எந்தச் செல்லமுத்து ? தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்து தன் பதவியை ராஜினாமா செய்த செல்லமுத்து அவர்களைத்தான் நல்லவர் என்று சவுக்கு சொல்கிறது. வீட்டு வசதித்துறையின் செயலராக இருந்தபோது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பல்வேறு வீட்டு மனைகளை, திமுக அடிவருடிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்து, தேர்வாணையத்தின் தலைவரானதும் பல்வேறு முறைகேடுகளில், தேர்வாணைய உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உறுதுணையாக இருந்த செல்லமுத்துவை எப்படி நல்லவர் என்று சொல்லலாம் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ?
நடுவில் இருப்பவர் செல்லமுத்து
செல்லமுத்து நல்லவர்தான். தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதியோடு ஒப்பிடுகையில் செல்லமுத்து நல்லவரே. ஏன் என்பதைப் பார்ப்போம்.. ….
ஸ்ரீபதி 1 செப்டம்பர் 2010 அன்று தமிழக தகவல் அணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 1975ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த ஸ்ரீபதி கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதியின் கைப்பாவையாக செயல்பட்டார் என்றால் அது மிகையல்ல. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விழிப்புப் பணி ஆணையராக இருந்தார் ஸ்ரீபதி. அப்போது, ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகிய இரு ஐபிஎஸ் அதிகாரிகள் மீது, அவர்கள் இருவரும் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய போது, முறைகேடுகளில் ஈடுபட்டு, அந்த முறைகேடுகளுக்கு பிரதிபலனாக, தங்கள் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் அரசு கோட்டாவில் சீட் பெற்றனர் என்று புகார் வந்தது. இந்தப் புகார், உள்துறைச் செயலாளரிடம் சென்று, அவர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கேட்கிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இந்த விசாரணை ஒப்படைக்கப் பட்டதும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த முத்து என்ற ஆய்வாளரிடம் இதை விசாரித்து அறிக்கை அனுப்பும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது. அந்த ஆய்வாளர், அண்ணா பல்கலைகழகத்துக்குச் சென்று, இந்தப் புகார் குறித்த ஆவணங்களை பார்வையிட வேண்டும் என்று சொல்கிறார். அண்ணா பல்கலைகழகத்தில் இருந்த அதிகாரி, எந்த ஆவணத்தையும் தர முடியாது, காண்பிக்கவும் முடியாது, ஆவணங்களைப் பார்வையிட வேண்டுமென்றால், எழுத்துபூர்வமான கடிதத்தோடு வாருங்கள் என்று கூறுகிறார். உடனே, முத்து அங்கேயே அமர்ந்து கீழ்கண்ட ஆவணங்கள் வேண்டும் என்று எழுத்துபூர்வமான கடிதத்தை அளிக்கிறார். அண்ணா பல்கலைகழகத்தில் இரண்டு நாள் கழித்து வாருங்கள், ஆவணங்களை தருகிறோம் என்று கூறுகிறார்கள்.
அன்று மதியமே, விழிப்புப் பணி ஆணையராக இருந்த ஸ்ரீபதியிடமிருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய்க்கு போன் வருகிறது. அந்த போனில், ஸ்ரீபதி உபாத்யாயிடம், உங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த முத்து என்ற ஆய்வாளர், அண்ணா பல்கலைகழகம் சென்று, ராதாகிருஷ்ணன் மற்றும் என்.பி.சிங் ஆகிய அதிகாரிகளைப் பற்றி விசாரிக்கிறாராமே… …. .. இது குறித்து ஏதாவது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதா ? என்று கேட்கிறார். உபாத்யாய், விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை, உள்துறை செயலாளர் அந்த மனு மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் கருத்தைக் கேட்கிறார்… அதனால்தான் விசாரிக்க உத்தரவிட்டேன் என்கிறார். ஸ்ரீபதி, நீங்கள் என்னோடு முதலில் விவாதியுங்கள்… விவாதித்து விட்டு பிறகு முடிவெடுங்கள். அந்த ஆய்வாளர் ஒரு கடிதம் வேறு எழுதியிருக்கிறாராம்… அந்தக் கடிதம் என்னிடம் வந்துள்ளது…. என்னோடு விவாதித்து விட்டு பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிடுகிறார்.
ஸ்ரீபதி உபாத்யாயோடு பேசிய இந்த உரையாடல், 2008ம் ஆண்டில் ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலைகழகத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் எழுதிய கடிதம், ஸ்ரீபதி கைக்கு எப்படிச் சென்றது, அதில் விசாரணை நடத்தாதே என்று ஸ்ரீபதி உத்தரவிட்டது அம்பலமாகியும் கூட, கருணாநிதி ஸ்ரீபதியை தலைமைச் செயலாளராக்கினார்.
விசாரணை நடத்தாதே என்று சட்டவிரோதமாக உத்தரவிட்ட ஸ்ரீபதிக்கு தலைமைச் செயலாளர் பதவி… அந்த உரையாடலை பதிவு செய்து வைத்தற்காக உபாத்யாய் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். அப்படிப்பட்ட ‘நேர்மையான’ அதிகாரிதான் ஸ்ரீபதி.
இந்த ஸ்ரீபதியின் நேர்மைக்கு மற்றொரு உதாரணம் தன்னுடைய பிறந்த நாள் தொடர்பாக அவர் தொடுத்த வழக்கு. ஐஏஎஸ் தேர்ச்சியடைந்து நான்கு ஆண்டுகள் கழித்து, தன்னுடைய பிறந்த நாள் தான் ஐஏஎஸ் சேரும்போது கொடுத்த 28.04.1950 அல்ல. சரியான பிறந்த தேதி, 09.10.1951 என்று விண்ணப்பிக்கிறார். இதை இவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்றால், இவர் திருமணத்துக்காக ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்த போது, ஜாதகத்தில் சரியான பிறந்த தேதி இருந்ததாம். தவறுதலாக இவர் பிறந்த தேதி 28.04.1950 என்று பதிவாகி விட்டது. இந்தத் தவறை செய்தவர் இவர் தாய்மாமா என்றும், இதனால் இவர் பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இந்த விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டு, இவர் சிவில் நீதிமன்றத்தில் பிறகு வழக்கு தொடர்ந்து, அதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டது.
இறுதியாக நிர்வாகத் தீர்ப்பாயத்தில் 2004ல் வழக்கு தொடுக்கிறார் ஸ்ரீபதி. அந்த வழக்கில் தீர்ப்பாயம் பிறந்த தேதியை மாற்றுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று இவர் மனுவை தள்ளுபடி செய்கிறது.
ஆனால் அப்போதும் அடங்கவில்லை ஸ்ரீபதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் கீழ்கண்டவாறு தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறது
“It is to be pointed out that even as per the affidavit of the petitioner, his father was a Central Government employee and not a layman. Such being the case, his father is well aware of the importance attached to the entry of date of birth in the school records. Even if it is believed that by ‘inadvertence,’ the maternal grand-father of the petitioner has furnished the wrong date of birth of the petitioner and the same has been carried out in his school records, subsequently, at different stages of education and pursuing the employment, the father of the petitioner might have noticed the same. But, till the petitioner joined the IAS, there was no attempt made on the part of the petitioner or his father to get the date of birth corrected. Therefore, the plea of the petitioner that he came to know of his ‘actual date of birth’, only when there was marriage proposal for him, does not seem to be a convincing one.”
“மனுதாரர் தாக்கல் செய்த மனுவிலேயே தனது தந்தை ஒரு மத்திய அரசு ஊழியர், அவர் படிப்பறிவில்லாதவர் கிடையாது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கையில் அவர் தந்தைக்கு பிறந்தநாள் குறித்தும், பள்ளி ஆவணங்களில் அதன் முக்கியத்துவம் குறித்தும் நன்கு தெரிந்திருக்கும். ஒரு வேளை ஸ்ரீபதியின் தாய்மாமன் பிறந்த நாளை தவறாகக் குறிப்பிட்டிருந்தால் கூட ஸ்ரீபதியின் படிக்கும் போது, பள்ளிக்காலத்திலோ, பின்னாளிலோ இந்தத் தவறை அவர் தந்தை சரி செய்திருக்க முடியும். ஆனால், மனுதாரர் ஐஏஎஸ்-சில் சேரும்வரை பிறந்த நாளை மாற்றுவதற்கு மனுதாரரோ, அவர் தந்தையோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆகையால், திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கும் போதுதான் பிறந்தநாளில் இருந்த தவறு தெரியவந்தது என்ற கூற்று நம்பும்படி இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. எவ்வளவு பேராசை பார்த்தீர்களா….
தன்னுடைய அசல் பிறந்த தேதியின் படி ஸ்ரீபதி 30.04.2010ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், கருணை வள்ளல் கருணாநிதியின் விசுவாசமான அடிமையாக இருந்த காரணத்தால், அவருக்கு ஆறு மாதம் பணி நீட்டிப்பு வழங்கப் பட்டது. இதன் படி ஸ்ரீபதி 31.10.2010 அன்று ஓய்வு பெற வேண்டும். ஆனால், தலைமைச் செயலாளர் பதவியை விட சிறப்பான, தலைமைத் தகவல் ஆணையாளர் பதவி கிடைக்கும் போது கசக்கவா செய்யும். அதுவும், தலைமைச் செயலாளராக இருந்து கொண்டு, தன்னை தலைமைத் தகவல் ஆணையாளராக நியமிக்கும் கோப்பை கண்கொத்திப்பாம்பாக பின்தொடர்ந்து 01.09.2010 அன்று அரசாணை வெளியிடப்படுவதை உறுதி செய்ததும், பெருந்தன்மையோடு ஸ்ரீபதி 31.08.2010 அன்றே பதவி ஓய்வு பெற்றார்.
31.08.2010 அன்று பதவி ஓய்வு பெற்றதும், மறுநாளே அதாவது 01.09.2010 அன்று தமிழக தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையாளராக ஸ்ரீபதி நியமிக்கப் படுகிறார்.
தமிழக தகவல் ஆணையம், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் மடமாக மாறி விட்டதுதான் என்றாலும், பணியில் இருந்தபோதே நேர்மையாக இல்லாத ஸ்ரீபதி போன்ற நபர்களை நியமித்தது, கருணாநிதி அரசின் மற்றொரு அயோக்கியத்தனம்.
இந்த ஸ்ரீபதியை தற்போது தலைமைத் தகவல் ஆணையாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி, மாநில ஆளுனருக்கு புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது. ஸ்ரீபதியை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் ?
சென்னை நெற்குன்றத்தில் உயர் உயர் அதிகாரிகளுக்காக வீட்டு வசதித் திட்டம் ஒன்று ஏற்படுத்தப் பட்டதும், அந்த வீட்டு வசதித் திட்டத்தில் பரம ஏழைகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு சந்தை விலையை விட பாதி விலைக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட்டதும், சவுக்கு வாசகர்கள் அறிந்ததே…. அந்த நெற்குன்றத்தில் ஸ்ரீபதிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் என்ன முறைகேடு உள்ளது ?
நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கானது. ஸ்ரீபதி 31.08.2010 அன்று ஐஏஎஸ் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். 01.09.2010 அன்று தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்த வீடுகட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 28.10.2010 அன்று வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநரால், உயர் அதிகாரிகளிடமிருந்து வரவேற்கப் படுகின்றன.
அப்படி இருக்கையில் 28.10.2010 அன்று ஸ்ரீபதி எப்படி இந்த வீட்டு வசதித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும் ? ஆக, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான ஒரு வீட்டு வசதித் திட்டத்தில், தலைமைத் தகவல் ஆணையாளராக இருந்து கொண்டு, ஸ்ரீபதி முறைகேடாக ஒதுக்கீடு பெற்றிருக்கிறார் அல்லவா ? இப்படி முறைகேட்டில் ஈடுபட்ட ஸ்ரீபதி, தலைமைத் தகவல் ஆணையாளராக தொடரக் கூடாது, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றுதான் புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது.
இது மட்டுமல்ல.. தற்போது ஸ்ரீபதி குடியிருக்கும் மனை எண் 1085, ஆபீசர்ஸ் காலனி, அண்ணா நகர், சென்னை என்ற வீட்டு மனையும், இவருக்கு அலெக்சாண்டர் கவர்னராக இருந்த காலத்தில் விருப்புரிமையில் ஒதுக்கீடு செய்யப் பட்ட வீட்டு மனை. ஸ்ரீபதியின் பேராசைக்கு அளவே இல்லையா ?
இந்தப் புகார் மனுவின் நகல் ஊடகங்களுக்கு அனுப்பப் பட்டு, ஊடகங்கள் கேள்வி கேட்டதும், ஸ்ரீபதி முதலில் ஆணவமாக பதில் அளித்திருக்கிறார். “எல்லாம் சட்டபூர்வமாகத்தான் நடந்திருக்கிறது. இதில் தவறு எதுவும் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு சில விஷமிகள் இப்படி பிரச்சினையை எழுப்புகிறார்கள்” என்று கூறியிருக்கிறார். பிறகு மற்றொரு நிருபர் அவரைச் சென்று சந்திக்கையில், எங்களுக்கு ஒரு கட்ஆப் டேட் கொடுத்தார்கள்.. அந்த கட்ஆப் டேட்டுக்குள்தான் நான் விண்ணப்பித்தேன் என்று கூறியிருக்கிறார். எது சார் அந்த கட்ஆப் டேட் என்றால், ஏப்ரல் 2010 என்று கூறியிருக்கிறார். அவர் முன் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, இதில் அந்த கட் ஆப் டேட் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு, நான் விசாரணையை உரிய முறையில் சந்திப்பேன் என்று பதில் அளித்திருக்கிறார்.
ஆளுனருக்கு அனுப்பப் பட்ட புகார் மனு
புகார் தொடர்பாக டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் வந்த செய்தி
இவர் உரிய முறையிலோ, உரியாத முறையிலோ, விசாரணையை சந்தித்தே ஆக வேண்டும். ஆளுனரிடம் அளித்த புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லையென்றால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் படும் என்பதை சவுக்கு இந்த நேரத்தில் ஸ்ரீபதிக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறது.
இப்போது தலைப்புக்கு வருவோம். செல்லமுத்து ஏன் நல்லவர் என்றால், அவரும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியவுடன் அந்த விசாரணையை ரத்து செய்வதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகி என்னென்னவோ செய்து பார்த்தார். ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்றே வந்தது. இப்போது செல்லமுத்து பதவியை ராஜினாமா செய்யாவிட்டாலும், அரசால் உடனடியான எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அவருக்கு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.
ஆனாலும் தன்னுடைய மனசாட்சி உறுத்தியதன் காரணமாக செல்லமுத்து ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
ஆனால் சில பேர் இருக்கிறார்கள். தடித்த தோலுடையவர்கள். உடனே கருணாநிதி என்று கூறாதீர்கள். கருணாநிதிக்கு இருப்பது தோலே அல்ல.. இரும்புத் தகடு. துப்பாக்கிக் குண்டு கூட துளைக்காது.
கிட்டத்தட்ட ஸ்ரீபதியும் அதே வகையில்தான் வருவார் போலிருக்கிறது. ஸ்ரீபதி மீது அளிக்கப் ப்டட இந்தப் புகாரில் நியாயம் உள்ளது, இதிலிருந்து அவர் வெளிவருவது கடினம் என்பது மெத்தப் படித்த அவருக்கும் தெரியும். ஆனாலும் தன் மீது உள்ள தவறை உணராமல், இந்தப் புகார் குறித்த செய்தியை வெளிவரவிடாமல் செய்வதற்கு முயற்சி எடுத்ததிலிருந்தே ஸ்ரீபதிக்கு மனசாட்சி என்பதே இல்லை என்று தோன்றுகிறது.
ஸ்ரீபதியை ஒப்பிடும்போது செல்லமுத்து நல்லவர் தானே… ?