கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், ஏறக்குறைய ஆறு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் போராட்டம் திடீரென்று எப்படி தொடங்கியது ? இதைத் தொடங்கி வைத்ததே அரசுதான். தினகரன் நாளேட்டில், ஜுலை மாதத்தில் வெளிவந்த செய்தியே இந்தப் போராட்டத்துக்கு தூண்டுகோலாக இருந்தது என்றால் அது மிகைச்சொல் அல்ல.
தினகரன் நாழிதழில் நாகர்கோவில் பதிப்பில், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் மக்கள் எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று செய்தி வெளியாகியிருந்தது. அணு உலை விபத்து என்ற அறிவிப்பு வந்தால், வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டு அருகாமையில் உள்ள கட்டிடத்தினுள் சென்று தஞ்சம் அடையுங்கள் என்றதே அந்தச் செய்தி. கூடங்குளம் அமைந்திருக்கும் மாவட்டப் பதிப்பில் வெளியிடப்படாமல், நாகர்கோயில் பதிப்பில், இந்தச் செய்தியை வெளியிடுவதே உள்நோக்கம் கொண்டது அல்லவா ? இந்த அயோக்கியத்தனத்தைப் பார்த்துதான் மக்கள் வெகுண்டெழுந்தார்கள். தன்னிச்சையாக மக்கள் திரளாக நின்று நடத்திய போராட்டம் இது.
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர், கூடங்குளத்தை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கியே இத்திட்டம் கூடங்குளம் மக்கள் மீது திணிக்கப் பட்டது. வேலைவாய்ப்புகளையும், சிங்கப்பூராக மாற்றுவதையும் பார்க்க நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே என்றுதான் அந்த மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் உயிர்வாழ வேண்டும், எங்கள் வாயில் விஷத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்லுவது தவறா ? வாழும் உரிமை, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப் படுத்தப் பட்டுள்ளதே…. இந்த அடிப்படை உரிமையின் பேரால்தானே இந்தப் போராட்டம் தொடங்கியது ?
மக்கள் தன்னிச்சையாக திரண்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை, பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதில்லை,க டைகளை திறப்பதில்லை, கறுப்புக்கொடி ஏற்றுவது, ரேஷன் கார்டுகளை திருப்பி தருவது, கிராமங்களில் கூடங்குளம் அணு உலையை மூடச்சொல்லி தீர்மானம் போடுவது என பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சுதந்திர தினம் கழிந்த உடனேயே ஆகஸ்டு 16 அன்று இடிந்த கரையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது. இப்படித் தொடங்கிய போராட்டம் தான் தினந்தோறும் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தை சீர்குலைக்கவும், போராட்டம் நடத்துபவர்களையும், தலைவர்களையும், பல்வேறு பழிச்சொல்லுக்கு ஆளாக்கி எப்படியாவது இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருவது மத்திய அரசு மட்டுமல்ல… ஊடகங்களும் சேர்ந்தே இதைச் செய்து வருகின்றன.
குறிப்பாக தினமலர் ஊடகம், இதை ஒரு தவமாகவே செய்து வருகிறது. தோழர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும், மைபா ஜேசுராஜனின் தொலைபேசி எண்கள், மெயில் ஐடிக்கள் ஆகியவற்றை வெளியிட்டு, அவர்களை மிரட்டியது. தொடர்ந்தும், போராட்டக் குழுவினருக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அணு சக்தி நல்லதா, கெட்டதா என்ற ஆராய்ச்சிக்கு, தோழர் ஞானி தான் வெளியிட்ட “ஏன் இந்த உலைவெறி ? அணு உலைகள்- வரமா, சாபமா ? ஒரு கேள்வி பதில் தொகுப்பு” என்ற வெளியீட்டின் இணைப்பு தரப்பட்டுள்ளது. தெளிவான விளக்கங்களோடு இருக்கும் அந்த நூல், வாசகர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தும்.
ஊடகங்களின் எதிர்ப்பு பத்தாது என்று, வக்கீல் வண்டு முருகன் போல, விஞ்ஞானி வண்டு முருகன் அப்துல் கலாம் வேறு, அவர் பங்குக்கு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுகிறார். இங்கே ஆணி பிடுங்கியது பத்தாது என்று, இலங்கை சென்று ஆணி பிடுங்கி வந்திருக்கிறார். ஈழத்தில் தமிழகர்கள் – பெண்களும், குழந்தைகளும் – கொத்துக் குண்டுகளுக்கு இரையான போது, வாய் திறக்காத அப்துல் கலாம் அய்யர், இழவு வீட்டில் (இலங்கையில்) சென்று பள்ளி மாணவர்களுக்கு விரிவுரை ஆற்றியிருக்கிறார்.
அவர் யாழ்ப்பாண மாணவர்களுக்கு ஆற்றிய உரையில், “ மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஒரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப்போன்றது அது. நேர்மைக்குப் புறம்பாகச் சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஒன்று. தப்பையும், சரியானவற்றையும் நமக்குச் சரியான நேரத்தில் உணர்த்தும் ஓர் அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களைப் பதிவு பண்ணும் ஒரு வாழ்க்கை புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மைப் பயமுறுத்தும். நம்பிக்கையைக் கொடுக்கும், பாராட்டும், தண்டனை அளிக்கும், நம்மைக் கட்டுக்குள் வைக்கும். ஒரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை. மறுமுறை உறுத்தினால் தண்டனை.”
இது மாணவர்களுக்கு அவசியம் அல்ல. அப்துல் கலாம், தான் பேசியவற்றை அவரே ஒரு முறை மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஈழ மக்கள் கொல்லப்பட்ட போதும், குஜராத்தில் இசுலாமியர்கள் படுகொலை செய்யப் பட்ட போதும், இவர் மனசாட்சியை எந்த மார்வாடிக் கடையில் அடகு வைத்தார் என்பதை. அப்துல் கலாம் அய்யர்தான் விளக்க வேண்டும்.
இந்த அப்துல் கலாமுக்கு, நடுத்தர படித்த வர்க்கத்தினர் மத்தியில் இருக்கும் நல்ல மதிப்பை, கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் மத்திய அரசின் சதிக்கு விசுவாசமான அடிமையாக தலையாட்டிக் கொண்டிருக்கிறார் அப்துல் கலாம். அப்துல் கலாம் செய்ததிலேயே மிகப் பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் சென்ற பிறகு அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்வதாகவும். இந்தப் பணத்தை வைத்து, அந்த மக்களுக்கு நல்ல குடிநீர், பள்ளிகள், வேலைவாய்ப்பு, மருத்துவமனைகள், மீனவர்களுக்கு மோட்டார் போட்டுகள், மற்றும் குளிர்வசதி கொண்ட வைப்பறைகளை கொடுக்க உதவி செய்வதாக அறிவித்ததுதான்.
போராட்டக்குழுவினர், அணு உலை தொடர்பாக சமரசத்துக்கு வரவில்லையென்றால் அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சமல்லவா இது ? அணு உலைக்கு மக்கள் சம்மதிக்கவில்லையென்றால், அதற்காக அவர்களுக்கு பள்ளிகள் மருத்துவமனைகளை கட்டித் தரமாட்டார்களா ? குடிநீர் வசதி செய்து தரமாட்டார்களா ? கூடங்குளம் மக்களுக்கு இந்த லஞ்சத்தைத் தரும் கலாம், கல்ப்பாக்கம் பகுதி மக்களுக்கு இதே வசதியை ஏன் தர முன்வரவில்லை ? வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அணு ஆயுத சோதனை நடத்தி, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியப் பகுதியையே அணு ஆயுதக் களமாக மாற்றி, தீராத பதற்றத்தை இப்பகுதியில் உருவாக்கியதைத் தவிர, அப்துல் கலாம் பெரிய சாதனை எதையும் செய்து விடவில்லை.
கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது இத்தனை நாள் தொடுத்த தாக்குதல்களின் உச்சக்கட்டமாக, நேற்று, மத்தியக்குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற, தோழர் உதயக்குமார் உள்ளிட்டவர்களின் மீது, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கப் படவேண்டிய அதே நேரத்தில், இத்தாக்குதல் பல்வேறு உண்மைகளையும் உணர்த்துகிறது. அரசியல்களத்தில் நேர் எதிராக நிற்கும், காங்கிரசும், பிஜேபியும், அணு உலை விஷயத்தில் ஒரே கொள்கையைக் கொண்டுள்ளன என்பதை இந்தத் தாக்குதல் தெளிவாக உணர்த்துகிறது.
இத்தாக்குதல், மாநில அரசின் கட்டுப்பாட்டையும் மீறி, மத்திய உளவுத்துறையால், தமிழக காவல்துறை உதவியோடு நடந்தேறியிருக்கிறது என்பதே உண்மை.
பேச்சுவார்த்தைக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் முன்பாகவே, இந்து முன்னணியினர் அந்த இடத்தில் ஒரு மணி நேரமாக காத்திருந்திருக்கின்றனர். இத்தகவல் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் மூலமாக போராட்டக்குழுவினரை அடைந்து, அந்தக் குழுவினர், இத்தகவலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவித்திருக்கின்றனர். தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக அடையாளம் காட்டிக் கொள்ளும், கருணாசாகர் இத்தாக்குதலை தடுக்கத் தவறியுள்ளார்.
கமிஷனர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் நடந்த இந்தத் தாக்குதல், கருணா சாகருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்றே சந்தேகிக்க வேண்டி உள்ளது. தாக்குதல் முடிந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கருணா சாகர், கூடங்குளம் போராட்டக்குழுவினர், இந்த வாயில் வழியாக வருவதற்கு பதிலாக, அந்த வாயில் வழியாக வந்து விட்டனர். இதனால்தான் தாக்குதல் நடந்திருக்கிறது என்று கருத்து கூறினார்.
ஜெயலலிதா வருகையில் இப்படி ஒரு தாக்குதல் நடந்திருந்தால், கருணாசாகர் இப்படி ஒரு விளக்கத்தை தருவாரா ?
உதயக்குமார் மீது சொல்லப்படும் மற்றொரு முக்கிய குற்றச்சாட்டு, அவர் அமெரிக்க உளவாளி என்பது. உதயக்குமார் அமெரிக்க உளவாளியாகவே இருக்கட்டும். வாயில் விஷத்தைத் திணிக்கும், அணு உலை போன்ற ஒரு விவகாரத்திற்கு எதிராக மக்களுக்காக போராட்டம் நடத்தும் உதயக்குமார்கள் அமெரிக்க உளவாளி இல்லை, பாகிஸ்தான் உளவாளியாக இருந்தாலும் சவுக்குக்கு சம்மதமே. உதயக்குமாரை அமெரிக்க உளவாளி என்று குற்றம் சொல்லும் அரசியல்வாதிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் அளவளாவிய விவகாரத்தைத்தான் விக்கிலீக்ஸ் புட்டு புட்டு வைத்துள்ளதே.
அணு உலை என்ற பேரால் இந்தியா முழுக்க நடத்தப்படும் அனைத்து உலைகளின் நோக்கமும், மின்சாரம் தயாரிப்பது அல்ல. அணு ஆயுதம் தயாரிப்பதே..!!! இதற்கு கல்பாக்கம் விதிவிலக்கு அல்ல.
இந்த கல்பாக்கம் அணு உலையின் ஆபத்துக்களை விளக்கி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், 31 ஜனவரி அன்று கல்ப்பாக்கத்தில் நடைபெற இருந்தது. இந்த உண்ணாவிரதத்துக்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்று ஜனவரி 31 அன்று போராட்டம் என திட்டமிடப்பட்டிருந்தது.
மத்திய உளவுத்துறை இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜனவரி 30 அன்று, கல்ப்பாக்கம் அணு உலையில் பணிபுரியும் ஒரு ஊழியரை வைத்து, அவசர அவசரமாக ஒரு வழக்கை தாக்கல் செய்து, உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற விவகாரத்தை மறைத்து, ஏதோ அனுமதி பெறாமல் அந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது போல, ஜனவரி 30 அன்று, தடை உத்தரவு பெற்றது. இந்தத் தடை உத்தரவை எதிர்த்து வழக்காடுவதற்குள், ஜனவரி 31 கடந்து விட்டது.
இந்த அயோக்கியத்தனத்தை நீதிமன்றத்துக்கு விளக்கி, தடை ஆணையை ரத்து செய்து, வேறு ஒரு தினத்தில் மீண்டும் போராட்டம் அறிவிக்க வேண்டும். கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஒரு கடைநிலை ஊழியர், இது போல நீதிமன்றத்தை அணுகி ஒரு போராட்டத்தைத் தடை செய்வதற்காக போராடுவார் என்றா நினைக்கிறீர்கள் ?
பிஜேபி, காங்கிரஸ் என்ற இரு கட்சிகளுமே, அணு உலை எதிர்ப்பாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே தளத்தில் நிற்கின்றன. இருப்பதிலேயே காங்கிரஸ் கட்சி ஒரு அயோக்கியத்தனமாக கட்சி என்றால், அந்தக் கட்சியோடு சங்பரிவாரும், ஊடகங்களும் சேர்ந்து கொண்டால்…. ? எத்தனை லட்சம் மக்கள் மாண்டாலும், அணு உலையை கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை புரிந்து கொள்ளவில்லை.