என்னடா இது ? கட்டுரையின் தலைப்பைப் பார்த்தவுடன் நகைச்சுவை கட்டுரை என்று நினைக்காதீர்கள். இது நகைச்சுவை கட்டுரை அல்ல. நகைப்புக்குள்ளான மனித உரிமைகளைப் பற்றிய கட்டுரை.
யார் இந்த குயிக் கன் முருகன் ? ஐந்து பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டு விட்டு, அந்தக் கொலையை நியாயப்படுத்தி தொடர்ந்து பேட்டியளித்துக் கொண்டிருக்கும் ஜலதகுமார் திரிபாதிதான் இந்த குயிக் கன் முருகன். இந்த திரிபாதி ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1985ம் ஆண்டு நேரடியாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். 1991ம் ஆண்டில் திரிபாதி லஞ்ச ஒழிப்புத் துறையில் தென் சரக காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அப்போதெல்லாம் திரிபாதி குயிக் கன் முருகனாக ஆகவில்லை. அப்போதெல்லாம் திரிபாதி மிகுந்த நகைச்சுவை உணர்வோடு அமைதியாக இருப்பார். அலுவலக பணியாளர்களிடம் மிகுந்த மரியாதையோடு நடந்து கொள்வார். 1992ம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு சென்றார். பிறகு புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளராகவும், பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி டிஐஜியாக இருந்தார். பின்னர் 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், சென்னை மாநகர இணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார். சென்னை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டவுடன் தான் திரிபாதி குயிக் கன் முருகனாகிறார்.
இணை ஆணையாளராக திரிபாதி இருக்கும் போதே இவர் ‘வசூல் ராஜா ஐபிஎஸ்’ ஆக மாறி விட்டார் என்று அப்போது சென்னை மாநகர காவல்துறையில் பரபரப்பாக பேசப்படும். லஞ்ச ஒழிப்புத்துறையில் திரிபாதி மீது 2002-2003 ஆண்டு காலத்தில் ஏகப்பட்ட மொட்டை கடுதாசிகள் வரும். அதில் ஒரு கடிதத்தின் தலைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. அது “சரிபாதி கேட்கும் திரிபாதி” என்பதுதான். அதாவது எல்லாவற்றிலும், சரிபாதி பங்கு கேட்பாராம்.
திருச்சியில் திரிபாதி டிஐஜியாக இருந்தபோதே திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்த கோசிஜன் என்பவரை திரிபாதி என்கவுண்டர் என்ற பெயரில் போட்டுத்தள்ளியதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னையில் இணை ஆணையரான பிறகு, குயிக் கன் முருகனின் என்கவுன்டர் கொலைகள் தங்கு தடையின்றி நடந்தன. அயோத்தியா குப்பம் வீரமணி, ராஜன் என்கிற பழனிவேல்ராஜன், மும்பையிலிருந்து சென்னை வந்திருந்த சஞ்சய் காட்டியா, உடையார்பட்டி முருகேசன், சுரேஷ் என்கிற சுரா, சாந்தோமைச் சேர்ந்த கிருஷ்ணன், முருகன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன், சீலையம்பட்டி ராஜாராம், புதுக்கோட்டை சரவணன் என்று குயிக் கன் முருகனின் கொலைப்பட்டியல் தொடர்ந்து கொண்டே வந்தது. இந்த வரிசையில்தான் வடமாநிலங்களைச் சேர்ந்த ஐந்து நபர்கள் புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இதில் சீலையம்பட்டி ராஜாராம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட விதம் குயிக் கன் முருகன் ஒரு சிறந்த கதாநாயகன் மட்டுமல்ல. சிறந்த கதாசிரியர் என்பதையும் காட்டியது. தமிழக விடுதலைப்படையின் தலைவராக இருந்து செயல்பட்டார் ராஜாராம். டிசம்பர் 2002ல் கைது செய்யப்படுகிறார். இவர் மீது தினமலர் அலுவலகத்தில் குண்டு வைத்தது, சிதம்பரம் அண்ணாமலை காவல்நிலையத்தில் குண்டு வைத்தது, தமிழ் பேசிய மாணவர்களை தண்டித்த சென்னை வேப்பேரியில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி ஆகியவற்றில் குண்டு வைத்த வழக்குகள் நிலுவையில் இருந்தன. 25.03.2003 அன்று ராஜாராம் சென்னை மத்திய சிறையிலிருந்து சைதாப்பேட்டையில் உள்ள 9வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நீதிபதி முன்னிலையிலேயே ராஜாராம் தனது உயிருக்கு ஆபத்து என்றும், காவல்துறையினர் தன்னைச் சுட்டுக் கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும், தன் உயிருக்கு பாதுகாப்பு தருமாறும் கோரினார். ஆனால் அந்த நீதிபதி அவரது கோரிக்கையை ஏற்காமல், ராஜாராமை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சென்னை மத்திய சிறைக்கு வழக்கமாக செல்லும் வழியிலிருந்து மாற்றி கோட்டூர்புரம் பாலம் வழியாக ராஜராமை காவல்துறையினர் அழைத்துச் சென்றார்களாம். அப்போது வாகனம் கோட்டூர்புரம் ஐந்தாவது தெரு அருகே வந்த போது வாகனம் பஞ்சர் ஆகி விட்டதாம். உடனே ராஜாராமை வேறு வாகனத்தில் மாற்றி ஏற்றுவதற்கு முனைந்த போது, வெள்ளை நிறத்தில் ஒரு டாடா குவாலிஸ் கார் அங்கே வந்ததாம். அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்கி காவல்துறையினரை நோக்கி சுட்டானாம். அப்போது உதவி ஆணையர் கலியமூர்த்தி, ஆய்வாளர் ராஜாமணி ஆகியோர் காயமடைந்தார்களாம். இந்தச் சம்பவத்தை பயன்படுத்தி ராஜாராம் காவல்துறையினர் வாகனத்திலிருந்து இறங்கி தப்பியோட முனைந்தாராம். அப்போது குவாலிஸ் வாகனத்திலிருந்தவர்கள் சுட்டதில் ராஜாராம் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலயே இறந்து விட்டாராம். போலீசார் திருப்பிச் சுட்டதில் ராஜாராமைச் சுட்ட சரவணன் என்பவர் இறந்து விட்டாராம். விசாரணை நடத்தியதில் சரவணன் தமிழ்நாடு மீட்சிப்படையைச் சேர்ந்த தீவிரவாதி என்பது தெரியவந்ததாம். இதுதான் குயிக் கன் முருகன் சொன்ன கதை.
இது போல பல்வேறு போலி என்கவுன்டர்களை நடத்தி, எந்த என்கவுண்டருமே பிரச்சினை ஆகாததாலும், எதிலுமே உரிய விசாரணை நடத்தப் படாததாலும் குயிக் கன் முருகனுக்கு நாம் யாரை வேண்டுமானாலும் சுடலாம், யாரும் நம்மை எதுவும் செய்ய முடியாத என்ற துணிச்சல் வந்து விட்டது. அந்தத் துணிச்சலின் வெளிப்பாடே ஐவர் படுகொலை.
இன்று காலை ஹெட்டைலைன்ஸ் டுடே தொலைக்காட்சி, குயிக் கன் முருகனின் பொய்யை அம்பலப்படுத்தியது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த குயிக் கன் முருகன் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஐந்து பேரின் விபரங்களை வெளியிட்டார். அவை பின்வருமாறு.
1) சந்திரிகா ரே, த/பெ கிரிபாலி ரே, மவுஜிப்பூர், ஃபதுஹா மாவட்டம், பாட்னா, பீகார்
2) ஹரீஷ் குமார், த/பெ பன்ச்சி ரே, புருஷோத்தம்பூர் டவுன் மற்றும் கிராமம், ரகோப்பூர் மாவட்டம், வைஷாலி, பீகார்
3) வினய் பிரசாத், த/பெ ஜாமூன் பிரசாத், கதவு எண் 94, பாகாப்பர் விராமம், பாகாப்பர் அஞ்சல், நலந்தா மாவட்டம், பீகார்
4) வினோத் குமார், த/பெ மாதர்நாத் ஷா, ராய்ப்பூரா, ஃபதுஹா மாவட்டம், பாட்னா, பீகார்.
5) அபய் குமார், த/பெ எண் 211, ஜி.டி.ரோடு, ஷிபுப்பூர், ஹவுரா மாவட்டம், மேற்கு வங்காளம்.
இதுதான் குயிக் கன் முருகன் நேற்று வெளியிட்ட பட்டியல். இந்த பட்டியலில் முதலில் உள்ள சந்திரிகா ரே என்ற பெயருடையவர், மேற்குவங்கத்தில் லாரி ஓட்டி வருகிறார். பட்டியலில் கடைசியாக உள்ள அபய் குமாரின் முகவரியே பொய். மற்ற மூன்று முகவரிகளிலும் அது போன்ற நபர்கள் இல்லை. புதனன்று செய்தியாளர்களை சந்தித்த குயிக் கன் முருகன் “சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்தும், ஒரு ஓட்டுனர் உரிமத்தை வைத்தும் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று அறிவித்தார். வடநாட்டிலிருந்து வந்தவர்கள் வங்கிகளை கொள்ளையடிக்க வந்தார்களா, அல்லது உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து கவுன்சிலரை தேர்ந்தெடுக்க வந்தார்களா ? இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்த புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றுதானே குயிக் கன் முருகன் அறிவித்திருக்க வேண்டும் ? ஆனால், யாரென்றே தெரியாதவர்களை சுட்டு விட்டோம் என்று எப்படி பத்திரிக்கையாளர்களிடம் அறிவிக்க முடியும் ? அதனால்தான் குயிக் கன் முருகன் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டனர் என்று அறிவித்தார்.
ஏற்கனவே நடத்திய பல்வேறு என்கவுண்டர்களைப் போல, இந்த என்கவுண்டரும் முடிந்து விடும் என்று குயிக் கன் முருகன் போட்ட திட்டம் நிறைவேறவில்லை. இறந்து போனவர்களில் நான்கு பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று குயிக் கன் முருகன் அறிவித்ததைத் தொடர்ந்து, பீகார் மாநில அரசியல்வாதிகள், கட்சி பேதமின்றி, இதைக் கண்டித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ சதானந் சிங், பீகாரிகளுக்கு மற்ற மாநிலங்களில் நேரும் சம்பவங்கள் துரதிருஷ்டமானது. பீகார் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது என்றார். பிஜேபி எம்எல்ஏ கிரிராஜ் சிங், “சென்னையில் நடந்துள்ளது கவலையளிக்கக் கூடிய விஷயம். பீகாரிகள் என்பதற்காக அவர்களுக்கு இது நடந்திருந்தால் நாங்கள் இதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்வோம்” என்றார். ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவும், அமைச்சருமான ஷ்யாம் ரஜாக், மாநில அரசு இந்தச் சம்பவத்தை உன்னிப்பக ஆராய்ந்து வருகிறது. பீகார் மாநில உள்துறைச் செயலாளர், தமிழ்நாடு உள்துறைச் செயலாளரோடு பேசியிருக்கிறார். எங்களுக்கு அறிக்கை வந்ததும் இது குறித்து முடிவெடுப்போம். இந்த விஷயம் குறித்தும், பீகாரிகளின் பாதுகாப்பு குறித்தும், நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்” என்றார்.
எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதள எம்எல்ஏ அப்துல் பாரி சித்திக்கி, கொல்லப்பட்டவர்களில் ஒருவர் உயிரோடு இருக்கிறார். பீகாரின் இமேஜ் நாசப்படுத்தப்படுகிறது. மாநில அரசு, தன்னிச்சையான புலனாய்வை நடத்தி, சட்டசபையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராசா, “ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். எப்படிக் கொல்லப்பட்டார்கள் எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பொறுத்தவரை இது மிக மிக கவலையளிக்கக் கூடிய விஷயம். இது உண்மையான என்கவுன்டரா, போலி என்கவுண்டரா என்பது குறித்து தமிழக அரசு நியாயமான விசாரணையை நடத்தும் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.
இன்று டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து மற்றும் தினமணி நாளேடுகள் இந்த என்கவுண்டரை கண்டித்து தலையங்கம் எழுதியுள்ளன. இந்த என்கவுண்டர் குறித்த எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், குயிக் கன் முருகன், இன்று இந்து நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவரது பேட்டியை அணு அணுவாக அலசுவோம்.
It has been more than 36 hours since the encounter. What is the definitive account of what happened?
Initially, we had a little information that there was suspicious activity in that area. So, we had some surveillance there. But the exact pinpoint information came around midnight, may be around 12-12.30 a.m. [on Thursday]. Once we got pinpoint information, a party went there to verify the identity of these men.
என்கவுண்டரின் என்னதான் நடந்தது என்ற கேள்விக்கு, குயிக் கன் முருகன், தொடக்கத்தில் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடைபெறுவதாக ஒரு சிறு தகவல் கிடைத்தது. அதனால் அந்த இடத்தை கண்காணித்தோம். ஆனால் 12 முதல் 12.30 மணிக்குள், மிகச் சரியான தகவல் கிடைத்தது. சரியான தகவல் கிடைத்ததும் போலீஸ் குழு அந்த நபர்களைப் பற்றி விசாரிப்பதற்காக அந்த இடத்திற்கு சென்றது.
சவுக்கின் சந்தேகம். குயிக் கன் முருகன் சார். கண்காணிப்பு (Surveillance) என்றால், மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல், ரகசியமாக வேவு பார்ப்பது. ரகசியமாக வேவு பார்ப்பதற்கு சீருடை அணிந்த போலீசார் அந்த இடத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன ? சீருடையில் இல்லாத போலீசார் அந்த இடத்துக்கு சென்றால், பொதுமக்கள் போலீசார் மொத்த இடத்தையும் 10 மணிக்கே சுற்றி வளைத்து, எங்களை விளக்கை அணைத்து விட்டு வீட்டினுள் இருக்கச் சொன்னார்கள் என்று பேட்டியளிக்கக் காரணம் என்ன ? அந்த இடத்தை கண்காணிப்பில் வைத்திருந்தோம் என்ற விபரத்தை வியாழன் அன்று மதியம் 12 மணிக்கு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லாததன் காரணம் என்ன ? பத்திரிக்கையாளர் சந்திப்பில் நள்ளிரவு தகவல் கிடைத்தது, 1 மணிக்கு காவல்துறையினர் சென்றார்கள் என்று ஏன் சொன்னீர்கள் ?
What time was this?
It must have been around 12.30 a.m. or so. And the suspects didn’t open the door. Instead of subjecting themselves to verification, they were in offensive mode.
சரியாக அது எந்த நேரம் என்ற கேள்விக்கு, 12.30 மணி இருக்கும். சந்தேகிக்கப்ட்டவர்கள் கதவை திறக்கவில்லை. காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்கு பதில், மோதும் போக்கில் இருந்தனர்.
சவுக்கின் சந்தேகம். விசாரணைக்காக செல்லும்போது, துப்பாக்கியோடு இத்தனை காவல்துறை அதிகாரிகளை ஏன் அழைத்துச் சென்றீர்கள். அவர்கள் கதவைத் திறக்கவில்லை என்றால், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, வெளியே வரும்வரை காத்திருக்கலாமே. பின்வாசல் ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் எங்கே தப்பிச் செல்ல முடியும் ? 20 ஆயுதம் தாங்கிய காவல்துறையினரை வாசலிலேயே இருக்கச்செய்தால், அவர்கள் எத்தனை நேரம் வெளியில் வராமல் இருக்க முடியும் ? ஒரு ஆறு மாதம் அப்படியே இருந்து விடுவார்களா ? பொதுமக்கள் அத்தனை பேரையும் விளக்கை அணைத்து விட்டு வீட்டுக்குள் இருக்குமாறு மிரட்டி விட்டு, அப்படி என்னதான் விசாரணை நடத்தினீர்கள் ? சாதாரண விசாரணை நடத்துவதற்கு சென்ற காவல்துறையினர் பொதுமக்களை வீட்டுக்குள் இருக்குமாறு மிரட்டியது ஏன் ?
உங்கள் கூற்றின்படியே, அவர்கள் பீகாரிகள் என்றால், அங்கே சென்ற விசாரணைக் குழுவில் எத்தனை பேருக்கு பீகாரி மொழியோ, இந்தி மொழியோ தெரியும் ? அவர்களிடம் எந்த மொழியில் விசாரித்தீர்கள் ? நீங்கள் சம்பவ இடத்துக்கு செல்லவில்லை என்பதால் அவர்களிடம் இந்தியில் விசாரணை நடத்திய அதிகாரி யார் ? அல்லது “ஏக் கிசான் ஏக் கான்வ் மேன் ரகு தாத்தா” என்று சொல்லிக் கொடுக்கும் இந்தி பண்டிட் யாரையாவது அழைத்துச் சென்றீர்களா ?
Neighbours claim that there was police presence in the Housing Board colony from 10 p.m.
As I said, we had some information. So people would have gone there to confirm. But it was not until midnight that we got the specific plot number in which the suspects were holed up.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறையினர் 10 மணிக்கே வந்து விட்டார்கள் என்று சொல்கிறார்களே… என்ற கேள்விக்கு, நான் ஏற்கனவே சொன்னது போல, எங்களுக்கு சில தகவல்கள் வந்தது. அந்தத் தகவலை சரிபார்ப்பதற்காக சிலர் சென்றிருக்கக் கூடும். ஆனால் நள்ளிரவு வரை குற்றவாளிகள் தங்கியிருக்கும் சரியான வீட்டு எண் கிடைக்கவில்லை.
சவுக்கின் சந்தேகம். இது என்ன சார் பதில் ? விசாரிப்பதற்காக சில நபர்கள் சென்றிருக்கக் கூடும் என்றால் என்ன பதில் இது. சென்றார்களா இல்லையா ? நீங்கள் கமிஷனரா இல்லையா ? சென்றார்களா இல்லையா என்ற விபரமே தெரியாமல் நீங்கள் எதற்காக கமிஷனராக இருக்கிறீர்கள் ? செல்லவில்லை என்றால் 10 மணி முதல் அந்த இடத்தில் போலீஸ் இருந்தது எப்படி ? சென்றார்கள் என்றால் இரவு 10 மணி முதல் விசாரித்து, ஒரு சிறிய குறுக்கு சந்தில், வீட்டு எண் 335 என்ற இடத்தில் நான்கைந்து வட இந்திய வாலிபர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதை கண்டு பிடிக்க 3 மணி நேரமா ? அந்த துபாய் குறுக்கு சந்தில் அப்படி என்னதான் விசாரித்தீர்கள் ? அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை கேட்டால் கூட உடனே சொல்லி விடுவார்களே ?
They claimed to have not heard the gunfight at all.
It is impossible. People right next door not hearing… it is just unbelievable. Anyway, it is for the judicial enquiry to find out. Some people did hear the firing. Their version should also be taken into account.
அருகாமையில் இருப்பவர்கள் துப்பாக்கிச் சத்தமே கேட்கவில்லை என்கிறார்களே… என்ற கேள்விக்கு…. பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கேட்காமல் இருப்பது சாத்தியமே இல்லை. சுத்தமாக நம்பமுடியவில்லை. இருந்தாலும் நீதி விசாரணையில் கண்டுபிடிக்கப் படும். ஆனால் சிலர் துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சவுக்கின் சந்தேகம். உங்களைப் போன்ற நபர்களையெல்லாம் கமிஷனராக வைத்திருக்கிறார்களே என்பதை எங்களால் கூடத்தான் நம்ப முடியவில்லை. என்ன செய்வது ? சம்பவம் நடந்த அன்று காலை 7 மணி முதல் புதிய தலைமுறை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. அந்தத் தெருவில் குடியிருந்தவர்கள் மற்றும் அருகாமையில் உள்ள வீடுகளில் இருந்தவர்களிடம் அந்தத் தொலைக்காட்சி பேட்டியெடுத்தபோது, ஒருவர் கூட, துப்பாக்கிச்சூடு நடத்திய சத்தம் கேட்டது என்று சொல்லவில்லையே எப்படி ? அத்தனை பேருமா காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். மேலும், இரவு 10 மணி முதல் அனைவரும் வீட்டை அடைத்துக் கொண்டு விளக்கை அணைத்து விட்டு உள்ளே செல்லுங்கள் என்று காவல்துறையினர் மிரட்டியதால், உள்ளே சென்றவர்கள், போலீசார் அந்த இடத்திலிருந்து செல்லும் வரை உறங்கியிருக்க வாய்ப்பில்லை. இயல்பான மனித உணர்வு, என்னதான் நடக்கிறது என்று பார்க்கவே தூண்டும். அப்படி இருக்கும் போது, ஒருவருக்குமே கேட்காமல் எப்படி அந்தத் துப்பாக்சிச் சண்டை நடைபெற்றது ? தீபாவளி கேப்பை வெடித்தால் கூட சத்தம் வருமே முருகன் சார் ?
The police party claim to have broken in through the door. Why was there no noticeable physical damage to the door?
You have a superficial understanding of breaking open a door by force. A door can be forced open without leaving a physical mark. Only by seeing the door from inside, a complete understanding will come. Even I have not gone into the apartment because the crime scene has to be preserved. But I am sure there is some damage to the door.
காவல்துறையினர், கதவை உடைத்து உள்ள சென்றதாக சொல்கிறார்கள். ஆனால் கதவுக்கு எந்த சேதமும் ஏற்பட்டதாக தெரியவில்லையே … என்ற கேள்விக்கு கதவை உடைப்பது குறித்து உங்களுக்கு சரியான புரிதல் இல்லை. வெளிப்படையாக எந்த சேதமும் ஏற்படாமல் ஒரு கதவை திறக்க முடியும். அந்தக் கதவை உள்ளேயிருந்து பார்த்தால்தான் சரியாக புரியும். குற்றம் நடந்த இடம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் நான் கூட அந்த இடத்துக்கு செல்லவில்லை. ஆனால், கதவுக்கு சேதம் இருக்கும் என்றே நம்புகிறேன்.
சவுக்கின் சந்தேகம். மிஸ்டர் குயிக் கன் முருகன்… நீங்கள் சொல்வதை ஒரு முறை நீங்களே படியுங்கள். சரி நீங்கள் சொல்வது போல கேள்வி கேட்பவர் அறிவில்லாமலேயே கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குதான் கதவை உடைப்பதைப் பற்றி நன்றாக தெரியுமே. கதவுக்கு துளி கூட சேதம் ஏற்படாமல் எப்படி உடைப்பது என்பதை அந்த நிருபருக்கு சொல்லியிருக்கலாமே… நீதி விசாரணை நடைபெறுவதால் குற்றம் நடந்த இடத்தின் தன்மையை பாதுகாக்க நானே அந்த இடத்துக்கு செல்லவில்லை என்று சொல்லும் உங்களுக்கு மட்டும், கதவு உடைக்கப்பட்டது என்று எப்படித் தெரியும் ? சேதமில்லாமலேயே கதவை உடைக்கமுடியும் என்று சொல்லி விட்டு, இறுதியாக கண்டிப்பாக கதவுக்கு சில சேதம் இருக்கும் என்று சொல்லுவது ஏன் மிஸ்டர் குயிக் கன் ? பேட்டியளிக்கும் போது நிதானத்தில்தான் இருந்தீர்களா ?
During the second bank robbery, the police had said there was some evidence that toy guns were used. But seven real guns were found. If somebody had real guns, why would they bring toy guns along for a bank heist?
Have the police seen the guns? The only ones who saw the guns during the robbery were amateurs (the bank staff and customers) who had no idea about guns at all.
இரண்டாவது கொள்ளையின் போது, கொள்ளையடித்தவர்கள் பொம்மைத் துப்பாக்கிகளை பயன்படுத்தியதற்கு ஆதாரம் உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தார்கள். ஆனால் சம்பவ இடத்தில் பல துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. உண்மையான துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், கொள்ளைச் சம்பவத்துக்கு பொம்மைத் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன …. என்ற கேள்விக்கு போலீசார் துப்பாக்கிகளைப் பார்த்தார்களா ? நிஜத் துப்பாக்கியை நேரில் பார்த்திராத அனுபவம் இல்லாதவர்கள் தான் (வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்) கொள்ளையின் போது துப்பாக்கியைப் பார்த்திருக்கிறார்கள்.
சவுக்கின் சந்தேகம். குயிக் கன் சார். கொள்ளையின் போது பயன்படுத்தப்பட்டது பொம்மைத் துப்பாக்கி என்று பொதுமக்கள் யாரும் சொல்லவே இல்லை. அதைச் சொன்னது நீங்கள்தான். வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப் பட்டவரின் படத்தை வெளியிட்டு, பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது நீங்கள் என்ன சொன்னீர்கள் தெரியுமா ? 23 பிப்ரவரி 2012 அன்று வெளியான இந்து நாளிதழில், நீங்கள் அளித்த பேட்டி வெளிவந்திருக்கிறது. “Confirming that the suspect was the one who brandished a pistol during both the robberies, the Commissioner added that a shot was fired by the robbers at the Keelkattalai incident from what is suspected to be toy gun. ‘There was some kind of a sound but nothing inside the branch was damaged and no pellets were recovered.” அந்தத் துப்பாக்கி பொம்மைத் துப்பாக்கியாக இருக்குமென்ற சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், துப்பாக்கிக் குண்டுத் துகள்களோ, வங்கியினுள் எவ்வித சேதாரமோ காணப்படவல்லை என்று நீங்கள்தான் சொன்னீர்கள். எந்த பொதுமக்கள் வந்து உங்களிடம் பொம்மைத் துப்பாக்கி என்று சொன்னார் ? நீங்கள் குயிக் கன் முருகன் தான். ஒப்புக் கொள்கிறோம். உங்களைப் போல பொதுமக்களுக்கு இந்த விபரம் தெரியுமா என்ன ? நீங்கள் சொன்னதையெல்லாம் எழுத சென்னையில் உள்ள ஆங்கிலப் பத்திரிக்கையின் சில நிருபர்கள் இருக்கிறார்கள்.
“At least one of the robbers used a toy gun or an air pistol. The dome of a light bulb that he fired at did not shatter but was only damaged,” an investigating officer said ஒரு கொள்ளையன் பொம்மைத் துப்பாக்கியை வைத்த லைட்டின் டூம் பகுதியைப் பார்த்து சுட்டிருக்கிறார். அந்த பல்ப் உடையவில்லை. ஆனால் லேசாக டேமேஜ் ஆகியிருக்கிறது என்று உங்கள் புலனாய்வு அதிகாரிதான் சொல்லியிருக்கிறார். எந்த பொதுமக்களும் சொல்லவில்லை. பிறகு பொதுமக்களை ஏன் குறை சொல்கிறீர்கள் ?
The police properly identified only one of the suspects, based on which you found the house. What about the other four? How were you so certain that they were the ones who were involved in the robbery?
But we went to the house only for verification. Did they subject themselves for verification? Which innocent person will pick up a gun and fire at the police? That night, it is true that we did not know their identity. We were not certain even about whether the person in the CCTV footage was indeed inside. But whether they were bank robbers or dacoits, someone who raises a gun against the police and civilians is a criminal. They may have been innocent for this particular case, but they had no rights to raise guns against the enforcement agency.
காவல்துறையினர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரே ஒரு நபரைத்தான் அடையாளம் கண்டு அதை வைத்துதான் அந்த வீடு கண்டறியப்பட்டது. மீதம் உள்ள நான்கு பேர் யார் ? அந்த நான்கு பேர்களும் கொள்ளையில் பங்கெடுத்தார்கள் என்பதை எப்படிச் சொல்கிறீர்கள் … என்ற கேள்விக்கு குயிக் கன் முருகன், நாங்கள் அந்த வீட்டுக்கு தகவலை சரிபார்க்கத்தான் சென்றோம். அவர்கள் எங்கள் விசாரணைக்கு ஒத்துழைத்தார்களா என்ன ? எந்த அப்பாவி துப்பாக்கியை எடுத்து போலீசாரைப் பார்த்துச் சுடுவான் ? அன்று இரவு, அவர்களை எங்களுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது உண்மை. சிசிடிவியில் கண்டுபிடித்த நபர் கூட அங்கே இருந்தாரா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், பொதுமக்களையும், காவல்துறையினரையும் நோக்கி, சுடும் அனைவருமே கிரிமினல்கள் தான். இந்த வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்களாக இருக்கலாம். ஆனால் யாருக்கும் ஒரு சட்ட அமைப்பை நோக்கி துப்பாக்கியைத் தூக்க உரிமை இல்லை.
சவுக்கின் சந்தேகம். மொத்தம் எத்தனை போலீசார் அந்த இடத்துக்கு விசாரணைக்குச் சென்றனர் என்ற விபரத்தை நீங்கள் ஏன் இதுவரை வெளியிடவில்லை ? கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரே ஒரு நபரை விசாரிக்கத்தான் இத்தனை போலீசார் அந்த இடத்திற்கு சென்றார்களா ? துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கிச் சுடும்போது, போலீசார் ஓடி ஒளியவேண்டும் என்பதை யாருமே சொல்லவில்லை. ஆனால், அவர்கள் சுட்டார்கள் என்பதை போலீசார் மட்டும்தானே மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். அவர்கள் சுட்டார்களா இல்லையா என்பதைச் சொல்ல ஒருவரும் உயிரோடு இல்லையே…. போலீசாரை நோக்கி அவர்கள் சுட்டார்களா என்பதை நேரில் பார்த்த சாட்சிகள் ஒருவர் கூட இல்லாமல் அத்தனை பேரையும் மிரட்டி வீட்டுக்குள் அனுப்பியது ஏன் ? அந்த வீட்டுக்குள் வேறொரு அறை இருந்தும், ஐந்து பேர்களில் ஒருவர் கூட மற்ற அறைக்கு செல்லாமல், அதே அறையில் போலீசார் சுடும் வரை தலையை காண்பித்துக் கொண்டு இருந்தார்களா ?
அவர்கள் சுடப்பட்ட அறையில் இருக்கும் புத்தகம் மற்றும் உடைகளைப் பார்த்தாலே வழிந்தோடும் ரத்தத்துக்கு மேல் போடப்பட்டவை என்பதை நன்றாகவே புலப்படுத்துகிறதே… “இந்த வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்களாக இருக்கலாம்” என்பதற்கு என்ன பொருள். அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை குயிக் கன் முருகனே ஒப்புக் கொள்கிறாரா ? அந்த அறையில் இரைந்து கிடக்கும் உணவுப் பொருட்களை பார்த்தால் இரவு 1 மணிக்கு அந்த சம்பவம் நடைபெற்றது போலத் தெரியவில்லையே… சாப்பிடுவதற்காக வாங்கி வந்த உணவுப்பொருட்களை இரவு 1 மணி வரை ஏன் அப்படியே வைத்திருந்தார்கள் ?
Is it normal procedure for the police to go for a verification with so many guns?
Of course. Why not? When I know they are in possession of guns, we have to be prepared, no?
சாதாரண விசாரணைக்கு இத்தனை துப்பாக்கிகளோடு போவது அவசியமா என்ற கேள்விக்கு …. … ஏன் போகக்கூடாது.. அவர்களிடம் துப்பாக்கி உள்ளது என்று தெரிந்த பிறகு நாங்கள் தயாராக வேண்டாமா ?
சவுக்கின் சந்தேகம். அவர்கள் என்பதே தவறு அல்லவா. இதற்கு முன் பதிலளித்த கேள்விக்கு சிசிடிவியில் வந்த ஒரு நபர் அந்த இடத்தில் இருக்கிறாரா என்பதே தெரியாது என்கிறார் குயிக் கன் முருகன். பிறகு எதற்காக இத்தனை துப்பாக்கிகள் ? ஒரு நபரை விசாரிக்க இத்தனை துப்பாக்கிகளோடும், இத்தனை போலீசாரோடும் போக வேண்டிய அவசியம் என்ன ? தயாராக போகவேண்டும்தான். அதற்காக இத்தனை துப்பாக்கிகளா ? இது முன்யோசனையா ? கொலை செய்ய ஆயத்தமா ?
மேலும், பொம்மைத் துப்பாக்கியை பயன்படுத்தியவர்களை விசாரிக்க இத்தனை துப்பாக்கி ஏந்திய போலீசாரா ?
So why weren’t the police wearing bullet proof vests?
For that, you need time. And we don’t supply the bullet proof jackets to the stations and all. We don’t go to all places equipped with bullet proof jackets.
காவல்துறையினர் துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவசம் ஏன் அணியவில்லை என்ற கேள்விக்கு.. அதற்கு நேரம் ஆகும். மேலும் காவல்நிலையங்களுக்கு துப்பாக்கி குண்டு துளைக்காத கவசங்கள் வழங்கப்படவில்லை. எல்ல இடங்களுக்கும் துப்பாக்கி குண்டு துளைக்காத கவசங்களை எடுத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்கிறார்.
சவுக்கின் சந்தேகம். துப்பாக்கி குண்டு துளைக்காத கவசம் எடுத்துச் செல்லமாட்டார்கள் ஆனால், துப்பாக்கிகளை மட்டும் எடுத்துச் செல்வார்களா ? காவல்நிலையங்களுக்கு துப்பாக்கி குண்டு துளைக்காத கவசம் வழங்கப்படவில்லை என்றால், துப்பாக்கியோடு விசாரணைக்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவு மட்டும் வழங்கப்பட்டுள்ளதா ? துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவசம் எடுத்துச் செல்ல நேரம் ஆகும் என்றால், ஒரு சாதாரண விசாரணைக்கு இப்படி அவசரப்படவேண்டிய காரணம் என்ன ? சிசிடிவி வீடியோவில் இருந்த ஒருவன் அந்த இடத்தில் இருக்கிறான். அவனை பிடிக்க வேண்டும் என்றால், இரண்டு ஏட்டையாக்களை அனுப்பினால் கச்சிதமாக தூக்கி வந்திருப்பார்களே…. அவ்வாறு செய்யாமல் ஏன் இப்படி அவசரப்படவேண்டும் ? நேரம் ஆகக்கூடாது என்று அவசரப்படும் அளவுக்கு உயிர்போகும் காரியமா இது ?
Are you certain you got the right men?
Yes. We have confirmation from bank officials who have seen them. We also have secondary confirmation from people who deal with the purchase and sale of second-hand motorcycles. One day before both the bank robberies, the suspects had bought a second-hand bike, which they sold back to the same dealer a few days after the robbery. The dates match the dates of offence.
நீங்கள் சரியான நபர்களைத்தான் பிடித்திருக்கிறீர்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு…. ஆம். அவர்களைப் பார்த்த வங்கி அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள். பழைய மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்கும் நபர்களும் அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கியதை உறுதி செய்திருக்கிறார்கள். கொள்ளைச் சம்பவம் நடந்ததற்கு முதல் நாள், ஒருவன் ஒரு பைக்கை வாங்கியிருக்கிறான். கொள்ளைக்கு பிறகு அந்த பைக்கை விற்றிருக்கிறான். இரண்டு தேதிகளும் ஒத்துப் போகின்றன.
சவுக்கின் சந்தேகம். தலையில் சுடப்பட்டு இறந்து போனவர்கள், கொள்ளையில் ஈடுபடவில்லை என்று வங்கி அதிகாரிகள் சொன்னால் அதை அப்படியே பதிவு செய்து விடுவீர்களா என்ன ? சரி அப்படியே வைத்துக் கொள்வோம். வங்கி ஊழியர்கள் அத்தனை பேரையும் அடையாளம் காட்டினார்கள் என்றால், 5 பேரும் கொள்ளையடிக்கும் சமயத்தில் வங்கிக்குள் வந்து, கொள்ளையடித்து விட்டு பொறுமையாக நடந்து சென்றார்களா ? இவ்வளவு கவனமாக திட்டமிட்டு வங்கிகளை கொள்ளையடிப்பவர்கள் வாகனம் இல்லாமல் கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை. 5 பேரும் ஒன்றாக உள்ளே வந்தார்கள் என்றால், அவர்கள் வருவதற்கு பயன்படுத்திய வாகனம் எங்கே ? அந்த வாகனத்தின் ஓட்டுனர் எதற்காக வங்கி உள்ளே வர வேண்டும் ? அப்படி ஓட்டுனர் வங்கி உள்ளே வரவில்லையென்றால் அந்த நபர் எங்கே ? அவரைப் பற்றி விசாரித்து கண்டுபிடிக்கும் முன் அத்தனை பேரும் சுடப்பட்டது ஏன் ? அப்படியே அத்தனை பேரும் வங்கி உள்ளே வந்து கொள்ளையடித்து விட்டு, பொறுமையாக வெளியே சென்றார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, விசாரணைக்காக வரும் போலீசாரை எதற்காக அவசரப்பட்டு சுட வேண்டும் ?
நீங்களே சுட்டு விட்டு, நீங்களே விசாரணையும் நடத்தினால் எப்படி உண்மை வெளியில் வரும் ? குயிக் கன் முருகன் நேற்று ஒரு கதை எழுதி வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால், பழைய மோட்டார் சைக்கிள்கள் வாங்கி விற்கும் தொழிலில் உள்ள இருவர், டிவியைப் பார்த்து விட்டு, நேரடியாக குயிக் கன் முருகன் முன் வந்து ‘சார் டிவியில் பார்த்தவர்கள் எங்களிடம் பைக் வாங்கினார்கள்’ என்று சொன்னார்களாம். உடனே குயிக் கன், நீங்கள் நேரடியாக ஜிஎச்சுக்கு சென்று உடல்களை நேரடியாக பார்த்து விட்டு அடையாளம் சொல்லுங்கள் என்றாராம். அவர்களும் பார்த்து விட்டு, இவர்கள் எங்களிடம் பைக் வாங்கினார்கள் என்று சாட்சி சொன்னார்களாம். பைக் வாங்கி விற்கும் தொழிலில் உள்ள யாராவது இப்படி தானாக முன்வந்து சொல்வார்களா என்பது உங்களுக்கே தெரியும்.
சரி.. அதை அப்படியே உண்மை என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு பைக் வாங்கி அதில் 5 கொள்ளையர்களும் பயணித்து வங்கிகளை கொள்ளையடித்தார்களா ? இல்லை நடந்து சென்று கொள்ளையடித்தார்களா ? ஒரு பைக்கில் இருவர் மட்டுமே செல்லமுடியும் என்பதால், இரண்டு பேர் மட்டும்தான் கொள்ளையடித்தார்களா ? அப்படியென்றால் 5 பேரை ஏன் கொல்ல வேண்டும் ?
கீழ்கட்டளை வங்கியில் கொள்ளையடிக்க சிகப்பு நிற மாருதி வேன் பயன்படுத்தப்பட்டது என்று முதலில் அறிவிக்கப்பட்டது ஏன் ? சிகப்பு நிற மாருதி வேன் வைத்திருக்கும் சவுக்கின் நண்பரிடம், நேற்று உங்கள் வண்டி எங்கே இருந்தது என்று விசாரித்தது ஏன் ? தற்போது அந்த சிகப்பு நிற மாருதி எங்கே ? சிகப்பு நிற மாருதி பத்திரமாக இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது ? அதை இறந்து போனவர்கள் பயன்படுத்தினார்கள் என்றால் ஏன் வேளச்சேரியில் அது இல்லை ? தானாக முன்வந்து உங்களிடம் அடையாளம் சொல்லும் வியாபாரிகளைப் போல, சிகப்பு நிற மாருதியை விற்றவர்கள் ஏன் இதுவரை சொல்லவில்லை ? அது திருடப்பட்ட வாகனம் என்றால் ஏன் இது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை ?
Was it inevitable that all five of them should die?
The question of when to stop and where to stop is a bit complex. I would have loved to have all the five alive. It would have helped us recover the remaining property. It would have helped us to know what other incidents they have been involved in. We could have probed if they were part of a national-level network.
அத்தனை பேரும் இறந்ததை தவிர்த்திருக்க முடியாதா ? என்ற கேள்விக்கு … எப்போது நிறுத்த வேண்டும் எங்கே நிறுத்த வேண்டும் என்ற கேள்வி சிக்கலானது. அவர்கள் ஐந்து பேரும் உயிரோடு இருப்பதையே விரும்புகிறேன்… மீதம் உள்ள பணத்தை மீட்பதற்கு அது உதவியிருக்கும். இவர்கள் இது வரை செய்த இது போன்ற மற்ற குற்றங்களை கண்டுபிடிக்க அது உதவியிருக்கும். அவர்கள் தேசிய அளவில் இது போன்ற குற்றங்களில் பங்கெடுத்திருக்கிறார்களா என்பதும் தெரிந்திருக்கும்.
சவுக்கின் சந்தேகம். குயிக் கன் சார்…. உங்க பினிஷிங் நல்லாத்தான் இருக்கு. ஓபனிங்கே சரியில்லையே…. சட்டிய கவுத்துப் போட்டுட்டு எப்படி சார் சாம்பார் வைக்கிறது ? (அருமையா இருக்கு இல்ல) எப்போது நிறுத்த வேண்டும் எங்கே நிறுத்த வேண்டும் என்ற கேள்வி சிக்கலானதே அல்ல. நீங்கள் தொடங்காமல் இருந்திருந்தால் நிறுத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது. மேலும் நீங்கள் மட்டும்தான் தொடங்கியும் முடித்தும் உள்ளீர்கள். அவர்கள் தொடங்கவே இல்லை.
Is an encounter killing any form of justice at all?
Absolutely not. It is a last resort.
என்கவுன்டர் கொலைகள் நீதி வழங்கும் ஒரு வழியா என்ற கேள்விக்கு, நிச்சயமாக இல்லை. அது கடைசி வழி என்கிறார் குயிக் கன் முருகன்.
சவுக்கின் சந்தேகம். இப்போதான் குயிக் கன் முருகன் உண்மையை பேசியிருக்கிறார். என்கவுன்டர் கடைசி வழியாக மட்டும் எப்படி இருக்க முடியும் ? என்கவுன்டர் என்பது, ஒருவர் காவல்துறையினரை நோக்கி சுடும்போது திருப்பிச் சுடுவது. காஷ்மீரில் ஒரு தீவிரவாதி ராணுவத்தினரை நோக்கிச் சுடுகையில் பதிலுக்கு இவர்கள் சுடும்போது ராணுவ வீரரோ, தீவிரவாதியே இறந்தால் அதுதான் என்கவுன்டர். மும்பை ஓட்டலில் தீவிரவாதிகளும் போலீசாரும் சண்டையிட்டது என்கவுன்டர்.
என்கவுன்டர் என்பது இயல்பாக நடப்பது. அதை கடைசி வழி என்று குயிக் கன் முருகன் சொல்லும் போதே, அவர் மனதில் இப்படித் தீர்ப்பு வழங்கும் எண்ணம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. இது போன்ற நபர் இருக்க வேண்டிய இடம், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் அல்ல. புழல் சிறை. முதல் வழியோ, கடைசி வழியோ, ஜனநாயக நாட்டில் என்கவுன்டர் நீதி வழங்கும் வழியாக ஒருபோதும் ஆக முடியாது.
இன்று வெளியான ஜுனியர் விகடனில் வந்திருக்கும் செய்தி, குயிக் கன் முருகன் புழல் சிறைக்கு செல்லவேண்டியவரே என்பதை உறுதி செய்கிறது. “சென்னை மாநகருக்கு கமிஷனராக திரிபாதி நியமிக்கப்பட்ட உடனேயே, ‘அதிரடி என்கவுன்ட்டர்’களை எதிர்பார்த்தது காக்கி வட்டாரம். அந்த அளவுக்கு அவர் பிரபலம். ஆனால், உடனடியாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் தனக்கு வாகாக செயல்படக்கூடிய ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ அதிகாரிகளை சென்னை வட்டாரத்துக்குள்ளேயே நியமிக்கும்படி மேலிடத்தில் கேட்டு ஒப்புதல் வாங்கிவிட்டார் திரிபாதி. எந்நேரமும் அந்த அதிகாரிகளை தயார் நிலையிலேயே வைத்திருந்தார். ரவுடிகளின் பட்டியல் ஒன்றையும் அவர் ரெடியாக வைத்திருந்தாராம். உடனடியாக பெரிய இடத்தில் இருந்து ஏனோ ஒப்புதல் கிடைக்கவில்லை. வரிசையாக செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்தபோது, ‘சமூக விரோதிகளுக்கு குளிர்விட்டுப் போகிறது. ஏதாவது செய்ய வேண்டும்’ என்று கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கேட்டு, அது மறுக்கப்பட்டதாம். இப்போது, வங்கிக் கொள்ளைக் கூட்டத்தை ‘லொகேட்’ செய்ததுமே, ஏரியா போலீஸ் அதிகாரிகளைத் தவிர வட சென்னைப் பகுதியில் இருந்து தனக்கு வாகான அதிகாரிகளை அழைத்து விறுவிறுவென ஆலோசித்த கமிஷனர், அவர்களையும் கூடச் சேர்த்துக்கொண்டே களம் இறங்கினாராம். ”கொள்ளைக் கூட்டத்தின் மீது பாய்ந்த முதல் குண்டு கமிஷனர் துப்பாக்கியில் இருந்துதான் வந்தது” என்றும் தகவல் சொல்கிறார்கள்.
”சுட்டு முடித்த உடன் பெரிய இடத்துக்கு அந்த நள்ளிரவிலும் உடனே தகவல் சொன்னார் கமிஷனர். ‘குட் ஜாப்’ எனறு அதற்குப் பாராட்டு வந்தது” என்கிறார்கள் காக்கிகளில் சிலர். “
என்கவுன்டர் விவகாரம் பூமராங்காகி திரும்புகிறது என்பதை உணர்ந்த குயிக் கன் முருகன், இறந்தவர்கள் நக்சலைட்டுகள் என்று புதி புருடாவை வெளியிட்டிருக்கிறார். இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் திரிபாதியின் நண்பர் செல்வராஜ் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி பார்த்தால், கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் வினோத் குமார் ஒரு நக்சலைட்டாம்.
இவனுங்க புருடாவுக்கு ஒரு அளவே இல்லையா…..
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் சிபிஐ விசாரணை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல வழக்கு வரும் செவ்வாயன்று விசாரணைக்கு வருகிறது. பார்ப்போம். நீதிமன்றம் என்ன செய்கிறது என்று ?