Never start a fight, Always finish it.
– Director Clint Eastwood ன் Changeling (2008) படத்தில் வரும் வசனம்.
மேலே சொல்லப்பட்டுள்ள வசனம் தான் மெளன குரு படத்தின் Idea. ஒரு சாதாரணன் “கருப்பு போலீசாரின்’ வாழ்க்கை வளையத்துக்குள் தற்செயலாக சிக்கி சின்னாபின்னமாகி போராடி திரும்பவும் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தான் கதை.
‘மெளன குரு’வை எழுதி இயக்கியுள்ள சாந்தகுமாருக்கு இது முதல் படம். சாந்தகுமாரின் திரைக்கதை தான் படத்திற்க்கு பெரிய பலம். முதலில் நிறைகள்.
திரைக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மிக இயல்பானதாக இருப்பதுடன் அவைகள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறு கதாபாத்திரம்,சிறு சம்பவம் கூட சும்மா வந்து போகிறது என்று இல்லாமல் ஒரு homogeneous கலவையாக திரைக்கதை உள்ளது.
இதனால் தான் திரைக்கதை மிக சில இடங்களை தவிர பார்வையாளரின் கவனம் சிதையாமல் வைத்திருக்கிறது.
கல்லூரியில் நடக்கும் சிறு சிறு திருட்டுகளுக்கு யார் காரணம் என்று build ups செய்து.. சஸ்பென்சை (கல்லூரி முதல்வரின் மகன் என) உடைக்கும் இடம், அதை மட்டும் செய்யாமல் ஜான் விஜய்க்கு மர்மமாக போனில் பேசியது யார் என்பதையும் மனநல காப்பகத்தில் ஏன் மங்குனி மாதிரி கல்லூரி முதல்வர் உட்கார்ந்திருந்தார் என்பதையும் சொல்கிறது.
க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற திரைக்கதை வடிவமைப்பு.
அருள்நிதி போலீஸ் துப்பாக்கியில் இருந்து தப்பித்து இரவில் அண்ணன் வீட்டுக்கு வருகிறார். எல்லோரும் ஆளாளுக்கு பிசியாக இருக்க, ஹாஸ்டல் செல்ல வெளியே வந்து, இனியாவிடம் ’திடீர்ன்னு ஒரு மாதிரி தனியாகிட்ட மாதிரி இருக்கு’ என்று சொல்லும் அந்த தருணம் நம்மை மிக சரியாக பாதிக்க, களுக்கென்று நம்முள் ஏதோ ஒன்று சரிகிறது
அந்த பழைய ஆடிட்டோரியத்தில் நடக்கும் க்ளைமேக்ஸில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் ஒரு சமயம் உமா ரியாஸின் பக்கம் இருக்கும் பலம் அடுத்து ஜான் விஜயின் பக்கமாக மாறுவதும் இறுதியாக அருள்நிதியின் பக்கம் வருவதும் interesting.
ஜான் விஜய் அறிமுகமாகும் (படத்தின் முதல் 35 நிமிடங்கள்) வரை திரைக்கதை மெல்ல நடந்த்து தான் செல்கிறது. இந்த பகுதியில் பிரதானமாக இடம் பெறும் அருள்நிதி-இனியா காதல் பகுதி சுவாரஸ்யமாக இல்லாமல் இருப்பதும், அருள்நிதியின் ’மெளன குரு’ கதாபாத்திரம் distinct-ஆக இதுதான் என சொல்லாமலிருப்பதும் தான் காரணம். பொதுவாகவே திரைக்கதை முழுவதும் ஒரு வறட்சி தன்மை பரவி இருப்பது போல் தோன்றுகிறது. இதற்கு காட்சிகளில் உள்ள சுவாரஸ்ய குறைவு ஒரு காரணமாக இருக்கலாம்.
அருள்நிதி மனநல காப்பகத்திலிருந்து தப்பி வந்த பிறகு இடம் பெரும் அவரின் காட்சிகளை இன்னும் குறைந்த நீளத்திலும் கூர்மையான வசனங்கள் மூலமும் செய்திருக்கலாம். படத்தின் மொத்த வசனத்திலுமே இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
மெளன குரு கதையில் ராம் கோபால் வர்மாவின் உதயம் படக்கதையில் உள்ள சிறு சிறு கூறுகளை தவித்திருக்கலாம்.
நம் வாழ்வில் அவ்வப்போது ரொம்பவே சுவாரஸ்யமான coincidence அல்லது synchronicity கள் நடக்கும்.மெளன குரு படம் போவதற்காக வீட்டில் இருந்து கிளம்பும் வரை செம interesting உடன் Clint Eastwood, இயக்கிய Changeling படம் பார்த்து கொண்டிருந்தேன். படத்தில் LAPD போலீஸ், தன்னை காத்துக்கொள்ள கதாநாயகி Angelina Jolie யை மனநல காப்பகத்தில் தள்ளி அவரை செயல் இழக்க செய்ய, அங்கு இருக்கும் பெண் மனநோயாளி Angelina Jolie க்கு உதவ முன் வர….. காட்சி நேரம் நெருங்கி விட்டதால், பாதியில் Changeling ஐ நிறுத்திவிட்டு மெளன குரு படம் பார்க்க கெளம்பிவிட்டேன்.
படத்தின் இரண்டாம் பகுதியில் Changeling மாதிரியே போலீஸ் கொடுமை, மனநலகாப்பகம் என இதிலும்…
இயக்குநர் சாந்த குமார் நடிகர்களை இயக்கியதில் பட்டையை கெளப்பியிருக்கிறார். உமா ரியாஸ்கான், கூத்துபட்டறை நடிகர்கள் முருகதாஸ் (அருள்நிதியின் மனநல பாதிக்கப்பட்ட நண்பர்) அப்புறம் விஜயன் (அந்த கோணல் சிரிப்பு காலேஜ் வில்லன் ) இவர்கள் தான் என்னோட விருப்பதேர்வு. உமா ரியாஸ்கான் மற்றும் முருகதாஸ் கதாபாத்திரங்கள் (பெண் போலீஸ், மனநலகுறைவானவர்) தமிழ் சினிமாவில் மிக பழைய விஷயங்கள்.அவர்களின் பாத்திர படைப்பும் நடிப்பும் அதை வேறு levelக்கு எடுத்து சென்றுள்ளது. அருள்நிதி வம்சம் படத்திற்கு பிறகு இயல்பாக இருக்கிறார். Emotionalலாக கத்தும் காட்சிகளில் திணறுகிறார். இனியா sweet surprise. இயல்பாகவும் செய்திருக்கிறார்
மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராஜா முகம்மது எடிட்டிங் செய்திருக்கிறார். இதை வெறும் செய்தியாக மட்டுமே சொல்லவேண்டியுள்ளது. அந்த அளவில்தான் அவர்களின் வேலை இருக்கிறது.
தமன் இசையில் ’என்ன இதுவோ’ என்ற பாடலையும் ’தலைக்கு மேலே’ என்ற சிறிய பாடலையும் நாமும் பாடலாம்.இரண்டும் ok. பாடல்களில் பாடகர்களின் குரலை அமுக்கி synthesize பண்ணுவதை ஈரத்தில் ஆரம்பித்த தமன் இன்னும் விடவில்லை.
படத்தில் costumes பற்றி சொல்லனும்னா, ஒகே இயல்பாக இருக்கு.
ஊரில் இருந்து சென்னை வரும் அருள்நிதி, அவர் அம்மா, அண்ணன் பயணம் முடித்து வீட்டினுள் நுழையும் போது பயணக்களைப்பு effect எல்லாம் இல்லாமல் கேமரா பின்னால் இருக்கும் இயக்குநர் ’action எல்லாரும் உள்ளே வாங்க’ என்று சொன்னவுடன் வாசலை விட்டு தள்ளி நிற்க்கும் அவர்கள் அனைவரும் உள்ளே வந்தது போல அவ்வளவு fresh ஆக இருக்கிறார்கள். இது மட்டும் கொஞ்சம் நெருடல்.
Final Opinion : ஒட்டு மொத்தமாக படம், மற்ற குப்பைகளில் இருந்து வெகு தூரம் தள்ளி நின்று கவனம் ஈர்க்கின்றது.