தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன புதிதாக உயர்நீதிமன்ற வீட்டு வசதி வாரியம் என்று பார்க்கிறீர்களா ?
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைப் பற்றி சவுக்கு வாசர்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ? தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பணி, கருணாநிதியின் வண்டியைத் தள்ளுபவர்கள், அவர் வீட்டில் டெலிபோன் ஆப்பரேட்டராக இருப்பவர், அவருக்கு நெருக்கமான அதிகாரி, அவர் மனைவி, மகள், கருணாநிதி அமைச்சரவையில் இருக்கும் மந்திரிமார்களின் மனைவிகள், மகள்கள் பெயரில் சமூக சேவகர் என்ற பிரிவில் அரசு நிலத்தை தாரை வார்த்துக் கொடுக்கும் ஒரு அமைப்பு என்றுதானே சொல்வீர்கள் ?
இதே போல ஒரு அமைப்புதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் உருவாகியிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் வழக்கறிஞர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்ட 4 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் சங்கம், Madras Bar Association. இந்தச் சங்கம் ஆங்கிலேய வழக்கறிஞர்களால், சுதந்திரத்துக்கு முன்னதாக தொடங்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பிறகும், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இரண்டாவது MHAA என்று அழைக்கப்படும் Madras High Court Advocates Association. இந்தச் சங்கம் 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்படும் ஏறக்குறைய அனைத்து வழக்கறிஞர்களும் இதில் உறுப்பினர்கள்.
மூன்றாவது, Law Association என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சங்கம், உயர்நீதிமன்றம் தவிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பணியாற்றும் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இறுதியாக The Women Lawyers Association. இது அனைத்து பெண் வழக்கறிஞர்களுக்கான சங்கம்.
இந்த நான்கு சங்கங்கள்தான் சென்னை உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள். இந்தச் சங்கங்களைத் தவிர்த்து, அதிமுக வழக்கறிஞர் பிரிவு, திமுக வழக்கறிஞர் பிரிவு, என்று பல்வேறு சங்கங்கள் இருந்தாலும் அவை உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. உதாரணத்துக்கு நாளையே 10 வழக்கறிஞர்கள் சேர்ந்து, “வக்கீல் வண்டு முருகன் சங்கம்” என்ற பெயரில் ஒரு வழக்கறிஞர்கள் சங்கத்தைத் திறந்தாலும், அந்தச் சங்கத்தை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தாலே ஒழிய அது அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக ஒருபோதும் ஆகாது.
இதனால்தான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் கடும் போட்டியோடு நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற சங்கத் தேர்தலில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பிரதிநிதிகளாக கருதுவார்கள்.
இப்படிப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில், பிரபாகரன் என்ற வழக்கறிஞர் போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவுகிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் போட்டியிடுகிறார். மீண்டும் தோல்வியைத் தழுவுகிறார். வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு தலைவராகி, அதன் மூலம் அரசியலில் நுழைய வேண்டும் என்று போட்டியிடுபவர்கள் ஒரு வகை. சங்கத் தேர்தலில் ஜெயித்து, வழக்கறிஞர் சமூகத்தின் நலன்களைக் காத்து அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று போட்டியிடுவது ஒரு வகை.
வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் ஜெயித்து, அந்தப்பதவியை வைத்து, நீதிபதிகளை மிரட்டி, காவல்நிலையத்தை மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவது ஒரு வகை. பிரபாகரன் இந்த வகையைச் சேர்ந்தவர்.
இதனால், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தால், தனக்கென்று ஒரு அமைப்பு இல்லாமல் போய் விடும். அப்படி அமைப்பு இல்லாமல் போய் விட்டால், தன்னால் நீதிபதிகளை மிரட்ட முடியாது, கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியாது என்பதை உணர்ந்த பிரபாகரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துக்கு போட்டியாக, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் என்று ஒரு சங்கத்தை தொடங்குகிறார்.
2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் பெருமளவில் உறுப்பினர்கள் சேராவிட்டாலும், பிரபாகரன் செலவு செய்த பணத்துக்காக இளம் வழக்கறிஞர்கள் பலர் அவரோடு சேர்ந்தார்கள். மேலும், பிரபாகரன் பல நீதிபதிகளோடு “நெருக்கமாக” இருக்கிறார் என்பதால், அவரோடு சேர்ந்து இருந்தால், நமக்கு சாதகமாக பல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, நாமும் கட்டப்பஞ்சாயத்து பண்ணலாம் என்ற எண்ணத்தில் ஒரு சிலர் அவரோடு சேர, பிரபாகரனின் கட்டப்பஞ்சாயத்து சங்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்குகிறது.
இதன் நடுவே நீதிபதிளுடனான பிரபாகரனின் தொடர்புகள் செழித்து வளரத் தொடங்குகிறது. உயர்நீதிமன்றம் தாண்டி, உச்ச நீதிமன்றம் வரை பிரபாகரனின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக உள்ள சதாசிவம் என்ற நீதிபதியோடு, பிரபாகரன் நெருக்கமானார். இந்த சதாசிவம், 25.01.2013 முதல் 26.04.2014 வரை, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். இது போதாதா ? உச்சநீதிமன்றத்தின் தயவை நாடியிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அத்தனை பேரும், பிரபாகரனின் பிடிக்குள் வந்தனர். நீதிபதிகளே பிரபாகரனின் பிடிக்குள் வந்த பிறகு, வழக்கறிஞர்களைக் கேட்க வேண்டுமா ?
இப்படியாக பிரபாகரனின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. சட்டம் தொடர்பான செமினார்களையும், விழாக்களையும் புதிதாக தொடங்கப்பட்ட அவரது தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக நடத்தத் தொடங்கினார் பிரபாகரன். இப்படி அவர் நடத்திய ஒரு விழா, தேசிய வழக்காடு கொள்கை தொடர்பான ஒரு கருத்தரங்கம். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் வந்திருந்தார். அப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மூத்த வழக்கறிஞர்கள் அவரைச் சந்தித்து, ஒரு அங்கீகரிக்கப்படாத சங்கம் நடத்தும் விழாவுக்கு, உங்களைப் போன்ற நீதிபதிகள் கலந்து கொள்வது தவறு, இவ்வாறு நீங்கள் கலந்து கொள்வது அந்தச் சங்கத்துக்கு அங்கீகாரம் கொடுத்தது போல ஆகும். மேலும், தேசிய வழக்காடு கொள்கை குறித்து, நாளை உச்சநீதிமன்றத்தில் யாராவது வழக்கு தொடுக்க நேரிடலாம். அப்படிப்பட்ட சூழலில் உச்சநீதிமன்ற நீதிபதியாகிய நீங்கள் கலந்து கொள்வது முறையாகாது என்று கூறினார். நீதிபதி சதாசிவத்திடம் இப்படிச் சென்று முறையிட்டவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக, ஏழை உழைப்பாளி மக்களுக்கும், தலித்துகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொடர்ந்து வழக்காடி பாடுபட்டுக் கொண்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
வந்ததே கோபம் நீதிபதி சதாசிவத்துக்கு…. பிரபாகரனைப் பற்றி குறை கூற நீங்கள் யார் ? பிரபாகரனிடம் கேட்டால்தானே உங்கள் யோக்யதை தெரியும்… …. ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் இப்படி வந்து பேச உங்களுக்கு என்ன துணிச்சல் ? என்று கடுமையாக திட்டி அனுப்பி விட்டார். பிறகு அந்த விழா இனிதே நடந்தது.
நாளை இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஒருவர், பிரபாகரனுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறார் என்றால், எந்த உயர்நீதிமன்ற நீதிபதிதான் பிரபாகரனைப்பார்த்து பயப்படமாட்டார்கள் ?
இந்தச் சூழ்நிலையில்தான், பிரபாகரன் தன்னுடைய “தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்துக்கு” உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் பிரபாகரனின் டுபாக்கூர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் 4600 சதுர அடி நிலத்தை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கிறார்கள்.
அந்த இடத்தை தூர் வாரி, மராமத்து செய்து, கட்டிடம் கட்ட ஏதுவாக அந்த இடத்தை தயார் செய்ய பிரபாகரன் 50 லட்ச ரூபாய் வரை தனது சொந்தப் பணத்தை செலவு செய்து வேலைகளைத் தொடங்கிய பிறகுதான், இந்த விவகாரமே மற்ற வழக்கறிஞர்களின் கவனத்துக்கு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகம் என்பது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயர்நீதிமன்றத்துக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்றால் கூட, பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள்தான் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பிரபாகரன் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த விபரங்களை அறிந்து வெகுண்டெழுந்த வழக்கறிஞர்கள், 274 பேர் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் ஒரு மனு அளிப்பதற்காக இன்று தலைமை நீதிபதியைச் சந்தித்தனர். அப்போது தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டிடம் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் நீதிபதிகள் முருகேசன் மற்றும் கே.என்.பாஷா. அவர்களிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள் என்று அருகாமையில் அமர்ந்திருந்த இரண்டு நீதிபதிகளிடம் முறையிடச் சொன்னார்.
அங்கே திரண்டு வந்திருந்த வழக்கறிஞர்கள் தங்கள் குறைகளை நீதிபதிகளிடம் கூறினர். மூத்த வழக்கறிஞர் வைகை, “சென்னை உயர்நீதிமன்ற இடம் என்பது பொது இடம். இந்த இடத்தை ஒரு தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ வழங்கும் போது வெளிப்படையாக அது வழங்கப்பட வேண்டும். இப்படி ரகசியமாக அல்ல. பொது இடத்தை ஒருவருக்கு தாரை வார்க்க வேண்டுமென்றால் அதற்கான விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் வேண்டும். இப்படி யாருக்கும் தெரியாமல் வழங்கக் கூடாது. இது போன்ற ஒரு செயலை அரசு செய்திருந்தால், இதே நீதிமன்றம் அந்த முடிவை ரத்து செய்திருக்கும்” என்றார்.
மற்றொரு வழக்கறிஞர், “நீங்கள் யாருக்காக இப்படிச் செய்கிறீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும். உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி சதாசிவம் சொல்படியே நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்துள்ளீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்” என்றார்.
நீதிபதி கே.என்.பாஷா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தற்போதைய தலைவரான மோகனகிருஷ்ணனைப் பார்த்து, “நான் உங்கள் சம்மதத்தோடுதானே இந்த இடத்தைக் கொடுத்தேன்” என்றார். உடனே மோகனகிருஷ்ணன் “நான் எந்தக் காலத்திலும் இது போன்ற ஒரு சம்மதத்தைக் கொடுத்ததில்லை. மேலும், நீதிபதிகளை அவர்களின் அறைக்குச் சென்று பார்க்கும் வழக்கமே எனக்கு கிடையாது” என்று நேரடியாக மறுத்தார். நீதிபதி கே.என்.பாஷா என்பவர்தான், ஜெயலலிதா மீதான பிறந்தநாள் பரிசு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தவர். இவரின் தீர்ப்பைப் பற்றிய சிறப்புகளை என்ன ஒரு கரிசனம் ? என்ற கட்டுரையில் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ், “நான் தலைவராக இருந்தபோது பல முறை இது போன்ற கோரிக்கைகள் வந்த போது நிராகரித்திருக்கிறேன். எனது ஆட்சேபத்தை எழுத்துபூர்வமாகவும் தெரிவித்திருக்கிறேன்.” என்றார்.
மற்றொரு வழக்கறிஞர், “பிரபாகரனின் சங்கத்துக்கு இடம் ஒதுக்கியதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இது புற்றீசல் போல பல்வேறு கோரிக்கைகளுக்கு வழி வகுக்கும். நாளை தனக்கென்று ஒரு சங்கம் வைத்து, தான் மட்டுமே உறுப்பினராக இருக்கும் யானை ராஜேந்திரன் இடம் ஒதுக்கும் படி கேட்பார். அவர்களுக்கும் ஒதுக்குவீர்களா ?” என்று கேட்டார்.
சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், நீதிபதிகள் பிரபாகரனுக்கு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில், எங்களுக்கு நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார்.
அனைத்தையும் மவுனமாக கேட்டுக் கொண்டனர் நீதிபதிகள். நீதிபதிகள் உண்மையில் பாவம்தான். இடம் ஒதுக்கியதை ரத்து செய்தால் பிரபாகரன் கோபித்துக் கொள்வார். பிரபாகரன் கோபித்துக் கொண்டால், சதாசிவம் கோபித்துக் கொள்வார். சதாசிவத்தின் கோபத்துக்கு ஆளானால், அவர் ஓய்வு பெறும் ஏப்ரல் 2014 வரை பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். ரத்து செய்ய மறுத்தால், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள். என்னதான் செய்வாகள் பாவம் ?
எது எப்படியோ… … … …. …. சென்னை உயர்நீதிமன்றத்தில் வீட்டுவசதி வாரியம் போல முறைகேடுகள் தொடங்கிவிட்டன. இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழக்கறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். யார் வெல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
குறிப்பு. சென்னை உயர்நீதிமன்றம் பொதுமக்களின் நலனிலும், மனித உரிமை மீறல்களிலும் எப்படி அக்கறையோடு இருக்கிறது என்பது இன்று நடந்த ஒரு சம்பவத்தில் தெரிந்தது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், 5 பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் பட்டது குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். இந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது நவம்பர் 2011ல். அந்த வாரமே, பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்து, கொடுத்து ஒரு வழியாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு நீங்கள் ஒரு பதில் தாக்கல் செய்யுங்கள் என்று மனுதாரர் புகழேந்திக்கு தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டார். புகழேந்தியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நாங்கள் எதற்காக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நாங்கள் காவல்துறை மீது புகார் சொல்கிறோம், அவர்கள் அதை மறுக்கிறார்கள், உத்தரவு பிறப்பிக்க வேண்டியது நீதிமன்றமே என்றார் கடந்த முறை வழக்கு விசாரணையின் போது. மூன்று வாரங்கள் கழித்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞருக்கு உடல் நிலை சரியில்லை அதனால் வழக்கை தள்ளி வையுங்கள் என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டது. ஒரு வார்த்தையும் பேசாமல், இதை அப்படியே ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இக்பால், மூன்று வாரங்களுக்கு இந்த வழக்கை தள்ளி வைத்தார். மூன்று வாரங்கள் கழித்து அரசு வழக்கறிஞரின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று கேட்டாலும், தயங்காமல் வழக்கை தள்ளி வைக்கும் இந்த நீதிமன்றம். இந்த நீதிமன்றம்தான், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்கிறதாம்… ஒரே நகைச்சுவைதான் போங்கள்…