ஜெயலலிதா தன்னுடைய 30 ஆண்டு கால உயிர்த்தோழி சசிகலாவை விலக்கி வைத்தாலும் வைத்தார், தமிழ்நாட்டில் உருவாகியுள்ள கதைகளுக்குத் துளியும் பஞ்சமில்லை. சாதாரண டீக்கடை முதல், உயர் உயர் அதிகாரிகள் முதல், தொழிலதிபர்கள் வரை ஒவ்வொரு நிமிடமும் விவாதிக்கப் பட்டு வரும் விஷயமாக மாறிப் போய் உள்ளது.
இது போல இந்த விஷயம் பரபரப்பாக விவாதிக்கப் படுவதற்கான காரணம் சசிகலாவையும், ஜெயலலிதாவையும் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் அமைந்ததுதான். அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை எம்ஜிஆர் 1980ல் நியமித்த இரண்டு ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் நட்பு ஏற்படுகிறது. திமுக ஆட்சியில் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருந்த அனைவரையும் எம்ஜிஆர் அரசு டிஸ்மிஸ் செய்கிறது. இது போல டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் சசிகலாவின் கணவர் நடராஜனும், பன்னீர்செல்வம் என்பவரும் நீதிமன்றம் செல்கின்றனர். இவர்கள் இருவருக்கு மட்டும் 1980ல் மீண்டும் வேலை கிடைக்கிறது. அப்போது சந்திரலேகா ஐஏஎஸ், வட ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். அவரிடத்தில் நடராஜன் மக்கள் தொடர்பு அதிகாரியாகச் சேர்கிறார். அப்போது சந்திரலேகா சசிகலாவை சந்திக்கிறார். அவரிடத்தில், சசிகலா தன்னுடைய நகைகளை அடகு வைத்து கணவரின் வழக்கை நீதிமன்றத்தில் நடத்தியது குறித்து அழுது புலம்புகிறார். பிறகு சசிகலா, சென்னையில் ஒரு வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடையை தொடங்குகிறார். அவருடைய கடையில் ஜெயலலிதா கேசட்டுகளை வாடகைக்கு எடுத்தாலும், கேசட்டுகளை வாங்கிச் செல்வது வேலைக்காரர் என்பதால், சசிகலாவுக்கு அந்த கேசட்டுகள் ஜெயலலிதாவுக்குத் தான் செல்கின்றன என்பது தெரியாது.
பிறகு சசிகலா சிங்கப்பூர் சென்று, வீடியோ ரெக்கார்டர்களை வாங்கி வந்து, திருமணம் மற்றும் விழா நிகழ்ச்சிகளை ஷுட் செய்யும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவரது கணவர் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்ததால், பல ஆர்டர்கள் கிடைக்கின்றன. அப்போது சந்திரலேகாவைச் சந்தித்த சசிகலா, ஜெயலலிதா அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருப்பதால், அவரை அறிமுகப் படுத்தி வைக்குமாறு கேட்கிறார். அதன்படி சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறார், சந்திரலேகா.
அந்த அறிமுகத்தோடு ஜெயலலிதாவிடம் ஒட்டிக் கொண்ட சசிகலா, அதன் பிறகு ஜெயலலிதா மீது ஆக்ரமிப்பு செய்யத் தொடங்கினார்.
அதன் பிறகு சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்ற நிலை தொண்ணூறுகளில் ஏற்படுகிறது. இந்த யதார்த்தத்தை தமிழக மக்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு விட்டன. 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக் காலத்தில் சசிகலா குடும்பத்தினர் செய்த அக்கிரமங்களை பத்திரிக்கைகள் அப்போது விரிவாகவே எழுதின. ஆனாலும், ஜெயலலிதா, என்னுயிர்த்தோழி, கேளொரு சேதி என்று, சசிகலாவை விலக்கி வைக்கத் தயாராக இல்லை. 1996ல் ஏற்பட்ட சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.
ஆட்சியாளர்களோடு நெருக்கமாக இருப்பவர்கள், அதிகாரம் செலுத்துவதும், அவர்களிடத்தில் அதிகாரிகள் அடங்கிப் போவதையும் வரலாறு பார்த்தே வந்திருக்கிறது. சஞ்சய் காந்தி தொடங்கி, வாஜ்பாய் அரசாங்கத்தில் மிகப் பெரிய ப்ரோக்கராக விளங்கிய அவரது மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா வரை இது போன்ற பல நேர்வுகள் இருந்திருக்கின்றன என்றாலும், ஜெயலலிதா சசிகலா நட்பு என்பது இது எல்லாவற்றையும் விட மோசமானது.
ரஞ்சன் பட்டாச்சார்யா, வாஜ்பாய் அரசாங்கத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ப்ரஜேஷ் மிஷ்ராவோடு சேர்ந்து பல்வேறு ப்ராஜெக்டுகளில் வசூல் செய்து குவித்தார். ஆனாலும் ரஞ்சன் பட்டாச்சார்யா தன்னைப் போல பல வசூல் ராஜாக்களை தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்ளவில்லை.
ஆனால், சசிகலாவைச் சுற்றி மன்னார்குடி மாபியா என்று அழைக்கும் அளவுக்கு பெரிய கூட்டம் உருவாகியது. சசிகலாவோடு உடன் பிறந்தவர்களே ஐந்து பேர். அவர்களது வாரிசுகள், உறவினர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தின் அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
சென்னை மற்றும் தமிழகமெங்கும் முக்கிய இடங்களில் உள்ள நிலங்களையும், மனைகளையும் வளைத்துப் போடுவதாகட்டும், தொழில் அதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பதாகட்டும், தமிழகத்தில் புதிய தொழில்களை ஆக்ரமிப்பதாகட்டும், பொதுமக்களின் நலத்திட்டங்களுக்கான காண்ட்ராக்டுகளை பறித்துக் கொள்வதாகட்டும், இவர்களின் ஆதிக்கமே எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது.
தற்போது ஜெயலலிதா, எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணியாக பல்வேறு கதைகள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உலா வந்த வண்ணம் உள்ளன. ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சொன்ன கதை அம்புலிமாமா கதையை விட மோசமாக இருந்தது. அது போயஸ் தோட்டத்திலிருந்து 400 கோடியை ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி திருலைச்சாமி எட்டு தவணைகளில் எடுத்து திவாகரனிடம் கொடுத்து விட்டாராம். ஜெயலலிதா அவரை அழைத்துக் கேட்ட போது சின்னம்மா சொல்லிதான் எடுத்துச் சென்றேன் என்று கூறினாராம். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, அவரை மாற்றி விட்டு, மந்திரிகளை அழைத்து என்னிடம் பணம் இல்லை, கட்சியிலும் பணம் இல்லை, அதனால் நீங்கள் அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும். பணம் சம்பாதித்து என்னிடம் கொடுக்க வேண்டும் என்று கூறினாராம்.
சரி, இந்த பத்திரிக்கையாளர் ஏதோ தெரியாமல் சொல்லுகிறார் என்று பார்த்தால், தஞ்சாவூரிலிருந்து நேற்று சென்னைக்கு வந்திருந்த மற்றொரு நண்பர், இதே கதையைச் சொன்னார். இது போல பல்வேறு அம்புலிமாமா கதைகள் ஊடகங்களிலும், பத்திரிக்கையாளர்களிடத்திலும், பொது மக்களிடத்திலும் வலம் வந்த வண்ணம் உள்ளன.
பொதுமக்கள், அரசியல்வாதிகள், உயர் உயர் அதிகாரிகளிடத்தில் விவாதிக்கப் பட்டு வரும் மற்றொரு விவகாரம், இந்தப் பிரிவு நிரந்தரமானதா…. மீண்டும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வது ….
நடராஜன், ராமச்சந்திரன், ராவணன் போன்றவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது, ஜெயா டிவியில் ரெய்டு நடந்தது என்றும் சில தகவல்கள்.
இந்தத் தகவல்களை விசாரித்த போது சவுக்குக்கு கிடைத்த தகவல்கள், இந்தப் பிரிவு நிரந்தரமானதே. மன்னார்குடி மாபியாவின் எத்தனையோ அநியாயங்களையும், அட்டூழியங்களையும் பொறுத்துக் கொண்ட ஜெயலலிதாவுக்கு, மன்னார்குடி மாபியா தனக்கு எதிராக காய்களை நகர்த்தத் தொடங்கியருப்பது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், மன்னார்குடி மாபியாவின் துணைத் தலைவர் நடராஜன் முதல்வராவதற்கு எடுத்த முயற்சிகளை ஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் என்ற கட்டுரையில் சவுக்கு விரிவாகவே பதிவு செய்திருந்தது. இதையடுத்து, சவுக்கு பிட்டுக்கு மண் சுமந்த சொக்கனுக்கு விழுந்த அடி என்ற கட்டுரையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வசூல் வேட்டைகளைப் பற்றியும் எழுதியிருந்தது.
இந்த ஆறு மாத காலத்தில் மன்னார்குடி மாபியா நடத்திய வசூல் வேட்டை மட்டும் 4000 கோடியைத் தொடும் என்கிறார்கள் அதிமுக கட்சியினர். அமைச்சரவை பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே நடந்த மாற்றம், அனைத்து அமைச்சர்களிடத்திலும், மன்னார்குடி மாபியாவைப் பற்றிய கடும் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. சென்னை ஜெமினி மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் குத்தகைக்கு வழங்கியதில் தொடங்கி, வணிகவரித்துறையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வசூல் வேட்டை, நத்தம் விஸ்வநாதன் நடத்திய நிலக்கரி இறக்குமதி பேரம், காவல்துறையின் நில அபகரிப்புப் புகார்களில் சிக்கியவர்களை மிரட்டி நடத்திய வசூல், லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் நடத்திய 100 கோடி பேரம், பத்திரிக்கை அதிபர்களிடம் நடத்திய பேரம், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் நடத்தியுள்ள வசூல் வேட்டை, தனியார் பஸ் அதிபர்களிடம் வசூலித்த 450 கேடி என்று என்று மன்னார்குடி மாபியாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. வணிகவரித்துறை மற்றும் தொழில் துறை கொடுத்த நெருக்கடியால், பல தொழிலதிபர்கள் தொழிலையே விட்டு விடலாமா என்ற யோசனைக்கு போகும் அளவுக்கு நெருக்கடிக்கு ஆளானார்கள்.
ஜெயலலிதா மீது அதிகப்படியான விருப்பம் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பிய சில பத்திரிக்கை ஆசிரியர்களும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து வந்த மன்னார்குடி மாபியாவின் அட்டகாசங்களால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த மாபியாவை எப்படியாவது ஒழித்தே தீர வேண்டும் என்று இவர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்த வந்தார்கள். அந்த அடிப்படையில் இவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தூதுவர்தான் சோ ராமசாமி.
கடந்த வாரத்தில் சோ, ஜெயலலிதாவை சந்தித்து மூன்றரை மணி நேரம் விவாதித்துள்ளார். அந்த விவாதத்தின் போது, தொழில் அதிபர்களின் நெருக்கடிகள், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம், அதிகாரிகள் மாபியா கும்பலுக்கு காட்டும் விசுவாசம் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஏற்கனவே பெங்களுரு வழக்கு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களில் இருந்த ஜெயலலிதாவுக்கு சோ அளித்த இந்த தகவல்கள் பலத்த அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரு நீதிமன்ற வழக்கு தொடர்பாக, பிஜேபி வழக்கறிஞர் ரவிசங்கர் பிரசாத், சில ரகசிய தகவல்களை ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.
இது போக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலமாக, ஜெயலலிதாவுக்கு சில ரகசிய அறிக்கைகள் கிடைத்துள்ளன. அந்த அறிக்கைகளில் மன்னார்குடி மாபியாவின் நடவடிக்கைகள் குறித்த சில முக்கிய விபரங்கள் அளிக்கப் பட்டுள்ளன. இதையடுத்தே ஜெயலலிதா களையெடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
சசிகலா கும்பல் நீக்கப் பட்ட அறிவிப்பு வெளிவந்த அன்று இரவும், மறுநாளும், சில தனியார் புலனாய்வு நிறுவனங்களும், தமிழக காவல்துறையின், சில முக்கியமான அதிகாரிகளும் மன்னார்குடி மாபியாவின் முக்கிய மையங்களில் சோதனைகள் நடத்தியுள்ளனர். நடராஜன், அவர் தம்பி ராமச்சந்திரன் ஆகியோரும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளனர். இதில் காவல்துறையின் கவனிப்புக்கு ஆளானவர் ராவணன் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இருப்பதிலேயே – நடராஜனை விட – அதிக செல்வாக்காக இருந்தவர் ராவணன். இந்த ஆறு மாத காலத்தில் ராவணனின் வசூல் வேட்டை மட்டும் 500 கோடியைத் தாண்டும் என்கிறார், ஒரு முக்கிய அதிமுக தலைவர். இந்த ராவணனின் வீட்டில் சோதனைகள் நடத்திய போது 75 கோடி ரொக்கமாக கிடைத்து, அவை கைப்பற்றப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈடிஏ ஸ்டார் குழுமம் திமுக தலைவர்களுக்கு எவ்வளவு நெருக்கம் என்பது ஊரறிந்த உண்மை. இந்த குழுமம் ஸ்ரீபெரும்புதூரில் 100 ஏக்கர் பரப்பளவில் க்ளோப்வில் வில்லேஜ் என்ற அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இந்த குடியிருப்புகள் கட்டப்படும் இடம், அரசாங்கத்தால் விளைநிலமாக வரையறை செய்யப் பட்ட நிலம். இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டுமெனறால் அரசு நிலப் பதிவேடுகளில் மாற்றம் செய்யப் பட வேண்டும். இது கடந்த ஆட்சியில் ஸ்டாலின் தலையிட்டும், இறுதி வரை முடியாமல் போய் விட்டது. இந்த நிலத்தை வணிக நிலமாக மாற்ற, ராவணன், நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, ஆட்சியரை மிரட்டியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ராவணன் அவ்வளவு பெரிய தில்லாலங்கடி. மன்னார்குடி மாபியாவின் மற்ற உறுப்பினர்களைப் போல அல்லாமல், ராவணன் ‘செமத்தியாக கவனிக்கப் பட்டதாகவும்’ தகவல்கள் கூறுகின்றன.
இந்த நடவடிக்கைகளை அடுத்து, மன்னார்குடி மாபியாவின் சில முக்கிய தலைகளின் மீது வழக்கு பாய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அடுத்தபடியாக அதிகாரிகள் மட்டத்தில் களையெடுப்புக்கான பட்டியல் வெகு வேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பட்டியல் வெள்ளியன்றோ, சனியன்றோ வெளியாகும். இதையடுத்து நிர்வாக ரீதியாக பல மாற்றங்களை செய்ய ஜெயலலிதா தயாராகிக் கொண்டிருக்கிறார் என்றும், தற்போது நடக்க இருக்கும் இந்த பெரிய மாற்றத்துக்கு பிறகு, அடிக்கடி மாற்றங்கள் இருக்க வேண்டாம் என்று ஜெயலலிதா விரும்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரயிலும் பெரிய மாற்றம் நடைபெற உள்ளதால், மாபியா கும்பலின் தயவில் அமைச்சர்களான அனைவரும் பதவி இழப்பார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படு உள்ளன. வரும் வாரத்தில், அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தி முடித்து நிர்வாகத்தை ஒரு வழிக்கு கொண்டு வர ஜெயலலிதா முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நரேந்திர மோடி மீது குஜராத் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் இன்னும் ஓயவில்லை என்றாலும், குஜராத், தொழில் துறையிலும், நிர்வாகத்திலும் ஒரு சிறந்த மாநிலமாக விளங்குவதால், குஜராத்தைப் போலவே தமிழ்நாட்டை மாற்றிக் காட்டி, வரலாற்றில் நீங்காத இடத்திப் பிடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா எண்ணி வருவதாகவும் தெரிகிறது.
ஓபனிங் நல்லாத்தான் இருக்கு. பினிஷிங் எப்படி என்பதுதான் தெரியவில்லை.