கடந்த ஒரு வாரமாகவே எதிர்ப்பார்க்கப் பட்டு வந்த காவல்துறை அதிகாரிகளின் மாற்றம் இன்று இரவு வெளியிடப்பட்டது. இந்த உத்தரவின் படி, கோவை மாநகர கமிஷனராக இருந்த அம்ரேஷ் பூரி சென்னை உளவுத்துறை ஐஜி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாக இருந்த பி.தாமரைக்கண்ணன் விரிவாக்கப்பட்ட சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த சஞ்சய் அரோரா விரிவாக்கப்பட்ட சென்னையின் போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்டாபிளிஷ்மென்ட் ஐஜியாக இருந்த டி.பி.சுந்தரமூர்த்தி கோவை மாநகர கமிஷனராக காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்லார்.
டி.ராஜேந்திரன் என்ற கண்ணாயிரம், தொழில் நுட்பப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து, மாநில மனித உரிமை கூடுதல் டிஜிபியா நியமிக்கப் பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த கே.பி.மகேந்திரன், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனராகப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளார். மிதிலேஷ் குமார் ஜா, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனர் பதவியில் இருந்து சென்னை தொழில் நுட்பப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் பட்டுள்ளார். சிபி.சிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த சேகர் ரயில்வே கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். நரேந்திர பால்சிங் சிபி.சிஐடி கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
அம்ரேஷ் பூஜாரி, ஏற்கனவே மத்திய உளவுத்துறையில் பணியாற்றியவர். மன்னார்குடி மாபியாவின் உதவியோடு முதலில் கூடுதல் கமிஷனராகவும், பின்னர் உளவுத்துறை ஐஜியாகவும் ஆன தாமரைக்கண்ணன் மீண்டும் சென்னை மாநகர கூடுதல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளது, மன்னார்குடி மாபியாவை விட, தாமரைக்கண்ணன் செல்வாக்கு பெற்றவர் என்பதையே காட்டுகிறது. தாமரைக்கண்ணன் உளவுத்துறைக்கு நியமிக்கப்பட்டவுடன், போனால் போகிறது என்று அந்த இடத்துக்கு சஞ்சய் அரோராவை நியமித்தார்கள். செல்வாக்கு மிகுந்த தாமரைக்கண்ணன் உளவுத்துறையிலிருந்து மாற்றப் பட்டவுடன் அவருக்கு நல்ல பதவி கொடுக்கப் பட வேண்டுமே…. சாதாரண பதவியைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியவரா தாமரைக்கண்ணன். உடனே சஞ்சய் அரோராவை தூக்கி பழைய பதவிக்கே அனுப்பி விட்டு, தாமரைக்கண்ணனை மீண்டும் கூடுதல் கமிஷனராக்கி விட்டார்கள்.
சிபி.சிஐடியில் இருந்த சேகர் தற்போது அரசு தலைமை வழக்கறிஞராக இருக்கும் நவநீதகிருஷ்ணனுக்கு மன்னார்குடி மாபியாவோடு இருக்கும் தொடர்பை பயன்படுத்தி சிபி.சிஐடியின் கூடுதல் டிஜிபியானார். தற்போது அவர் ரயில்வேயின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் பட்டுள்ளார். இதில் இவரை விட பாதிக்கப் படப் போவது அங்கு ஏற்கனவே இருக்கும் சுனில் குமார் தான். ரயில்வேயின் ஐஜியாக தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்த சுனில் குமார் தற்போது தன்னுடைய அறையை கூட காலி செய்ய வேண்டும். (அய்யோ பாவம்… ஜாபர் பேச்சை கேட்டு ஆடுனா இப்படித்தான்)
சரி… இப்போது தலைப்புக்கு வருவோம். இந்த மாறுதல்களுக்கும், டிஎன்பிஎஸ்சிக்கும் என்ன சம்பந்தம் ? டிஎன்பிஎஸ்சியின் தலைவராக இருக்கும் செல்லமுத்து செய்த ஊழல்கள் குறித்து, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரான மகேந்திரனை மாற்றி விட்டு, டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார்.
டி.கே.ராஜேந்திரன் எப்படிப்பட்டவர் என்பதை ஏற்கனவே சவுக்கு “பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் : வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள் !” என்ற தலைப்பில் சவுக்கில் ஜுலை 2010ல் எழுதியுள்ளது. இந்த டி.கே.ராஜேந்திரன் பார்கவ குல உடையார் இனத்தைச் சேர்ந்தவர். டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்துவும் இவரும் உறவினர்கள். டி.கே.ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த காலத்தில் இவரும் அப்போது ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த செல்லமுத்துவும் சேர்ந்து பார்கவ குல உடையார் சாதிச் சங்க கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து மீதான வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், டி.கே.ராஜேந்திரனை லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நியமித்துள்ளது பலத்த சர்ச்சையை (இன்னும் பதவியே ஏற்கவில்லை… அதுக்குள்ளவா ?) ஏற்படுத்தியுள்ளது. செல்லமுத்துவின் உறவினராக இருக்கும் ஒரு அதிகாரியை செல்லமுத்துவின் மீதான விசாரணையை நடத்தி வரும் ஒரு அமைப்பின் இயக்குநராக நியமித்திருப்பதால், விசாரணை நேர்மையாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
டி.கே.ராஜேந்திரனின் நேர்மை அப்படி. 2007ம் ஆண்டில், லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையில் ஒரு இன்ஸ்பெக்டர் சிக்குகிறார். அவர் மீதான குற்றச் சாட்டு வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது. அந்த விசாரணையின் முடிவில் அவர் மீது எப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அறிக்கை அனுப்புகிறார் புலனாய்வு அதிகாரி. ஊழல் புகாருக்கு ஆளான அந்த இன்ஸ்பெக்டர், டி.கே.ராஜேந்திரன் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக பணியாற்றிய போது அவரிடம் சப்.இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். அவர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில், அந்த இன்ஸ்பெக்டர் மீது எப்ஐஆர் பதிவு செய்யாமல், துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் (அதாவது விசாரணையை ஊற்றி மூடுவது) என்று பரிந்துரை செய்கிறார். அப்போது டி.கே.ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருந்தார்.
இந்த விவகாரம் தினமலர் டீக்கடை பென்ச்சில் செய்தியாக வந்தது. அவ்வளவுதான், லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. டி.கே.ராஜேந்திரன் இப்படியா ? என்று காவல்துறை முழுவதும் செய்தி பரவியது. உடனே, பல காவல்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருக்கும், அப்போது தினமலரில் பணியாற்றிய ஒரு பத்திரிக்கையாளர் தலையிட்டு, மூன்று நாட்கள் கழித்து, டி.கே.ராஜேந்திரன் ஒரு நல்லவர், நாலும் தெரிந்தவர், உத்தமர், ஊர் போற்றும் மகான் என்று மூன்றாவது நாள் மறுப்பு வந்தது. இந்த கோப்பு இன்னும் லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதுதான் டி.கே.ராஜேந்திரனின் ட்ராக் ரெக்கார்ட். இப்போது சொல்லுங்கள். டி.கே.ராஜேந்திரனின் தலைமையில் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎன்பிஎஸ்சி விசாரணையை நேர்மையாக நடத்தும் என்றா நினைக்கிறீர்கள் ?