ஐந்து மனித உயிர்களின் விலை, 14 லட்சம் ரூபாய் தானா ? என்ற தலைப்பில் இன்றைய தினமலரில் கட்டுரை ஒன்றை “குயிக் கன் முருகன்” எழுதியுள்ளார். குயிக் கன் முருகன் “நமது சிறப்பு நிருபர்“ என்ற பெயரில் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.
இனி தினமலர் கட்டுரையும், சவுக்கின் பதிலும்.
ஐந்து மனித உயிர்களின் விலை, 14 லட்சம் ரூபாய் தானா? எல்லாருக்கும் இந்தக் கேள்வி தான். “அதற்காக கொன்றுவிடுவதா? இவர்கள் தான் கொள்ளைகாரர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படியானால் சட்டம் எதற்கு?’ என, துணைக் கேள்விகள் வேறு.
மனித உரிமைச் சங்கங்கள் அமைத்து, நேற்று வரை, முனைந்து செயல்பட வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, வாழைப் பழத்தைக்கொடுத்து, அதை உரித்தும் கொடுத்தது மாதிரி ஆகிவிட்டது வேளச்சேரி, “என்கவுன்டர்’ சம்பவம். “என்கவுன்டர்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, “எதிர்பாரா முறையில் பகைமையோடு எதிர்த்து நிற்றல்’ என அர்த்தம் சொல்கிறது அகராதி. ஆனால், 10 ஆண்டுகளாக, “என்கவுன்டர்’ என்ற சொல்லே போய், “போலி என்கவுன்டர்’ என்பது தான் பிரபலமாகிவிட்டது.
மனித உரிமைக் சங்கங்கள் அமைத்து செயல்பட வழியில்லாமல் இருப்பவர்கள் என்கவுன்டர்களைப் பற்றி பேசுவதில்லை. தொடர்ச்சியாக எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ, அதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர்களே இந்த என்கவுன்டர்களுக்கு எதிராக பேசுகிறார்கள். கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சிக்கி, நீதிபதியோடு பேரம் பேசிய “திருட்டுச் சாமியார்” ஜெயேந்திரரின் மனித உரிமைகள் மீறப்பட்டால் அவருக்காகவும் இந்த மனித உரிமைச் சங்கங்கள் அமைத்துச் செயல்படுபவர்கள் குரல் கொடுப்பார்கள். நடிகைகள் அத்தனைபேரும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டு விட்டு, திரைத்துறையினர் வெகுண்டெழுந்து குரல் கொடுத்ததும், அது தொடர்பாக தாக்கல் செய்த வழக்கை நேரடியாக சந்திக்க துணிச்சல் இல்லாமல் ஓடி ஒளிந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் லட்சுமிபதி கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களின் கைது சட்டபூர்வமாக செய்யப்பட வேண்டும் என்றும் இந்த மனித உரிமைச் சங்கங்கள் குரல் கொடுத்திருக்கும்.
விகடன் அலுவலகத்தை அடித்து நொறுக்குவோம் என்ற அவதூறான விளம்பரத்தை பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிட்ட கிருஷ்ணமூர்த்தி மற்றும் லட்சுமிபதியின் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் இந்த மனித உரிமைச் சங்கங்கள் குரல் கொடுத்திருக்கும். மனித உரிமைகள் என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொது, அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றே இந்த மனித உரிமைச் சங்கங்கள் போராடுகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் என்று கருதும் தினமலர் நிர்வாகம் போல இந்த மனித உரிமைச் சங்கங்கள் செயல்படுவதில்லை.
என்கவுன்டர் என்ற சொல்லே போலி என்கவுன்டர் என்று மாறிப்போனதற்கு காவல்துறையினரே காரணம். 1998 முதல் 2012 வரை காவல்துறை நடத்திய என்கவுன்டர்களில் 118 பேர் இறந்துள்ளனர். இந்த அத்தனை என்கவுன்டர்களும் போலி என்கவுன்டர்களாக இருக்கும் போது, என்கவுன்டர் என்பது போலி என்கவுன்டராகத்தானே இருக்க முடியும் ?
இந்த, “போலி என்கவுன்டரில்’ இரண்டு வகை உண்டு. ஒன்று, எந்தத் தப்பும் செய்யாத அப்பாவிகளை சுட்டுக் கொல்வது; இரண்டாவது, உண்மையான குற்றவாளிகளைக் கொன்றுவிட்டு, தற்காப்புக்காக சுட்டோம் எனக் கூறுவது. வேளச்சேரி என்கவுன்டரைப் பொறுத்தவரை, முதல் குற்றச்சாட்டுக்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், கொல்லப்பட்ட ஐந்து பேரும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. நேரடி சாட்சிகள் இருக்கின்றன. பணத்தை இழந்த வங்கி மேலாளர்கள் மற்றும் வீடியோ வழங்கிய மேலாளர்களின் வாக்குமூலங்கள் இருக்கின்றன.
வழக்கமாகவே தினமலர் பொய்யையும் புரட்டையும், இஷ்டத்துக்கு அள்ளி விடும் என்றாலும், இந்தக் கட்டுரையில் உள்ளது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும். “ஏனெனில், கொல்லப்பட்ட ஐந்து பேரும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன.” கொல்லப்பட்ட ஐந்து பேரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதற்காக வீடியோ ஆதாரங்கள் இருந்தால், அதை குயிக் கன் முருகனிடம் கொடுத்திருக்கலாமே… எதற்காக இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று மழுப்புகிறார் ? நாளை ஒரு வேளை சிபிஐ விசாரணைக்கு உத்தவிடப்பட்டால், இந்தக் கட்டுரையின் நகலை இணைத்து, அந்த “நமது சிறப்பு நிருபரை” “சிறப்பாக” விசாரிக்கச் சொல்லி சவுக்கு மனு கொடுக்கும்.
இவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்பதற்கு நேரடி சாட்சிகளான வங்கி ஊழியர்களை யாருடனும் பேசக்கூடாது என்று காவல்துறையினர் தடை போடுவது ஏன் ? காவல்துறையினர் வழங்கும் வாக்குமூலங்களைப் பற்றி நமக்குத் தெரியாதா ? நாளை ஜெயலலிதா உத்தரவிட்டால், தினமலர் உரிமையாளர் லட்சுமிபதி 50 கோடி ரூபாய் நிலமோசடியில் ஈடுபட்டார் என்று நூறு வாக்குமூலங்களை காவல்துறையினர் தயார் செய்வார்கள்.
இந்தப் பிரச்னையில், இரண்டாவது வகையான குற்றச்சாட்டுக்குத் தான் வாய்ப்பிருக்கிறது. குற்றவாளி என நன்றாகத் தெரிந்த பின், அவர்களை என்கவுன்டர் செய்து விடுவது, உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ள முறை தான். இதற்கு காரணம், கொலை வெறி இல்லை. மாறாக, பழைய குற்றவாளிகளுக்கு மட்டுமின்றி, அடுத்து குற்றம் செய்யப்போகிறவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.
உலகம் முழுவதும் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது வழக்கத்தில் இருக்கிறதா ? அப்படியே இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். இனி குற்றம் செய்யப் போகிறவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக சுட்டுக் கொன்றோம் என்று குயிக் கன் முருகன் சொல்லட்டுமே… எதற்காக தற்காப்பு தங்கக் காப்பு என்று புளுகிக் கொண்டு இருக்கிறார். கடந்த பத்தாண்டுகளில் நடந்த நூற்றுக்கும் மேலான என்கவுன்டர்கள் குற்றவாளிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்றால், தமிழகத்தில் குற்றங்களே நடக்கக் கூடாதே… ஏன் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன ?
மேலும், முன்பெல்லாம் என்கவுன்டர் என்பது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் வீரதீர பிரதாபப் பட்டியலில் சேர்ந்து வந்தது. பதவி உயர்வும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இப்போது, அதெல்லாம் இல்லை. வழக்கும், விசாரணையும் தான் போலீஸ் அதிகாரிகளுக்குப் பரிசாகக் கிடைக்கின்றன. இது நன்கு தெரிந்தும், ஒரு என்கவுன்டருக்கு போலீசார் துணிவரா என்பது தான் அடிப்படைக் கேள்வி.
துணிவார்கள் என்பதே இதற்கு பதில். கடந்த பத்தாண்டுகளில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட என்கவுன்டர்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. பல போலி என்கவுன்டர்களை நிகழ்த்திய குயிக் கன் முருகன், சென்னை மாநகர கமிஷனராக்கப்பட்டு கவுரவிக்கப் பட்டிருக்கிறார். வெங்கடேச பண்ணையாரை அதிகாலை வேளையில் சுட்டுக் கொன்ற எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்ற அதிகாரியை, அவர் மனைவி ராதிகா செல்வியே முயற்சித்தும் தண்டிக்க முடியவில்லை. தற்போது வீரதீர பிரதாபப் பட்டியலில் இந்த கொலைகாரர்களை சேர்க்காமல் இருப்பதற்கான காரணம், என்கவுன்டரில் சந்தேகம் இருந்தால், விருதுகள் வழங்கக் கூடாது என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலே. ஒரே ஒரு ஐபிஎஸ் அதிகாரியை, குஜராத்தில் சிறையில் அடைத்தது போல கைது செய்து சிறையிலடைத்தால், எப்படி போலி என்கவுன்டர்கள் நடக்கிறது என்று பார்ப்போம். ஆட்சியாளர்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் வரை, இந்தக் கொலைகாரர்களின் கொலைக்களம் பரவிக்கொண்டேதான் இருக்கும்.
அந்த விசாரணையும் கூட, போலீசாரால் நடத்தப்படுவதில்லை. மாஜிஸ்திரேட் மூலம் தான் நடத்தப்படுகிறது. “நீதித்துறை மீது நம்பிக்கையில்லாமல் சுட்டுக் கொல்கின்றனர்’ என புகார் கூறுபவர்களுக்கு, அதே நீதித்துறையின் அங்கமான மாஜிஸ்திரேட்கள் மீது நம்பிக்கை இல்லையா?
நீதித்துறையின் அங்கமான மாஜிஸ்திரேட்டுகள் மீது நம்பிக்கை இல்லைதான். இந்த மாஜிஸ்திரேட்டுகளில் 95 சதவிகிதம் காவல் துறையினரின் அடிமைகள். தங்கள் வீட்டுக்கு காய்கறி வாங்கிக் கொடுப்பதிலிருந்து சினிமா டிக்கெட்டுகள் வாங்கித் தரும் வரை காவல்துறையினரை நம்பி இருப்பவர்கள். மாஜிஸ்திரேட்டுகள் சட்டபூர்வமாக உண்மையில் நடப்பார்களேயானால், காவல்துறையின் கட்டுப்பாட்டில் அடி வாங்கி கை கால் உடைந்து ரிமாண்டுக்கு அழைத்து வருபவர்களை ரிமாண்ட் செய்யவே மாட்டர்கள். முதலில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றே உத்தரவிடுவார்கள். கை கால் உடைந்து ரிமாண்டுக்கு வருபவரிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்ற சம்பிரதாயமான கேள்விகளை கேட்டு, அவர் கீழே விழுந்து விட்டேன் என்று பயத்தில் சொல்லும் பொய்யை அப்படியே பதிவு செய்பவர்கள்தான் 95 சதவிகித மாஜிஸ்திரேட்டுகள். காவல்துறையினர் அத்தனை பேரையும் வெளியில் அனுப்பி விட்டு, தனியே அந்தக் குற்றவாளிகளிடம் கேள்வி கேட்பார்களேயானால், அடி வாங்கியவர்கள் உண்மையைச் சொல்லுவார்கள். இதைச் செய்யாத மாஜிஸ்திரேட்டுகள் விசாரணை நடத்தினால், அது குயிக் கன் முருகன் நடத்தும் விசாரைணையே…
கொள்ளையர்களைப் பற்றி கவலைப்படும் மனித உரிமை ஆர்வலர்கள் யாரும், அந்தப் பணத்தை இழந்த பொதுமக்களைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
பணத்தை இழந்த பொதுமக்களைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லுவது தவறு. வங்கிகளில் சென்று கொள்ளையடிக்கும் இந்தக் கொள்ளையர்களை விட மோசமான கொள்ளையர்கள் யார் தெரியுமா ? கொள்ளையர்களிடமிருந்து மீட்ட நகையையும் பணத்தையும் அவர்களிடமிருந்து பறிக்கும் இந்த காவல்துறையினர்தான். வீட்டிலிருந்து நகையையோ, பணத்தையோ பறிகொடுத்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். 90 சதவிகித நிகழ்வுகளில் காவல்துறையினர் முழுமையான நகைகளை பறிகொடுத்தவர்களிடம் சேர்ப்பதே இல்லை. சவுக்கு சிறையில் இருந்த 2008 ஜுலை மாதத்தில் நடந்த ஒரு குற்றம், கோயம்பேட்டில் தக்காளி வியாபாரி ஒருவரிடமிருந்து 60 லட்ச ரூபாயை கொள்ளையடித்த வழக்கு. அவர் தக்காளி வியாபாரி இல்லை. அது ஹவாலா பணம். ஹவாலா பணம் என்று தெரிந்தே கொள்ளையடித்தாக்ள். இந்தக் குற்றம் உடனடியாக கண்டுபிடிக்கப் பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து 60 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் கணக்கு காண்பித்த தொகை எவ்வளவு தெரியுமா ? 17 லட்சம். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞன் சவுக்கோடு ஒரே அறையில் புழல் சிறையில் இருந்தான். அப்போது அண்ணா நகர் துணை ஆணையராக இருந்த அதிகாரி, இவன் காவல்நிலையத்தில் இருக்கும் போதே, கைப்பற்றப்பட்ட பணத்திலிருந்து, பணத்தை எடுத்துச் சென்றதை இவன் பார்த்திருக்கிறான். இதில் யார் பெரிய கொள்ளைக்காரர்கள் ?
மனித உரிமை என்பதே, கிரிமினல்களுக்குத் தான் சொந்தம்; சிவிலியன்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம் போல பேசுகின்றனர்.
மனித உரிமை சிவிலியன்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் என்று பேசவில்லை. சிவிலியன்களின் மனித உரிமைகளுக்கு பாதிப்பு வருவதில்லை. காவல்துறையால் கைது செய்யப்படுபவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாலேயே அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம். குற்றவாளிகளை தண்டியுங்கள். ஆனால் சட்டத்தின் பாற்பட்டு தண்டியுங்கள். சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளை மதியுங்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தை மீறுவதால், நீங்களும் சட்டத்தை மீறாதீர்கள் என்றே கூறுகிறோம்.
இந்த என்கவுன்டரில் எழுப்பப்படும் சந்தேகங்களும், அவற்றுக்கான பதில்களும்:
* குற்றத்தை புலன்விசாரணை செய்ய போலீசார் விரும்பவில்லை. சந்தேகப்படும் நபர்களை கொல்லத்தான் நினைக்கின்றனர். அப்படியானால், போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவாவதே இல்லையா? கோர்ட்கள் காற்றாடுகின்றனவா?
எல்லா குற்றங்களையும் போலீசார் புலன் விசாரணை செய்ய விரும்பவில்லை என்பது உண்மைதான். எதற்கு கைது செய்து, நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி, வழக்கு நடத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும் ? இது எளிதான வழி ஆயிற்றே என்றுதான் சில காவல்துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள். பெரும்பாலானோர் அவ்வாறு நினைப்பதில்லை. என்கவுன்டர்கள் நடந்தால், கூப்பாடு போட்டு, வழக்கு போடும் இந்த மனித உரிமைக்காரர்களினால்தான் என்கவுன்டர்கள் தொடர்ந்து நடைபெறுவதில்லை. இதை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருந்தால், நிச்சயமாக என்கவுன்டர்கள் தங்கு தடையில்லாமல் நடைபெறுகின்றன.
* கொலையைச் செய்துவிட்டு, தற்காத்துக் கொள்வதற்காக இதைச் செய்ததாகக் கூறுகின்றனர். தற்காப்புக்காக நடந்தது தான் என எப்போது நம்புவர்? போலீசாரிலும் ஐந்து பேர் இறந்த பிறகா? எனில், கொள்ளையர்களின் உயிர் முக்கியம்; போலீசாரின் உயிர் துச்சமா?
தற்காப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுப்பதே காவல்துறையினருக்கு சிக்கல். தற்காப்பு என்றாலே அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், இவர்கள் தற்காப்புக்காக சுட்டோம் என்பதை நீதிமன்ற விசாரணையின் மூலமாகவே முடிவு செய்ய வேண்டும். குயிக் கன் முருகன் சொல்வதை வைத்து முடிவு செய்ய முடியாது. போலீசாரின் உயிர் துச்சம் என்று யாருமே சொல்லவில்லையே. போலீசாரின் உயிரைப் போல கொள்ளையர்களின் உயிரும் முக்கியம்தானே… அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 அனைவருக்கும்தானே “வாழும் உரிமையை” வழங்குகிறது. தண்டனையாக ஒருவர் உயிரைப் பறிக்க வேண்டும் என்றால் அது சட்டத்தின் பாற்பட்டல்லவா நடக்க வேண்டும் ? கீழமை நீதிமன்றம், அதன் பிறகு உயர் நீதிமன்றம், அதன் பிறகு உச்சநீதிமன்றம், அதன் பிறகு உச்சநீதிமன்றத்தின் மறு ஆய்வு, அதன் பிறகு ஆளுனரின் கருணை மனு, அதன் பிறகு குடியரசுத் தலைவரின் கருணை மனு என்று இத்தனை வரையறைகளை வைத்திருப்பது, ஒருவர் உயிரை பறிக்கும் முன், சந்தேகத்திற்கு இடமற அவர் குற்றம் நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத் தானே… ? துப்பாக்கியை வைத்திருப்பதால் சுட்டு விட்டால் பிறகு இந்த நீதிமன்றங்கள் எதற்காக ? குயிக் கன் முருகனே எப்படி நீதிபதியாக முடியும் ?
* “வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிந்த மொழியில் எச்சரிக்கை செய்யப்பட்டதா?’ எனத் தெளிவாகக் கூறப்படவில்லை. போலீசார், ஆங்கிலத்தில் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரி. கொள்ளையர்கள் வட மாநிலத்தவர்கள். காவல் துறையில் சிலருக்கு இந்தி, ஆங்கிலம் தெரிந்திருக்கலாம். ஆனால், அதே கொள்ளையர்கள் உகாண்டாவையோ, ருவாண்டாவையோ சேர்ந்தவர்களாக இருந்தால், “துபாஷி’ வரும் வரை காத்திருக்க வேண்டுமா?
சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஒரு ஏடிஎம் காவலாளி கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒரு நாள் நள்ளிரவு 12 மணிக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றபோது, அவர் கார்டு மாட்டிக் கொண்டது. அதை எப்படியாவது எடுக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சிக்கும் போது, ஏடிஎம் காவலாளி திருடன் என்று நினைத்து அவரோடு சண்டையிடுகிறார். வார்த்தை முற்றி காவலாளி அந்த மணிப்பூர்வாசியை அடித்து விடுகிறார். மணிப்பூர் வாசி கத்தியை எடுத்து குத்தி விடுகிறார். இதில் காவலாளி இறந்து விடுகிறார். இந்தக் கொலை நடந்ததற்கான ஒரே காரணம் மொழி. மணிப்பூர்வாசிக்கு இந்தி ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழி தெரியாது. காவலாளிக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. என்னுடைய கார்டு மாட்டிக்கொண்டது, எடுக்கிறேன் என்பதை காவலாளி புரிந்து கொள்ளாமல் நடந்த சண்டையே மரணத்தில் முடிந்தது.
மாஜிஸ்திரேட்டுகள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று எழுதும் தினமலர், இந்த மணிப்பூர் காரரின் வழக்கு நீதிமன்றத்தில் எந்த முறையில் விசாரணை நடந்தது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இவர் மாஜிஸ்திரேட் கூட இல்லை. மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள செஷன்ஸ் நீதிபதி. தமிழ் ஒரு வார்த்தை கூட தெரியாத அந்த மணிப்பூர்காரருக்கு எதிரான வழக்கில் 22 சாட்சிகளின் வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்திருந்தார். வழக்கு முடிவடையும் கட்டத்தை வந்தடைந்தபோதுதான் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் கவனத்துக்கு இந்த வழக்கு வந்தது. இதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அத்தனை சாட்சிகளையும், மொழிபெயர்ப்பாளரை வைத்து, மறு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவும் போட்டது. இதுதான் மாஜிஸ்திரேட்டுகளின் லட்சணம்.
காவல்துறையினர் வேளச்சேரிப் பகுதிக்கு சென்றது விசாரணைக்கு. விசாரிக்கப்படும் நபர் உகாண்டாவையோ, ருவாண்டாவையோ சேர்ந்தவர்களாக இருந்தால் விசாரணைக்கு செல்லும் போது, உகாண்டா மொழியோ, ருவாண்டா மொழியோ தெரிந்தவர்களை அழைத்துச் செல்லத்தான் வேண்டும். ருவாண்டா நாட்டுக்காரன் என்பதால் துப்பாக்கியை மட்டும் எடுத்துக் கொண்டு போய் சுடக்கூடாது.
* மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் போலீசார் நுழைந்து, ஐந்து இளைஞர்களை கொன்றுள்ளனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியைத் தேர்ந்தெடுத்தது கொள்ளையர்கள் தானே தவிர, போலீசார் இல்லை. அவர்கள், அங்கு தங்கினர்; இவர்கள் அங்கு சென்றனர்.
மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நுழைந்து போலீசார் ஐந்து இளைஞர்களைக் கொன்றார்களா, இல்லை வேறு பகுதியில் கொன்று விட்டு, மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் உடலைப் போட்டார்களா என்பதை சிபிஐ விசாரணைதான் முடிவு செய்ய வேண்டும்.
* வீட்டில் இருந்த “டிவி’ மற்றும் வாஷிங் மிஷினில் தோட்டா துளைத்ததற்கான தடயம் எதுவும் இல்லை. வேறு எங்கெங்கு எல்லாம் தோட்டா துளைத்திருந்தால், இதை ஒரிஜினல் என்கவுன்டர் என ஒப்புக்கொள்வர்? என்கவுன்டரில், கொள்ளையர்களின் உயிர் தான் குறியாக இருக்க முடியுமே தவிர, சுவரோ, “டிவி’ மற்றும் வாஷிங் மிஷினோ அல்ல.
அடே முட்டாள் தினமலரே…. ஒரிஜினல் என்கவுன்டராக இருந்தால் இயல்பாக டிவியிலும், வாஷிங் மிஷினிலும் குண்டுகள் பாய்ந்திருக்கும். உட்கார வைத்து சுட்டால்தான் எங்கும் குண்டு பாயாது. குயிக் கன் முருகன் காவல்துறையினர் தற்காப்புக்காக சுட்டனர் என்ற வாதத்தை எடுத்துள்ளார். தற்காப்புக்காக தாக்குவதை பற்றி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 96 முதல் 106 வரை கூறுகிறது. இந்தப் பிரிவுகளுக்கான கட்டுப்பாடு பிரிவு 99ல் இருக்கிறது. பிரிவு 99ல் The right to private defence in no case extends to the inflicting of more harm that it is necessary to inflict for the purpose of defence.
இதன் பொருள் என்னவென்றால் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு எந்த அளவு எதிரியைத் தாக்க முடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே தாக்க வேண்டும். இதன்படி, தங்களைத் துப்பாக்கியால் கொள்ளையர்கள் தாக்கினால், அவர்கள் செயலிழக்கும் அளவுக்கு தாக்க வேண்டும். கொல்வதற்கான தாக்கக் கூடாது. செயலிழக்கும் வகையில் தாக்கினாலும் சரி, கொல்வதற்காக தாக்கினாலும் சரி, நிச்சயமாக வாஷிங் மிஷினிலோ, டிவியிலோ, குறைந்தபட்சம் சுவற்றிலோ குண்டு பாய்ந்ததற்கான தடயங்கள் இருக்கும். கொள்ளையரின் உயிரை பறிக்கவேண்டும் என்று சுட்டால், அது தற்காப்பு அல்ல கொலை. மேலும், தற்காப்பு என்ற வாதமே, நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். குயிக் கன் முருகன் அல்ல.
* சட்டத்தை போலீசார் கையில் எடுத்துக்கொண்டுவிட்டனர். அந்தச் சட்டம் தானே போலீசாருக்கு துப்பாக்கியைக் கொடுத்திருக்கிறது; அவர்கள் ஒன்றும், அதை சட்ட விரோதமாக வைத்திருக்கவில்லையே.
போலீசார் துப்பாக்கியை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று யாரும் சொல்லவில்லை. அந்தத் துப்பாக்கியால் இப்படி சகட்டுமேனிக்கு கொலை செய்யக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள். கோட்டையின் உள்ளே இருக்கும் ராணுவத்தினரிடம் கூடத்தான் துப்பாக்கியும், பீரங்கிகளும் இருக்கிறது.. அதற்காக அவர்கள் தலைமைச் செயலகம் வருபவர்களை சுடலாமா ?
*அருகில் வசிக்கும் பொதுமக்களில் சிலர், தங்களுக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த முறை என்கவுன்டர் செய்யும் முன், அக்கம் பக்கத்து வீட்டினர் அனைவரையும் எழுப்பிய பின் மேற்கொள்ளும்படி சொல்லலாமா? பஞ்சமாபாதகத்தையும் செய்ய அஞ்சாதவர்களிடம் கூட, போலீசார் கெஞ்சிக் கதறி தான் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, காலத்தின் கோலம்.
இந்த வாதமே கிறுக்குத்தனமாக இருப்பதால் இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இதையெல்லாம் ஒரு வாதமாக அச்சிட்டு, விற்பனை வேறு செய்யும் இவர்கள்…… வேறு என்ன தொழில் செய்யலாம் என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இருதலைக் கொள்ளி எறும்புகள்: என்கவுன்டரால் போலீசார் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்போதெல்லாம், என்கவுன்டரில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, தொடர்ந்து பிரச்னைகளும் நெருக்கடிகளும் தான் வருகின்றன. அவர்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
அந்த உயர் அதிகாரி யார் என்று குறிப்பிடவில்லை. அந்த உயர் அதிகாரியிடம் சவுக்கு கேட்க விரும்புவது… மிஸ்டர் பச்சிலை புடுங்கி…. என்கவுன்டர் என்ற பெயரில் கொலை செய்தால் வழக்கு வராமல் வாழைக்காயா வரும் ? பிரச்சினைகளும் நெருக்கடிகளும் மட்டுமல்ல, சிறையும் காத்திருக்கிறது.
தவறான நோக்கத்துக்காகவோ, தவறாகவோ நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், “சஸ்பெண்ட்’ கூட செய்யப்படலாம்; கைதாக நேரலாம். கொள்ளையர்கள் தப்பிவிட்டால், சமூகத்திடம் கெட்ட பெயர் வாங்க நேரிடுகிறது. கொல்லப்பட்டால், சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில், இருதலைக் கொள்ளி எறும்பு போல தவிக்கின்றனர் போலீசார்.
தவறான நோக்கமா, சரியான நோக்கமா என்பதையெல்லாம், சிபிஐ விசாரணை முடிவு செய்யட்டும். அவர்களிடம் போய்ச் சொல்லுங்கள் உங்கள் நியாயங்களை. சொராபுதீன் ஷேக்கும், இஷ்ரத் ஜஹானையும் சுட்டுக் கொன்ற குஜராத் போலீசார் இரண்டு பேரும், நரேந்திர மோடியை கொல்ல வந்த தீவிரவாதிகள் என்றுதானே சொல்லி வந்தார்கள்…. ? சிபிஐ விசாரணைக்கு பிறகு, தற்போது உண்மை வெளிவரவில்லையா…. சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் கம்பி எண்ணவில்லையா ? சமூகத்திடம் கெட்ட பெயர் வாங்கினால் அப்பிடியே நாண்டுகிட்டு சாவது போல பேசுகிறீர்கள்… ? சென்னை மாநகரில் உள்ள அத்தனை குற்றங்களையும் கண்டுபிடித்து விட்டீர்களா ? துப்பு துலங்காத வழக்கே இல்லையா ? சட்டச்சிக்கலில் சிக்கித் தவிக்கும்போதே இவ்வளவு கொலைகளைச் செய்கிறீர்களே… மனித உரிமை ஆர்வலர்கள் வழக்கு போடாவிட்டால் ? தமிழக காவல்துறையினர் சொன்னது உண்மையில் நடந்திருந்தால், சிபிஐ விசாரணைக்கு தயார் என்று அரசை பதில் மனு தாக்கல் செய்யச் சொல்லுங்கள். எதற்காக இந்த பயம் ?
மேலும், இதுவரை நடந்த என்கவுன்டர்கள் எதுவும், சொந்தப் பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக நடந்தவை அல்ல. அனைத்துமே, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை.
என்கவுன்டர்கள் சொந்தப் பகையை தீர்த்துக் கொள்வதற்கான நடத்தப்பட்டவை என்று யாரும் சொல்லவில்லை. தற்போது சொந்தமாக உள்ள கமிஷனர் பதவியை காப்பாற்றிக் கொள்ள மேற்கொள்ளப்பட்டவை என்றே சொல்கிறோம். நல்ல பதவிக்காக காவல்துறை அதிகாரிகள் கொலையும் செய்வார்கள் என்பதற்கு இந்த என்கவுன்டர்களே உதாரணம்.
இந்தக் கொள்ளையர்கள் தண்டிக்கப்படாமல் இருந்தால், அவர்கள் மேலும் மேலும் கொள்ளையடித்து, மேலும் மேலும் நவீன ஆயுதங்கள், வாகனங்கள் வாங்கி, மேலும் மேலும் தொழில் விருத்தி செய்வர். அதைத் தான் இந்த மனித உரிமை ஆர்வலர்கள் விரும்புகின்றனரா?
1991-1996ல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 66.5 கோடி கொள்ளையடித்தார். அவரை அப்போதே சுட்டிருந்தால் 2001-2002ல் அவரும், மன்னார்குடி மாபியாவும் மீண்டும் கொள்ளைடித்திருக்க மாட்டார்கள். சரி அப்போதாவது சுட்டிருந்தால் 2011 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை கொள்ளையடித்திருக்க மாட்டார்கள். அவர்களையும் சுட்டு விடலாமா ? இந்தக் கொள்ளையர்களை பிடிப்பதற்குத்தான் உங்களுக்கு உரிமை உண்டு. தண்டிப்பதற்கு அல்ல… கையில் துப்பாக்கி இருப்பதால் யாருக்கு வேண்டுமானாலும் தண்டனை கொடுத்து விடுவீர்களா ? தண்டனை வழங்க நீதிமன்றங்கள் இருக்கின்றன. உங்களுக்கு கொடுத்த வேலையை மட்டும் பாருங்கள்.
கொள்ளையடித்தவர்கள் மேலும் நவீன வாகனங்களும், ஆயுதங்களும் வாங்கி தொழில் விருத்தி செய்வதை தடுக்கத்தான் உங்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம், சலுகைகள், வாகனங்கள், எடுபிடி வேலைக்கு காவலர்கள் என்று கொடுத்திருக்கிறார்கள். அவர்களை கைது செய்து, ஒழுங்கான முறையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம். இப்படி குறுக்கு வழியில் தண்டனை என்ற பெயரால் கொலை செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.
நல்லது செய்ய முயற்சிக்கும் போலீசார், இவ்வாறு தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளானால், மனதளவில் மிகவும் விரக்தியடைந்துவிடுவர். போலீசார் விரக்தியடைவது, ஒரு பாதுகாப்பான சமூகத்துக்கு நல்லதல்ல. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ஆணியே புடுங்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். நல்லது, நல்லது என்று இப்படி கொலை செய்யாதீர்கள். நீங்கள் மனதளவில் விரக்தியடைந்தால், வேலையை ராஜினாமா செய்து விட்டு கிளம்புங்கள். புதிய நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க அரசுக்கு தெரியும். போலீசார் விரக்தியடைவது பாதுகாப்பான சமூகத்துக்கு நல்லதல்ல என்பது சரியல்ல. உங்களைப் போன்ற போலீசார்தான் சமூகத்தின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. அதனால் வேலையை ராஜினாமா செய்து விட்டு, நரிக்குறவத் தோழர்களோடு சேர்ந்து காக்காய், குருவியை சுடுங்கள். அப்போதாவது உங்களின் கொலை வெறி அடங்குகிறதா என்று பார்ப்போம்.
ஐந்து மனித உயிர்களின் விலை, 14 லட்சம் ரூபாய் தானா ? என்று அக்கறையோடு எழுதுவது போல தலைப்பு வைத்து விட்டு, மனித உயிர்களை போலீசார் எடுத்தால் தப்பில்லை என்று எழுதும் தினமலருக்கு சவுக்கு சொல்லிக் கொள்வது… …. மனித உயிர்களை மதிப்பிடவே முடியாது. அவை விலைமதிப்பற்றவை.