இந்த ஜாங்கிட்டின் வண்டவாளங்கள் பற்றிய விரிவான கட்டுரையை சவுக்கு ஏற்கனவே, “ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜாங்கிட்” என்ற தலைப்பில் எழுதியிருந்தது. தற்போது இந்த ஜாங்கிட் லண்டன் மாநகருக்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். லண்டன் மாநகரில் பயிற்சிக்கு சென்ற இடத்தில், லண்டன் போலீசாருக்கு, காவல்துறையில் இருந்து கொண்டே, எப்படி சிறப்பான முறையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது என்பதை அவருக்கு கற்றுக் கொடுத்து வருகிறாரா என்பது லண்டன் காவல்துறையினரிடம் விசாரித்தால் தான் தெரியும்.
தற்போது ஜாங்கிட் எப்படியாவது மீண்டும் சென்னை மாநகருக்கு வந்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்து வருவதாகத் தெரிகிறது. ஜெகஜ்ஜாலக் கில்லாடி, ஜாங்கிட் என்ற கட்டுரையில், ஸ்டார் டிவி பாலா என்ற ஒரு நபரைப் பற்றியும், அவர் கேரளாவில் இருக்கும் பில்லி சூனியத்தில் ஈடுபடும் ஒரு பாயை வைத்து, பல்வேறு வட இந்திய அதிகாரிகளை தன்னுடைய வலையில் எப்படி வீழ்த்தியிருக்கிறார் என்றும், அந்த பாய் சிறப்பு பூஜை செய்தால் தங்களுக்கு வாழ்வில் பொன்னும் பொருளும் கொட்டும் என்று பல வட இந்திய உயர் உயர் அதிகாரிகள் எப்படி முயற்சித்தனர் என்பது குறித்தும் விரிவாக எழுதப் பட்டிருந்தது.
கடந்த வாரம், இந்த பாய் சென்னைக்கு வருகை தந்திருந்தார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் கவுதம் மேனாரில் அறை எண் 102ல் அந்த பாய் தங்கியிருந்தார். ஜாங்கிட் சென்னைக்கு எப்படியாவது வந்து விட வேண்டும் என்பதற்காக கடந்த வாரம், ஸ்டார் டிவி பாலா உதவியோடு, சிறப்பு பூஜை ஒன்று நடத்தப் பட்டுள்ளது. ஆனால் இந்த பாயின் சிறப்பு பூஜை முதல்வர் ஜெயலலிதாவின் மனதை மாற்றி ஜாங்கிட்டுக்கு சென்னையில் பதவி அளிக்குமா என்பது காலப்போக்கில்தான் தெரியும்.
திமுக அரசில் ஜாங்கிட்டுக்கு பக்க பலமாக இருந்தவர், கருணாநிதியின் மருத்துவர் கோபால். இந்த கோபால் என்ன சொன்னாலும் கருணாநிதி கேட்பார் என்பதால், ஜாங்கிட்டை யாராலும் அசைக்க முடியாமல் இருந்தது. இது தவிரவும், ஜாங்கிட், தற்போது நில அபகரிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கமானவராக இருந்தார் ஜாங்கிட்.
தற்பொழுது தமிழக காவல்துறையில் பலமாக இருக்கும் வட இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்து, ஜாங்கிட் தீவிரமாக சென்னைக்கு வருவதற்கு முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது. ஜாங்கிட் சென்னைக்கு வர முயற்சிப்பதற்கு, நாகர்கோவிலில் அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், தனக்கு திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும் நல்ல செல்வாக்கு உண்டு என்பதை நிரூபித்துக் காட்டவே இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஜாங்கிட் ஒரு கழுவும் மீனில் நழுவும் மீன் என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக அவர் மகனுக்கு நடந்த திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். கடந்த ஆண்டு இறுதியில் ஜாங்கிட்டின் மகன் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியை அழைக்காமல் இருக்க முடியாது. ஆனால், ஆட்சி முடியும் தருவாயில் இருப்பதால், அதிமுக ஆட்சி வந்தால் தான் திமுகவுக்கு நெருக்கமான அதிகாரியாக இருந்தது தெரிந்து விடும் என்றும் பயந்தார். இதனால், முதல்வர் கருணாநிதி தன் மகன் திருமணத்திற்கு வருகை தந்தது யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக கடும் முயற்சிகள் எடுத்தார். பத்திரிக்கை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தன் மகன் திருமணத்துக்கு பத்திரிக்கை வைப்பதற்காக சென்ற ஜாங்கிட், அவர்களிடம் சொன்ன விஷயம், என்னுடைய மகனுக்கு நீங்கள் வழங்கும் ஆசி என்னவாக இருக்கும் என்றால், முதல்வர் வருகை தந்த புகைப்படத்தை வெளியிடாமல் இருப்பதுதான் என்று கோரிக்கை விடுத்தார். புகைப்படம் பத்திரிக்கைகளில் வெளியிடப்படாமல் இருந்தால் ஜெயலலிதாவுக்கு இவர் திமுக அரசுக்கு எவ்வளவு நெருக்கம் என்று தெரியாதாம் !!!!
இதனிடையே ஜாங்கிட்டுக்கு நெருக்கமாக இருந்த டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணி புரிந்த பத்திரிக்கையாளரான ஜெயராஜ் சிவன் என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிலிருந்து திடீரென்று ராஜினாமா செய்து விட்டார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்த இவர் ஏன் திடீரென்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று விசாரித்த போதுதான் இவர் சென்னை எழும்பூரில் “டேஸ்ட் ஆப் கேரளா” என்ற ஒரு உணவகத்தை துவக்கியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இது ஜாங்கிட் பினாமி பெயரில் தொடங்கியிருக்கும் ரெஸ்டாரன்டா என்பதற்கான ஆதாரங்கள் இது வரை கிடைக்கவில்லை. இந்த ரெஸ்டாரண்ட் துவக்குவதற்கு ஜாங்கிட் பெரும் தொகையை கொடுத்து உதவி செய்திருக்கிறார் என்பதும் காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் செய்தி. ஜெயராஜ் சிவனுக்கும் ஜாங்கிட்டுக்குமான நெருக்கம் 20 ஆண்டுகள் பழமையானது. ஜாங்கிட் மதுரையில் எஸ்.பி.யாக இருந்த போதே ரியல் எஸ்டேட் தொழிலில் சிறந்த நிபுணராக இருந்தார். அப்போது காவலர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்கிறேன் என்று ஏராளமான பணத்தை வசூலித்து, காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்தார் என்று அப்போதே ஜாங்கிட் குறித்த குற்றச் சாட்டுகள் உண்டு. அந்த வீட்டு மனை லே அவுட்டில், ஜாங்கிட் பத்திரிக்கையாளர் ஜெயரஜ் சிவனுக்கு மட்டும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்தார் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு, ஜாங்கிட் சென்னை மாநகரத்தின் கூடுதல் கமிஷனராக இருந்த போது, மிக மிக வெற்றிகரமாக அமைந்த மணப்பாக்கம் லே அவுட்டை உயர் உயர் அதிகாரிகளுக்காக மட்டும் ஒதுக்கீடு செய்தார். இந்த லே அவுட்டில், ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இந்த லே அவுட்டில் ஒதுக்கீடு பெற்ற ஒரே பத்திரிக்கையாளர் ஜெயராஜ் சிவன் என்பது குறிப்பிடத் தக்கது. ஜாங்கிட் புறநகர் கமிஷனராக இருந்த போது, டைம்ஸ் ஆப் இந்தியாவில், புறநகரில் குற்றங்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப் படுவது போல தொடர்ந்து செய்திகள் வருவதற்கு காரணம் ஜெயராஜ் சிவன் தான்.
எப்படியாவது சென்னைக்கு மாற்றலில் வரும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக ஜாங்கிட் அணுகியது வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்ட ராஜனை. இந்த வைகுண்ட ராஜனின் சகோதரர் ஜெகதீசனின் மகன் முத்துராஜனுக்கு, டிசம்பர் 5 அன்று மதுரை ஆகாஷ் பேமிலி கிளப் என்ற இடத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு முதல்வரை அழைப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்த வைகுண்ட ராஜன் அப்போது ஜாங்கிட்டை எப்படியாவது சென்னைக்கு மாற்றும் படி கேட்டுள்ளார். இதற்கு ஜெயலலிதா கடும் எரிச்சலோடு அதைப் பற்றிப் பேசாதீர்கள் என்று கூறியதாக வைகுண்டராஜன் ஜாங்கிட்டிடம் கூறியிருக்கிறார்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜாங்கிட், அதிமுக அரசில் தன்னை ஒரு முக்கிய அதிகார மையமாக காட்டிக் கொண்டு வரும் ராவணன் என்பவரை அணுகியுள்ளதாகவும், அவர் 5 கோடி கேட்டு வாங்கிக் கொண்டு, இரண்டே மாதத்தில் ஜாங்கிட்டுக்கு சென்னையில் போஸ்டிங் வாங்கித் தருவதாக வாக்களித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த முயற்சி நல்ல முறையில் கை கூடி வர வேண்டும் என்பதற்காகவே, ஸ்டார் டி.வி.பாலா துணையுடன் அந்த பாயை வைத்து சிறப்பு பூஜையும் நடத்தியுள்ளார் ஜாங்கிட். லண்டனில் பயிற்சி முடித்து விட்டு திரும்பும் போது தனக்கு சென்னையில் போஸ்டிங் வர வேண்டும் என்பதை மனதில் வைத்தே ஜாங்கிட் செயல்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
இதனிடையே ஜாங்கிட்டுக்கு எதிராக இருக்கக் கூடிய சில காவல்துறை அதிகாரிகள் ஜாங்கிட் மீது இருந்த பழைய புகார்களை மீண்டும் தோண்டி எடுக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. ஜாங்கிட் புறநகர் கமிஷனராக இருந்த போது, அவர் மீது சொல்லப் பட்ட முக்கியப் புகார், வடநெமிலியில் உள்ள ஒரு நிலத்தை ஆக்ரமித்தார் என்பது. அந்த நிலத்தை அவர் அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த பிரதீப் யாதவின் உதவியோடு கைப்பற்றினார் என்று ஒரு புகார் வந்து, அது தொடர்பாக சி.பி.சிஐடி விசாரணையும் நடைபெற்றது. ஆனால் அந்த சிபி.சிஐடி விசாரணையை ஜாங்கிட் தனது செல்வாக்கால் தவிடு பொடியாக்கினார்.
இந்த பிரதீப் யாதவ், மத்திய உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் சிறப்பு செயலாளராக இருந்தார். தற்போது மத்திய உள்துறையில் இயக்குநராக புது தில்லியில் உள்ளார். இந்த பிரதீப் யாதவ், ஜாங்கிட் மீது வரும் புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், உள்துறையில் தனக்கு உள்ள அதிகாரத்தை வைத்து தமிழக அதிகாரிகளுக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்து வருவதாகவும், டெல்லியில் உள்ள செல்வாக்கு மிகுந்த வட இந்திய அதிகாரிகளை வைத்து பெரும் முயற்சிகள் எடுத்து வருவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2006ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது சென்னை மாநகரில் நடந்த கொடிய வன்முறைகளை பக்கத்தில் நின்று அரங்கேற்றியவர் இந்த ஜாங்கிட் என்பதை ஜெயலலிதா அவ்வளவு எளிதில் மறந்திருப்பாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் கேரள பாயின் மாந்ரீகத்தின் வலிமையையும் குறைத்து மதிப்பிட முடியாதே….!!!!!