நக்கீரன் இதழில் ஜெயலலிதாவைப் பற்றி வெளியான செய்தியும், அதன் பிறகு நடந்த சம்பவங்களும் அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து ஒரு நாள் முழுக்க நக்கீரன் அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு தாக்கியதும், காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்ததும் தெரிந்ததே.
“அம்மாவின்” மனதை குளிர்விக்க வேண்டும் என்று இந்த அரசு அதிகாரிகளும், தொண்டர்களும் நடத்திய நாடகங்கள் இருக்கிறதே…. அப்பப்பா…. முதலில் நக்கீரன் அலுவலகத்துக்கு மின் இணைப்பு நிறுத்தப் பட்டது. பிறகு, குடிநீர் இணைப்பை நிறுத்த முயற்சி எடுக்கப் பட்டது.
அதிமுக தொண்டர்களும், தலைவர்களும், நக்கீரன் மீது எப்படிப் புகார் தொடுக்கலாம் என்று அலைபாய்ந்தார்கள். முதல் நாள் நக்கீரன் அலுவலகத்தில் தாக்குதல் நடந்த அன்று, சென்னை, ஜாம்பஜார் காவல்நிலையத்தில் நக்கீரன் மீது அளிக்கப் பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டது. அதாவது நக்கீரன் கோபாலும், காமராஜும், ஜெயலலிதாவைப் பற்றி வெளியான அவதூறு செய்தி குறித்து கேள்வி கேட்கச் சென்ற அதிமுக தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக. எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டது. நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் தொடுத்ததாக அதிமுக எம்எல்ஏ அசோகன் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டது.
ஆனால், நக்கீரன் அலுவலகம் மீது காலை முதல் மாலை வரை வன்முறையை ஏவிவிட்ட அதிமுக தொண்டர்கள், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் போல, மாலையில் விடுவிக்கப் பட்டார்கள். நக்கீரன் அலுவலகத்தை அடித்து துவம்சம் செய்ய முயன்ற அதிமுக தொண்டர்கள் மாலையில் விடுதலை செய்த காவல்துறை, முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக மலையாளிகளின் கடைகளை அடித்த தமிழ் அமைப்பினரை கைது செய்து, ஜட்டியோடு நிற்கவைத்து, பத்திரிக்கையாளர்களை படமெடுக்கச் சொல்லி வேடிக்கைப் பார்த்தது.
இரண்டு வன்முறைச் சம்பவங்களுமே கண்டிக்கப் படவேண்டியவை என்பதில் சந்தேகம் இல்லை. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்காக பிழைப்புக்காக டீக்கடை நடத்துபவர்களை அடிப்பதும், தங்கள் தலைவியைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்காக பத்திரிக்கை அலுவலகத்தை அடித்து நொறுக்குவதும் கண்டிக்கத்தக்கவைகளே… ஆனால், முதல் சம்பவத்தில் சம்பந்தப் பட்டவர்களை ஜட்டியோடு நிற்கவைப்பதும், இரண்டாவது சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை, அரசு மரியாதையோடு வீட்டுக்கு அனுப்பி வைப்பதையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
அடுத்த நாள் நக்கீரன் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நக்கீரன் சார்பில், பாதுகாப்பு வழங்க வேண்டி தொடுக்கப் பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்தது. நக்கீரன் வழக்கறிஞர் பெருமாள், குடிநீர் இணைப்பு துண்டிக்கப் பட்டது என்று கூறினார்.
தலைமை நீதிபதி, எதற்காக குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்தீர்கள் என்றார். இது குறித்து எனக்கு துறை ரீதியான அறிவுரை இல்லை. நாளை விசாரித்து விட்டு சொல்கிறேன் என்றார் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன். எரிச்சலடைந்த நீதிபதி, “நான் 15 ஆண்டுகள் அரசு வழக்கறிஞராக இருந்திருக்கிறேன். இது போல தயாரிப்பு இல்லாமல் நான் நீதிமன்றத்துக்கு சென்றதே இல்லை. ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றனவே. இது குறித்து தயாரிப்போடு வரக்கூடாதா ?” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது நக்கீரன் சார்பாக, நக்கீரனுக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பில் மாசு ஏற்பட்டுள்ளதால் சரி செய்ய வேண்டி, குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்திருப்பதாக மெட்ரோ வாட்டர் சார்பில் வழங்கப் பட்ட நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.
இதைப்பார்த்த நீதிபதி நொய்யல் ஆற்றில் மாசு ஏற்படுகிறது, சாயப்பட்டறை கழிவுகளால் மாசு ஏற்படுகிறது, அரசுக்கு நக்கீரனுக்கு செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து ஏற்பட்டுள்ள அக்கறை ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி விட்டு, வழக்கை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார்.
மறுநாள் வழக்கு விசாரணைக்கு வந்த போது, நக்கீரன் வழக்கறிஞர் பெருமாள், எழுந்து, நக்கீரன் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளது. அந்த கட்டுரையை வாபஸ் பெறுவதற்கும் தயாராக உள்ளது என்று கூறினார். உடனே நவனீதகிருஷ்ணன், அவர்கள் அட்டைப்படத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார். பெருமாள், அட்டைப்படத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. முக்கியமான இடத்தில் மன்னிப்பு வெளியிடப்படும் என்றார். உடனே தலைமை நீதிபதி இக்பால், அவதூறு செய்தியை அட்டைப் படத்தில் வெளியிடுவீர்கள், மன்னிப்பை மட்டும் உள்ளே வெளியிடுவீர்களா என்று கேட்டார்.
அதற்கு பெருமாள், இதழ் அச்சாகி முடிந்து விட்டது. அதனால் அடுத்த இதழில் மன்னிப்பு வெளியிடப்படும் என்றார். அத்தோடு, மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது, உடனடியாக மின் இணைப்பு வழங்க உத்தரவிடுமாறு கேட்டார்.
நவனீதகிருஷ்ணன், இப்படிப்பட்ட அவதூறு செய்தியை வெளியிட்டு விட்டு, மின் இணைப்பை உரிமையோடு கேட்க முடியாது என்று கூறினார். (????) மேலும், மின் இணைப்பு துண்டிக்கப் படவில்லை. அது ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என்றும் கூறினார்.
தலைமை நீதிபதி இக்பால், “நக்கீரனின் வழக்கறிஞர் நியாயமான முறையில், அட்டையில் (கவர்) மன்னிப்பு வெளியிடப்படும் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்டு, அடுத்த இதழில் நக்கீரன் இதழில் மன்னிப்பு வெளியிடப்படும் என்பதை பதிவு செய்து விட்டு, வழக்கை 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். மேலும் வரும் 14ம் தேதிக்குள், மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து இணைப்புகளும் வழங்கப் படும் என்று எதிர்ப்பார்க்கிறோம்” என்று உத்தரவிட்டார்.
மின் இணைப்பு துண்டிக்கப் பட்டது என்று நக்கீரன் இதழ் தெரிவித்தும், நீதிபதிகள் 14க்குள் இணைப்பு வழங்கும் என்று உத்தரவிடாமல், எதிர்ப்பார்க்கிறோம் என்று சொல்லியது மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவதூறான செய்தியை ஒரு பத்திரிக்கை வெளியிட்டாலும், மின் இணைப்பை துண்டிக்க அரசுக்கு என்ன உரிமை, இதை ஏன் நீதிமன்றம் கண்டிக்கவில்லை என்று வருத்தம் ஏற்பட்டது.
ஆனால், நக்கீரனின் நடவடிக்கைகளைப் பார்த்தால், அரசும், நக்கீரனும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது. இந்த இதழில் நக்கீரன் வருத்தம் தெரிவித்திருக்கிறது. அந்த வருத்தத்துக்கு மேலே, நக்கீரனுக்கு ஓபாமா பாராட்டு என்று ஒரு செய்தி வேறு…. ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட செய்தியை பார்த்தால் ஓபாமா வாந்தியெடுத்திருப்பார். கடந்த இதழில் நக்கீரன் வெளியிட்டுள்ள வருத்தத்தை பாருங்கள்.
வருத்தம்
நக்கீரன் Vol.24 No.76 2012 ஜனவரி 7-10 தேதியிட்ட இதழின் அட்டைப்படக்கட்டுரையாக வெளியான செய்தி, எந்தவித உள்நோக்கமும் இன்றி வெளியிடப்பட்டதாகும். ஆளுங்கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கொள்கை சார்ந்தும் அரசியல்ரீதியாகவும், சாதகமாக உள்ள தகவல் என்ற வெள்ளந்தி நோக்கத்தில்தான் நாம் இச்செய்தியை வெளியிட்டிருந்தோம். எந்த வகையிலும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழுக்கோ, இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கோ களங்கம் கற்பிக்கும் எண்ணம் நக்கீரனுக்கு சிறிதளவும் இல்லை. இச்செய்தி வெளியானபின், நக்கீரன் எதிர்கொண்டவைகள் அனைத்தையும் வாசகர்களும் பொதுமக்களும் அறிவார்கள். எப்போதும் சட்ட உரிமைகளை பாதுகாக்கும் நீதிமன்றங்களையும், நீதியையுமே நம்பும் நக்கீரன் இப்போதும் அவற்றின் மீது நம்பிக்கை வைத்தே செயல்பட்டு வருகிறது. நக்கீரனின் அட்டைப்படச் செய்தியை தவிர்த்திருக்கலாம் என நம் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர்களும், வழக்கறிஞர்களும், அரசியல் இயக்கத்தினரும் நலன் விரும்பிகளும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். எவ்வித உள்நோக்கமுமின்றி வெளியிடப்பட்ட அந்த அட்டைப்படச் செய்தியால் தமிழக முதல்வர் ஜெயலலிதா – அவரைச் சார்ந்தவர்கள் – ஆளுங்கட்சி உறுப்பினர்கள் – மற்றும் எவர் ஒருவரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நக்கீரன் தனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.”
இதுதான் அந்த வருத்தம். நக்கீரனின் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள். “ஆளுங்கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கொள்கை சார்ந்தும் அரசியல்ரீதியாகவும், சாதகமாக உள்ள தகவல் என்ற வெள்ளந்தி நோக்கத்தில்தான் நாம் இச்செய்தியை வெளியிட்டிருந்தோம்.” “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என்ற தலைப்பிட்ட கட்டுரை, அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் கொள்கை சார்ந்தும், அரசியல்ரீதியாகவும் சாதகமாக உள்ள தகவலாம். (அதிமுகவுக்கு கொள்கை இருக்கிறது என்பது நக்கீரனின் அபார கண்டுபிடிப்பு) அதுவும் வெள்ளந்தி நோக்கமாம்.
இந்த வருத்தமே அயோக்கியத்தனமான வருத்தம் இல்லையா ? நக்கீரன் அலுவலத்துக்கு அரசு மின் இணைப்பை துண்டித்தது ஏற்படுத்திய வருத்தத்தை விட, தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல் பூசி மெழுகி, அதை நியாயப் படுத்த முயலும், நக்கீரனின் செயல், அதை விட வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிமுக அரசு, நக்கீரன், இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல…. இவர்களைப் பற்றி எழுதியும், பேசியும் வரும் நாம்தான் முட்டாள்கள்.