இன்று வெளிவந்த நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரை கமா புல்ஸ்டாப் கூட மாற்றாமல், சவுக்கு நேயர்களுக்காக அப்படியே தரப்படுகிறது. இந்தக் கட்டுரையை எழுதியவர் பெயர் பிரகாஷ். இக்கட்டுரையை படித்து விட்டு, நக்கீரனின் தரத்தையும், அது பத்திரிக்கையா அல்லது கத்தரிக்காயா என்பதை சவுக்கு வாசகர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
“எங்க ராசா“ – கலங்கிய மக்கள்”
“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் மேற்கொண்ட நிலைபாடு சரிதான். இதை சட்டப்படி நிரூபிப்பேன்“ என்று பதவி விலகிய பிறகும் உறுதியாக பேட்டியளித்த ஆ.ராசாவைக் குறிவைத்தே டெல்லி மீடியாக்களும் எதிர்க்கட்சியினரும் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ராசாவிவுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை காட்டுவதாக அமைந்தது அவரது சென்னை வருகை.
நவம்பர் 16 அன்று சென்னைக்கு வந்த அவரை வரவேற்க மதியம் மூன்றரை மணியிலிருந்தே விமான நிலையப் பகுதியில் மக்கள் குவிய ஆரம்பித்தனர். முதலில் ராசாவின் நண்பர்கள், உறவுனர்கள் என ஆரம்பித்த கூட்டம் அதன் பிறகு கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என வளர்ந்து இறுதியில் பறை, பேண்டு நாட்டுப்புற வாத்தியங்கள் என இசை வடிவத்துடனும் ஆவேசமான கோஷங்களுடனும் ஆயிரக்கணக்கான கிராமத்து மக்களின் பங்கேற்புடன் பல்கிப் பெருகியது.
“மத்திய மந்திரி ராசா, ஊட்டி ரோசா“ மந்திரி பதவி வேண்டுமென்றால் போகட்டும் எங்களுக்கு என்றுமே நீ ராசா தான்“ என்ற உணர்ச்சிமிகு கோஷங்களுடன், “ஊழல்வாதி ஜெயலலிதா ஒழிக“ என்கிற எதிர்மறை கோஷங்களும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. “மாண்புமிகுவை பறிக்கலாம் மானமிகுவை பறிக்க முடியுமா ? “ “ஆரிய திராவிடப் போராட்டம். அதில் அசுரர் குலம் வெல்லும் ஜாக்கிரதை“ என விளம்பரத் தட்டிகளுடன் திராவிடர் கழகத்தின் கருஞ்சிறுத்தைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டு நின்றனர்.
வரவேற்பு அறிவிப்பை ஒரு அறிக்கை மூலம் முதலில் வெளியிட்டவரான திராவிடர் கழக தலைவர் வீரமணி மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்தார். மாநில அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, செல்வராஜ் உள்ளிட்டோர் காத்து நிற்க, ராசா வரவேண்டிய விமானம் தாமதமாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பொதுமக்களின் குரல் உயர்ந்து கொட்டும் மழையிலும் விமான நிலையத்தின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதிர வைத்துக் கொண்டிருந்தது.
வரவேற்க வந்த பொதுமக்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் குரல் கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் “ஏன் இந்த ஆவேச வரவேற்பு ? “ என பெண்களிடம் கேட்டோம். பிம்பலூரைச் சேர்ந்த சரோஜா, செல்வி, அலமேலு ஆகியோர், “எங்க ராசா ரொம்ப நல்ல மனுஷன். எந்த கஷ்டம்னு அவரைப் பார்க்க போனாலும் சென்னையாக இருந்தாலும் பெரம்பலூராக இருந்தாலும் சரி, காலை 6 மணியில் இருந்து எத்தனை மணி நேரம் ஆனாலும் மக்களை சந்திப்பார். அவரை பார்க்கப் போகிற ஒவ்வொரு நாளும் எங்க வீட்டுல உலை நிச்சயமாக கொதிக்கும். அவ்வளவு அள்ளிக் கொடுப்பார். அவர் மந்திரி பதவியை பிடுங்கிட்டாங்கன்னு சொன்னாங்க. குழந்தை குட்டியை எல்லாம் விட்டுட்டு எங்க ஊரிலிருந்து பஸ்சுல வந்திருக்கோம்“ என்றனர் ஆவேசம் குறையாமல்.
வேலூர் ஜெயலட்சுமி, துறைமங்கலம் தமிழரசி, பாத்திமா செல்வராஜ் ஆகியோர் “வானத்துல கோட்டை கட்டி அதுல ஒரு கொடி மரம் வச்சாங்களாம்… அது மாதிரி எங்க ராசா என்ன தப்பு பண்ணினார்னு எந்த ஆதாரத்தையும் சொல்லாம சட்டமன்றத் தேர்தல் வர்ற நேரத்துல சாணக்கியத்தனத்தோடு ஊழல் குற்றம் சுமத்தி பதவியை பறிச்சுட்டாங்க. அதை கண்டிக்குற விதமா அவரை வரவேற்கிறோம்“ என்கிறார்கள்.
மேலப்புலியூர் ஜெயலட்சும் என்பவர், “தொழில் வளர்ச்சியில் தமிழ் நாட்டில கடைசி இடத்தில் பெரம்பலூர் இருந்தது. எங்க ராசாதான் பெரம்பலூருக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே எம்.ஆர்.எ*ஃப் டயர் பேக்டரி தனது இரண்டாவது யனிட்டை பெரம்பலூரில் தான் தொடங்கியது. இதற்கு காரணம ராசாதான். ஆர்ட்ஸ் காலேஜ், மெடிக்கல் காலேஜ், இன்ஜினியரிங் காலேஜ்னு எல்லா காலேஜையும் கொண்டு வந்து எங்க மாவட்டத்தை முன்னேற்றம் அடையச் செய்தவர் எங்க ராசா தான். இங்கே நில மதிப்பு, சாழ்க்கைத் தரம், பொருளாதார நிலைமை எல்லாம் உயர்ந்திருக்கிறது. இன்னும் நாலு வருஷம் மந்திரியா இருந்திருந்தா சென்னையை விட பெரம்பலூரை முன்னுக்கு கொண்டு வந்திருப்பார். எங்களுக்கு இவ்வளவு நல்லது செஞ்ச மனுஷனுக்கு சோதனை வந்த நேரத்தில் துணை நிற்க நாங்கள் வந்திருக்கோம்“ என்றார் நன்றியுணர்ச்சியுடன்.
மஞ்சமேடு லதாபாலு, “ஒவ்வொரு முறை மழை அதிகம் பெய்தால் கொள்ளிட ஆறு பெருக்கெடுத்து எங்க ஊரை மூழ்கடித்து விடும். அதற்கு ஒரு தடுப்பணை பாலம் கட்ட பிரிட்டிஷ்காரன் காலத்திலிருந்தே கேட்டுக் கிட்டிருக்கோம். ஆனா ராசா வந்த பிறகுதான் நிறைவேறிச்சு. தொகுப்பு வீடு, பள்ளிக்கட்டிடம் என அவர் எங்க ஊரில் செய்து தராத வசதிகளே இல்லை. அதற்கு நன்றி சொல்லும் விதமாகவும், அந்த நல்லவருக்கு கெடுதல் செஞ்ச ஜெயலலிதாவை கண்டிக்கவும் வந்திருக்கோம்“ என உணர்ச்சி கொப்பளிக்க சொன்னார்.
இரவு 9 மணிக்கு ஆ.ராசா சென்னைக்கு வந்தபோது விமானநிலையமே குலுங்குகிற அளவுக்கு வாழ்த்து முழக்கங்கள் கேட்டன. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களும், கட்சிக் காரர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர். நேஷனல் மீடியாக்களின் சென்னை நிருபர்களும், கேமராமேன்களும் இந்த உணர்ச்சிகரமான தருணத்தை பதிவு செய்து, உண்மை நிலவரம் என்ன என்பதை தங்கள் நிறுவனத்தின் தலைமைக்கு தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
“இது நாள் வரை அவர் மந்திரி. இனி அவர் எங்க ராசா“ என்று பெரம்பலூர் பெண்மணி ஒருவர் நேஷனல் மீடியாவின் கேமராவை நோக்கி உணர்வுப்பூர்வமாகச் சொன்ன வார்த்தைகள் இதயத்தை தொட்டன. வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஆ.ராசா பயணித்தபோது “என்றென்றும் மானமிகு“ என்று வீரமணி அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் தொண்டர்கள் முழங்கினர்.