அந்தப் போராட்டத்துக்குப் பிறகு, பாராளுமன்றத்தின் அன்னா ஹசாரே போராட்டம் குறித்து நடந்த விவாதத்தை அன்னா ஹசாரே குழுவினர் ஆழமாக பரிசீலித்து, அரசியல்வாதிகள் துணையின்றி, லோக்பால், சட்டமாக உருவாகாது என்பதை புரிந்து கொண்டனர். கடந்த முறை பாராளுமன்ற விவாதத்திற்கு முன்பாக, பாரதீய ஜனதா மற்றும் இடது சாரிக் கட்சித் தலைவர்களை அன்னா ஹசாரே குழுவினர் சந்தித்து பேசியது குறிப்பிடத் தக்கது.
இந்த முறை போராட்டத்தின் வடிவமே மிகச் சிறப்பாக இருந்தது. வெறும் உண்ணாவிரதம் என்று இருக்காமல், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்புக் கொடுத்து, லோக்பால் குறித்த அவர்களின் கருத்தை அந்த மேடையில் வந்து பரிமாறிக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தது சிறப்பான ஒன்று. மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தவர்களை, அங்கே குழுமியிருந்தவர்கள், கோஷம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்தது வேறு விஷயம். ஆனால், இந்த வடிவம் சிறப்பானதாக அமைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தும், நாங்கள் பாராளுமன்றத்தில் மட்டும் தான் பேசுவோம் (பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம்) என்று அந்தக் கூட்டத்தை தவிர்த்தது, அன்னா ஹசாரே குழுவினரைப் பார்த்து, கல்லால் அடி வாங்கிய நாய், தனது கால்களுக்கிடையே வாலை ஒளித்துக் கொண்டு ஓடுவதைப் போல இருந்தது.
தொலைக்காட்சிச் சேனல்களின் விவாதங்களில் பங்கேற்று, வாய் கிழிய பேசும், அபிஷேக் மனு சிங்வி, மனீஷ் திவாரி போன்றவர்களை ஆளையே காணவில்லை. வந்தால் ஜந்தர் மந்தரில் இருந்தக் கூட்டம் அவர்களை ஓட விட்டிருக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இது போல அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு நாடெங்கும் எழுந்த பெரும் ஆதரவுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு பெரும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி அன்னா ஹசாரேவின் போராட்டத்தைக் கையாண்ட விதம் இருக்கிறதே… அரசியல் சாதுர்யத்தின் உச்சம். ஆயிரம் ரூபாய் நோட்டை ரத்து செய்து விட்டால் கருப்புப் பணம் ஒழிந்து விடும் என்று தத்துவங்களை உதிர்க்கும் பாபா ராம்தேவ் என்ற ஒரு சாமியாரின் போராட்ட அறிவிப்பைப் பார்த்து பயந்து, அவரை வரவேற்க விமான நிலையம் சென்றதே காங்கிரஸ் கட்சியின் திறமைக்கு ஒரு சான்று. அந்த நபர் போராட்டமெல்லாம் நடத்திய பிறகு, வெளிநாட்டிலிருந்து அவரின் ஆசிரமத்திற்கு ஏராளமான நிதி வருகிறது என்று அமலாக்கப் பிரிவை வைத்து கண்டுபிடிக்கத் தெரிந்த காங்கிரஸ் கட்சிக்கு, அந்த நபர் போராட்டம் நடத்துவேன் என்று அறிவிப்புக் கொடுத்த போது, அவர் காலை நக்கத்தான் தெரிந்தது.
அந்த நபர் டெல்லியிலே உண்ணாவிரதம் தொடங்கியவுடன், எங்கே இந்தப் போராட்டம் பெரிய அளவிலே வளர்ந்து விடுமோ என்று பயந்து, டெல்லி போலீசாரை வைத்து, இரவோடு இரவாக அந்த சாமியாரை கைது செய்தது காங்கிரஸ் அரசு. ஒரு மோசமான பேர்விழியின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தாமல், அந்த போராட்டத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்களின் மீது தடியடி நடத்தியதன் மூலம், தான் ஒரு கையாகாலாத அரசு மட்டுமல்ல, ஒரு அயோக்கியத்தனமாக அரசு என்பதையும் நிரூபித்தது மன்மோகன் அரசு.
அதன் பிறகு, அன்னா ஹசாரேவை கைது செய்தது மட்டுமல்லாமல் அவர் போராட்டத்துக்கும் அனுமதி மறுத்தது. அன்னா ஹசாரேவின் கைதுக்கு நாடெங்கும் எழுந்த எதிர்ப்பைப் பார்த்து பயந்த காங்கிரஸ் அரசு, அன்னா ஹசாரேவை சிறையிலிருந்து உடனடியாக விடுவித்தது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய அன்னா ஹசாரே, போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தால்தான் சிறையில் இருந்து வெளியேறுவேன் என்று அறிவித்ததும், வேறு வழியின்றி போராட்டத்துக்கு அனுமதி அளித்தது. போராட்டம் நடந்த அந்தப் பத்து நாட்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் கடைசியாக அன்ன ஹசாரே கேட்ட கோரிக்கைகள் அனைத்துக்கும் தலையாட்டியது என்பதே உண்மை.
அன்னா ஹசாரே குழுவினர் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்கள், சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை, அன்னா ஹசாரே ஒரு ஊழல் பேர்விழி என்று காங்கிரஸ் அரசு கையாண்ட எந்தத் தந்திரமும் பலிக்கவில்லை.
பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், அன்னா ஹசாரேவின் கோரிக்கையான வலுவான லோக்பால் மசோதா என்பதற்கு ஆதரவாகவே குரல் கொடுத்திருந்ததை உணர்ந்த காங்கிரஸ் அரசு, அவையின் கருத்துக்கிணங்க செயல்படுவோம் என்று உறுதிமொழி அளித்தது.
அதன் பிறகு, ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் அரசு கையாண்ட அதே தந்திரத்தை மீண்டும் கையாளத் தொடங்கியது. கிரண் பேடி மீது ஊழல் புகார், அர்விந்த் கேஜ்ரிவல் மீது ஊழல் புகார், அன்னா ஹசாரேவோடு நெருக்கமாக, அவருக்கு ப்ளாக் எழுதிக் கொண்டிருந்தவரை வைத்து அன்னா ஹசாரே மீது புகார் கொடுக்கச் சொல்வது, அன்னா ஹசாரேவோடு நெருக்கமாக இருந்த மற்றொருவரான சுவாமி அக்னிவேஷை வைத்து அன்னா ஹசாரே குழுவினர் மீது புகார் சொல்ல வைப்பது, அன்னா ஹசாரே போராட்டத்துக்கு வந்த நன்கொடையில் ஊழல், என்று பல்வேறு தந்திரங்களை கையாண்டது. அன்னா ஹசாரே குழுவினர் இந்தப் புகார்களுக்கெல்லாம் இடம் கொடுத்திருக்கக் கூடாது என்பது உண்மைதான் என்றாலும், அதற்காக அவர்கள் எடுத்த போராட்டமே தவறு என்று எப்படிச் சொல்ல முடியும் ?
காங்கிரஸ் அரசு கருதியது என்னவென்றால், இது போல அன்னா ஹசாரே குழுவினர் மீது ஒவ்வொரு புகாராக சொல்லிக் கொண்டேயிருந்தால், லோக்பாலும் வேண்டாம், எருமைப் பாலும் வேண்டாம் என்று இந்திய மக்கள் முடிவெடுத்து விடுவார்கள், இத்தோடு இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்பதுதான்.
ஆனால் கிரண் பேடி உள்ளிட்ட அத்தனை பேர் மீது சொல்லப் பட்ட புகார்களை மக்கள் ரசிக்கவில்லைதான் என்றாலும், அதற்காக லோக்பால் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. வலுவான லோக்பால் சட்டம் வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தி அதை ஒருங்கிணைப்பதில் அன்னா ஹசாரேவும் அவர் குழுவினரும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள், இதை இத்தனை ஆண்டுகளாக யாருமே செய்யவில்லை என்பதால் எங்கள் ஆதரவு இவர்களுக்குத்தான் என்றே மக்கள், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் கருதினார்கள்.
கடந்த முறை அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டப் பட்டது எஸ்எம்எஸ் மூலமாக என்பதை உணர்ந்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் எடுத்த ஒரு முட்டாள்த்தனமான நடவடிக்கை எஸ்எம்எஸ்களை 100க்கு மேல் அனுப்ப முடியாது என்ற கட்டுப்பாடு விதித்தது. இதற்கு கபில் சிபல் சொன்ன காரணம், தேவையற்ற எஸ்எம்எஸ்கள் அனுப்பி வாடிக்கையாளர்களை தொல்லைக்குள்ளாக்குகிறார்கள் என்பதுதான். நாட்டு மக்களின் மேல் காங்கிரஸ் அரசுக்கு உள்ள அக்கறையை நன்கு உணர்ந்த மக்கள், இந்தக் கூற்றை நம்புவதற்கு துளியும் தயாராக இல்லை.
அடுத்ததாக அன்னா ஹசாரேவின் போராட்டங்களுக்கு பேஸ் புக், ட்விட்டர் ப்ளாக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஆதரவையும் நிறுத்த வேண்டும் என்று அந்த சமூக வலைத்தளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தோடு பல கருத்துக்கள் பதியப்படுகின்றன என்ற புதிய கதையைச் சொன்னார். இதன் மூலம் இந்த நிறுவனங்களின் வியாபாரத்தை முடக்கப் போகிறோம் என்று மிரட்டுவதன் மூலம் இந்த நிறுவனங்களை பணிய வைக்க முடியும் என்று நினைத்த கபில் சிபலுக்கு கூகிள், பேஸ் புக் போன்ற நிறுவனங்கள் அல்வாவை கொடுத்தன. கபில் சிபல் இன்று இருப்பார், நாளை இல்லாமல் போவார். ஆனால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் ஆதரவை இந்த நிறுவனங்கள் இழக்க தயாராக இல்லை.
இந்தச் சூழலில் தான் ஞாயிற்றுக் கிழமை அன்னா ஹசாரேவின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது. காங்கிரஸ் அரசு, இத்தனை நாள் மெனக்கெட்டு கையாண்ட தந்திரங்கள் எத்தகைய பலனைத் தருகிறது என்று பார்க்கலாம் என்று இருந்த போது அந்தப் போராட்டத்தின் வெற்றி, காங்கிரஸ் அரசை வாயடைக்கச் செய்துள்ளது.
லோக்பால் மசோதாவின் மற்ற அம்சங்கள் எல்லாவற்றையும் விட, காங்கிரஸ் கட்சியின் தூக்கத்தைக் கெடுப்பது இரண்டே இரண்டு அம்சங்கள் தான். சிபிஐ யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பது என்பதும், பிரதமர் லோக்பால் வரம்புக்குள் வர வேண்டுமா இல்லையா என்பதும்தான்.
சிபிஐ காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது, காங்கிரஸ் அரசுக்கு அரசியல் நடத்துவதற்கான ஆக்சிஜன் போல. சிபிஐ தனது கட்டுப்பாட்டில் இல்லையென்றால், மாயாவதி, முலாயம்சிங், லல்லுபிரசாத் யாதவ் போன்றவர்களை எப்படி கூட்டணிக்கு சம்மதிக்க வைப்பது ? ஜெயலலிதாவை எப்படி மிரட்டுவது ? தங்களுடன் மோதிய ஜெகன் மோகன் ரெட்டி, பிஜேபி முதலமைச்சர்களை எப்படி பழி வாங்குவது ? இது போன்ற அடிப்படையான பிரச்சினைகளைக் கருதியே காங்கிரஸ் அரசு, சிபிஐ மீதுள்ள தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.
பிரதமர் பதவி லோக்பால் வரம்புக்குள் வர வேண்டாம் என்பது, ஏதோ மன்மோகன் சிங்கை காப்பாற்றுவதற்காக இல்லை. இன்னும் 30 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போகிறார் என்று காங்கிரஸ் கட்சி கனவு காணும், ராகுல் காந்தி பிரதமர் ஆகும் போது, அவருக்கு பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதாலேயே காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது என்று விரும்புகிறது. மன்மோகன் சிங், தனக்கு தனிப்பட்ட முறையில் பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதில் ஆட்சேபணை இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
நேற்றைய போராட்டத்தில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் பிஜேபி ஆகிய இரு கட்சிகளுமே சிபிஐயை அரசியல் காரணங்களுக்கான எதிரிகளை பழி வாங்குவதற்காக பயன்படுத்தின என்று குறிப்பிட்டார். மாயாவதியை வழிக்குக் கொண்டு வருவதற்காக 2005ம் ஆண்டில் தாஜ் காரிடார் வழக்கில் மாயாவதி மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, 2007ல் மாயாவதியின் ஆதரவு வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கவர்னர் ராஜேஸ்வர் ராவை வைத்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி மறுத்ததை குறிப்பிட்டார். இதற்கு கைமாறாக காங்கிரஸின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பாட்டீலுக்கு மாயாவதி ஆதரவு அளித்ததையும் 2010ல் சிபிஐ மாயாவதி மீதான வழக்கை மூடுவதாக அறிவித்ததையும், இந்த ஆண்டு செப்டம்பரில் மாயாவதி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் போவதாக அறிவித்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.
நேற்றைய போராட்டத்தில் பேசிய ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் அன்னா ஹசாரேவின் குழுவினர் குறிப்பிடும் லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்களில் உடன்படுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக, அன்னா ஹசாரேவின் விருப்பங்களுக்கு எதிராக ஏதாவது செய்தால், 2014 தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டி வருமோ என்று அஞ்சும் பிஜேபி, எல்லாவற்றுக்கும் உடன் படுகிறோம் என்றது. சிபிஎம் மற்றும் சிபிஐ சற்றும் சளைக்காமல் நாங்களும்தான் என்று கோரஸ் ராகம் பாடின. சரத் யாதவ் தனது பங்குக்கு பாராளுமன்றத்தின் விருப்பமே தனது விருப்பம் என்றார்.
ஒட்டுமொத்தமாக, யாருமே அன்னா ஹசாரே குழுவினரை பகைத்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. எதிர்க்கட்சிகள் அத்தனையும், குறிப்பாக பிஜேபி மற்றும் இடது சாரிகள் இணைந்து அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்ற செய்தி, காங்கிரஸின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போலவே இருந்தது.
இந்தப் போராட்டத்தால் என்ன வந்து விடப் போகிறது, லோக்பால் நாட்டில் ஊழலே இல்லாமல் செய்து விடுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில், லோக்பால் ஊழலை முற்றிலும் ஒழித்து விடாதுதான். சரி பிறகு எதற்கு லோக்பால் என்றால், கண்ணுக்குத் தெரிந்து ஊழலின் மூலம் சம்பாதித்த சொத்துக்களை பெருமையாக பறைசாற்றிக் கொண்டு பவனி வரும் உயர் உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், கடந்த 60 ஆண்டுகளாக எதுவுமே செய்ய முடியவில்லையே…. இது வரை இருந்த லஞ்ச ஒழிப்புச் சட்டம், கான்ஸ்டபிள்களையும், விஏஓக்களையும் தண்டிக்கப் பயன்பட்டதே ஒழிய, திராவிடக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு கோடிகளில் திளைத்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதர்களை எதுவும் செய்ய முடியவில்லையே ?
இந்த லோக்பால் சட்டத்தின் மூலம் ஊழல் செய்யும் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தண்டிக்கப் படுவதற்கான வாய்ப்பு பெருகியுள்ளது. லோக்பால் சட்டத்தில் குறைகளே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. குறைகள் இருக்கலாம். அந்தக் குறைகளை காலப்போக்கில் சரி செய்து கொள்ள முடியும். குறைகளை மட்டுமே பேசிக் கொண்டு இருந்தால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா போல இது என்றுமே வராது.
இந்த நேரத்தில் சிபிஎம் கட்சியின் பிருந்தா காரத் சொன்ன விவகாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை மட்டுமல்லாமல், அந்த ஊழலுக்கு துணை போகும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் தண்டிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம். மேலும் பிருந்தா காரத், ஊழல் செய்வதன் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்ட டெண்டர்களையும் ரத்து செய்வதற்கு லோக்பால் சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்று சொன்னதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தச் சூழலில் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா விரைவில் விவாதத்துக்கு வர உள்ளது. அதற்கு முன்பு, வரும் 15 டிசம்பர் அன்று, காங்கிரஸ் அரசு, லோக்பால் மசோதா குறித்து விவாதிப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது. பாராளுமன்றத்தில் தற்போது வரைவுச் சட்டமாக இருக்கும் லோக்பால், சட்டமாவதற்கான வாய்ப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக அன்னா ஹசாரே மற்றும் அவரின் குழுவினரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போலப் பேசினாலும், இவர்கள் உண்மையில் பாராளுமன்ற விவாதத்தின் போது என்ன நிலைபாடு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
லோக்பால் மசோதா குறித்து இது வரை எந்தவிதக் கருத்தையும் சொல்லாமல் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜியின் நிலைபாடு இந்த மசோதா சட்டமாவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்தப் போராட்டத்தை அன்னா ஹசாரே குழுவினர் கையாண்ட விதமும், மக்களைத் திரட்டிய விதமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும், இயக்கமும் கற்றுக் கொள்ள வேண்டியவை. மிக மிக நேர்த்தியான வகையில் மக்களைத் திரட்டியதும், ஒழுங்கமைத்ததும், மீடியாக்களைக் கையாண்டதும், பொதுக் கருத்தை உருவாக்கியதும் பாராட்டத் தக்கவை.
தற்போதைய நிலைமையில், எல்லா சாலைகளும், லோக்பாலை நோக்கிச் செல்வதாகவே தோன்றுகிறது.