சென்னையில் இன்று நடப்பது வேறு யாருடைய ஆட்சியுமல்ல… ஐபிஎஸ் அதிகாரி திரிபாதியின் ராஜ்யமே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. கடந்த 23 அதிகாலையில் 5 இளைஞர்களை கொன்றதிலிருந்தே திரிபாதியின் ஆட்டம் அதிரடி ஆட்டமாக மாறியிருக்கிறது.
சவுக்கு பல முறை ஏற்கனவே சொல்லியிருந்தது போல, அதிமுக ஆட்சி வந்தாலே மிகுந்த அதிகாரத்தோடு கொண்டாட்டமாக இருப்பவர்கள் காவல்துறையினர்தான். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகள் போலத்தான் காவல்துறையினர் எப்போதுமே நடத்தப்படுவார்கள். இது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.
1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அடித்து ஒடுக்கியதும், மகாமகம் குளத்தில் குளிக்க வந்தவர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றதும், ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக வழக்கு போட்டவர்களை கொலை செய்ய முயன்ற ரவுடிகளை பாதுகாத்ததும் ஜெயலலிதா காவல்துறையின் சாதனைகள். அதே போல, 2001-2006 ஆட்சி காலத்தில் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்ததும், அதை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் ரவுடிகளை விட்டு திமுகவினரையும், பத்திரிக்கையாளர்களையும் தாக்கியபோது, அமைதியாக அதை வேடிக்கை பார்த்ததும் இதே காவல்துறைதான்.
அதே காவல்துறைதான் இன்று ஜெயலலிதா கொடுத்துள்ள அதிகாரத்தால் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 23 அதிகாலை வங்கிக் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 5 பேரை திரிபாதி தலைமையிலான காவல்துறை சுட்டுக் கொன்றதிலிருந்தே காவல்துறையின் ஆட்டம் அதிகமாகித்தான் போயுள்ளது.
23 அதிகாலை 5 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறை, தொடக்கத்தில் இறுமாப்பாகத்தான் இருந்தது. ஆனால் கொலை செய்யப்பட்டவர்களின் அடையாளம் கூடத் தெரியாமல் சுட்டுக் கொன்றுள்ளார்கள் என்ற முணுமுணுப்பு எழத் தொடங்கியதிலிருந்தே உஷாரானார் திரிபாதி. சரியான முறையில் இந்த என்கவுன்டர் விவகாரத்தை கையாள வில்லையென்றால் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த திரிபாதி, தொடர்ந்து என்கவுன்டரை நியாயப்படுத்தும் வேலைகளில் இறங்கத் தொடங்கினார்.
திரிபாதி இது போல அம்பலப்பட்டதற்கான முக்கிய காரணம் ஊடகங்கள். ஊடகங்கள் என்றால் அனைத்து ஊடகங்களையும் சேர்த்துக் கொள்ள முடியாது. பாராட்டப்பட வேண்டிய பணியைச் செய்தது இரண்டே இரண்டு ஊடகங்கள் மட்டுமே. அவை இந்து நாளேடு மற்றும் ஜுனியர் விகடன்.
இந்து நாளேடு எழுப்பிய கேள்விகளை கண்டு அஞ்சி நடுங்கினார் திரிபாதி. எப்படிப்பார்த்தாலும் இது உண்மையான என்கவுன்டராக இருக்க வாய்ப்பே இல்லை என்று படம் போட்டு, அம்பலப்படுத்தி இதழும் என்கவுன்டர் தொடர்பான சந்தேகங்களை வலுவாக எழுப்பியது. மற்ற அச்சு ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் நக்கீரன் இதழில் வந்த கட்டுரைதான். காவல்துறை டீம் அங்கே சென்றதும், கதவைத் தட்டினார்களாம்…. ஆனால் உள்ளிருந்து துப்பாக்கியை லோட் செய்யும் சத்தம் வந்ததும் சுடத் தொடங்கினார்களாம். ஆனால் அடுத்த இதழிலேயே சுதாரித்துக் கொண்ட நக்கீரன், அதற்கு நேர்மாறான கட்டுரையை வெளியிட்டது.
காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரை புதிய தலைமுறை மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே ஆகிய ஊடகங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். புதிய தலைமுறை செய்தியாளர் மகாலிங்கம் அதிகாலை 3.30 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தார். காலை 7.30 மணிக்கு செய்தியாளர் சுப்பையா வந்தார். வந்தது முதல் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் தொடர்ச்சியாக மக்களிடம் பேட்டி வாங்கி இரவு 10 மணிக்கே காவல்துறையினர் அந்த இடத்துக்கு வந்ததை அம்பலப்படுத்தினர்.
மற்ற ஊடகங்களைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமே இல்லை. காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, இந்து நாளேட்டின் நெருக்கடியால், வேறு வழியின்றி என்கவுன்டரில் சந்தேகத்தை எழுப்பியது. சந்தேகத்தை ஒரு புறம் எழுப்பினாலும், மறு புறம், கொலை செய்யப்பட்டவர்கள் நக்சலைட்டுகளா என்பது போன்ற அயோக்கியத்தனமான செய்திகளும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்து கொண்டுதான் இருந்தது. மற்ற புலனாய்வு வாரமிருமுறை இதழ்கள், நாளிதழ்கள் அத்தனையும், திரிபாதி சொல்ல விரும்பியதைச் சொல்லின. ஒரு வாரமிருமுறை இதழ், “வட இந்தியாவிலிருந்து தமிழகத்தில் குற்றம் புரியலாம் என்று கிளம்புபவர்களுக்கு நடுக்கம் உண்டாகும் வகையில் இந்த என்கவுன்டர் அமைந்தது” என்று சிலாகித்தது. ஆனால், அடுத்த வாரமே, வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியோடு, ஒரு சிறுவனைக் கடத்திப் பிடிபட்டனர்.
24 பிப்ரவரி, அன்று செய்தியாளர்களைச் சந்தித்த திரிபாதி காலை முதல் தொலைக்காட்சிகளில் காவல்துறையினர் இரவு 10 மணிக்கே வந்தார்கள் என்று செய்தி வெளியிட்டதைப் பற்றி கவலையே படாமல், நள்ளிரவுதான் அந்த இடத்துக்கே காவல்துறையினர் சென்றார்கள் என்று கூசாமல் பொய் சொன்னார். கொல்லப்பட்டவர்கள் யார் என்பதை அங்கிருந்து கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து கண்டுபிடித்துள்ளோம் என்று அறிவித்து அந்த விபரங்களை வெளியிட்டார்.
ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, திரிபாதி வெளியிட்ட பெயருள்ள நபர், பீகாரில் லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை அம்பலப்படுத்தியது. இதன் பிறகுதான் திரிபாதி வெகு தீவிரமாக எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார்.
திடீரென்று காவல்துறையினருக்கு ஆதரவாக போஸ்டர்கள் நகரெங்கும் முளைத்தன. சென்னை நகரில் உள்ள பருப்பு வியாபாரிகள், புண்ணாக்கு வியாபாரிகள் போன்றோர் திரிபாதியை சந்தித்து “தற்காப்புக்காக சுட்டு கொலை செய்ததற்காக” பாராட்டு தெரிவிக்கத் தொடங்கினர். இவர்கள் இவ்வாறு சந்தித்து பாராட்டு தெரிவித்ததை செய்திக் குறிப்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டு,அந்தச் செய்தியை பத்திரிக்கைகளில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். எழும்பூரைச் சேர்ந்த ஒரு சில வழக்கறிஞர்களும் திரிபாதியை தங்கள் பங்குக்கு பாராட்டினர்.
திரிபாதியை பாராட்டிய கவிஞர் புயல்வேந்தன். (புயலில் பறக்கும் சருகு போல இல்லை ?)
இவ்வாறு பாராட்டுபவர்கள் யாரென்று பார்த்தால் காவல்துறையினரின் தயவை எதிர்ப்பார்த்து இருப்பவர்களே செய்துள்ளார்கள் என்பது நன்கு தெரியும். மேலும், ஒரு நல்ல அரசு அதிகாரி, இது போன்ற மலிவான விளம்பரங்களில் ஒரு போதும் ஈடுபட மாட்டார். இது போன்ற மலிவான விளம்பரங்களில் ஈடுபடுபவர், ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியல்வாதி மட்டுமே. திரிபாதி எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
திரிபாதி சொன்னதை அச்சு மாறாமல் வெளியிட்டன நாளிதழ்கள். இந்த போலி மோதல் படுகொலையைச் செய்து விட்டு, திரிபாதி இன்னும் இறுமாப்பாக பவனி வந்து கொண்டிருப்பதற்கான காரணம், ஜெயலலிதா இது போன்ற கொலைகார காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கும் ஆதரவே…. டான்சி வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, கொசு கடிக்கிறது என்று புகார் கூறினார். தனக்கு என்று வந்தால் கொசுக்கடியைக் கூட தாங்க முடியாத ஜெயலலிதா, உண்மையான குற்றவாளிகளா இல்லையா என்று தெரியாத 5 இளைஞர்களை சுட்டுக் கொன்ற திரிபாதிக்கு ஆதரவு தெரிவித்து இன்னமும், கமிஷனர் பதவியில் உட்காரவைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். நேர்மையான அதிகாரி என்று பரவலாக நம்பப்படும் ராமானுஜமும், மவுனச்சாமியாராக உட்கார்ந்து கொண்டு, தமிழகத்தில் நடக்கும் அத்தனை அட்டூழியங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
திரிபாதியின் அராஜகம் எந்த அளவுக்கு சென்று விட்டதென்றால், சென்னையில் வாடகைக்கு குடியிருக்கும் அத்தனைபேரின் விபரங்களையும், புகைப்படத்தோடு, அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் அளவுக்கு சென்று விட்டது. சென்னை மாநகரின் குறுநில மன்னனாகவே திரிபாதி தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. இவ்வாறு தகவல் கொடுக்கத் தவறும் வீட்டு உரிமையாளர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டல் வேறு… ….
சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களைக் கேட்டுப்பாருங்கள்… சென்னையில் வீடு கிடைப்பது எவ்வளவு சிரமம் என்பதைச் சொல்வார்கள். அதிலும், இது போல அராஜகமான உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தால் வீடு கிடைக்குமா என்பதை யோசித்துப் பாருங்கள். வீட்டு உரிமையாளர்களுக்கும் இது எத்தனை பெரிய நெருக்கடி என்பதை யோசித்துப்பாருங்கள்.
வடமாநிலக் கொள்ளையர்களை விரட்ட வேண்டுமென்றால், முதலில் விரட்டப்பட வேண்டியது, ஜாங்கிட், திரிபாதி போன்ற போலீஸ் உயர் அதிகாரிகளே… முகப்பேரில் அரசு கோட்டாவில் வீடு வாங்கிக் கொண்டு, நெற்குன்றத்திலும் பேராசையோடு வீடு வாங்கியுள்ள திரிபாதி செய்ததும், இறந்த அந்த இளைஞர்கள் வங்கியைக் கொள்ளையடித்தற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதிகாரம் இருப்பதால் இவர் சட்டபூர்வமாக கொள்ளையடிக்கிறார். பதவி இல்லாததால் அவர்கள் வங்கியைக் கொள்ளையடிக்கிறார்கள்.
திரிபாதிக்கு சவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறது. தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் யாருமே செலுத்தாத அதிகாரத்தைச் செலுத்தியவர், முன்னாள் டிஜிபி துரை. இவர் வாகனம் டிஜிபி அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது, முதலமைச்சருக்காக வாகனங்கள் நிறுத்தப்படுவது போல, இவருக்காகவும் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். இவர் இறுதியாக தற்கொலை செய்து கொண்டார். சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ஜாபர் சேட் செலுத்தாத அதிகாரமா ? இப்போது அவர் எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கொள்ளையடித்தாக சந்தேககிக்கப்பட்ட 5 பேரை கொலை செய்து விட்டு, அதே இறுமாப்போடு சென்னை மாநகர மக்களை மிரட்டி ஒடுக்கும் திரிபாதியும் இதே கதியைத்தான் அடைவார். அதிகாரத்தின் உச்சத்தில் ஆணவத்தோடு இருந்தவர்களுக்கு வரலாறு இதே பாடத்தைத்தான் கொடுத்திருக்கிறது.
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த வட மாநிலத்தை சேர்ந்த நபர்கள் யார். அவர்கள் சார்பாக ஏதேனும் வழக்கு தாக்கல் வட மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்டதா? திரிபாதி செய்த ஊழலை கண்டித்து இவரும் வடமாநில கொள்ளைக்காரர் என்று சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? இவரிடம் இருந்து ஊழல் சொத்தை கைப்பற்றி இவரை பணி குறைப்பு செய்து அதிகாரமற்ற வேறு துறைக்கு மாற்றலாமே? சவுக்கே துணை.