இப்படி யாராவது அதிமுகவின் வெற்றிக்கு நான்தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்ள முடியுமா ? ஒரு வேளை இப்படி யாராவது மார்தட்டிக் கொள்ள வேண்டும் என்றால் கருணாநிதியைத் தவிர வேறு யாரும் மார்தட்டிக் கொள்ள முடியாது.
ஆனால் இப்படி ஒருவர் மார்தட்டிக் கொண்டார். அவர் வேறுயாரும் அல்ல. மன்னார்குடி மாபியாவின் தலைவர் ம.நடராஜன் தான்.
ஜனவரி 15 முதல் 17 வரை தஞ்சாவூரில் பொங்கல் கலை இலக்கிய பெருவிழா நடந்தது. இந்த விழாவின் இறுதிநாளில் தான் இப்படி முழங்கினார் நடராஜன். வழக்கமாக இந்த விழா நடைபெறும் போது, நடராஜனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் நிகழ்ச்சிகளில் விருந்தினர்களாக கலந்து கொள்வது இல்லை. ஆனால், இம்முறை இவ்விழாவை சசிகலாவின் கடைசித் தம்பி திவாகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப் பட்டு இருந்தது. அதன் படி திவாகர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கவில்லை. காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்ததாலோ என்னவோ, திவாகரன் விழா நடந்த பக்கமே தலை காட்டவில்லை.
விழாவுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் வாகனங்களில் மக்கள் அழைத்து வரப்பட்டு, தங்கும் இட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டு இருந்தது வெளிப்படையாக பார்க்க முடிந்தது. இந்த விழாவுக்காக மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப் பட்டு, மக்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர் என்பதை வெளிப்படையாக பார்க்க முடிந்தது.
லட்சுமண் ஸ்ருதி இசை நிகழ்ச்சி, அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியை நடத்தும் நகைச்சுவையாளர்களின் நிகழ்ச்சி என்று பல்வேறு நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு வசதி இல்லாத தஞ்சை மக்களை கவர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது.
விழாவின் இறுதி நாளான 17 அன்று கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் இருவர் முக்கியமானவர்கள். கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பழ.நெடுமாறன்.
இறுதி நாள் விழா நடந்து கொண்டிருந்த போது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கவிஞர் சிநேகன், இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் விழாவின் போதும், தமிழ் எழுத்தாளர்கள் கவுரவிக்கப் படுவார்கள் என்று அறிவித்தார். முதல் விருது நெடுமாறனுக்கு என்று அறிவிக்கப் பட்டது. இந்த திடீர் அறிவிப்பால் நெடுமாறன் அதிர்ச்சிக்கு உள்ளானார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. நெடுமாறனுக்கு ஒரு தங்க நாணயம் வழங்கப் பட்டது. அதை நெடுமாறன் பெற்றுக் கொண்டிருந்த போதே, அந்த நாணயம் இரண்டு பவுன் என்று சொல்லுமாறு ஸ்நேகனுக்கு உத்தரவிட்டார் நடராஜன். இரண்டு பவுன் தங்க நாணயம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப் பட்டது. காசி ஆனந்தனுக்கும் இதே பரிசு.
காசி ஆனந்தன் மற்றும் நெடுமாறன் பேசி அமர்ந்தவுடன் பேச வந்தார் நடராஜன். “நான் இப்போது ஒரு முழுமையான தலைவனாகி விட்டேன். இப்போது நான் ஒரு கட்டுப்பாடற்ற தலைவன். இரண்டே இரண்டு பேருக்குத்தான் நான் கட்டுப்படுவேன். ஒன்று பழ.நெடுமாறன். இரண்டு எனது மனைவி.”
பிறகு முல்லைப் பெரியாறு விவகாரத்துக்குள் நுழைந்து விட்டார். “நான் முதல் முறையாக நான் ஆசிரியராக இருக்கும் புதிய பார்வை இதழில்தான், கேரளாவின், தேவிக்குளம், பீர் மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று எழுதினேன். அந்த இதழ் டிசம்பர் 25 அன்று வெளியானது. நான் அதற்குப் பிறகு வெளிநாடு சென்று விட்டேன். நான் ஜனவரி முதல் தேதி அன்று சென்னை திரும்பி வந்தேன். வந்து பார்த்தால், திமுக தலைவர் கருணாநிதி அவர்கள், தேவிக்குளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். நான் புதிய பார்வை இதழில் எழுதியதை படித்து விட்டுத்தான் அவர் இப்படி எழுதியிருந்தார். அது வரை அவருக்கு இது ஏன் தோன்றவில்லை….. ?”
“இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கும் பலர், நடராஜன் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவான் என்று எதிர்ப்பார்த்து வந்திருக்கிறார்கள். உரிய நேரம் வரும்போது நான் அந்த அறிவிப்பை வெளியிடுவேன். நான்தான் இந்த ஆட்சியை மாற்றினேன். ஆனால் இதற்காக உழைத்த நான் இருக்கும் போது, வேறு யாரோ இதன் பலனை அனுபவித்து வருகிறார்களே என்று சிலர் சொல்கிறார்கள். அது பற்றி எனக்கு கவலையில்லை. அது வாக்களித்த மக்களின் விருப்பம்.
நான் ஏன் அமைதியாக இருக்கிறேன் என்று பலர் கேட்கிறார்கள். நான் எடுக்கும் முடிவுகள் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி விடக் கூடாதே என்பதற்காகத்தான் அமைதியாக இருக்கிறேன். என்னை நம்பி பலர் இருக்கிறார்கள். வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இருக்கிறார்கள். அதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன். தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டி யிருக்கிறது. மேலும் எனது மனைவி மீதான வழக்கும் முடிவுக்கு வர வேண்டும்.
சமீபத்தில் நடந்த சில விஷயங்களைப் பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை. நீங்கள் யாரும் பயப்படவில்லை என்பதை இங்கே திரண்டிருக்கும் கூட்டமே காட்டுகிறது. நீங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டீர்கள்.
உரிய நேரம் வரும் வரை காத்திருங்கள். நான் அப்போது எனது முடிவை அறிவிப்பேன். எனக்கு சில கடமைகள் இருக்கின்றன. மூன்று பேருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே மரண தண்டனை ஒழிக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாக்குமரி முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொள்வேன். அது எப்போது என்பதை நெடுமாறன் அறிவிப்பார். முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு நினைவிடம் கட்டப் பட்டு வருகிறது. அது மார்ச் மாதம் முடிவடையும். இது போல பல கடமைகள் இருக்கிறது. அதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன்” என்றார்
நடராஜன் பேசி முடித்ததும் அவரே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “நான் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைப்பதற்கு 50 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன். அதை இப்போதே தருகிறேன். என்னுடைய 9 பதிவு எண் கொண்ட நிஸ்ஸான் காரை அமெரிக்காவைச் சேர்ந்தவர் வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளார். அதை இப்போதே அவருக்கு 20 லட்ச ரூபாய்க்கு வழங்குகிறேன். என்னுடைய ரோலெக்ஸ் வாட்சை துபாயைச் சேர்ந்த ஒருவர் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள முன் வந்துள்ளார். அதையும் வழங்குகிறேன். என்னுடைய 1234 பதிவு எண் கொண்ட சொனாட்டா காரை லண்டனைச் சேர்ந்தவர் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளார். என்னுடைய 7070 பதிவு எண் கொண்ட போர்ட் என்டவர் காரை 15 லட்ச ரூபாய்க்கு மலேசியாவைச் சேர்ந்தவருக்கு கொடுக்கிறேன். (இவ்வாறு நடராஜன் அறிவித்ததும், ஏற்கனவே தலையில் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப் பட்ட ஆடுகள் போல வரிசையாக வந்து நடராஜன் வழங்கியதை வெளிநாட்டைச் சேர்ந்த தமிழகர்கள் பெற்றுக் கொண்டனர்.) மொத்தம் 45 லட்ச ரூபாய் வந்திருக்கிறது. உடனே அருகில் இருந்த ஒருவரை அழைத்தார். துபாய் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர் இப்போது நன்கொடை அளிப்பார் என்றார். அவர் நான் அண்ணன் நடராஜன் கட்டும் நினைவிடத்திற்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை அளிக்கிறேன் என்று அறிவித்தார்.
இது முடிந்ததும் நடராஜன், பார்த்தீர்களா… நான் சொன்னது போல 50 லட்ச ரூபாய் தந்து விட்டேன். இதை மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டியது நெடுமாறனின் பொறுப்பு என்றார்.
இந்த நிகழ்ச்சி நடந்த மூன்று நாட்களுக்கும் ஆன செலவு மட்டும் இரண்டு கோடி ஆகியிருக்கும். தஞ்சை நகரெங்கும் ப்ளெக்ஸ் போர்டுகள் காணப்பட்டன. ஏராளமான வாகனங்கள், வந்தவர்களுக்கு உணவு, தங்குமிட வசதி, என்று அனைத்தையும் கணக்கிட்டால் பணம் வாரி இறைக்கப் பட்டிருந்ததைக் காண முடிந்தது.
இந்த நிகழ்ச்சி நடராஜன் தந்தை மருதப்பனின் பெயரில் ஏற்படுத்தப் பட்டிருந்த அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. எண்பதுகளின் இறுதியில் தன் வேலையை ராஜினாமா செய்த நடராஜனுக்கு எங்கிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்களும், ரோலெக்ஸ் வாட்சுகளும், விழா நடத்த கோடிக்கணக்கான பணமும் வந்தது என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து தீவிரமான விமர்சனங்களை வைத்திருப்பவர்கள் கூட மறுக்காமல் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம், அந்த இயக்கம் அர்ப்பணிப்புள்ள இயக்கம் என்பது. உயிரைத் துச்சமாக மதித்து, இனத்துக்காக, உயிரை இழக்க சம்மதிப்பவர்களே புலிகள் இயக்கத்தில் இணைகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தையும், அதன் தியாகத்தையும் பற்றி, ஒரு மாபியா கூட்டத்தின் தலைவராக இருக்கும் ஒரு நபர் நடத்தும் நிகழ்ச்சி மேடையில் நெடுமாறனும், காசி ஆனந்தனும் பேசியது மிகுந்த வேதனையை அளித்தது.
முள்ளி வாய்க்காலில் இறந்த மக்கள், குற்றும் குலையுமாக, உண்ண உணவின்றி இறந்தனர். அப்படி இறந்த மக்களுக்காக கட்டப்படும் நினைவிடம், நடராஜனின் கார்களில் இருந்தும் ரோலெக்ஸ் வாட்சிலிருந்தும் கிடைக்கும் பணத்திலா கட்டப்பட வேண்டும் ? அப்படி ஒரு நினைவிடம் அந்த மக்களுக்கு அவசியமா ? நெடுமாறன் போன்று உலகத்தமிழகர்கள் அனைவரும் மதிக்கும் ஒரு தலைவர், நடராஜன் போன்ற நபர்களோடு மேடை ஏறலாமா ? அதுவும், இந்த நேரத்தில்… !!!
அரசுப் பதவியோ, தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட பதவியையோ ஒரு நபர் வகித்திருந்தால் கூட, எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்று அவர் மீது ஊழல் வழக்கு தொடுக்க முடியும். 20 ஆண்டுகளாக, நடராஜன் நிழல் அரசாங்கம் நடத்தி வந்ததை அனுமதித்த ஜெயலலிதாவையே இந்த மோசடிகளுக்கெல்லாம் காரணமாக சொல்ல வேண்டும். இன்று மன்னார்குடி மாபியாவை விரட்டியடித்திருந்தாலும், இத்தனை ஆண்டு காலம், இந்த மன்னார்குடி மாபியாவை தண்ணீர் ஊற்றி வளர்த்தது ஜெயலலிதாவே…. ஜெயலலிதா இல்லாவிட்டால், சாதாரண மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன், இன்று புலவர்களுக்கு பரிசில் வழங்கும் புரவலராக வளர்ந்திருக்க மாட்டார். தன்னிடம் உள்ள கருப்புப் பணத்தை, வெள்ளையாக மாற்றுவதற்காக நடராஜன் போடும் வேஷமே இந்த தமிழினக் காவலர் வேஷம்.
இந்த நிகழ்ச்சியில் நடராஜன் பேசியதை சவுக்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த போது, தள்ளாடியபடி ஒரு உடன்பிறப்பு வந்தார். நீங்க ப்ரெஸ்ஸா என்று கேட்டார். ஆம் என்றவுடன், எந்த ப்ரெஸ்ஸு என்றார். ஒரு பிரபலமான பத்திரிக்கை பெயர் சொன்னவுடன், குறிப்புப் புத்தகத்தைப் பார்த்தார். அவரு ஒன்று சொல்றாரு… நீங்க ஒன்னு எழுதறீங்க என்று கேட்டார். இல்லைங்க… வேகமா எழுதறதுக்காக இங்க்லீஷ்ல எழுதறேன் என்றவுடன், எனக்கும் இங்கிலீஷ் தெரியும்…. நான் பி.ஏ.எகனாமிக்ஸ் என்றார். சரிங்க என்றதும், நான் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர் என்றார். முதல்ல நடிகர் கார்த்திக்க நம்பி ஆதரவு கொடுத்தோம்….. அவரு எங்க ஜாதிய கை விட்டுட்டாரு… இப்போ அண்ணன நம்புறோம்.. அண்ணன் எப்படி பின்றாரு பாத்தீங்களா.. என்றார்…. செமையா பின்றாரு… என்றதும்… அண்ணன் அண்ணன்தான் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். வந்திருந்த கூட்டம் எப்படி வரவழைக்கப் பட்டிருந்தது என்பதை அந்த உடன்பிறப்பு தெளிவாகவே விளக்கி விட்டார்.