2011 தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனை ஆண்டாகவே அமைந்தது. 2010 முடியும் போது, புதிய ஆண்டில் திமுக ஆட்சியிலிருந்து விடிவு காலம் பிறக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு மிக மிக அதிகமாக இருந்தது. அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் 2011 பரபரப்புடனேதான் பிறந்தது.
தேர்தலுக்கான ஆயத்தங்களில் திமுக இறங்குவதற்கு முன்னரே, 2ஜி ஊழலில் இருந்து எப்படி கனிமொழியை காப்பாற்றுவது என்பதில் மிகத் தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருந்தது. 2010ல் ஆ.ராசா குற்றமற்றவர், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு எவ்வித இழப்பும் இல்லை என்று பிரச்சாரக் கூட்டங்களை நடத்திய திமுக, 2011 பிறந்ததும் எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று அந்த முயற்சிகளில் இறங்கியது. ஆனால் தவிர்க்கவே முடியாத வகையில் ஜனவரி மாதத்திலேயே கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. அந்த சோதனைகளைப் பற்றி துளியும் கண்டு கொள்ளாமல் 2011 ஆண்டிலும் “சென்னை சங்கமம்” நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதை எதிர்த்து தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாக ஜனவரி மாதத்திலேயே சிபிஐ சோதனையில் சிக்கிய ஜெகத் கஸ்பரை வைத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தொடர்ந்த பொது நல வழக்கில் “தமிழ் மையம்” வழங்கும் சென்னை சங்கமம் என்று குறிப்பிடக் கூடாது, தமிழக அரசின் சென்னை சங்கமம் என்று பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடி மேல் அடியாக பிப்ரவரி மாதத்தில் நீரா ராடியாவின் டேப்புகள் வெளியாகி திமுக தலைவர் கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழியின் மறுபக்கத்தை வெளிப்படுத்தின. இது ஒரு புறம் இருக்க, பிப்ரவரி மாதத்திலேயே ஆ.ராசா சிபிஐயால் கைது செய்யப் பட்டார். மார்ச் மாதம் முதல் தேதி அன்றே தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டன. அதைத் தொடர்ந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது. கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்தார். திமுக காங்கிரஸ் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முறியும் நிலையை எட்டியது. 63 கேட்கிறார்கள், நான் ஏன் கொடுக்க வேண்டும் என்று வீர வசனம் பேசி, கூட்டணியிலிருந்து விலகப் போகிறேன் என்றார் கருணாநிதி. ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்தர் பல்டி அடித்து காங்கிரசிடம் சரணடைந்தார் கருணாநிதி.
திமுகவில்தான் இப்படி குழப்படிகள் என்று நினைத்தால் அதிமுகவில் அதற்கு மேல் குழப்பங்கள் தென்பட்டன. ஒரு பக்கம் ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, ஜெயா டிவியில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழக அரசின் பெரும்பான்மையான நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துக் கொண்டது. மார்ச் இரண்டாவது வாரத்தில் ஜாபர் சேட்டை தேர்தல் ஆணையம் நேரில் அழைத்து, கொல்கத்தாவுக்கு தேர்தல் பார்வையாளராக செல்லவேண்டும் என்று உத்தரவிட்டது. அதை மறுத்து ஜாபர் சேட் விடுப்பில் சென்றார். லத்திக்கா சரண் மற்றும் ஜாங்கிட்டையும் அவர்கள் பதவியிலிருந்து மாற்றியது தேர்தல் ஆணையம். மேலும் சில அதிகாரிகளை மாற்றி, தமிழகத்தின் பெரும்பாலான நிர்வாகத்தை தன் கையில் எடுத்தது.
கடந்த காலத் தேர்தல்களைப் போல வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் பெரும் வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த திமுக பெருந்தலைகளின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது தேர்தல் ஆணையம். ப்ரவீன் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் வளைத்து வளைத்து பணப்பட்டுவாடாவைத் தடுத்தனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை தடுப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப் பட்டவர்கள் சார்பாக வழக்கு தொடுப்பது என்ற போர்வையில் வழக்கு தொடுத்து முடக்குவதற்கு திமுக முனைந்தது. இந்த வழக்கிலும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் வழக்கு தொடுக்கப் பட்டு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது. தேர்தல் பிரச்சாரம் சூடுடிபிடிக்கத் தொடங்கியது.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அதிமுகவின் வெற்றியை பறைசாற்றின. சவுக்கிலும் தொடர்ந்து திமுக ஆட்சி ஏன் வீழ்த்தப் பட வேண்டும் என்று தொடர் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ஏப்ரல் மாதம் 13 அன்று தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகளுக்கு ஒரு மாத கால அவகாசம் இருந்தால், அந்த ஒரு மாத காலத்துக்குள் பல்வேறு வதந்திகளும் ஊகங்களும் வெளியாகின. ஆனால் சவுக்கு தளத்தில் தீர்மானமாக அதிமுக வெற்றி என்றும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதப்பட்டது. தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே திமுக ஆட்சிமுடிய என்று கவுன்ட் டவுன் போடப்பட்டது சவுக்கு தளத்தில்தான்.
மே மாதத்தில் அனைவரது எதிர்ப்பார்ப்புக்களையும் கடந்து அதிமுக கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக சட்டமன்றத்தில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்தது. அடி மேல் அடியாக மே 21 அன்று கனிமொழி கைது செய்யப் பட்டார். தேர்தல் தோல்விகளால் துவண்டு போயிருந்த கருணாநிதிக்கு இது பெரும் அடியாக அமைந்தது. புதிய அரசு பதவியேற்றதும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகளாக ஊரை ஏமாற்றி வந்த கேடி சகோதரர்கள் மீது வழக்கு பாய்வதற்கான ஆயத்தங்கள் ஏற்பட்டன. ஊடகங்களிலும், சவுக்கிலும், கேடி சகோதரர்களின் ஊழல்கள் குறித்த பல்வேறு ஆதாரங்கள் வெளியிடப்பட்டன.
புதிய ஆட்சி ஏற்பட்டதும் பல்வேறு மாற்றங்கள் தமிழக நிர்வாகத்தில் நடந்தன. காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டாலும், திமுக ஆட்சியில் செல்வாக்காக இருந்த சில அதிகாரிகள் மீண்டும் நல்ல பதவிக்கு வந்தனர். ஆனால் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் நம்பிக்கை தரும் விதமாகவே இருந்தன. கடந்த கால ஜெயலலிதா போல இல்லாமல், ஆட்சி நடத்தும் விதத்தில் நிதானம் தெரிந்தது. ஆனால், சமச்சீர் கல்வியை கைவிடுவதாக ஜெயலலிதா அறிவித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை மற்ற ஊடகங்களைப் போலவே, சவுக்கும் கண்டித்தது. ஜெயலலிதாவின் முடிவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் நீதிமன்றம் சென்று, அந்த முடிவு, இறுதியாக உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டது.
ஜுலை மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வாக, ஜாபர் சேட் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. சவுக்கில் பல்வேறு சமயங்களில் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப் பட்ட வீட்டு வசதி வாரிய ஊழலில் ஜாபர் சேட் சிக்கி, அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. அவர் பணி இடைநீக்கம் செய்யப் பட்டார்.
ஆகஸ்ட் மாதத்தில் பெரும் அதிர்ச்சியாக மூவரின் கருணை மனு நிராகரிக்கப் பட்ட செய்தி வெளியாகியது. இந்தியாவெங்கும் இதற்கு எதிரான கருத்துக்கள் கிளம்பினாலும், தமிழகத்தில் பெரும் எழுச்சி காணப்பட்டது. இந்த எழுச்சியை மனதில் கொண்டு, முதலில், மாநில அரசிடம் எந்த அதிகாரமும் இல்லை என்று அறிவித்த ஜெயலலிதா, மறுநாளே சட்டமன்றத்தில் மூவரின் உயிர்காப்பதற்கான தீர்மானத்தை இயற்றினார். இதன் நடுவே, திமுக ஆட்சி காலத்தில் அப்பாவி பொதுமக்களின் உடைமைகளையும், சொத்துக்களையும் அபகரித்த திமுக பெரும்புள்ளிகள் வரிசையாக சிறை செல்லத் தொடங்கினர். அஞ்சா நெஞ்சன் என்று தன்னை அழைத்துக் கொண்ட அழகிரியின் மதுரை சாம்ராஜ்யம் கலகலத்தது.
செப்டம்பர் மாதம் பெரும் சோகத்துடனேயே அமைந்தது. பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களின் மீது காவல்துறை நடத்திய கொடூரமான தாக்குதலிலும், துப்பாக்கிச் சூட்டிலும் 6 பேர் உயிரிழந்தனர். இன்று மன்னார்குடி மாபியாவை விலக்கி வைத்திருந்தாலும், அப்போது மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்தில் இருந்த ஜெயலலிதா, அந்தச் சம்பவத்தையும் துப்பாக்கிச் சூட்டையும் நியாயப் படுத்தி அறிக்கை வெளியிட்டார். அந்தச் சம்பவத்தில் உண்மை வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக விசாரணை கமிஷனையும் அறிவித்தார். ஆனால் இந்த சம்பவம், தலித் மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பிலும் பொது நல வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இது போல தாக்கல் செய்யப் பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணையின் முடிவில், இந்த ஆண்டு இறுதியில் இந்த வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
அக்டோபர் மாதத்தில், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் மிக அதிகமானது. மே மாதம் புதிய ஆட்சி பதவியேற்றதிலிருந்தே தொடங்கிய இவர்கள் ஆதிக்கம், ஜெயலலிதா பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டால், எப்படியாவது ஆட்சியை கைப்பற்றுவது என்ற அளவுக்கு விரிந்தது. இந்தத் திட்டத்தை அறிந்த ஜெயலலிதா, முதல் கட்ட நடவடிக்கையாக கண்ணாயிரத்தை உளவுத் துறை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். அரசல் புரசலாக, மன்னார்குடி மாபியாவின் வசூல் வேட்டைகள் குறித்த செய்திகளும், ஜெயலலிதாவுக்கு எதிரான சதிச் செயல்கள் குறித்த செய்திகளும் வெளி வந்த வண்ணம் இருந்தன. நீண்ட நாட்கள் கழித்து, சாவகாசமாக, அனைத்துத் தடயங்களும் அழிக்கப் பட்டு விட்டன என்பதை உறுதி செய்து கொண்ட பின்னால், சிபிஐ கேடி சகோதரர்கள் வீட்டில் அக்டோபர் மாதத்தில் சோதனைகள் நடத்தியது, இந்த சோதனைகளின் போது, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலேல்லாம் இறங்கி சோதனை செய்தார்கள்.
நவம்பர் மாதம் முழுவதுமே அதிரடிதான். முதலில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று அறிவித்த ஜெயலலிதா, மக்கள் நலப் பணியாளர்களை தெருவில் நிறுத்தினார். தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் நூலக மாற்றம் குறித்த அறிவிப்பு வந்த மறு தினமே, அதை எதிர்த்துபொது நல வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. அந்த வழக்கில் அரசின் முடிவுக்கு தடை விதிக்கப் பட்டது. இதே போல, பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் மக்கள் நலப் பணியாளர்கள் நீக்க உத்தரவும் தடை செய்யப் பட்டது. அக்டோபர் முதலாகவே தொடர்ந்து நடைபெற்று வந்த கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து, இந்தியாவின் மொத்த கவனமும் கூடங்குளத்தின் மேல் கவிந்தது. ஆனாலும், அந்தப் பகுதி மக்களின் அச்சத்தையும், எதிர்ப்பையும் மத்திய அரசு துளியும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. நவம்பர் மாதம், கடைசி வாரத்தில் டேம் 999 என்ற திரைப்படம் குறித்து தினமணி வெளியிட்ட செய்தி முதலில் நாடாளுமன்றத்தை உலுக்கியது. அதன் பின்னர் மெல்ல மெல்ல உருவெடுத்த முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஒரு பூதாகரமான பிரச்சினையாக, இரு மாநில மக்களும் எதிரும் புதிருமாக நிற்கும் வகையில் உருவெடுத்தது. இந்த ஆண்டு முடியும் வரை இந்தப் பிரச்சினை தீர்வதாக இல்லை.
டிசம்பர் மாதம் தமிழக மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய மற்றொரு விவகாரம், மன்னார்கடி மாபியாவின் வீழ்ச்சி. எத்தனையோ முறைகேடுகளில் சம்பந்தப் பட்டு தமிழ்நாட்டையே குட்டிச் சுவராக்கிய மன்னார்குடி மாபியா ஆண்டு இறுதியில் அடியோடு ஒழிக்கப் பட்டதாகவே தெரிகிறது. இன்னும் சில மூத்த அமைச்சர்கள், மீண்டும் மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் மேலோங்கும் என்ற அச்சத்தை தெரிவித்தாலும், அதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.
இந்தியாவை உலுக்கிய மற்றொரு மிக முக்கியமான விஷயம், அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான, வலுவான லோக்பால் அமைப்பு வேண்டி நடத்திய போராட்டம். ஊழலை ஒழிக்க ஒரு வலுவான அமைப்பு தேவை என்ற நோக்கில் நடத்தப் பட்ட அந்த போராட்டம், ஆண்டு இறுதியில் தந்திரக்கார அரசியல்வாதிகளால் தோற்கடிக்கப் பட்டது போன்ற சூழலில் வந்து நின்றது. இந்தப் போராட்டம், வரும் ஆண்டில் தொடர்ந்து நடைபெறும் என்றே தோன்றுகிறது.
2ஜி வழக்கின் விசாரணை எந்த திசையில் செல்லும் என்பது, வரும் ஆண்டில் தெரிய வரும். மேலும், தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, வரும் ஆண்டில் இதை சரி செய்ய என்ன விதமான நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழக அரசின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசு வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் ஒரு முறை ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என்றும், அதைத் தொடர்ந்து அடிக்கடி மாற்றுவது இருக்காது என்றும் தகவல்கள் வருகின்றன. நேற்றைய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் பேச்சு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. நேற்று பேசிய ஜெயலலிதா, “ஒருவன் நேர்மையான அதிகாரி. தன் பணிகளில் கண்ணும் கருத்துமாக செயல்படக் கூடியவன். லஞ்ச லாவண்யங்களில் துளியும் ஈடுபடாதவன். ஒரு நாள் அவனை சிலர் அணுகி தவறான செயலுக்கு தூபமிட்டார்கள். ஒரே ஒரு காரியம் தான். சின்ன தவறு தான். அதை செய்தால் போதும் வாழ்நாளெல்லாம் வளமாக வாழுகிற அளவுக்கு பணம் கிடைக்கும். சிக்கிக்கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது… என்றெல்லாம் மூளைச் சலவை செய்து ஆசை வலை விரித்தார்கள்.
“எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் யோசித்துச் சொல்கிறேன்”” என்றவன் வீட்டிற்கு வந்தான். விதிமுறைகளை மீறி இதுவரை எதையும் செய்ததில்லை.
ஒரே ஒரு முறை தானே? தவறு செய்யலாமா? கூடாதா? இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் இல்லை. யாரிடம் கேட்பது? தவறு செய்வதற்கு ஆலோசனையை பிறரிடம் கேட்பது அவமானம் இல்லையா? குழம்பியது அவன் மூளை. முடிவெடுக்கவும் முடியாமல் உறக்கமும் கொள்ளாமல் அவன் யோசித்துக் கொண்டே இருக்க பொழுதும் விடிந்தது. காபி எடுத்துக்கொண்டு அவனது தாய் அறைக்குள் வந்தார். இரவெல்லாம் தூங்காததை மகனின் கண்கள் காட்டிக் கொடுத்தன. அவள் விளக்கம் கேட்பதற்குள் அவனே முந்திக்கொண்டான். சரி, இதற்கான விடையை அம்மாவிடமே கேட்டுவிடுவோம்
என்ற முடிவுக்கு வந்தவாறே அலுவலகத்தில் நடந்த விஷயத்தை அப்படியே விவரித்தான். “இதை செய்வது சரியா அம்மா?”” என்று கேட்டான். “வேண்டாமப்பா. எப்போதும் அதிகாலையில் உன்னை எழுப்பி காபி கொடுப்பதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆகும். நீ அவ்வளவு ஆழ்ந்து தூங்குவாய். ஆனால் இன்றோ இரவெல்லாம் தூங்காமல் உன் கண்கள் இரண்டும் சிவந்து முகம் சோர்வடைந்து இருக்கிறது.
தவறான ஒரு காரியத்தை செய்யலாமா என நினைக்கிற போதே நமக்கு தூக்கம் போய்விடுகிறதே! அதுவே தவறை நாம் செய்துவிட்டால், ஆயுளெல்லாம் நமக்கு தூக்கம் வராதே! நான் அதிகம் படிக்காதவள். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்…” என்று சொல்லிச் சென்றாள் அவனது தாய். அன்று முதல் அவன் முறைகேடான எந்தக் காரியத்தையும் ஏறெடுத்துப் பார்ப்பதையே தவிர்த்தான். அனைவரிடமும் நற்பெயரை ஈட்டினான். தன் வாழ்வுக்குத் தேவையான அளவுக்கு செல்வங்கள் தானாகவே அவனிடம் நேர்மையான வழியில் வந்து சேர்ந்தன.
இந்தக் கதை போலத் தான் நாம் செய்யும் தவறு நாம் செய்யும் துரோகம், அது தூக்கத்தை தொலைத்துவிடும். மனச்சாட்சி நம்மை தினம் பிடித்து உலுக்கும். ஆக, அத்தகைய அமைதியைக் கெடுக்கும் எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நம் பொதுவாழ்வை அமைத்துக் கொண்டோம் என்றால், நாமும் சரி, நாம் சார்ந்திருக்கும் இயக்கமும் சரி இவ்வுலகமே உற்று நோக்கும் அதிசய பீடமாய் உயர்ந்து நிற்கும் என்பது நிச்சயம்.
எனவே, ஒரு பரிசுத்தமான நிர்வாகத்திற்கு உரியவர்களான நம்மிடம் நமது பணிகளும், செயல்களும் பக்கத் துணையாகி நிற்க வேண்டும்.” என்று பேசியிருக்கிறார் ஜெயலலிதா.
இது அதிமுக கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல், அதிகாரிகளுக்கும் சேர்த்தே சொல்லப் பட்டதாகத்தான் தெரிகிறது. இதன் படி அதிகாரிகள் நடந்துகொள்வார்களா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், ஜெயலலிதா எப்படி நிர்வாகத்தை நடத்துகிறார் என்பதை 2012 சொல்லும்.
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, 2011ம் ஆண்டில், சென்னை சங்கமத்துக்கு எதிராக, கைதிகளை முன் விடுதலை செய்வது தொடர்பாக, உயர்நீதிமன்றத்துக்கு ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் இருந்த குறைகளை நீக்க, பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, திண்டிவனம் அருகே பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக, பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக, புழல் சிறையில் கைதிகளை நிர்வாணப் படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, என்று பல்வேறு பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன.
வரும் ஆண்டில் இதை விடச் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.
நீ விரும்பும் மாற்றமாக நீ இரு என்றார் மகாத்மா காந்தி. நாம் விரும்பும் மாற்றத்தை அடைவதற்கு, தொடர்ந்து வரும் ஆண்டிலும் உழைப்போம் என்ற உறுதி மொழியோடு, புதிய ஆண்டை வரவேற்போம். தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே…