ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தை கருணாநிதி குடும்பத்தினர் எண்ணிக் கொண்டிருந்தனர் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டினார்.
சென்னை தியாகராயா நகரில் இன்று மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பழ.நெடுமாறன் சிறப்புரை ஆற்றினார்.
இந்தக் கூட்டத்தில் பேசும் போது, ஈழத்தில் புலிகள் இயக்கம் நடத்திய போர் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திர இயக்கங்கள், ஆதரவோடு நடைபெற்றன. ஆனால் புலிகளின் போர், எவ்வித ஆதரவும் இல்லாமல் நடைபெற்ற போராகும்.
ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி பிணங்களை எண்ணிக் கொண்டிருந்த போது, ஒரு லட்சத்து எழுபத்தாராயிரம் கோடியை எண்ணிக் கொண்டிருந்தார் கருணாநிதி. எத்தனை போராட்டங்கள் ? அத்தனை போராட்டங்களையும் கருணாநிதிதான் நீர்த்துப் போகச் செய்தார். சாகும் வரை உண்ணாவிரதம் என்ற நாடகம்…. காலையில் உணவு உண்டு விட்டு, மதியம் வீட்டுக்கு உணவு உண்ண செல்லப் போகிறோம் என்பதை அறிந்தே உண்ணாவிரதம் இருந்தார்.
இமயமலையை வெற்றி கண்ட டென்சிங்குக்குக் கூட அவ்வளவு வரவேற்பு இருந்திருக்காது. ஆ.ராசாவுக்கு அவ்வளவு வரவேற்பு அளிக்கப் பட்டது விமானநிலையத்தில். எதற்காக இந்த வரவேற்பு என்றால், எங்கே ராசா பணத்தை வாங்கி யாரிடம் கொடுத்தோம் என்பதை சொல்லி விடப் போகிறாரோ என்ற பயத்தில் தான் அத்தனை பேரையும் அனுப்பி வைத்திருந்தார் கருணாநிதி.
மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதுவது மட்டுமே தனது கடமை என்று கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சிங்களர்கள் கட்டாயக் குடியேற்றம் செய்யப் பட்டு வருகிறார்கள். தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை கூட கிடையாது ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஆனால் மன்மோகன் சிங் கருணாநிதியின் எந்தக் கடிதத்துக்கும் பதில் அனுப்பியதாக தெரியவில்லை. எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்குச் சென்று, தமிழர்களை குடியமர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார், அதே நேரத்தில் ராஜபக்ஷேவின் கஷ்டங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். ஆனால் அவர் இலங்கை சென்ற உண்மையான நோக்கம் 2000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டு கையெழுத்திடுவதற்காகத் தான். சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு 500 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. ராணுவ உதவிகளும் செய்யப் படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
புலிகள் அழிந்து விட்டனர் என்று கொக்கரிப்பவர்கள் எதற்காக ராணுவ உதவி செய்ய வேண்டும் ? இலங்கையின் பாதுகாப்பு செலவுகள் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கூடியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் அருகில் இருப்பது இந்தியா மட்டும் தான். புலிகள் அழிந்து விட்டார்கள் என்றால், இந்தியா மீது போர் தொடப்பதற்காக இந்தியாவே உதவி செய்கிறதா ? ஆனால், ராஜபக்ஷவுக்கு பிரபாகரன் இறக்கவில்லை என்பது தெரியும். அதனால்தான் ராணுவச் செலவுகளை அதிகரித்திருக்கிறார்.
ஐந்தாவது விடுதலைப் போர் நிச்சயம் நடக்கும். அப்போது தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் அந்தப் போரில் கலந்து கொள்ள வேண்டும். 1935ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் ப்ரான்கோ என்ற சர்வாதிகாரி ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு, ஆட்சியை கைப்பற்றினான். அவனை எதிர்ப்பதற்காக உலகெங்கும் பல்வேறு இளைஞர்கள் தங்களை ப்ரான்கோவிற்கு எதிரான போரில் இணைத்துக் கொண்டனர். அவ்வாறு இணைத்துக் கொண்டவர்களில் இந்திரா காந்தியும் பெரோஸ் காந்தியும் அடங்குவர். இந்திராவை பார்க்கச் சென்ற ஜவஹர்லால் நேரு, இந்திராவை உனக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை, அதனால் நீ செல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டு, பெரோஸ் கானையும் அவர் தோழர்களையும் ஸ்பெயின் நாட்டின் எல்லை வரை சென்று வாழ்த்தி வழியனுப்பினார். அது போல தமிழக இளைஞர்களும் ஈழம் சென்று போரிட வேண்டிய தேவை ஏற்பட்டால் செய்ய வேண்டும் என்றார்.
அடுத்து பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
அவர் பேசுகையில் புலிகள் மூட்டிய தணல் இன்னும் அணையவில்லை. இந்த மாவீரர் நாளை தலைவர் பிரபாகரன் மதுரையில் குண்டடிபட்டு இறந்த சங்கர் என்கிற சிவக்குமரன் நினைவாகவும், 1989 அன்று உள்ளபடி அது வரை களத்தில் இறந்த 1027 பேரின் நினைவாகவும் ஆண்டுதோறும் மாவீரர் நாளாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். அதன் படியே மாவீரர் நாள் கொண்டாடப் பட்டு வருகிறது.
இப்போது புலிகள் இயக்கம் சந்தித்த பின்னடைவை பயன்படுத்திக் கொண்டு டிபிஎஸ்.ஜெயராஜ் போன்றவர்கள், இணையத்திலும் பல்வேறு இடங்களிலும் பொய்ச் செய்திகளை வெளியிட்டு தமிழர்களை குழப்ப வேண்டுமென செயல்பட்டுக் கொண்டு வருகிறன்றனர்.
பிரபாகரன் நிறைவாக இருப்பவர். அதனால் மறைவாக இருக்கிறார். தமிழர்கள் சந்தித்த போராட்டங்கள் என்பது உலகில் யாருமே சந்தித்திராத ஒரு போராட்டம். பாராளுமன்றத்தில் பிப்ரவரி 2009ம் ஆண்டு, இலங்கையில் வெறும் 70,000 தமிழர்கள் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்கள், ஆனால் இந்து நாளேட்டில் பேட்டி அளித்துள்ள ராஜபக்ஷேவே தற்போது 1,70,000 தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றால் எப்படி கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு ராணுவ சாவடி ஒன்று உள்ளது. முதலில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தினரை அகற்ற வேண்டும்.
உலக வரலாற்றை தனது மகளுக்கு சிறையில் இருந்து கடிதமாக எழுதிய ஜவகர்லால் நேரு, சோழர்கள் மிகப் பெரிய கப்பற் படையை வைத்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் காஷ்மீர் போன்ற ஒரு சூழலை உருவாக்காதீர்கள். இந்தியாவில் பலருக்கு மூன்று வேளை உணவு கிடைக்காத ஒரு சூழலில் எப்படிப். பட்ட ஒரு ஊழலை திமுகவினர் செய்திருக்கிறார்கள் ? மன்மோகன் சிங் ராசாவுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு திறந்த முறையில் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார், ஆனால் ராசா வேலை அத்தனையும் முடித்து விட்டு, இப்படித்தான் செய்யப் போகிறேன் என்று மன்மோகன் சிங் செவிட்டில் அறைந்தது போல செய்கிறார், இதைக் கண்டு பிரதமர் கோபப் படாமல் அமைதியாக இருக்கிறார் என்றால் பகத்சிங் பிறந்த மண்ணில் பிறந்தவரா இவர் என்று வெட்கமாக இருக்கிறது ? மன்மோகன் எதற்காக அமைதியாக இருந்தார் ? காங்கிரசுக்கு அதில் பங்கு இருக்கிறதா அல்லது இனம் அழியும் போது அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தற்கான கூலியாக கருணாநிதிக்கு அது வழங்கப் பட்டதா ?
வெறும் 66 கோடிக்காக ராஜீவ் காந்தி பதவியை இழந்தார். வெறும் இரண்டே இரண்டு லட்சத்திற்காக நிதி அமைச்சர் பதவியை டி.டி.கிருஷ்ணமாச்சாரி இழந்தார். இத்தனை கோடிகளை விழுங்கி விட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்களே ?
என்ன திமிராக ஆ.ராசா விமான நிலையத்தில் ராஜினாமா செய்யமாட்டேன் என்று சொன்னார் ? அவ்வளவு திமிராகப் பேசியவர் டெல்லி சென்றதும் வாயை மூடிக் கொண்டு ராஜினாமா செய்தாரே எதற்காக ?
பாராளுமன்றத்தில் இந்திரா காந்தி கடைசியாக பேசிய பேச்சில் இலங்கை நாட்டில் தமிழர்கள்தான் பூர்வ குடிகள் என்று பேசியுள்ளார்.
சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் கருணாநிதி திருவாளர் தேசியம் பிள்ளையாகி விட்டார். தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்காக மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் அனுபவிப்பார்கள். அறம் நின்று கொல்லும்.
இத்தனை ஊழல் செய்திருக்கிறாரே கருணாநிதி.. ? எவ்வளவு சம்பாதித்தாலும் 8 அடி மண்ணில் தானே போகப் போகிறோம்.. இத்தனை சொத்துக்களை சேர்த்து என்ன செய்யப் போகிறார் ? அதுவும் இப்போதெல்லாம் எலக்ட்ரிக் சுடுகாட்டில் போட்டால் 5 நிமிடத்தில் எரிந்து போய் விடுகிறதே.. ?
இப்போது வெளி வந்திருக்கும் உரையாடல்களையெல்லாம் கேட்கும் பொழுது எத்தனை உண்மைகள் வெளி வருகின்றன… ? டெல்லி சென்ற கருணாநிதி கேட்ட துறைகள் கிடைக்கவில்லை என்றதும் கோபித்துக் கொண்டு திரும்பி வந்தாரே… அவர் என்ன முல்லை பெரியாறுக்காக வந்தாரா ? காவிரிக்காக வந்தாரா ? மீனவர்கள் கொல்லப் படுகின்றனரே.. அதற்காக திரும்பி வந்தாரா ?
ராசாவைப் பற்றி ஏதாவது எழுதினால் தினமணியை பார்ப்பனர் என்று திட்டுகிறார். இதே பத்திரிக்கை பாராட்டி எழுதினால் அப்போது பார்ப்பனர் அல்லாத பத்திரிக்கை ஆகுமா தினமணி… ?
இந்த காங்கிரஸ் அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த அநீதிக்காகவே அதன் முழு காலமும் பதவியில் இல்லாமல் கவிழப் போகிறது என்று பேசினார் வைகோ.