சவுக்கில் திரைப்பட விமர்சனங்களை எழுதினால் என்ன என்று பல நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், சினிமா பற்றிய ஆழ்ந்த பார்வையும் புரிதலும் இருக்க வேண்டும் என்பதில் சவுக்கு தீர்மானமாக இருந்தது. மேலும், திரைப்படங்களை அலசி ஆராய்ந்து, துவைத்து, கொடியில் தொங்கப் போட, இணையத்தில் ஏராளமான தளங்கள் இருக்கையில், மேலும் எதற்கு நாம் வேறு வாசகர்களை இம்சிக்க வேண்டும் என்பதற்காக, அந்த முயற்சியில் ஈடுபடவில்லை.
சவுக்கில் எழுதிய ஒரே திரைப்பட விமர்சனம், அங்காடி தெரு. அந்தத் திரைப்படத்தைப் பார்த்தவுடன், இதைப் பற்றி எழுதியே தீர வேண்டும் என்று ஏற்பட்ட கடுமையான வேட்கையின் விளைவாகவே எழுதப் பட்டது. மற்ற திரைப்படங்களை பார்க்கும் போது, சில திரைப்படங்கள் மகிழ்விக்கும், சில எரிச்சலூட்டும், சில கடும் கோபத்தை ஏற்படுத்தும். சில திரைப்படங்கள், இவற்றையெல்லாம் தாண்டி, இயக்குநரின் கையை உடைத்தால் என்ன என்ற உணர்வை ஏற்படுத்தும். எங்கேயும் காதல் திரைப்படம் இதற்கு ஒரு உதாரணம். இந்த உணர்வுகள் சாதாரண பாமர திரைப்பட பார்வையாளனுக்கு ஏற்படுபவை. ஆனால், இவற்றைத் தாண்டி, சினிமாவை முழு மூச்சாக நேசிக்கும் ஒருவர் திரைப்பட விமர்சனங்களை எழுதினால் சிறப்பாகத் தானே இருக்கும் ?
அப்படி ஒரு சவுக்கின் நண்பர், திரைப்பட விமர்சனங்களை சவுக்குக்காக எழுதித் தருகிறேன் என்று சொல்லும் போது நமக்கு என்ன கசக்கவா செய்யும் ? அதை வாசகர்களுக்கு வழங்குவதில், எப்போதும் போல நமக்கு உளமார்ந்த மகிழ்ச்சியே…. அதனால் போஸ்ட் மார்ட்டம் என்ற புதிய திரைப்பட விமர்சனப் பகுதி, சவுக்கில் அன்பு வாசகர்ளுக்காக இதோ.
போஸ்ட் மார்ட்டம்
Post Mortem : An analysis of an event made after it has occurred.
– Concise oxford English dictionary (11th Edition),
திரைப்பட இயக்குநர் ஜனநாதன் திரைப்படங்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பேசியது :
திரைப்படங்களின் தரத்தை மேம்படுத்த நிறைய விஷயங்களில் கவனம் செழுத்த வேண்டியது இருந்தாலும், முக்கியமானது ரசிகனின், ’திரைப்படங்களை புரிந்து கொள்ளும் தன்மை’ யை மேம்படுத்த வேண்டும். இதற்கு அவனிடம் போய் சேரும் விமர்சனங்களை, சினிமா பற்றி அறிந்தவர்களால் எழுதப்பட்டவையாகவும் நடுநிலையோடும் இருக்க வேண்டும். ஒரு பத்திரிக்கையில் எனது படம் பற்றிய விமர்சனத்தில், படத்தின் ஒளிப்பதிவை பற்றி எழுதும் போது, ஏகாம்பரத்தின் கேமரா பம்பரமாய் சுழல்கிறது என்று எழுதப்படுகிறது. இதை படிக்கும் ரசிகனுக்கு ஒளிப்பதிவு பற்றிய எந்தவித புரிதலையும் அது ஏற்படுத்த போவதில்லை.
இயக்குநர் ஜனநாதனின் இந்த பேச்சு எனக்கு, திரைப்பட விமர்சனம் என்பதற்கான definition – ஆகவே தோன்றியது.
போஸ்ட் மார்டமில் இடம் பெற போகும் திரைப்படங்களின் விமர்சனங்கள், பத்திரிக்கைகளில் வரும் மேம்போக்கான, அரசியல் கலந்த, குத்து மதிப்பான மதிப்பெண்களுடன் வருவது போல இல்லாமல் நேர்மையான, என் மனதில் பட்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இருக்கும்.
நான் சினிமா என்ற வடிவத்தை கண்டு சொக்கி நிற்ப்பவனாகவும், அதை நேசிப்பவனாகவும், அதை தொடர்ந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனாகவும், அதையே எனது வாழ்வாகவும் கொண்டவன்.
படத்தின் ஹிட்டோ அதன் தோல்வியோ எனது விமர்சனங்களை பாதிக்காது. சொல்லப்போனால் அந்த திரைப்படம் பற்றிய விவாதத்திற்கு ஒரு ஆரம்ப சொல்லாகவே இருக்கும். இந்த பகுதியின் நோக்கமே உங்களை திரைப்படம் குறித்த பேசவைப்பது தான்.வெற்று கூச்சல்கள் இல்லாமல் நம்மை வளர்த்து கொள்ளும் பேச்சாக இருத்தல் நன்று.
தன் நிஜத்தை வெளிப்படுத்த முட்டிமோதும் ஒரு ஆன்மாவின் / மனிதனின் தவிப்பு – haunting soul – இது தான் படத்தின் idea. தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிய ஒன்று.
தனுஷிற்கு தான் பெரிய wild-life photographer ஆக வேண்டும் என்பது கனவு. பல மனத்தடைகளை தாண்டி தன் மனைவி ரிச்சா உதவியுடன் ஜெயிப்பது தான் கதை. நன்றாகத்தான் இருக்கிறது.
இதன் பிறகு விரியும் திரைக்கதையில் மேற்சொன்ன விஷயங்கள் focusing இல்லாமல் போனது தான் படத்தின் ஆகப்பெரிய கோளாறு.
பொதுவாக திரைக்கதை என்பது பல ’திருத்தி எழுதுதல்’ (rewriting) – களுக்கு உட்பட்டே final draft என்கிற இறுதி வடிவத்தை அடையும்.படத்தின் பெரும் பகுதி ஒரு கதாபாத்திரமே மட்டுமே கொண்ட Tom Hanks – ன் Cast away – வின் final draft ,250 முறை திரும்ப எழுதுதல்’களுக்கு பிறகே முடிவு செய்யப்பட்டது.
மயக்கம் என்ன வின் idea-வை வசிக்கும் போதே இது ஒரு மனிதனின் உள் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்பது தெளிவாகிறது. இதனால் திரும்ப, திரும்ப எழுதுதல் என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு செல்வராகவன் செய்திருந்தால், ’மயக்கம் என்ன’ , Russell Crowe வின் ‘Beautiful mind’ அளவிற்கு நமக்கு பாதித்திருக்க வேண்டிய படமாய் அமைந்திருக்கும். ’மயக்கம் என்ன’ திரைக்கதை அவ்வாறு எழுதப்படவில்லை என்பது, படத்தின் இறுதிப் பகுதியில் படம் பார்க்கும் நமக்கு ஏதோ பின் மண்டையில் அடிப்பட்ட மாதிரியான குழப்பம் ஏற்படுவதிலிருந்தும், ‘Beautiful mind’-ன் climax சாரம்சத்தை (விருது வழங்கும் மேடையில் அதற்கு காரணமான மனைவியை கூறி நெகிழ்வது) அப்படியே வைத்ததிலிருந்தும் தெளிவாக தெரிகிறது.
திரைக்கதையில் தனுஷின் photographer கனவும், அவரின் காதல் வாழ்க்கையும் ஒன்றாக சொன்ன விதத்தில் சமநிலை தவறியதால் திரைக்கதை இரண்டு கதைகளாக அமைந்து விடுகிறது.
முதல் கதை : தனுஷிற்கும் நண்பனின் girl friend ரிச்சாவிற்கும் ஏற்படும் காதல் மற்றும் அதன் பிரச்சனைகள்.
இரண்டாம் கதை : பெரிய wild-life photographer தனுஷின் photo – வை திருடி புகழ் பெறுவதும், அதையும் மீறி தனுஷ் ஜெயிப்பதும்.
முதல் கதை, தனுஷின் நண்பனுக்கு தனுஷ் ரிச்சா காதல் தெரிந்த உடன், மனம் குமுறி தனுஷிடன் சண்டை போட்டு, பின் சேர்ந்து குடித்து ஒன்றாவதுடன் முடிகிறது. திடுதிப்பென்று அடுத்த காட்சியிலேயே தனுஷ் ரிச்சா திருமணம் முடிவதுலிருந்து இரண்டாம் கதை தொடங்குகிறது.
முதல் கதையே படத்தின் பெரும் பகுதியை எடுத்து கொள்கிறது. அதனால் படத்தின் idea -வான அந்த ’ஆன்மாவின் தவிப்பு’ என்பது மிக சிறிய தெளிவில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.
திரைக்கதையில் focusing என்பது காட்சிகளில், எடுத்துக் கொண்ட, கதையின் பிரச்சனையை ஒட்டியே சம்பவங்களை ஈர்க்கும் வகையில் சொல்லுவது. முதல் கதையில் இந்த focusing இருந்ததால் தொய்வில்லாமல் சென்றது. இரண்டாவது கதையில் நிறைய காட்சிகள் ’தனுஷ் ஜெயித்து புகழ் பெற்ற photographer – ஆவது’ என்ற விஷயத்தை மையப்படுத்தாமல் ஒவ்வொரு காட்சிகளிலும் வெவ்வேறான பிரச்சனைகளை சொல்லியிருப்பதால் திரைக்கதையை நீர்த்து போக வைக்கிறது.
உதாரணங்கள் :
தனுஷுன் இன்னொரு நண்பன், தனுஷ் மனைவி ரிச்சாவிடம் காரில் வைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க, ரிச்சா அதை தடுத்து lecture– கொடுக்க, நண்பன் கண்ணீர் விட்டு அழும் நீளமான காட்சி.
மண்டையில் அடிப்பட்டு ஒரு மாதிரியாக சுற்றும் தனுஷின் நடவடிக்கைளை தாங்காமல் மற்ற அபார்ட்மெண்ட்வாசிகள் ரிச்சாவிடம் complaint–செய்வது. தனுஷ் ரிச்சாவை nude ஆக pose – கொடுக்க சொல்வது. தனுஷ் கோபத்தில் ரிச்சாவை தள்ளி விட அவருக்கு அபார்ஷன் ஏற்படுவது.
இந்த காட்சிகள் இடம் பெறுவது, திரைக்கதை climax நோக்கி போக வேண்டிய உச்ச தருணத்தில் இவைகள் இந்த தருணத்தில் முக்கியமற்றவை என்பதாலும், கவனத்தை ஈர்க்காமல் இருப்பதாலும், அபார்ஷன் ரத்தத்தை கழுவிக் கொண்டே கதறும் ரிச்சாவை போல நாமும் கத்த வேண்டும் என்றே தோன்றுகிறது.
இந்த குழப்ப காட்சிகள் முடிந்த பிறகு, தனுஷ் எடுத்த யானை photo– இருக்கும் குமுதம், ஒரு office–ல் டேபிள் டேபிளாக அலைந்து, பிறகு முக்கியத்துவம் பெறுவதில் இருந்து ஒரு சின்ன take off – கிடைக்கிறது. ஆனால் அதையும் நேரமில்லாததால் அவசரஅவசரமாக தனுஷிற்கு யுவாங் சுவாங் கெட்டெப்பெல்லாம் வைத்து காமெடி கொடுமையாக முடிகிறது. ரிச்சா தனுசிடம் நீண்ட காலமாய் பேசுவதிலையென்பது எனக்கு நீண்ட காலத்திற்கு பிறகே புரிந்தது.
Rewriting, Final draft இந்த விஷயங்கள் திரைக்கதை எழுதிய செல்வராகவனுக்கு தெரியாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.செல்வராகவன் இயக்கிய ஒரு தெலுங்கு படம், விக்ரம் படம் இரண்டும் தொடங்கி நின்று போனது, அதற்கு பின் தனுஷூடன் ’இரண்டாம் உலகம்’ நின்று போய், ஒரு படம் முடித்தே ஆகவேண்டிய நெருக்கடியில் அவசரமாய் எழுதி அவசரமாய் எடுத்த படம் ”மயக்கம் என்ன”. இதற்கு பார்வையாளனை பலிகடாவாக்குவது எந்த விதத்தில் நியாயம் ?
பார்வையாளன், அவன் வாழ்வின் மூன்று மணி நேரத்தை செல்வராகவனிடம் ஒப்படைக்கிறான். அதை உணராமல் செல்வராகவன் திரைக்கதை எழுதியது ரசிகனின் மேல் அவருக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மையையும், அலட்சியத்தையுமே காட்டுகிறது.
திரைக்கதையில் சொதப்பிய செல்வராகவனை, இயக்குநர் செல்வராகவன் தான் அவ்வப்போது காப்பாற்றுகிறார். குறிப்பாக தனுஷை இயக்கியதில். (தனுஷ் -இறுதி பகுதியை தவிர்த்து-ஸ்பைக்,கடுக்கன், தாடியுடன் செம ஸ்டைலுடன் இருக்கார்.) தனுஷின் முகத்தில் காட்சி சூழலுக்கு பொருத்தமாக தெரியும் நுண்ணிய உணர்வுகள் என்னை வசியப்படுத்தியது.
முதலில் photo exibition –ல் வாய்ப்பு கேட்கும் காட்சி..
பீச்சில், ‘தப்பு சார் இத நான் எடுத்த photo–ன்னு சொல்லிடுங்க சார்’..
நண்பனிடம் அறை வாங்கிய பிறகு.. என்று படம் நெடுகவே.
இதில் அந்த நாய் சேஷ்டையும், விருது வாங்கும் காட்சியும் விதிவிலக்கு. ரிச்சா அடிக்கடி ஒரே இடத்தை பார்த்து உம்மென்று இருப்பது அவர் முக அமைப்பினால் உறுத்தலாக இருக்கிறது. தனுஷ் விருது வாங்குவதை நண்பர்களுடன் Tv–ல் பார்க்கும் காட்சியில் நன்றாக perform – செய்ய வைத்திருக்கிறார் செல்வராகவன். பிரபல புகைப்படக் கலைஞராக வரும் ‘அலைபாயுதே’ அப்பாவின் concrete–முகத்தை தவித்திருக்கலாம்.
செல்வராகவன், ஜீ.வி.பிரகாஷிடம் வாங்கிய ஐந்து பாடல்களில் மூன்று, கேட்ட உடனேயே பற்றிக் கொண்டது. ஆனாலும் ’காதல் என் காதலை’ அந்த காட்டுவாசி பெரியவர் பாட ஆரம்பித்ததும் கொலைவெறி ஏற்படுகிறது. அந்தப் பாடலின் தொடக்க வரிகளைக் கேட்டால், இந்தப் பாடல் உருவாக்கப் பட்ட சிச்சுவேஷனும், பாடல் படமாக்கப் பட்ட சூழலும் வேறு வேறு என்பது தெரிகிறது.கதையின் உணர்வுகளை தெரிந்து கொண்ட பின் கேட்ட ‘பிறை தேடும்’ மற்றும் “என்னென்ன செய்தோம்” ஒரு மாதிரி மனதை disturb–செய்கிறது.அந்த ”மயக்கம் என்ன”- theme excellent. R.R -ல் வரும் மற்ற track –களில் நிறைய இந்த theme -ன் சாயல் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.
ராம்ஜியிடம் செல்வராகவன் இன்னும் extract செய்திருக்கலாம்.ராம்ஜியின் ஒளிப்பதிவு செம்மையாக உள்ளது – ஆங்காங்கே மட்டுமே.
குறிப்பாக, தனுஷின் காட்டுப் பயணம் – நொந்து போய் ஒற்றை ஜன்னலருகே தனுஷ் உட்கார்ந்திருப்பது, இரவாகி கொண்டிருக்கும் எங்கோ ஒரு ஊரில் தனுஷ்.
அந்த பாட்டியை தனுஷ் photo எடுக்கும் காட்சியில் பாட்டியின் முகத்தில் அடிக்கும் ’சரஸ்வதி சபதம்’ சிவாஜியின் முகத்தில் அடிப்பது போன்ற அந்த மஞ்சள் வெளிச்சம் உறுத்தல்.
ஒரு மனிதனின் உணர்வுகளை மையமாக கொண்ட ’காதல் கொண்டேன்’-ல் அறிமுகமான செல்வராகவனை ரசித்த எனக்கு, 7G Rainbow colony –யின் பின் பகுதியை சரியாக செய்யவில்லை என்று ஒப்பு கொண்ட செல்வராகவனின் நேர்மையை கொண்டாடிய எனக்கு ”மயக்கம் என்ன” பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.
Final Opinion : ‘Out of focus’