இன்னும் எவ்வளவுதான் வேண்டும் என்ற கட்டுரையில் சவுக்கு அரசு விருப்புரிமைக் கோட்டாவில் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்ற உயர் உயர் அதிகாரிகள் நெற்குன்றம் வீட்டு வசதி வாரிய “Own your house” என்ற திட்டத்தின் கீழ் மீண்டும் மோசடியாக ஒதுக்கீடு பெற்றுள்ளனர் என்று விரிவாக எழுதப் பட்டிருந்தது. இவ்வாறு மோசடி ஒதுக்கீடு பெற்ற 11 ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒதுக்கீடுகளை ரத்து செய்யுமாறு புகார் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.
இது குறித்து நேற்றைய டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், காவல்துறை அதிகாரிகள் எப்படி வீட்டு வசதி வாரிய வீடுகளை கபளீகரம் செய்கிறார்கள் என்று விரிவான செய்தி வெளியிடப் பட்டிருந்தது.
அந்த செய்தி தொடர்பாக ஸ்னேக் பாபுவை தொடர்பு கொண்டு கேட்ட போது, “நாங்கள் முகப்பேரில் வீட்டு வசதி வாரிய மனையைப் பெறும் போது, அது சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இல்லை. அதனால் அந்த விதி எங்களுக்குப் பொருந்தாது” என்று விளக்கம் அளித்தார். சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் திரிபாதியிடம் கேட்கப் பட்ட போது “நாங்கள் விண்ணப்பித்தோம். வீட்டு வசதி வாரியத்தை யார் ஒதுக்கீடு செய்யச் சொன்னது ?” என்று கூறியிருக்கிறார். (நல்லா இருக்கு சார் உங்கள் நியாயம்)
மோசடியாக ஒதுக்கீடு பெற்ற 11 ஐபிஎஸ் அதிகாரிகளின் நெற்குன்றம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று 28.12.2011 அன்று அளிக்கப் பட்ட புகாரின் எதிரொலியாக, வீட்டு வசதி வாரியம், நெற்குன்றத்தில் ஒதுக்கீடு பெற்ற அனைவருக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் விரிவாக்கப் பட்ட சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு பெற்றிருந்தாலும், அவர்களுக்கு நெற்குன்றத்தில் ஒதுக்கீடு செய்யப் பட மாட்டாது. இது குறித்த விபரங்களை பொங்கலுக்குள் வழங்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளது என்ற செய்தியை சவுக்கு தனது வாசகர்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ், தமிழ்நாட்டின் ஆதர்ஷ் ஊழல் என்று நெற்குன்றம் திட்டத்தை வர்ணித்துள்ளது. வீட்டு வசதி வாரியத்தில் ஏற்கனவே ஒதுக்கீடு பெற்றவர்கள் மட்டுமல்ல, சென்னை நகரம் மற்றும் புறநகரில் வீட்டு மனையோ, வீடோ, அடுக்கு மாடிக் குடியிருப்போ, தனது பெயரிலோ, தன் குடும்பத்தினரின் பெயரிலோ வைத்திருக்கும் எந்த அதிகாரிக்கும் நெற்குன்றத்தில் ஒதுக்கீடு செய்யப் படக் கூடாது என்பதே நியாயமான செயலாக இருக்கும். இருப்பினும், அநியாயத்துக்கு போங்கு ஆட்டம் ஆடிய 40 சதவிகித ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடு அம்பேல் என்பது ஒரு சிறு வெற்றி. இந்த வெற்றியை தனது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே நேரத்தில் இந்தச் செய்தியை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கும், இச்செய்தியை சிரத்தையோடு வெளியிட்ட அன்புத் தோழர்கள் கார்த்திகேயன் மற்றும் ரகு ஆகியோருக்கும், சவுக்கு தனது மனமார்ந்த நன்றியை தனது வாசர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளது.
சிறிய வெற்றியாக இருந்தாலும், அது அளிக்கும் மகிழ்ச்சி பெரிதாகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில் ஸ்நேக் பாபுவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது… அய்யோ வடை போச்சே !!!!!!!