கொஞ்சம் சோர்வாக வந்து அமர்ந்த அலெக்ஸின் சட்டை பையில் துருத்திக் கொண்டு நின்றது சில கடிதங்கள்.
‘‘என்ன காதல் கடிதங்களா?’’ என்று அலெக்ஸை சீண்டினார் பாண்டியன்.
‘‘அட நீங்க வேற… காதலிக்கிற வயசா இது? ஊர்லேர்ந்து அப்பா கடிதம் எழுதியிருக்கிறார். பணம் வேண்டுமாம். இல்லையென்றால், இருக்கும் நிலபுலன்களை விற்பதற்கு அனுமதி கேட்டிருக்கிறார். இதுதான் தொடர்ச்சியான கடிதங்களின் சாராம்சம்…’’ என்றார் அலெக்ஸ்.
‘‘அதெல்லாம் உங்க பிரச்னை. நீங்களே பார்த்துக்கங்க… இப்போதைக்கு செய்திக்கு வாங்க…’’ என்று செய்தியில் மொத்த கவனத்தையும் திருப்பினார் அர்ச்சனா.
கடிதங்களிலிருந்தே செய்திகளை ஆரம்பித்தார் அலெக்ஸ். ‘‘ ‘இன்றைய சூழலில் ஒட்டோ, உறவோ கிடையாது என்கிற நிலையில் இருக்கும் ஜெயலலிதா&சசிகலாவுக்கு இடையிலான உறவை எப்படிவாது மீண்டும் துளிர்க்கச் செய்து விட வேண்டும் என்பதில் சசிகலா தரப்பு ரொம்பவும் ஆர்வமாகத்தான் இருக்கிறது. அவ்வப்போது ஜெயலலிதாவின் அனுமதியோடு போயஸ் தோட்டத்துப் பக்கம் போய் வரும் சசிகலாவின் அண்ணி இளவரசி மூலமாக ஜெயலலிதாவிடம் தங்கள் தரப்பு கருத்துக்களை சொல்லப் பார்த்தார்கள். ஆனால், அதற்கான சூழல் அமையாத்தால் சற்றே அமைதியானார்கள். இருந்தாலும், சசிகலா எழுதிய கடிதங்களை மட்டும் தோட்டத்துக்கு கொண்டு போய் சேர்த்தாராம் இளவரசி…’’
‘‘அப்படியா..?’’
‘‘இதுவரையில் மூன்று கடிதங்களை ஜெயலலிதாவுக்கு அனுப்பி இருக்கிறாராம் சசிகலா. ‘அன்புள்ள அக்கா…’ என்று தொடங்கும் மூன்று கடிதங்களுமே ரொம்ப உருக்கமானதுதான். முதல் இரண்டு கடிதங்களையும் படித்துப் முடித்த முதல்வர், கடிதத்துக்கு பெரிதாக ரியாக்ஷன் காட்டிக் கொள்ளவில்லையாம். ஆனால், சமீபத்தில் அனுப்பப்பட்ட மூன்றாவது கடிதம் முதல்வர் ஜெயலலிதாவை லேசாக சலனப்படுத்தி விட்டது என்கிறார்கள், போயஸ் தோட்ட வட்டாரத்தில்.’’
‘‘அப்படி என்னதான் அதில் எழுதி இருந்தாராம் சசிகலா?’’
‘‘ ‘உங்களுக்காகத்தானே அக்கா நான் கணவரையே விட்டு பிரிந்து வந்தேன்?’ என்று ஆரம்பமாகும் அந்தக் கடிதத்தில், ‘உங்களுக்காகத்தான் என் உடல், பொருள், குடும்பம் எல்லாவற்றையுமே நான் அர்ப்பணித்தேன். நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக நான் வேண்டாத தெய்வமில்லை. உங்கள் உடல் நலனுக்காக நான் போகாத கோயில்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. பல நாட்கள் விரதம் என்கிற பெயரில் பட்டினி கிடந்திருக்கிறேன். இப்பவும்கூட யாரோ சிலர் உங்களிடம் என்னைப் பற்றி தவறாகச் சொல்லிய விஷயங்களை நீங்கள் உண்மை என்று நம்பியதன் விளைவு & என்னைத் தள்ளி வைத்திருக்கிறீர்கள்.
இப்பவும்கூட உங்களை விட்டு கொஞ்சம் தொலைவில் நான் இருந்தாலும், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்காகத்தான், நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை என்னதான் தண்டித்தாலும், ஒருபோதும் நான் உங்களுக்கு விரோதமாக செல்ல மாட்டேன். அதேபோல துரோகமும் இழைக்க மாட்டேன்… பழையபடியே உங்களுக்கு நான் தொடர்ந்து சேவகம் பண்ண வேண்டும். அதற்கு நீங்கள் மனமிறங்கி வாய்ப்புத் தரவேண்டும்…’ என்று படு உருக்கமாகச் செல்கிறதாம் அந்தக் கடிதம்.’’
‘‘நீங்க சொல்லி, அதை கேட்கும்போது எங்களுக்கே சசிகலா மீது பரிதாபம் வருகிறதே..?’’
‘‘அப்படித்தான் சசிகலா மீது லேசாக பரிதாபப்படுகிறாரோ என்று முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் சிலர் நினைக்கிறார்களாம். ஆரம்பத்தில் போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதும், அவர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் யார் மீதும் பரிதாபம் காட்ட வேண்டாம். புகார் என்று வந்தால், யார் மீது வேண்டுமானாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லி வந்த முதல்வர், சசிகலா தொடர்புடைய ஆட்கள் சிலர் மீது சமீப காலமாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில் லேசாக தயக்கம் காட்டுகிறாராம்.’’
‘‘ஓஹோ…’’
‘‘இதற்கிடையில், மூன்று நாட்களுக்கு முன்பாக டெல்லிக்குச் சென்ற தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அங்கே பலமான வரவேற்பாம். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவர் வெகுநேரம் சந்தித்து பேசியபோது, தமிழகத்தின் அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசினாராம். ‘தமிழகத்தின் தானே புயல் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு மத்திய அரசு தாராளமாக நிதி கொடுக்க வேண்டும்…’ என்று வலியுறுத்திய பன்னீர்செல்வம், ‘இதே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி இருந்திருந்தால், மத்திய அரசு நிதியை தாராளமாக வாரி வழங்கியிருக்கும்…’ என்று சொல்ல, அதற்கு கொஞ்சம் ஓபனாகவே பதில் சொன்னாராம் பிரணாப். ‘கூட்டணி கட்சியினர் ஆட்சி என்றால், நாங்கள் கொஞ்சம் தாராளமாகத்தான் இருப்போம். முடிந்தால், எதிர்காலத்திலாவது நீங்கள் கூட்டணியாக இருக்கலாம்…’ என்று சொல்ல, பன்னீர்செல்வம் பதில் சொல்லாமல் நழுவினாராம்.’’
‘‘எப்படியோ, காங்கிரஸ் எண்ணம் வெளிப்பட்டு விட்டதாக்கும்?’’
‘‘அதிருக்கட்டும். கலைஞர் எண்ணத்தை நாம் அடுத்துப் பார்ப்போம்…’’ என்று சொன்ன அலெக்ஸ், அது தொடர்பான செய்திகளுக்குள் புகுந்தார்.
‘‘கட்சியின் இளைஞரணியை புதுப்பித்து சீரமைப்பதில் தீவிரமாக இருக்கும் மு.க. ஸ்டாலின், இதுவரையில் ஐந்து மாவட்டங்களுக்கு வரிசையாகச் சென்று இளைஞரணிக்கான புதிய நிர்வாகிகளை நியமித்து விட்டார். இதற்காக நேர்காணலெல்லாம் நடத்தி முடித்திருக்கும் ஸ்டாலின், எல்லா மாவட்டங்களிலும் இந்த நிர்வாகிகள் தேர்வை முடித்த கையோடு, இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளப் போகிறாராம். கட்சியின் இளைஞரணி பொறுப்பை தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் கரங்களில் ஒப்படைத்து விடலாம் என்று முடிவெடுத்திருந்த ஸ்டாலினுடைய எண்ணத்தில் திடீர் மாற்றமாம்.’’
‘‘என்ன மாற்றம்?’’
‘‘தன்னுடைய உற்ற நண்பரான மறைந்த திருச்சி அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷை இளைஞரணி செயலாளர் பொறுப்பில் நியமித்து விடலாம் என்று தற்போது முடிவெடுத்திருக்கிறாராம். உதயநிதி ஸ்டாலினின் நெருங்கியத் தோழராகவும் இருக்கும் அவரை நியமிக்க உதயநிதியும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம். உதயநிதி ஸ்டாலினோடு சேர்ந்து தொழில் பார்ட்னராகவும் இருக்கும் அவர், உத்திரமேரூரில் ஸ்டீல் பாக்டரி ஒன்றை நிர்வகித்து வருகிறாராம். அவரை நியமிப்பதில் கட்சியின் தலைமை வரையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பதால், ஸ்டாலின் இப்படியொரு முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள், அறிவாலய வட்டாரத்தில்…’’
‘‘அப்ப ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி மட்டும்தானா?’’
‘‘அந்தப் பொறுப்பில் நீடிக்க அவருக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையாம். துணைத் தலைவர் பதவியை உருவாக்கி தனக்குத் தரலாமே என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது தலைவர் பொறுப்புக்கே ஆசைப்பட ஆரம்பித்து விட்டாராம். இதை தன்னுடைய ஆதரவாளர்களாகவும் கலைஞரின் நெருக்கத்துக்கு உரியவர்களாகவும் இருக்கும் பொன்முடி, துரைமுருகன், எ.வ. வேலு, ஜெகத்ரட்சகன் ஆகியோரிடம் லேசுபாசாகச் சொல்லி, ‘இதை தலைவர் கவனத்துக்குக் கொண்டு போங்க’ன்னு சொல்லிட்டாராம்.’’
‘‘கலைஞர் அதற்கு ஒப்புக் கொள்வாரா?’’
‘‘ஒப்புக் கொள்ள மாட்டார் என்பது ஸ்டாலினுக்கும் தெரியும். ‘இருந்தாலும், அவர் ஆசைப்படுகிறாரே… அதற்கு அவர் சொல்லும் காரணம் நியாயமானதுதான்’ என்கிறார்கள், பொன்முடி, துரைமுருகன் போன்றவர்கள்.’’
‘‘என்ன காரணம் சொல்கிறாராம்?’’
‘‘ ‘கட்சி சமீபத்தில் சந்திச்ச தோல்விக்குப் பிறகு ரொம்பவும் தொய்வான நிலைக்குப் போயிருக்கிறது. நான் ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி வந்து கட்சிக்காரர்களை உற்சாகமாக வைத்திருந்தாலும், அவர்கள் முழுவேகத்தில் அரசியல் செய்ய வர மாட்டேங்கறாங்க. அதுக்குக் காரணம், தலைவர் பொறுப்பில் இருந்து கலைஞரால் பெரிய அளவுக்கு தொண்டர்களையும் கட்சித் தலைவர்களையும் முடுக்கி விட முடியாமல் இருப்பதுதான். நான் தலைவராக நியமிக்கப்பட்டு விட்டால், கட்சியின் செயல்பாட்டை வேகப்படுத்தி விடுவேன்.’ என்று சொன்னாராம். ஆனால், இதை எப்படி கலைஞருக்குச் சொல்வது என்று புரியாமல் தவிக்கிறார்களாம் தலைவர்கள்… தயங்கித் தயங்கி அதை மறைமுகச் சொல்ல வரும்போதெல்லாம், வேறு விஷயங்களைப் பேசி கவனத்தைத் திருப்புகிறாராம் கலைஞர்…’’
‘‘அவர் எப்படி கவனத்தைத் திருப்புகிறார்?’’
‘‘யார் என்ன சொல்ல வருவார்கள் என்பது கலைஞருக்குத் தெரியாதா என்ன? ‘யோவ், ராசாத்தியம்மா வேற ரொம்ப தொந்தரவு பண்றாங்கய்யா… கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வேணுமாம். சற்குண பாண்டியன் வகிக்கிற பதவி அது. அதை போய் சின்ன பிள்ளை கனிமொழிகிட்ட கொடுத்தா, சிறப்பா செய்ய முடியுமா?’னு கேட்க, ‘கனிமொழிக்கு 43 வயசாகு தலைவரே… எம்.பி., பதவியில இருந்து சிறப்பா செயல்படறப்ப, துணைப் பொதுச் செயலாளர் பதவியெல்லாம் சாதாரணம்…’ என்று சொல்லி, கலைஞரின் எண்ணத்துக்கு தீனி போடுகிறார்களாம்…’’
‘‘அப்ப, கனிமொழிக்கு கட்சிப் பதவி உறுதின்னு சொல்லுங்க…’’
‘‘இங்கதான் விவகாரமே ஆரம்பிக்குது. அப்படி கனிமொழிக்கு கட்சிப் பதவி கொடுத்துட்டா, அழகிரி சும்மா இருக்க மாட்டார் என்பதுதான் இப்போதைக்கு கலைஞருக்கு இருக்கும் ஒரே கவலை. அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம். ஆக, பொதுக்குழுவில் கலைஞர் குடும்பத்திலிருந்து சிலருக்கு புரமோஷன் இருக்கும் என்கிறார்கள்… ஆனால், ‘இப்படி ஒரே குடும்பத்திலேயே பதவிகளை பங்கு போட்டுக் கொள்வது, கட்சியில் பலருடைய எரிச்சலுக்கும் ஆளாக நேரிடுமோ?’ என்கிற கவலையும் கலைஞரை ரொம்பவே வாட்டி வதைக்கிறதாம். அதனால்தான், ஸ்டாலினின் எண்ணத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறாராம்…’’
‘‘பார்ப்போம், என்ன நடக்குதுன்னு…’’
‘‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ‘ரொம்பவே முக்கியத்துவமாக பார்க்கப் படுவார்…’ என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசங்கர், ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் ஒதுக்கித்தான் வைக்கப்பட்டிருக்கிறார். கோ&ஆப்டெக்ஸில் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர், அங்கே சென்று கிறிஸ்தவ மத போதனையில் ஈடுபட, அது முதல்வர் வரையில் சென்று அவரை அங்கிருந்து மாற்றினார்கள். இப்போது சென்னையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இருந்தாலும், அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘அற்புத சுகமளிக்கும்’ கூட்டங்களுக்கெல்லாம் போய் கொண்டிருந்தார். கடந்த வாரம், சென்னையிலிருந்து புறப்பட்டு பசுபதி பாண்டியன் மரண இறுதி ஊர்வலத்துக்கும் போய்விட, அது அரசு தரப்பில் கடுமையான எரிச்சலை உண்டு பண்ணியிருக்கிறதாம்…’’
‘‘ஏன்?’’
‘‘பசுபதி பாண்டியன் படுகொலை என்பது சென்ஸிட்டிவான பிரச்னை. தெற்கே அது ஜாதிய ரீதியிலான பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. அந்தப் பிரச்னையில் தலைகொடுப்பது போல பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்ல… அவர் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையும் அப்போது இருந்ததாம். போலீஸார்தான் மிகுந்த சிரமமெடுத்து அவரை அப்போது காப்பாற்றினார்களாம். அவருக்கு எதிர்ப்பானவர்கள் பலரும் ஆயுதங்களோடு ஊர்வலத்தில் வர, அது புரியாமல் உமாசங்கரும் செல்ல… தூத்துக்குடியில் ஊர்வலம் சென்றபோது, இரவு நேரத்தில் மின்சாரத்தை கட் செய்து, ஊர்வலத்திலிருந்து உமாசங்கரை தனியே அழைத்து வந்து உயிர் தப்பிக்க வைத்தார்களாம். இல்லையென்றால், ஊர்வலத்துக்குப் பிறகு விவகாரம் வேறு மாதிரி பயணித்திருக்குமாம்.’’
‘‘ஐயையோ…’’
‘‘இப்படியெல்லாம் பலரையும் பதட்டப்பட வைக்கிறாரே என்றுதான் அரசுத் தரப்பில், உமாசங்கர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்களாம். ஊர்வலத்தில் வந்த தலித் தலைவர் ஒருவரோடு இருக்கும் தனிப்பட்ட பிரச்னைகள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இப்படி நடந்து கொள்ளலாமா? என்பதுதான் ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்கள் பலரின் எரிச்சலான கேள்வி…’’
‘‘எரிச்சல்படத்தானே செய்வார்கள்?’’
‘‘இன்னொரு எரிச்சலையும் கேளும். இங்கே எரிச்சல் படுவது முன்னாள் தலைமைச் செயலாளரான ஸ்ரீபதி. தற்போது தமிழகத்தின் முதன்மைத் தகவல் ஆணையராக இருக்கும் அவரை எரிச்சலூட்டுவது சமூக ஆர்வலர்கள். ரிடையர்டு அவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வீடு ஒன்றை வாங்குவதற்கு அலாட்மென்ட் பெற்றிருக்கிறார் ஸ்ரீபதி. அதுதான் இப்போது விவகாரமாகியிருக்கிறது. சமூக ஆர்வலர்கள் கையில் அது தொடர்பான ஆவணங்களெல்லாம் கிடைக்க, அதை வைத்து கவர்னர் வரையில் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். அதாவது, ‘தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து அரசாங்கத்தை திட்டமிட்டு ஏமாற்றி வீடு வாங்கியிருக்கும் ஸ்ரீபதியை, தலைமை தகவல் ஆணையர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்…’ என்று சொல்லி, கவர்னர் ரோசைய்யாவுக்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள்…’’
‘‘அப்படி எங்கே வீடு வாங்கினாராம் அவர்?’’
‘‘கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கென்று சிறப்புத் திட்டத்தின் கீழ் சென்னை நெற்குன்றத்தில் வீட்டு வசதி திட்டம் ஒன்றின் மூலமாக வீடு கட்ட ஆரம்பித்தார்கள். அந்த திட்டம் கொண்டு வரப்பட்ட அக்டோபர் 2010 க்கு முன்பாகவே ஓய்வு பெற்று விட்டார் ஸ்ரீபதி. ஆனால், அரசு ஊழியர் என்று சொல்லி வீட்டை பெற்றிருக்கிறார். இது சட்டவிரோதம். தன்னிச்சையான சுய அதிகாரம் மிக்க ஒரு ஆணையத்தின் தலைவராக இருக்கும் ஒருவர் இப்படி செய்தது தவறு. எனவே, அந்தப் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அலாட்மென்ட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் சொல்லித்தான் கவர்னரிடம் புகார் மனு அனுப்பியிருக்கிறார்களாம்.’’
‘‘கவர்னர் என்ன செய்வார்?’’
‘‘அதை அப்படியே உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி விடுவாராம். அவர்கள் புகார் தொடர்பாக விசாரித்து, கவர்னருக்கு அறிக்கை அனுப்பி வைப்பார்களாம். அந்த அறிக்கையின்படி, மேல் நடவடிக்கை எடுப்பாராம் கவர்னர். ஸ்ரீபதியின் பதவிக்கு எப்படியும் ஆபத்து வரும் என்பதுதான் கவர்னர் அலுவலகத்திலிருந்து முதல்கட்டமாக கசியும் தகவல். ஆனால், ‘என்னுடைய அலாட்மென்ட்டில் எந்த சட்ட மீறலும் இல்லை. நான் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே உரியவர்களிடம் அனுமதி வாங்கித்தான், அலாட்மென்ட் பெற்றிருக்கிறேன்…’ என்று சொல்கிறாராம் ஸ்ரீபதி. ஆனாலும், ஸ்ரீபதிக்கு சிக்கல்தானாம். ஒருவேளை, இந்தப் புகாரில் தப்பினாலும், இந்த சிறப்பு வீடு ஒதுக்கீடு திட்டத்தையே ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் மனுவை ஏற்றுக் கொண்டு, திட்டத்தை ரத்து செய்தாலும், அலாட்மென்ட் ரத்தாகி விடுவதற்கே அதிக வாய்ப்பாம்…’’
‘‘ஓ…’’
‘‘அப்படியென்றால், எல்லாரும்தானே பாதிக்கப்படுவார்கள். கோர்ட் உத்தரவென்றால், மொத்த திட்டத்தின் பயனாளிகளாக இருப்பவர்களும்தான் பாதிக்கப்படுவார்கள். இதில் என்ன கொடுமை என்றால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால், நெற்குன்றம் திட்டத்தில் பயனாளிகளாக இருக்கும் தொன்னூறு சதவிகிதம் பேர், ஏற்கனவே பல இடங்களிலும் பல வீடுகளை வைத்திருப்பவர்களாம். ஏன்… இதே வீட்டு வசதி வாரியத்திலேயே ஏற்கனவே சலுகை விலையில் வீடு, இடம் என வாங்கியவர்களாம்.’’
‘‘உப்பு திண்றவர்கள் தண்ணி குடிக்கட்டும், விடுங்கள்…’’
‘‘மன்னார்குடி திவாகரனோடு நெருக்கமாக இருந்தார் என்று கட்சிப் பதவி பிடுங்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் ஓ.எஸ்.மணியனுக்கு அடுத்தடுத்தும் கசப்புகள் வரிசை கட்டுகின்றனவாம். கடந்த 2008&ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அப்போது அவர்மீது, கொலை முயற்சி வழக்கு ஒன்றும் போடப்பட்டது. தற்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ‘இந்த வழக்கின் மீதான மேல் நடவடிக்கை என்ன?’ என்று மேலிடத்திடம் சமீபத்தில் கேட்டார்களாம், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள். ‘வழக்கை தொடர்ந்து நடத்துங்கள்…’ என்று உத்தரவு வந்து விட்டதாம். ‘விடாது துரத்தும் கருப்பாக இருக்கிறதே?’ என்று அஞ்சிப் போய் இருக்கிறதாம் ஓ.எஸ். மணியன் தரப்பு…’’
‘‘இருக்கத்தானே செய்யும்?’’
‘‘தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பட்டுவாடாவை வங்கி மூலமாக செலுத்த, கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் சிறப்பு ஏற்பாடு செய்தார்கள். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து சாப்ட்வேர் ஒன்றையும் வாங்கினார்கள். டெல்லியிலிருந்து சிலரை அழைத்து வந்து, இந்த சாப்ட்வேரை பொறுத்தும் பணியும் நடந்தது. ஆனால், அந்த சாப்ட்வேரில் ஏதோ கோளாறாம். பலருக்கு மாற்றி மாற்றி சம்பளம் பட்டுவாடா ஆகிறதாம். இதேபோல, சேம நல நிதி, இன்ஸுரன்ஸ் பிடித்தமெல்லாம் வேறு வேறு நபர்களுக்கு சென்று சேர்வதால், ஊழியர்கள் குழப்பமாகி இருக்கிறார்களாம். இதை சரி செய்ய நிதித் துறை ஊழியர்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்களாம். டெல்லி ஆட்களை கூப்பிட்டு வருவதற்கும் துரிதமான ஏற்பாடுகள் நடக்கிறதாம்…’’ சொன்ன அலெக்ஸ், ‘‘தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த அமுதவல்லியின் செயல்பாடுகள் குறித்து அந்த பகுதியிலிருந்து நிறைய புகார்கள் முதல்வருக்கு போனது. அதைத் தொடர்ந்து அவரை அங்கிருந்து மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். புதிய கலெக்டராக ராஜேந்திர ரத்னூ நியமிக்கப்பட்டிருக்கிறார்’’ – பாக்கெட்டில் வைத்திருந்த கடிதங்களையெல்லாம் தொட்டுப் பார்த்துவிட்டு, வந்த திசை நோக்கிப் புறப்பட்டார்.
நன்றி தமிழக அரசியல் வாரமிருமுறை இதழ்