ஓய்வு பெற்ற டிஜிபி நட்ராஜ் அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நியமனம் வரவேற்கத் தக்கது.
கையில் 10 ஆண்டு டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்களும் விடைகளும் அடங்கிய கையேடு. கண்களில் ஏக்கம். நமக்கு வேலை கிடைக்குமா என்ற ஏக்கப் பார்வையோடு, டிஎன்பிஎஸ்சி வாசலில் தேர்வுக்கு விண்ணப்பம் போடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை பார்த்திருக்க முடியும். இந்த இளைஞர்களின் ஒரே நம்பிக்கை, நன்றாக படித்தால் வேலை பெற்று விட முடியும் என்பதே. இந்த போட்டித் தேர்வுகளை நம்பி தமிழகமெங்கும் நடைபெறும் பயிற்சி மையங்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்து வருகின்றன. இந்தத் தேர்வுகளை நடத்தி, இந்த இளைஞர்களின் தலையெழுத்தை முடிவு செய்யும் பொறுப்பு வகிக்கும் தேர்வாணையத்தின் உறுப்பினர்களும், தலைவரும், முழுக்க முழுக்க ஊழலில் ஊறித் திளைத்தவர்களாக இருந்ததை லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின.
அதிமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே டிஎன்பிஎஸ்சியில் பிரச்சினைகள் தொடங்கின. டிஎன்பிஎஸ்சியின் செயலராக உதயச்சந்திரன் ஐஏஎஸை அரசு நியமித்த அன்று முதல் பிரச்சினைகள் ஆரம்பமானது. டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பான கோப்பில் உதயச்சந்திரனை கையெழுத்து இடுமாறு சேர்மேன் செல்லமுத்துவிடமிருந்து உத்தரவு வந்ததும், அது தொடர்பான கோப்புகளை பார்வையிட வேண்டும் என்று உதயச்சந்திரன் கேட்டுள்ளார். கையெழுத்து மட்டும் போடுங்கள், கோப்புகளை காட்ட முடியாது என்று பதில் கொடுக்கப் பட்டுள்ளது. கோப்புகளை பார்க்காமல் கையெழுத்து போட முடியாது என்று அவர் மறுத்துள்ளார். உடனே, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களும், சேர்மேனும் சேர்ந்து உதயச்சந்திரனோடு எந்த ஊழியரும் பேசக்கூடாது, அவர் அழைக்கும் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது, அவருக்கு எந்தக் கோப்புகளையும் அனுப்பக் கூடாது என்று எழுத்துபூர்வமான சுற்றறிக்கையை அனுப்பினர். இந்த உத்தரவைத் தொடர்ந்து உதயச்சந்திரன் தனிமைப் படுத்தப் பட்டார்.
இதையடுத்து உதயச்சந்திரன் விரிவான விசாரணை நடத்தி டிஎன்பிஎஸ்சியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக அரசுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியதாக தெரிகிறது. அவர் அறிக்கை அனுப்பினாலும், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத ஒரு சூழலும் இருந்தது. லஞ்ச ஒழிப்புத் துறையின் வரம்பில் தேர்வாணைய உறுப்பினர்களோ, தலைவரோ வருவதில்லை. ஆகஸ்ட் மாதத்தில், ஜெயலலிதா அரசு, தேர்வாணைய உறுப்பினர்களையும், தலைவரையும் லஞ்ச ஒழிப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவுகளைத் தொடர்ந்து பூர்வாங்க விசாரணையை தொடங்கிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்திருக்கிறார் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து.
டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அரசியல் அமைப்புச் சட்டம் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்பை சுட்டிக் காட்டி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். மேலும் அவர்கள் தங்கள் மனுவில், தாங்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 317ப் பிரிவின் படி நியமிக்கப் பட்டவர்கள் ஆதலால், தங்களை விசாரணை செய்யவே மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது, அரசியல் அமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கியுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் போல தங்களுக்கும் இந்தப் பாதுகாப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், டிஎன்பிஎஸ்சி செயலராக உள்ள உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்பவர் தான் இந்த வழக்கு வருவதற்கே காரணமாக இருந்தவர் என்பதால், அவரையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்துள்ளனர். போட்டித் தேர்வின் முடிவு வெளியிடப் படுவதற்கு முன்பு, அந்த முடிவை உறுப்பினர்களும், தலைவரும் பரிசீலனை செய்வது பல காலமாக அமலில் இருந்த ஒரு வழக்கம். அந்த வழக்கத்திற்கு மாறாக உதயச்சந்திரன் அதற்கு அனுமதி மறுத்துள்ளார் என்றும், உதயச்சந்திரனின் தூண்டுதலில் பேரிலேயே இந்த விசாரணை தொடங்கப் பட்டுள்ளதாகவும், தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
செல்லமுத்து வீட்டில் நடந்த சோதனையின் போது
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவாக மாலை 6 மணிக்கு மேல் விசாரணை என்று அழைக்கக் கூடாது, பறிமுதல் செய்த பென் ட்ரைவ் போன்ற பொருட்களை நகலெடுத்துக் கொண்டு திருப்பி அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பின், டிஎன்பிஎஸ்சி க்ரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 73 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத் துறை. இந்த அதிகாரிகள், முறைகேடுகளில் ஈடுபட்டு, தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதால், இவர்கள் 73 பேரின் தேர்ச்சியையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சோதனைகள் நடைபெற்ற போதே, டிஎன்பிஎஸ்சியின் தலைவராக இருந்த செல்லமுத்து தன் பதவியை ராஜினாமா செய்தார். செல்லமுத்து கொடுத்த தைரியத்தில்தான், மற்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தை அணுகி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தக் கூடாது என்ற வழக்குத் தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
செல்லமுத்துவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அரசு, அவர் இடத்தில் முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நியமனத்தை சவுக்கு முழு மனதோடு வரவேற்கிறது.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜ் தன்னுடைய பணிக்காலத்தில் ஊழல் புகார்களுக்கு ஆளாகாதவர். நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். இலக்கிய ஆர்வலர். இவை எல்லாவற்றையும் விட, மிகச் சிறந்த மனிதாபிமானி.
காவல்துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நடராஜன் என்ற பெயரில் இருந்தார்கள். அப்போது கீழ் மட்ட காவல்துறை அதிகாரிகள் மத்தியில் இவர்கள் இருவரையும் வேறுபடுத்திக் காட்ட, இந்த நட்ராஜை விருமாண்டி கமல் போல மீசை வைத்திருப்பதால் விருமாண்டி என்று அழைப்பார்கள்.
2000ம் ஆண்டு என்று நினைவு. அப்போது வி.சி.பெருமாள் என்ற அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தார். ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்த பிரிவு என்பதால் அந்தப் பிரிவுக்கு சிறப்பு சலுகைகள். ரகசிய நிதிக்கு கணக்கே கிடையாது. அப்போது அந்தப் பிரிவுக்கு நியமிக்கப் பட்ட நட்ராஜ், ஒரே நாளில், இந்த சட்டவிரோத செலவுகளை நிறுத்தினார். தேவையற்ற முறையில், யாராவது ரகசிய நிதி செலவு செய்வதாக அறிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அறிவித்தார்.
ஐபிஎஸ் பதவிகளில் உயர்பதவிக்குச் செல்லச் செல்ல, நேர்மை சிறிது சிறிதாக விலகிப் போகும். அந்த விதிக்கு விதிவிலக்காக இருந்தவர், நட்ராஜ்.
நட்ராஜின் பணிக்காலத்திலேயே மிகச் சிறந்ததாக அவர் சிறைத்துறையில் பணியாற்றிய காலத்தைத் தான் சொல்ல வேண்டும். நட்ராஜ் சிறைத் துறை டிஜிபியாக இருந்த போது சவுக்கு புழல் சிறையில் இருந்தது குறிப்பிடத் தக்கது.
பொதுவாகவே சிறைக் கைதிகளை மனிதர்களாகவே மதிக்காத ஒரு தன்மை பெரும்பாலான மக்களிடம் பரவிக் கிடக்கிறது. சவுக்கும் சிறைக்கு செல்லும் வரை, சிறைக் கைதிகளின் மீது பெரிய அளவில் அக்கறை இருந்தது கிடையாது. இரண்டு மாத கால சிறை வாழ்க்கை அந்தக் கைதிகளும் மனிதர்களே என்பதை உணர வைத்தது. ஒரு குற்றத்தைப் புரிந்து, சிறைக்கு செல்ல வேண்டும் என்ற வேண்டுதலோடு யாரும் பிறப்பது கிடையாது. நம்முடைய கல்வி, பண்பு, குணநலன், வளர்ப்பு முறை ஆகியவைகளே நம்மை சிறையிலிருக்க வேண்டுமா, வெளியில் இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கிறது.
இதை நன்கு புரிந்தவர்தான் நட்ராஜ். நட்ராஜ் சிறைத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் அவர் செய்த சிறை சீர்திருத்தங்கள், பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டியன. சிறைக் கைதிகளை “இல்லவாசிகள்” என்றுதான் அழைக்க வேண்டும், கைதிகள் என்று அழைக்கக் கூடாது என்று உத்தரவிட்டு, அதை நடைமுறைப் படுத்தியவர். சிறைக்கைதிகளுக்கு யோகா பயிற்சி, திருக்குறள் புத்தகங்கள் வழங்குதல், கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் என்று பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தினார்.
அண்ணா பிறந்தநாளின் போது கைதிகளை முன் விடுதலை செய்வதில் முனைப்பாக இருந்தார். இன்றும் சிறைக் கைதிகள் “சார் நட்ராஜ் சார் ஜெயில் ஐஜியா இருந்தா நான் இந்நேரம் வெளியில இருந்திருப்பேன் சார்” என்று சொல்கிறார்கள். நட்ராஜ் கொண்டு வந்த மிகப் பெரிய சீர்திருத்தம், ஞாயிற்றுக் கிழமைகளிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிறைக்கைதிகளைப் பார்வையிடலாம் என்ற புதிய விதி. சிறையில் இருக்கும் கைதிகளின் பல உறவினர்கள் கூலி வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் சிறைக்கு வந்து தங்கள் உறவினர்களைப் பார்க்க வேண்டுமென்றால், அவர்கள் ஒரு நாள் கூலியை இழக்க வேண்டி வரும். நட்ராஜ் கொண்டு வந்த இந்தச் சீர்திருத்தத்தால், அவரை வாழ்த்தாத சிறைக்கைதியே இல்லை எனலாம்.
நட்ராஜ் அவர்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மகுடம் என்று சொல்ல வேண்டியது, பண்டிகை நாட்களில் தடுப்பு இல்லாமல், தண்டனைக் கைதிகள் தங்கள் உறவினர்களை பார்க்க அனுமதித்தது. சிறையில் பார்வையிடச் செல்பவர்களுக்கும், கைதிகளுக்கும் 8 அடி இடைவெளி உள்ள இரும்புக் கம்பித் தடுப்பு இருக்கும். அந்தத் தடுப்புக்கு அந்தப் பக்கம் உறவினர்களும், இந்தப் பக்கம் கைதிகளும் நின்று பேசுவார்கள். வரிசையாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கத்தினால் எப்படி இருக்கும்……. இதுதான் சிறை.
ஆண்டுக்கணக்கில் தண்டனை பெற்று இருப்பவர்கள் இதே போல கம்பிகளின் இடைவெளியில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். தீபாவளி, பொங்கல், கிறித்துமஸ், ரமலான் போன்ற பண்டிகை நாட்களில் தண்டனை சிறைவாசிகள், கம்பித் தடுப்பு இல்லாமல் அருகருகே உட்கார்ந்து சந்திக்கலாம் என்ற புதிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். 10 ஆண்டுகளாக உங்கள் குழந்தையை கம்பிக்கு அந்தப்பக்கம் இருந்து பார்த்துப் பழகிவிட்டு, ஒரு நாள், உங்கள் குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சினால் எப்படி இருக்கும் ? அந்த உணர்வுகளை வர்ணிக்க வார்த்தை உள்ளதா ? அதை அனுபவித்துப் பார்த்தால்தான் அய்யா தெரியும் !!!!
நட்ராஜ் கொண்டு வந்த இந்தச் சீர்திருத்தங்களை அவருக்கு அடுத்து சிறைத்துறைக்கு தலைவராக வந்த ஷியாம் சுந்தர் என்ற கூடுதல் டிஜிபி முதல் வாரமே மாற்றினார். ஞாயிற்றுக்கிழமைகளில் கைதிகளை பார்வையிட முடியாது என்று உத்தரவிட்டார். சவுக்கும், அன்புத்தோழர் புகழேந்தியும் சேர்ந்து, பத்திரிக்கைகளில் செய்தி வர வைத்து, பல பத்திரிக்கையாளர்கள் மூலமாக அவரைக் கேள்வி கேட்டு, தொல்லை கொடுத்து, அந்த ஞாயிற்றுக் கிழமை சந்திப்பை தொடர்ந்து நடைபெறச் செய்தோம். ஆனால் அந்த பண்டிகை காலச் சலுகை ரத்து செய்யப் பட்டது பட்டதுதான். இந்த ஷ்யாம் சுந்தரை சவுக்கு திட்ட விரும்பவில்லை. வாசகர்கள் நாகரீகமாக திட்டிக் கொள்ளலாம்.
இப்படிப்பட்டவர்தான் நட்ராஜ். மேலும், தற்போது டிஎன்பிஎஸ்சி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருக்கும் நிலையில் விசாரணை நடைமுறைகளை அறிந்த ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி தேர்வாணைய தலைவராக இருப்பது, மிக மிக சிறப்பு.
இந்த நட்ராஜை கருணாநிதி அரசு படுத்திய பாடு இருக்கிறதே…. இவர் போலீஸ் வாசனையே இல்லாத ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே முதலில் சிறைத்துறையும், பிறகு தீயணைப்புத் துறையிலும் நியமித்தார்கள். தீயணைப்புத் துறையிலும் நட்ராஜ் சிறப்பாகவே பணியாற்றினார். சமீபத்தில் எழிலகத்தில் நடந்த தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரரும், அதிகாரிகள் சிலரும் காயமுற்றனர். சம்பவ இடத்துக்கு வந்த சவுக்கு வாசகர்ளுக்கு நன்கு பழக்கமான போலோநாத், அவர்கள் கொஞ்சம் “ஓவர் என்தூசியாஸ்டிக்காக” இருந்து விட்டார்கள் என்பது போல முத்துக்களை உதிர்த்திருக்க மாட்டார்.
இப்படிப்பட்ட ஒரு சிறப்பான அதிகாரி தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டிருப்பதற்கு மனதார வாழ்த்தலாம்தானே…!!
வாழ்த்தலாம்தான். ஆனால் சில நெருடல்கள் இருக்கின்றனவே… திரு.நட்ராஜ் அவர்களுக்கு, 1991-1996 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை பெசன்ட் நகரில், H/12/1, கம்பர் தெரு, அருண்டேல் பீச் சாலை, பெசன்ட் நகர், சென்னை.90 என்ற முகவரியில், அவர் தற்போது குடியிருந்து வரும் இரண்டு க்ரவுண்டு வீட்டு மனையை ஜெயலலிதா விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கினார்.
அதன் பிறகு, அதிரடிப்படையில் பணியாற்றியதற்காக, நட்ராஜுக்கு, ஜெயலலிதா அரசு, இரண்டு வீட்டு மனைகளை பரிசாக வழங்கியது. இதற்குப் பிறகு, நட்ராஜ் அவர்கள், நெற்குன்றத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நட்ராஜ் அவர்களுக்கு நெற்குன்றம் “அலிபாபா குகையில்” – கொள்ளைக் கூட்டத்தினர் ஒட்டுமொத்தமாக குடியிருக்கும் இடத்தை அப்படித்தானே அழைக்க வேண்டும் ? – 12வது தளத்தில் 1ம் நம்பர் வீட்டை ஒதுக்கியுள்ளனர். நட்ராஜ் அவர்கள் பதவி ஓய்வு பெற்ற பிறகு, அயோக்கியத்தனமாக ஸ்ரீபதி போல விண்ணப்பிக்கவில்லை என்றாலும், விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்ற பின்னர், நெற்குன்றத்தில் ஒதுக்கீடு பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அன்னா ஹசாரே போராட்டத்தில் கலந்து கொண்ட நட்ராஜ் அவர்கள் ஊழலைப் பற்றிப் பேசி விட்டு, இதுபோல விதிமீறல் செய்து நெற்குன்றத்தில் வீடு வாங்கியது, கிரண் பேடி, இரண்டாம் வகுப்பில் பயணித்து விட்டு, முதல் வகுப்பு டிக்கெட்டுக்காக க்ளெய்ம் பண்ணியதற்கு ஒப்பாகும்
இரண்டாவது நெருடல், 19 ஜனவரி அன்று திரு நட்ராஜ் அவர்கள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது முழுச் சீருடையில் சந்தித்தது. ஓய்வு பெற்ற காவல்துறையினர் சீருடை அணியக்கூடாது என்பது மரபு. இந்த மரபை மீறி முழுச் சீருடையோடு முதல்வரைச் சந்தித்தது மரபு மீறிய செயல் மட்டுமல்ல, உள்துறையை தன் கையில் வைத்திருக்கும் ஜெயலலிதாவையும் நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரு செயல்.
சீருடை அணிவது காவல்துறை அதிகாரிகளுக்கு பிடித்தமான செயல் என்றாலும், நட்ராஜ் இப்படிச் செய்தது சரியா ? திரு.நட்ராஜ் அவர்களிடம் சவுக்கு ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறது. நட்ராஜ் அவர்கள் இறுதியாக ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறையின் ஒரு வீரர், ஓய்வு பெற்ற பிறகு, சீருடையோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று இயக்குநராக இருந்த நட்ராஜ் அவர்களிடம் புகார் வந்திருந்தால் என்ன செய்திருப்பார் ? (சார் நீங்கள் சீருடை போடாமல், சாதாரண உடையிலேயே மிக அழகாக இருக்கிறீர்கள் சார். உங்கள் மனைவி எப்படி ஆச்சர்யத்தோடு பார்க்கிறார் பாருங்களேன்… )
இந்த தவறுகள் நெருடலாக மனதில் உறுத்திக் கொண்டிருந்தாலும், ஓய்வு பெற்ற அதிகாரிகளில் கூட, நேர்மையான மனிதர்களை பார்ப்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது. ஊரே புகழும் சிபிஐயின் முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன், டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளுக்கு, மாநில அரசிலும், மத்திய அரசிலும் அவர்களுக்கு வேண்டும் வேலையை தனது தொடர்புகள் மூலமாக செய்து கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். டிசிஎஸ்சில் இருக்கும் உயர் அதிகாரிகள் வரிசையில் நிற்க மாட்டார்களா ? அவர்களுக்கு வேண்டிய காரியங்களை இப்படி ஜனநாயகவிரோதமாக ஆற்றி விட்டு, அவர்கள் ஊரில் உள்ள ஊழலை ஒழிக்க அன்னா ஹசாரேவோடு சேர்ந்து குரல் கொடுப்பார்கள்.
இவர்களையெல்லாம் ஒப்பிடும்போது நட்ராஜ் சிறப்பான தேர்வுதான். குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொள வேண்டும் அல்லவா ?
ஆனால் நெற்குன்றம் அலிபாபா குகையில் அவர் ஒதுக்கீடு பெற்றிருப்பது மிகுந்த உறுத்தலாக இருக்கிறது. அந்த ஒதுக்கீட்டை அவர் சரண்டர் செய்ய வேண்டும் என்று சவுக்கு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சரண்டர் செய்வதனால் அவர் விண்ணப்பக் கட்டணமாக செலுத்திய ஒரு லட்ச ரூபாயை இழக்க நேரிடலாம். விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் பெசன்ட் நகரில் வீட்டு மனை பெற்று விட்டு, பிறகு வீரப்பனை கொன்றதாகக் கூறி (????) இரண்டு வீட்டு மனைகளையும் பெற்றுக் கொண்டதற்கு அபராதமாக கருதிக் கொள்ளலாம்.
இதை நட்ராஜ் அவர்கள் செய்தால், சவுக்கு முழு மனதோடு வாழ்த்தும். இப்போதும் வாழ்த்துகிறது. ஆனால் நெருடலோடுதான்.