சங்கரன் கோவில் இடைத்தேர்தல் மற்ற இடைத்தேர்தல்களை விட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவையில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்த இடைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
உங்களுக்கு உண்மையிலேயே திராணி இருந்தால், சங்கரன் கோவில் இடைத்தேர்தலை தனியாக நின்று சந்தித்துப் பாருங்கள் என்று விஜயகாந்தைப் பார்த்து சவால் விட்டார். இந்தச் சூழலில்தான் சங்கரன் கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியினர் அரசு அதிகாரத்தை முழு அளவில் பயன்படுத்துவார்கள். ஒட்டு மொத்த அரசு நிர்வாகமுமே அந்த இடைத்தேர்தலை கவனத்தில் கொண்டு செயல்படும். இடைத்தேர்தல் வெற்றி என்பதை எல்லா ஆளுங்கட்சிகளுமே தங்களுடைய தனிப்பட்ட கௌரவப் பிரச்சினையாக பார்ப்பதால், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவது வழக்கம். வாக்களிக்கும் மக்களும் கூட, இந்த ஒரு தொகுதியில் எதிர்க்கட்சியினருக்கு வாக்களிப்பதால் என்ன ஆகி விடப் போகிறது, ஆளுங்கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைத்தாலாவது, தொகுதிக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற எண்ணத்திலேயே வாக்களிப்பார்கள். இதனால் ஆளுங்கட்சி வேட்பாளர் எளிதாக வென்று விடுவார்.
இது சங்கரன் கோவில் இடைத்தேர்தலிலும் நடக்கப்போகிறது என்றாலும், இந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி சந்திக்க வேண்டியது அவசியம். 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அனைத்துக் கட்சி கூட்டணிக்காக விழுந்த திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை, அதிமுகவுக்கா விழுந்த ஓட்டுக்கள் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார் ஜெயலலிதா. கூட்டணி இல்லாமலேயே சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று அறிவித்தார்.
நல்ல எதிர்க்கட்சியாக செயல்படவேண்டிய திமுக, இன்று தன்னுடைய உட்கட்சி பூசல்களாலும், கட்சியை யார் கைப்பற்றுவது என்ற வாரிசு மோதல்களாலும், கட்சிப் பிரமுகர்கள் மீது தொடர்ச்சியாக வரும் வழக்குகளாலும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கு துணிவில்லாமல், கலகலத்துக் கொண்டிருக்கும் கட்சியை எப்படி ஒன்று சேர்த்து வைப்பது என்ற போராட்டத்தில் இருக்கிறது.
விஜயகாந்தின் தேமுதிக இப்போதுதான் தான் எதிர்க்கட்சி என்பதையே, அதுவும், சட்டமன்றத்தில் ஜெயலலிதா நேரடியாக அவமரியாதை செய்த பிறகு உணர்ந்திருக்கிறது.
ஜெயலலிதா விடுத்து இந்த சவாலை விஜயகாந்த் சீரியசாக எடுத்துக் கொள்கிறாரோ இல்லையோ, ஜெயலலிதா மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பது அவர் அமைத்துள்ள தேர்தல் பணிக்குழுவிலேயே தெரிகிறது. சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களில் 36 பேரில் 26 பேர் அமைச்சர்கள் !!!! ஒரு இடைத்தேர்தலுக்கு இத்தனை அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்தது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதன் முறையாக இருக்கக் கூடும். தானே புயலால் வரலாறு காணாத அளவில் பாதிப்புக்குள்ளான கடலூர் விழுப்புரம் மாவட்டங்களுக்கான நிவாரணப் பணிகளைப் பார்ப்பதற்கு, ஜெயலலிதா இதே போல 26 அமைச்சர்களை அனுப்பியிருப்பாரேயானால், அவரைப் பாராட்டலாம். ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்படரில் பார்வையிட்டு விட்டு, 850 கோடியை நிவாரணத் தொகையாக “எனது” அரசு வழங்கியது என்பதையே சாதனையாக பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக இருக்கும் முத்துச்செல்வியை வேட்பாளராக அ.தி.மு.க. அறிவித்துவிட்டது. முன்னாள் எம்.எல்.ஏ-வான சங்கரலிங்கத்தின் மகளான இவர், இப்போதே வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிக்கத் தொடங்கி விட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது எந்த வகையில் சேரும் என்பது ஜெயலலிதாவுக்கே வெளிச்சம்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் நடக்கும் பிரச்சாரத்துக்கு ஆகும் செலவு எந்தக் கணக்கில் வைக்கப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். வேட்பாளர்கள் தேர்தலில் உண்மையில் செய்யும் செலவு எப்போதுமே கணக்கில் காட்டப்படுவதில்லை என்றாலும், தற்போது அதிமுக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை அந்த போலியான கணக்குக் காட்டும் நடவடிக்கையையும் கேலிக்கூத்தாக்குகிறது.
திராணி இருந்தால் தனித்துப் போட்டியிட்டுப்பாருங்கள் என்று விஜயகாந்துக்கு வீராவேசமாக சவால் விட்டு விட்டு, அதிமுகவினர் எடுக்கும் நடவடிக்கையைப் பார்த்தால், ஜெயலலிதாதான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று விடவேண்டுமே என்ற பயத்தில் இருப்பது போலத் தெரிகிறது.
ஒரு நல்ல ஜனநாயகத்துக்கு வலுவான எதிர்க்கட்சி என்பது மிக மிக அவசியம். வலுவான எதிர்க்கட்சி இல்லாமல், ஆளுங்கட்சி ஏகபோகமாக இருப்பது எந்த வகையிலும் நல்லதல்ல. குறிப்பாக மக்கள் பிரச்சினையை பேச வேண்டிய சட்டப்பேரவையில், ஆளுங்கட்சியின் துதிபாடிகளை மட்டும் பேச அனுமதி கொடுத்து விட்டு, எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அவைக்காவலர்களை விட்டு வெளியேற்றுவதும், கோஷம் போட்டுத் தடுப்பதுமான போக்கு தமிழகத்தில் வேரூன்றிப் போயுள்ள சூழலில், ஆளுங்கட்சிக்கு கடிவாளம் போடும் விதமாக, இடைத்தேர்தலில் வலுவான போட்டி அமைவது மிக மிக அவசியம். எதிர்க்கட்சிகள் ஆளுக்கொரு வேட்பாளரை நிறுத்தி, மீண்டும் அதிமுகவை அமோக வெற்றி பெறச் செய்வார்களேயானால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு, அதிமுகவினர் வைத்ததே சட்டம் என்ற நிலை உருவாகி விடும்.
இந்தத்தேர்தலில் மதிமுக நிச்சயம் போட்டியிடும் என்று அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த மதிமுக, இந்த இடைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதிமுகவுக்கு ஒரு வலுவான போட்டியை உருவாக்க, மதிமுகவின் வேட்பாளரை பொதுவேட்பாளராக அங்கீகரித்து, திமுக, தேமுதிக, இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆதரிக்குமேயானால், சங்கரன் கோவிலில், அதிமுக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. திமுகவோ, தேமுதிகவோ தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்துவார்களே யானால், அது அதிமுகவின் வெற்றிக்கு உதவுவது மட்டுமல்லாமல், சமநிலையற்ற போட்டியாகவும் ஆகி விடும். இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்கும், அதிமுகவின் ஆட்சிக்கு ஒரு கடிவாளம் போடுவதற்கும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் மதிமுகவின் வேட்பாளரை பொது வேட்பாளராக அறிவித்து ஆதரிப்பது ஒன்றே வழி. ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், இத்தேர்தலை சீரியசாக எடுத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பிரச்சாரத்திலும் ஈடுபடவேண்டும்.
இந்த நடவடிக்கை ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் ஈகோக்களை விட்டு விட்டு, இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க சம்மதிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.