சென்னையில் அடுத்தடுத்து நடந்த இரண்டு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் ஐந்து நபர்களை சென்னை மாநகரக் காவல்துறையினர், சென்னை வேளச்சேரியில் எஸ்.என்.முதலித் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கொலை செய்தனர். இந்த என்கவுண்டர் சம்பவத்தை விவரிக்கும் காவல்துறையினர், ஐந்து நபர்களை விசாரிப்பதற்காக சென்ற காவல்துறையினரை நோக்கி அந்த ஐந்து நபர்களும் சராமாரியாகச் சுட்டதால், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்கள் அனைவரும் இறந்து போனார்கள் என்ற தகவலை வெளியிட்டது.
மேலும், தொலைக்காட்சியிலும், மற்ற ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபருடைய புகைப்படத்தைப் பார்த்து, வேளச்சேரிப் பகுதியில் குடியிருக்கும் ஒருவர் ரகசியமாக கொடுத்த தகவல்களை வைத்து, காவல்துறையினர் அந்த இடத்தை சோதனையிட்டதாக தகவல்கள் காவல்துறையால் தெரிவிக்கப் பட்டது.
தற்போது, சவுக்குக்கு வந்துள்ள தகவலின் படி, காவல்துறையினர், இந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 5 நபர்களை வேளச்சேரியிலேயே பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்டவர்களை விசாரிக்கையில், அவர்களோடு தங்கியிருந்தவர்களை காட்டுமாறு போலீசார் கூறியதையடுத்து, மற்ற ஐந்து நபர்கள் தங்கியிருந்த 335, எஸ்.என்.முதலி தெரு வீட்டை பிடிபட்ட நபர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர். காவல்துறையினர் அந்த வீட்டுக்குள் நுழைந்ததும், வீட்டினுள் இருந்த அனைவருமே சரண்டர் ஆகியிருக்கின்றனர். சரணடைந்தவர்களை, அருகே இருந்த துணியை எடுத்து, கைகளை பின்புறம் கட்டி, போலீஸ் வேனில் ஏற்றியுள்ளனர்.
அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி, கொண்டு செல்லுகையில், ஒரு 100 மீட்டர் தூரத்தை கடந்த பிறகு, பிடிபட்டவர்களை என்கவுண்டரில் கொல்லுமாறு உத்தரவு வருகிறது. இந்த உத்தரவை வழங்கியது திரிபாதிதான் என்றும் கிடைத்த தகவல் கூறுகிறது. வேன் மீண்டும் எஸ்.என்.முதலி தெருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 5 பேரை வேனிலேயே வைத்து விட்டு, 5 பேரை அந்த அறைக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொன்று விட்டதாகத் தெரிகிறது.
சவுக்குக்கு தகவல் சொன்ன நபர், மீதம் உள்ள அந்த 5 நபர்களின் உயிரையாவது காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இந்தத் தகவல், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப் பட்டுள்ளது. 5 பேரை கொலை செய்து தங்கள் கரங்களில் ரத்தத்தோடு இருக்கும் சென்னை மாநகர காவல்துறையினர், மீதம் உள்ள 5 நபர்களையாவது கொலை செய்யாமல் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்பதே, நியாயமானவர்கள் விடும் கோரிக்கை.