”ஏன் மாணவர்களில் சிலர் தன்னை தானே கொன்றுகொள்ள வேண்டும் ? இந்த அமைப்பில் எங்கோ தவறு இருக்கிறது..ஏன் ஒவ்வொருவரும் அறிவிற்கு பதில் மதிப்பெண்களை துரத்துகிறார்கள்..இந்த கருத்தை தான் இந்த படம் சுட்டிக் காட்டி, தாக்குகிறது”
– அபிஜித் ஜோஷி
3 இடியட்ஸின் கதை & திரைக்கதையை ராஜ்குமார் ஹிரானியுடன் எழுதியவர்.
”கல்வியின் மூலம் கிடைக்கும் மதிப்பெண் தவிர்த்து, அதன் மூலம் கிடைக்கும் அறிவில், சிறப்பானவற்றை அடைவதை இங்கு யாரும் ஊக்குவிப்பதில்லை. வெகு நேர்த்தியான, சிறப்பான செயல்களை தொடர்ந்து வரும் வெற்றி தான் என் வாழ்க்கை தத்துவம்.
இந்த தத்துவம், என் வாழ்வில் வழக்கத்திற்கு முற்றிலும் மாறான பல முடிவுகளை எடுக்க வைத்துள்ளது. என் வாழ்வு, தரத்தை பின் தொடரும் பயணமாக இருப்பதால், நாட்களானாலும் வெற்றி என்பது அளவில் பெரியதாகவும் தொடர்ந்து கிடைப்பதாகவும் இருக்கிறது.”
– விது வினோத் சோப்ரா.
3 இடியட்ஸின் தயாரிப்பாளர் மற்றும் அதன் திரைக்கதையில் பங்கு பெற்றவர்.
இவர்கள் கருத்துக்களின் சாராம்சம் தான் நண்பன் படத்தின் Idea.
நிச்சயம் அரத பழசான கல்வி முறையை கொண்டுள்ள நம் சமூகத்திற்கு தேவையான, திரைப்படத்துறைக்கே முற்றிலும் புதிதான Idea.
”வெறும் வெற்றிக்கு பின்னாடி போவாதே.. உனக்கு புடிச்ச துறைய தேர்ந்தெடுத்துகோ..அதுல உன் திறமய வளர்த்துக்கோ..வெற்றி ஆட்டோமேட்டிக்கா உன் பின்னாடி வரும் என்ற சித்தாந்தத்தில் இருக்கும் ஒருவன்…படிப்பில் வெறும் மக்கடித்து மதிப்பெண்களை மட்டும் வாங்காமல் ,அறிவை வளர்த்த இவன் லௌகீக வாழ்விலும் பெரிய சிறப்பான வெற்றியை பெற்றானா? என்பது தான் கதை.
கலாச்சாரங்கள் கடந்து பெரும் வெற்றியை பெற்று வரும் இந்த திரைக்கதை தான் நண்பன் படத்தின் வலு. மிக சில வழக்கமான பழைய டிராமா யுக்திகளை வைத்திருந்தாலும் இந்த திரைக்கதை சில விசயங்களில் பெரிய பாய்ச்சலை நடத்தியிருக்கிறது. முக்கியமான ஒன்று – முதல் 50 நிமிட சுவாரஸ்யங்களுக்கு ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் கூட தேவைப்படவில்லை. கதாநாயகியை 50 நிமிடங்களுக்கு பிறகு தான் திரைக்கதை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
அடுத்து, திரைக்கதை நெடுக ஒரு துணை கதாபாத்திரம் தான் தன் குரலில் கதையின் பெரும் பகுதியை நமக்கு சொல்கிறது. இவ்விரு விசயங்களும் வெகுஜன பட திரைக்கதைகளில் மிக மிக அரிது.
பரவலாக இப்படத்தின் திரைக்கதை, சிரிக்க வைத்ததுடன் எனக்கு அவ்வப்போது புத்துணர்வையும் வாழ்க்கை சார்ந்த நம்பிக்கையையும் அளித்து கொண்டே இருந்தது. (இடைவேளையில் இந்த உணர்வுடன் மிதப்பாக திரிந்தது நினவுக்கு வருகிறது) ராஜ்குமார் ஹிரானியின் கடந்த இரு திரைக்கதைகளும் இவ்வகையே.
திரைக்கதையின் அடுத்த பலம் அதன் கதாபாத்திரங்கள். காலேஜ் பிரின்ஸிபலில் ஆரம்பித்து ஹாஸ்டலில் இஸ்திரி செய்யும் பொடியன் வரை அனவருக்கும் ஒவ்வொரு பின்புலம் .. முக்கிய (விஜய்யின்) கதாபாத்திரம், திரைக்கதையின் மைய நோக்கை கொண்டு வடிவமைக்கப்பட்டது. நிச்சயம் இந்திய சினிமா வரலாற்றின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இது இருக்கும். இயல்பான ஆனால் சராசரித்தனங்கள் குறைந்த வெற்று ஹீரோயிசங்கள் அற்ற குழந்தைத்தனம் நிரம்பியதாக உள்ளது இந்த கதாபாத்திரத்தை விதிமுறைகள், சட்டதிட்டங்கள், அமைப்புகள் அதனை கட்டுப்படுத்தாது (வழக்கமான கல்வி திட்டம், காலேஜ் பிரின்ஸிபல், சீனியர்ஸின் கட்டுபாடுகள்)
நிறைய creative ( ரூமில் ஒன்னுக்கு அடிப்பவனுக்கு ஸ்பூனில் கொடுக்கும் ஷாக், கார் பேட்டரிகளை கொண்டு inverter)
மனதில் பட்டதை டக்கென்று கேட்க்கும் துனிவு. (”ஸ்பேஸிலே பேனாவிற்கு பதில் பேசாம ரெண்டு ரூவா பென்சில யூஸ் பண்ணியிருக்கலாமே ஸார்”)
எதையும் மிக எளிதாக அனுகும் முறை ( machine க்கான விளக்கம்)
குரும்புத்தனங்கள் (சத்யனின் மேடைப் பேச்சு விஷயத்தில் குளறுபடி).
விஜய்க்கு இது ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ரஜினிகாந்தின் நகலாக அவர் இதுவரை அதிகம் செய்து வந்த தொடையை தட்டி கர்சீப் கழுத்தில் கட்டி சவால் விடும் கதாபாத்திரங்களை விட இது நீண்ட நாள் பார்வையாளன் மனதில் நிற்கும். வசூலும் 100 கோடியை எட்டிவிட்டதாக தகவல்.
ரொம்போ புடிச்ச காட்சிகள் ன்னா….பரிட்சை ரொம்ப நேரம் எழுதி விட்டு மற்ற பேப்பர்களுடன் கலந்து விடுவது.. இரவில் சத்யராஜ் வீட்டிற்கு செல்வது.. அதை தொடர்ந்து பகலில் பாடம் நடந்து கொண்டிருக்கும் க்ளாஸில் கண்விழிப்பது.. கோமாவில் இருக்கும் ஜீவாவை கண் விழிக்க செய்யப்படும் க்ரியேட்டிவ் கலாட்டாக்கள்…அப்புறம் அந்த க்ரியேட்டிவ் பிரசவம் …
என்னதான் காமெடி ஃப்ளேவரானாலும் ப்ளெக் அண்ட் வைட்டில் ஜீவாவின் ஏழ்மை குடும்பத்தை கிண்டலடிப்பது நெருடுகிறது.
மொத்த படத்தின் நீளம் மூன்று மணி நேரம் ஐந்து நிமிடங்கள். தமிழில் தான் இந்த தகராறு. அங்கே இங்கே சில வசன சேர்க்கைகள் ஒரு பாடல் சேர்ப்பு இவைகள் தான் நீள அதிகத்திற்கு காரணம். இடைவேளை 15 நிமிடங்கள் சேர்த்து கடேசியில் மூன்று மணி நேரம் கடந்து படம் போய் கொண்டிருக்கும் போது சின்ன சலிப்பு ஏற்படுகிறது.
விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ..இவர்களை காலேஜ் மாணவர்களாக ஒத்து கொள்ள வைத்து நல்ல விஷயம். விஜய்க்கு இந்த வகை நடிப்பு நல்லாத் தான் வரும் என்றாலும் இதில் கொஞ்சம் இயல்பு கலந்திருப்பது ரசிக்கவைக்கிறது.
ஸ்ரீகாந்த் அருகில் அமர்ந்து All izz well ளின் விளக்கம் சொல்லும் விஜய்யின் உடல்மொழி செம இயல்பு. (உபரி தகவல் : All Is Well That Ends Well என்பது William Shakespeare-ரின் நாடகத் தலைப்பு)
ஜீவாவின் தெறமைக்கு இதெல்லாம் தம்மாத்துண்டு கதாபாத்திரம். ஸ்ரீகாந்த் ஓகே. நீண்ட நாளுக்கு பின்னாடி சத்யராஜை இந்த கதாபாத்திரத்தில் பார்ப்பது நல்லா இருந்தது.
சும்மா கிளி மாதிரி இருந்த போது இலியானாவை தெலுங்கில் இருந்து கூட்டி வருவதை தவறவிட்டு இப்போ எலி மாதிரி அவர் மாறின பிறகு இங்கு வந்திருப்பது மண்டை காய வைக்கிறது..
மனோஜ் பரமஹம்சாவின் மலைபகுதி காட்சிகள் (செமத்தையான பாம்பு சாலை ஏரியல் ஷாட்) அந்த ஏர்போர்ட் உள்ளரங்க காட்சி என ஆரம்பத்தில் எகிறிய காமெரா மீட்டர் மெல்ல மெல்ல சராசரிக்கு சரிந்து அதிலேயே பயணித்து முடிகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல அவரின் முந்தைய படப் பாடல்களை நினவுப்படுத்துகிறார். இரண்டு குட்டி பாடல்கள் – ’நல்ல நண்பன்’ ,’எந்தன் கண் முன்னே’ மற்றும் ’ஒல்லி பெல்லி’ என் சாய்ஸ். ’நல்ல நண்பனின்’ பாடகர் ராமகிருஷ்ணன் மூர்த்தி தமிழுக்கு புதுசு. அவர் குரலின் ஈரம் அந்த பாடலை தூக்கி நிறுத்துகிறது.இந்த பாடலில் நா.முத்துகுமாரின் ஒரு வரி (ஒரே வரி தான்) ”உன் நினைவின் தாழ்வாரத்தில் எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா ? நல்லா இருக்கு.
எந்தன் கண் முன்னே வில் கார்க்கியின் ’எந்தன் கண் முன்னே கண் முன்னே …காணாமல் போனேனே’,
’யாரும் பார்க்காத வின்மீனாய் வீணாய் நான் ஆனேனே’..நல்ல வரிகள்.
வசனங்கள் (மிக) சில இடங்களை தவிர்த்து அப்படியே அப்படியே 3 idiots ..ஆனால் அதில் வசனம் எழுதிய இருவரின் (ராஜ் குமார் ஹிரானி மற்றும் அபிஜித் ஜோஷி) பெயர்களை நண்பனில் விட்டது எதனால்?
3 இடியட்ஸ், நாவலாசிரியர் சேதன் பகத்தின் “`ஃபைவ் பாயின்ட் சம் ஒன்” என்ற புத்தகத்தின் தழுவல் தான் என்று திரைப்படக் குழுவினரால் சொல்லப் பட்டது. ஆனால் சேதன் பகத் இது என்னுடைய புத்தகத்தின் காப்பி என்று சண்டை போட்டார். ஆனால், புத்தகத்தில் உள்ள ஒரு சில அத்தியாயங்களைத் தவிர, பெரும்பாலான அத்தியாயங்கள், திரைப்படத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. அந்தப் புத்தகத்தை எழுதிய நாவலாசிரியர் சேதன் பகத்துக்கு வாழ்த்துக்களைச் சொல்லியே ஆக வேண்டும்.
நண்பனில் நடிகர்களின் உடல்மொழி,வசனங்கள்,காமிரா கோணங்கள் இவைகளில் நிறைய அப்படி அப்படியே 3 இடியட்ஸ் ஆக இருப்பது உறுத்துகிறது. இயக்குநர் ஷங்கர் அவர் இருப்பை வெளிக்காட்ட இவைகளில் கவனம் காட்டாமல் “முதல்வனில்” மலைக்கு பெயிண்ட் அடித்தவர் இந்த படத்தில் ரயிலுக்கு பெயிண்ட் அடித்திருக்கிறார். (அந்த செட்டப்பிற்கு மட்டும் 16 லட்சம் செலவானதாக தகவல்).
படத்தின் நாயகி காதல் வயப்பட்ட ஆரம்ப தருணத்தில் வரும் இந்த பாடலில் பெயிண்ட் சமாச்சாரங்கள் இல்லாமல் அவளின் உணர்வுகளை பிரதானப்படுத்தும் வகையில் இருக்கனும் என்பது சிம்பிள் லாஜிக்.3 இடியட்ஸை அதன் ஆன்மா (!) கெடாமல் மாற்ற முயற்சித்தவர் இந்த பாடலில் கரீனாவின் பார்வைக்கு “எங்கு பார்த்தாலும் அமீர்கான்” என்பதையும் அப்ப்படியே பண்ணியிருக்கலாம்.சொற்ப செலவோடு முடிந்திருக்கும்.கதை சூலலுக்கும் வலு சேர்த்திருக்கும்.ஷங்கர் என்றாலே பிரமாண்டம் என்ற மனச்சுழலில் அவர் சிக்கியதன் விளவுதான் இந்த ரயில் பெயிண்ட்.
Final Opinion : குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நண்பன்.
1 st place திரைக்கதை எழுதியவர்கள் அபிஜித் ஜோஷி
2 nd place 3 இடியட்ஸை நண்பனாக்க medium ஆக செயல்பட்ட சங்கர்
3 rd place ஸாரி யாருமில்லை