத்தின் உதவியோடு அம்பலப்படுத்தும் சிறப்பான பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களே மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் இது போன்ற செயல்களுக்கு உறுதியாக முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பொதுமக்கள் மீதோ, காவல்துறையினர் மீதோ தாக்குதலில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதனால் சில வழக்கறிஞர்கள் கோபம் கொள்ளக் கூடும். சங்க நிர்வாகிகளை ஏசக் கூடும். ஆனாலும் பரந்துபட்ட பொதுமக்களுக்காகவே வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையால், காவல்துறையினரும், பொதுமக்களும், வழக்கறிஞர்களை இன்னும் மரியாதையோடு பார்ப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
பத்திரிக்கையாளர் பிரகாஷ் தாக்கப் பட்ட சம்பவத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு வருத்தத்திற்குரிய செய்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களைப் பற்றியது. சென்னை உயர்நீதிமன்ற பீட்டில் பத்திரிக்கை யாளர்களாகப் பணியாற்றும் பலர் தங்களை வழக்கறிஞர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் நீதிபதிகளாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். தோழர் பிரகாஷ் தாக்கப் பட்டு எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது சென்னை உயர்நீதிமன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் கூட காவல்நிலையத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வந்தால் வழக்கறிஞர்கள் கோபித்துக் கொள்வார்களாம்.
இவர்களைப் பார்த்துதான் பாரதி, “சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்கா ரடீ – கிளியே செம்மை மறந்தா ரடீ” என்றான்.
தன்னைப் போன்ற ஒரு சக பத்திரிக்கையாளன் தாக்கப் பட்ட போது, அவனோது காவல் நிலையம் சென்று தன்னுடைய ஆதரவை தர வேண்டும் என்ற குறைந்தபட்ச மனிதாபிமானம் இல்லாத இந்தப் பத்திரிக்கையாளர்களை பிழைப்புவாதிகள் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. இவர்கள் அத்தனை பேரும், ஒரு நிர்வாகத்திற்காக, ஒரு முதலாளியின் கீழ் வேலை பார்ப்பவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். இன்று ஹைகோர்ட் பீட். நாளை வேறு ஒரு பீட். ஆனால் இவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், நாளை இவர்களுக்காக குரல் கொடுக்கப் போவது, பத்திரிக்கையாளர் சங்கமே, வழக்கறிஞர்கள் அல்ல என்பதை இவர்கள் நினைவில் கொண்டால் நல்லது.
மேலும் உயர்நீதிமன்ற பத்திரிக்கையாளர்கள் காவல்நிலையம் வராமல் போனதற்கான காரணம், தாக்கப் பட்ட பத்திரிக்கையாளர் தீக்கதிர் பத்திரிக்கையில் பணி புரிபவர் என்பதும் ஒரு காரணம். இதே இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளில் பணி புரிபவர்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் இவர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே.
ஆனால் மற்ற பத்திரிக்கைகளை விட தீக்கதிர் சிறந்த பத்திரிக்கை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். மற்ற பத்திரிக்கைகள் பெரு முதலாளிகளால் லாபத்துக்காக நடத்தப் படுகின்றன. ஆனால், தீக்கதிர், உழைப்பாளி மக்களால், அவர்கள் வசூல் செய்யப் பட்டு கொடுத்த தொகையால் நடத்தப் படுகிறது. தாக்கப் பட்ட தீக்கதிர் புகைப்படக் கலைஞர் பிரகாஷ் கூட, இந்திய மாணவர் சங்கத்தில் இருந்து கொள்கையில் ஏற்பட்ட ஆர்வத்தில் புகைப்படக் கலைஞரானவர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்களோ, காவல்துறையினரோ பத்திரிக்கையாளர்களோ என்றுமே தாக்கப் பட மாட்டார்கள் என்ற நிலை என்று ஏற்படுமோ என்ற ஏக்கம் என்று நிறைவேறும் என்று தெரியவில்லை…..