தமிழகத்தில் நேற்றும் ஒரு என்கவுண்டர் நடந்துள்ளது. இந்த என்கவுன்டர் வேளச்சேரி வங்கிக் கொள்ளையர்களை சுட்டதை விட மிகவும் புதுமையாக இருக்கிறது. திண்டுக்கல்லில் ஹோட்டல் சுகன்யாவில் தங்கியிருந்த ஆட்கடத்தல் கும்பலை மதுரை போலீசார் வளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் போலீசாரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றார். அப்போது “தற்காப்புக்காக” போலீசார் சுட்டதில் சுனோஜ் என்ற கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து போனார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஐந்து பேரை கொலை செய்த திரிபாதியைப் போல, மதுரை எஸ்.பி. அஸ்ரா கர்க், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி உளறிக் கொட்டாமல் இருப்பதால் இந்த என்கவுன்டர் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவராமல் உள்ளன. இருப்பினும், விபரங்களை சேகரித்தறிந்து மதுரை வழக்கறிஞர்கள், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள் என்று நம்புகிறோம்.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புகள் நாம் விவாதிக்கத்தக்கன. ஒரு தீர்ப்பு எப்படி இருக்கக் கூடாது என்ற வகையிலானது. மற்றொரு தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற தன்மையிலானது.
முதலில் எப்படி இருக்கக் கூடாது என்ற தீர்ப்பைப் பார்ப்போம். நீண்ட நாள் சவுக்கு வாசகர்கள் வசந்தமில்லா வசந்தி என்ற சவுக்கின் கட்டுரையை படித்திருப்பீர்கள். புதிய வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அந்தக் கட்டுரையில் வசந்தி ஸ்டான்லி என்ற திமுக எம்.பி நீதிமன்றத்தை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்று விரிவாக ஆதாரத்தோடு அம்பலப்படுத்தப் பட்டிருந்தது. வசந்தி ஸ்டான்லியின் கணவர் ஸ்டான்லி பல தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில், போலிப்பத்திரங்களைக் கொடுத்து கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள், வீட்டை ஏலம் விட முயற்சிக்கும் போது, அந்தப் பத்திரங்கள் போலி என்பது தெரிய வருகிறது. இதையடுத்து, வங்கிகள் காவல்துறையில் புகார் தெரிவிக்கின்றன. இப்புகாரின் மீது பதியப்பட்ட வழக்கில், காவல்துறை வசந்தியின் கணவரை கைது செய்கிறது. வசந்தி முன் ஜாமீன் கோருகிறார். முன் ஜாமீனுக்காக, 25 லட்சம் பெறுமானமுள்ள சொத்துக்கான பத்திரத்தை வசந்தியோ, அல்லது வசந்தி சார்பாக வேறு ஒருவரோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இரண்டு நபர்கள், தலா ஒரு லட்சம் மதிப்புள்ள ஜாமீன் தாரர்களாக இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதிக்கிறது.
இந்த நிபந்தனையை நிறைவேற்றி வசந்தி ஸ்டான்லி முன்ஜாமீன் பெறுகிறார். முன்ஜாமீனுக்காக வசந்தி சமர்ப்பித்த அத்தனை ஆவணங்களும் போலி என்பது தெரிய வருகிறது. இவ்வாறு போலியாக ஆவணம் சமர்ப்பித்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும். மேலும் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததற்காக அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து, மத்தியக் குற்றப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கமிஷனர் கண்ணாயிரத்திடம் புகார் மனு அக்டோபர் 2010ல் அளிக்கப்பட்டது. கருணாநிதியின் அடிமையாக இருந்த கண்ணாயிரமா நடவடிக்கை எடுப்பார் ? அவர் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வசந்தி ஸ்டான்லி என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் நிபந்தனைகளுக்கான போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். இதன் மூலம் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் ஏமாற்றியிருக்கிறார். இது குறித்து அக்டோபர் 2010ல் சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் புகாரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாதாத காரணத்தால், நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை ஆணையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றப் பதிவாளர் போலி ஆவணங்களைக் கொடுத்து நீதிமன்றத்தை ஏமாற்றிய வசந்தி ஸ்டான்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. அவ்வழக்கில், கடந்த வாரம், தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
அந்தத் தீர்ப்பில் நீதிபதி இக்பால், முதலில் இது பொதுநல வழக்கா என்பதைப் பார்க்க வேண்டும் என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக் காட்டினார். அந்த அத்தனைத் தீர்ப்புகளும் இந்த வழக்குக்கு ஏன் பொருந்தாது என்பதை வரிக்கு வரி பதிலளிக்க முடியும் என்றாலும், இறுதியாக தலைமை நீதிபதி கூறிய காரணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால்
பொதுநல வழக்கு என்பது விளிம்புநிலை மக்களின் உரிமைக்காக தொடரப்பட வேண்டுமே ஒழிய, தனிப்பட்ட நலன்களுக்காக தொடரப்படக் கூடாது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பொதுநல வழக்கில் உத்தரவிடும்போது, வறுமை, அறியாமை, வன்கொடுமை போன்றவற்றைக் களையவும், பொதுமக்களில் பெரும் பாலானோருக்கு நன்மை பயக்கவும் தக்க வகையில் பொதுநல வழக்குகள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது என்று தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் 2ஜி வழக்கில் தொடரப்பட்ட வழக்கு விளிம்புநிலை மக்களுக்கான வழக்கு அல்ல. ஊழலை வெளிக் கொணர்வதற்காக தொடரப்பட்ட வழக்கு. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுமே விளிம்புநிலை மக்களுக்கானது அல்ல… நீதிமன்றங்கள் பொதுநல வழக்குகளில் வழங்கிய தீர்ப்பினாலேயே பல ஊழல்கள் அம்பலமாகியிருக்கின்றன. வினீத் நாராயண் என்பவர் தொடுத்த வழக்கினால்தான், இன்று வரை மத்திய கண்காணிப்பு ஆணையர் பதவிக்கான நபர், எதிர்க்கட்சித் தலைவரை கலந்தாலோசித்த பின்னர் நியமிக்கப்படுகிறார். அந்தத் தீர்ப்பு வரவில்லையென்றால், ஆளும் அரசு யாரை வேண்டுமானாலும் நியமித்துக் கொண்டிருக்கும்.
வறுமை ஒழிப்பு, வன்கொடுமை தடுப்பு போன்வற்றுக்கு மட்டுமே பொதுநல வழக்கு தொடரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் எந்த நேரத்திலும் கட்டுப்பாடு விதிக்கவில்லை.
ராஜ்ய சபையில் எம்.பியாக இருக்கும் ஒருவர், நீதிமன்றத்தின் முன் பொய்யான ஆவணத்தை சமர்ப்பித்து, ஜாமீன் பெற்றிருக்கிறார் என்பதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பு. நீதித்துறையின் மேன்மை காக்கப்பட வேண்டும், நீதிமன்றத்தை ஏமாற்றும் நபர் தண்டிக்கப் பட வேண்டும் என்று ஒரு குடிமகன் நினைத்து, அவ்வாறு ஏமாற்றும் நபரின் மீது நடவடிக்கை எடுங்கள் என்று நீதிமன்றத்துக்கு வருவது ஒரு குடிமகனின் கடமை.
அடுத்ததாக தலைமை நீதிபதி, “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, இந்த வழக்கு பொதுநல வழக்கு ஆகாது. வசந்தி ஸ்டான்லி வங்கியிலிருந்து கடன் வாங்கியிருக்கிறார். அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் பொய்யானவை என்று தெரிகிறது. இதற்காக வங்கிகள் ஏற்கனவே புகார் கொடுத்து வழக்கு பதியப்பட்டு, அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் வசந்தி ஸ்டான்லி, பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்றும் தெரிய வருகிறது.
அவ்வாறு வசந்தி ஸ்டான்லி செய்திருந்தால், சம்பந்தப்பட்ட வங்கியும், நீதிமன்றமுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் பொதுநலன் ஏதும் இல்லாத காரணத்தால் இதற்காக பொதுநல வழக்கு ஏற்கப்படக்கூடாது. மேலும் வசந்தி ஸ்டான்லி இவ்வாறு செய்திருப்பதால் அடித்தட்டு மக்களின் சமூக நீதியோ அவர்களின் பாதுகாப்போ பாதிக்கப்படவில்லை.”
வங்கிகளும், நீதிமன்றமும் நடவடிக்கை எடுத்திருந்தால், பொதுநல வழக்கு எதற்காக தொடுக்கப் பட வேண்டும் ? மேலும், நீதிமன்றத்தில் வசந்தி ஸ்டான்லி பொய்யான ஆவணத்தைக் கொடுத்து முன் ஜாமீன் பெற்றிருப்பது வங்கிக்கு எப்படித் தெரியும் ? நீதிமன்றத்தின் முன், பொய் சாட்சி சொல்பவர் மீது கீழமை நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்லும் போது, தனது பொறுப்பை இப்படித் தட்டிக் கழிக்கும் உயர்நீதிமன்றத்தின் நீதிபரிபாலனத்தைப் பார்த்தீர்களா ? வசந்தி ஸ்டான்லி இப்படிச் செய்திருப்பதால் அடித்தட்டு மக்களின் சமூகநீதி பாதிக்கப்பட வில்லை என்று சொல்வது பொறுப்பற்ற தன்மையின் உச்சகட்டம் அல்லவா ? பொய்யான ஆவணத்தை சமர்ப்பித்து நீதிமன்றத்தை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது பொதுநல வழக்கு இல்லையென்றால் வேறு எது பொதுநல வழக்கு.
இதே தலைமை நீதிபதி, கடந்த மாதம் ஒரு காரியத்தைச் செய்தார். ஒரு வழக்கறிஞர், தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், நான் காவல்துறைக்கு எதிராக ஒரு வழக்கை நடத்தி வருகிறன். அந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளராக இருந்த விமலா, பொய்யான வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதற்காக அவர் மீது நான் கொடுத்த புகார் நிலுவையில் இருக்கும்போதே அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டுவிட்டார். இதனால் அவர் உயர்நிதிமன்ற நீதிபதியாக இருக்கக்கூடாது என்று ஒரு வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கு கீழ்கண்ட நீதிபதிகளிடம் போடாமல் வேறு ஒரு நீதிபதியிடம் வருமாறு உத்தரவு போடுங்கள் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
வந்ததே கோபம் தலைமை நீதிபதிக்கு…. உடனே ஏழு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வை நியமித்தார். அந்த வழக்கறிஞரை வரச்சொன்னார். “வர வர நீதிபதிகளின் மீது மரியாதையே இல்லாமல் போய் விட்டது. என்ன துணிச்சல் இப்படி ஒரு கடிதம் எழுத !!! என்று அந்த வழக்கறிஞரைப் பார்த்து கடும் கோபத்தோடு பேசினார். மற்று ஆறு நீதிபதிகளில் 5 நீதிபதிகள், அந்த வழக்கறிஞரைப் பார்த்து, ஆளுக்கு ஆள் மிரட்டினார்கள்.” இறுதியாக அந்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப் போகிறோம் என்று உத்தரவிட்டு, மூன்று வாரங்களுக்குள் பதில் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டனர்.
கடந்த வாரம் இந்த வழக்கு அதே ஏழு நீதிபதிகளின் முன்பு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வைகை மற்றும் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆகியோர் வாதாடினர். “ஒரு வழக்கறிஞர் தவறு செய்திருந்தால், அதைக் கண்டிக்க நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு. ஆனால் வரலாறு காணாத வகையில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்திருப்பது, நேரடியாக வழக்கறிஞர்களோடு மோதுவது போலிருக்கிறது” என்றார்கள். வைகை, “19 பிப்ரவரி 2009ல் இதே தலைமை நீதிபதியின் அறைக்குள், நீதிபதிகள் காவல்துறையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒளிந்திருந்தார்கள். அன்று வழக்கறிஞர்கள் நீதிபதிகள் என்று வித்யாசம் பாராமல் காவல்துறையால் தாக்கப்பட்டார்கள். ஆனால் அதை விசாரிப்பதற்கு இரண்டே இரண்டு நீதிபதிகளைத்தான் இந்த நீதிமன்றம் நியமித்தது. ஆனால் இந்த விவகாரத்துக்கு ஏழு நீதிபதிகளை நியமித்திருக்கிறீர்கள் ” என்றார்.
அடுத்த நாளே ஏழு நீதிபதிகளை மாற்றி இரண்டு நீதிபதிகளாக மாற்றி உத்தரவிட்டார் தலைமை நீதிபதி. இரண்டு விவகாரங்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்தீர்களா ? நீதிமன்றத்திடம் பொய்யான ஆவணத்தை சமர்ப்பித்தவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று வழக்கு தொடுத்தால் அதை பொதுநலமல்ல என்று தள்ளுபடி செய்யும் நீதிமன்றம், நீதிபதிகளின் மீது நம்பிக்கை இல்லை என்று பெயரிட்டு, கடிதம் கொடுத்த வழக்கறிஞரை தண்டிக்க ஏழு நீதிபதிகள் அமர்வு.
சரி… தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத் தீர்ப்புக்கு வருவோம். இந்தத் தீர்ப்பை அளித்தவர் நீதியரசர் ராமசுப்ரமணியம்.
நீதியரசர் ராமசுப்ரமணியம்
கருணை ராஜ் என்று ஒருவர் மலேசியாவிலிருந்து தன் குடும்பத்தோடு சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் தங்குகிறார். அவருக்கு மூன்று குழந்தைகள். ஒரு வயதுக்கு வந்த மகள். இவர்களை குடும்பத்தோடு, நள்ளிரவில் கோவை காவல்துறையினர் கைது செய்கின்றனர். கணவரையும், மனைவியையும் சிறையில் அடைத்த காவல்துறையினர், குழந்தைகளை அரசு பாதுகாப்பு இல்லத்தில் அடைக்கின்றனர். மனைவி ஜெயந்தி முதலில் சிறையிலிருந்து வெளி வருகிறார். வெளிவந்து தனது குழந்தைகளை பார்க்க முயற்சிக்கும் போது, கோவை காவல்துறையினர் குழந்தைகளைப் பார்க்க விடாமல் தடுக்கின்றனர். இவரது மனைவி ஜெயந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர், குழந்தைகள் தாயாரோடு சேர்க்கப்படுகின்றனர்.
இதன் நடுவே ஜாமீனில் வெளிவரும் கருணைராஜை, வெளிவந்த அன்றே, சிறை வாசலில் வைத்துக் கைது செய்து, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சென்று அடைக்கின்றனர் காவல்துறையினர். அவர் வெளிநாட்டினர் என்பதால், அவரை சிறப்பு முகாமில் அடைப்பதாக உத்தரவிடுகின்றனர். இந்த உத்தரவை எதிர்த்து கருணை ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார். இந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.
5. Though the petitioner has made several allegations against a particular Police Officer without even impleading him as a party, those allegations need not be enquired into, for testing the correctness of the impugned order for various reasons. First of all, the petitioner has not assailed the impugned order exactly on the ground of mala fides, though he could have done so by impleading the said Police Officer as a party. As a matter of fact, if he had done so, the said Officer would have had many things to explain to this Court, in view of the manner in which even the children of the petitioner including an adolescent daughter was dealt with by the Police, when that officer was at the helm of affairs at Coimbatore. Anyway, since the petitioner himself has spared me of the necessity to go into these allegations by not challenging the impugned order on the ground of mala fides and also not impleading that officer as a party to the writ petition, I shall leave all these allegations apart, so that the correctness of the impugned order could be tested on purely legal grounds.
மனுதாரர் ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லியுள்ளார். அந்த அதிகாரியையும் இந்த வழக்கில் அவர் எதிர்மனுதாரராகச் சேர்த்து உள்நோக்கத்தோடு மனுதாரரை முகாமில் அடைத்துள்ளனர் என்று வழக்காடியிருந்தால், மனுதாரரின் பிள்ளைகள் நடத்தப்பட்ட விதம் குறித்தும், அவரின் வயதுக்கு வந்த மகள் நடத்தப்பட்ட விதம் குறித்தும், அந்த காவல்துறை அதிகாரி பல்வேறு விளக்கங்களை அளிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் மனுதாரரே, அந்த காவல்துறை அதிகாரியை வழக்கில் சேர்க்காமல் போனதால், சட்டத்தின் அடிப்படையில் மட்டும், மனுதாரரை முகாமில் அடைத்தது சரியா தவறா என்று ஆராய்கிறேன்.
16. Keeping the above statutory provisions in mind, if we get back to the facts of the case, it is seen from para 14 of the counter affidavit filed by the first respondent – Government that the petitioner was released on bail from the Central Prison on 8.11.2011 and that in order to restrict his movements in the State till the disposal of the criminal cases pending against him, a proposal was sent to the Government by the Inspector General of Police, Intelligence (Internal Security), Chennai on 8.11.2011 and that accordingly, the Government issued the impugned order dated 9.11.2011.
மேற்கூறிய சட்ட விதிகளை மனதில் வைத்து, தற்போது கையில் இருக்கும் வழக்கை ஆராயும் போது, அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் பத்தி 14ல் குறிப்பிட்டுள்ளபடி மனுதாரர் கருணைராஜ் 08.11.2011 அன்று சிறையிலிருந்து விடுதலையாகிறார். அவர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான ஐஜி 08.11.2011 அன்று அரசுக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறார். அந்தக் கோரிக்கையின்படி, அரசு அவரை முகாமில் அடைக்கம் ஆணையை 09.11.2011 அன்றே பிறப்பிக்கிறது.
17. In other words, within a span of less than 24 hours, the file has moved on fast-track resulting in the impugned order being issued. Therefore, obviously the petitioner never had an opportunity to contest the claim that he is a foreigner. It is true that under Section 9 of the Foreigners Act, 1946, the onus of proving is on the petitioner to show that he is not a foreigner. But that onus can be discharged by him only if an opportunity had been given to him.
வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், இந்தக் கோப்பு 24 மணி நேரத்தில் அதி வேகமாக நகர்த்தப்பட்டு இந்த ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது. மனுதாரர் தான் இந்தியன்தான் என்பதை விளக்குவதற்கு எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. 1946ம் ஆண்டு வெளிநாட்டவர்களின் சட்டத்தின் பிரிவு 9ன் படி, தான் இந்தியக் குடிமகனா, வெளிநாட்டவரா என்பதை நிரூபிக்க வேண்டியவர் மனுதாரரே. ஆனால், அவ்வாறு நிரூபிப்பதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.
18. If an opportunity had been given to the petitioner, there are two things that he could have proved. They are (i) that he is an Indian national and not a foreigner; and (ii) that by virtue of para 2 of the Foreigners (Exemption) Order, 1957, the provisions of the Act would not apply to him as he is alleged to be a citizen of Malaysia, which is a Commonwealth Country. If the petitioner had been able to prove that he is an Indian citizen, there are a host of fundamental rights that flow out of such proof and in such an event, an order like the one impugned in the writ petition could not have been passed at all. Alternatively, even if the petitioner had not been able to prove that he is an Indian citizen, he could have at least shown that the Act itself is not applicable to a person who is stated to be a national of one of the Commonwealth Countries. Therefore, the affording of an opportunity to the petitioner, before the imposition of the order on him was very sacrosanct.
மனுதாரருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அவர் இரண்டு விஷயங்களை நிரூபித்திருக்க முடியும். ஒன்று, அவர் இந்தியக் குடிமகன், வெளிநாட்டவர் அல்ல என்பது. மற்றொன்று, 1957 வெளிநாட்டவர் விதிவிலக்குச் சட்டத்தின் படி, அவர் மலேசிய நாட்டின் குடிமகன் என்பதை நிரூபித்திருக்க முடியும். மலேசியா ஒரு காமன்வெல்த் நாடு. மனுதாரர் தான் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபித்திருந்தாரேயானால், அவருக்கு பல அடிப்படை உரிமைகள் அந்த நிரூபணமே அவருக்கு பல அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கும். இந்த ரிட் மனுவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய சூழலே ஏற்பட்டிருக்காது. மாறாக அவர் மலேசியக் குடிமகன் என்பதை நிரூபித்திருந்தாலும், மலேசியா காமன்வெல்த் நாடு என்பதால், வெளிநாட்டவர் சட்டம் என்பது அவருக்குப் பொருந்தாது என்பதை நிரூபித்திருக்க முடியும். ஆகையால், வெளிநாட்டவர் சட்டத்தின் படி, ஒருவரை முகாமுக்குள் அடைக்கும் முன், அவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவேண்டியது, மிக மிக அவசியம்.
39. Apart from the fact that no opportunity was given to the petitioner even to discharge the onus placed on him under Section 9, before the Government passed the impugned order, there is also a clear non-application of mind on the part of the Government. As per para 14 of the counter affidavit filed by the Government, the Inspector General of Police sent his recommendation for lodging of the petitioner in the Special Camp, only on 8.11.2011, immediately after the release of the petitioner on bail. The impugned order was issued within 24 hours on 9.11.2011. I do not know how it was possible for the Government to scan all the records within such a short span of time, considering the pace with which the machinery normally moves. Therefore, the first respondent appears to have passed the impugned order in haste. As held by the Supreme Court in Sonowal II, an order under Section 3(2) of the 1946 Act, should not only reflect application of mind, but also follow the principles of natural justice. In this case, both are absent. Therefore, the impugned order is liable to be set aside.
மனுதாரருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படாதது மட்டுமல்ல, அரசு சரிவர பரிசீலனை செய்யாமல் இந்த ஆணையை வழங்கியிருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அரசின் பதில் மனுவில் பத்தி 14ல் சொல்லியபடி, மனுதாரரை சிறப்பு முகாமுக்குள் 08.11.2011 அன்று, அதாவது அவர் ஜாமீனில் வெளிவந்த அன்றே அடைக்கிறார்கள். மறுநாள் 09.11.2011 அன்று அதாவது 24 மணி நேரத்துக்குள், அவரை முகாமுக்குள் அடைக்கும் ஆணை வெளியிடப்படுகிறது. அரசு இயந்திரம் வழக்கமாக செயல்படும் வேகத்தை வைத்துப் பார்க்கும் போது, இப்படி ஒரு குறுகிய காலத்துக்குள் எப்படி இந்த ஆணையை வெளியிட முடிந்தது என்பது புரியவில்லை. உச்சநீதிமன்றம் சோனாவால் என்ற வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, வெளிநாட்டவர் சட்டத்தின் பிரிவு 3 (2)ன் படி ஒருவரை அடைக்கும் முன், உரிய யோசனையோடு அதை செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, இயற்கை விதிகளுக்குட்பட்டும் அதை செய்ய வேண்டும். ஆகையால், இந்த ஆணையை ரத்து செய்கிறேன்.
என்று தீர்ப்பளித்தார் நீதியரசர் ராமசுப்ரமணியம். இது வரை சொன்ன விஷயங்களால் இந்தத் தீர்ப்பு சிறப்படையவில்லை. இனி வருபவற்றைப் பாருங்கள்.
40. Before concluding, I must also bring on record certain disturbing features in this case. They are:-
(i) According to the petitioner, he was picked up from a hotel at Chennai on 22.8.2010 and taken to Coimbatore and remanded to judicial custody by the Judicial Magistrate-III, Coimbatore on 23.8.2010. In the Habeas Corpus Petition HCP No.177 of 2011, filed by the petitioner, it was alleged that the petitioner’s wife was also arrested and both of them along with their 3 children were taken to Coimbatore and the whereabouts of the children became unknown thereafter. The Commissioner of Police, Coimbatore City filed a counter affidavit in the Habeas Corpus Petition claiming that the children were sent to Don Bosco Anbu Illam at Pothanur, Coimbatore, on humanitarian considerations and that the same was also recorded in the remand report. The order passed by the Division Bench in the Habeas Corpus Petition shows that the children were aged 18 years, 6 years and 5 years respectively. The eldest child is a girl child and the petitioner has made very serious allegations of outraging the modesty of his adolescent daughter, against the police officials including the then Commissioner of Police, Coimbatore. There is no whisper in the counter affidavit filed by the first respondent as to whether any kind of enquiry was conducted by the Government on such allegations. Even if the petitioner is a foreign national, his children cannot be treated in the manner alleged by him and the first respondent owes a duty to conduct an impartial and independent enquiry into these allegations, to keep the image of the police unsullied. But this has not been done.
முடிக்கும் முன்பாக இந்த வழக்கில் அதிர்ச்சி அளிக்கும் சில விஷயங்களை பதிவு செய்ய வேண்டும்.
(i) மனுதாரர் கூறுவது போல, சென்னையில் ஒரு ஹோட்டலில் இருந்து 22.08.2010 அன்று கைது செய்யப்பட்டு கோவை 3வது நீதிமன்ற நடுவர் முன்பாக 23.08.2010 அன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். உயர்நிதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், மனுதாரரின் மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆட்கொணர்வு மனுவில் பதில் மனு தாக்கல் செய்த போது மனுதாரரின் குழந்தைகள் கோவையில் உள்ள டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் மனிதாபிமான அடிப்படையில் சேர்க்கப்பட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பளித்த டிவிஷன் பென்ச் தனது தீர்ப்பில் மனுதாரரின் குழந்தைகள் 18, 6 மற்றும் 5 வயது உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மூத்த குழந்தை 18 வயதான பெண் குழந்தை. அந்த பெண்குழந்தை கோவை கமிஷனர் உள்ளிட்ட காவல்துறையினரால், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு மிகத் தீவிரமானதொரு குற்றச்சாட்டு. அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மனுதாரர் வெளிநாட்டவர் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அவரது பிள்ளைகளை இப்படி நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. காவல்துறை மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தக் களங்கத்தை துடைக்க, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தன்னிச்சையான பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் இது நடைபெறவில்லை.
(ii) The manner in which the petitioner was lodged in the special camp for foreigners, as narrated in paragraph 14 of the counter affidavit itself, does not inspire the confidence of this Court. As per para 14 of the counter affidavit, the petitioner was released on bail from the Central Prison, Puzhal on 8.11.2011. The proposal to lodge him in special camp was sent by the Inspector General of Police on 8.11.2011 itself. The Government passed the impugned order on 9.11.2011. The petitioner was immediately lodged in the camp on 9.11.2011 itself at 19.00 hours. However, the order was served on him only on 11.11.2011 through the Inspector of Police in-charge of Chinglepet Special Camp. These admissions in para 14 of the counter affidavit would show that the impugned order was served on the petitioner, only after 2 days of lodging him in the special camp. In other words, he was lodged in the special camp first and the impugned order served on him after 2 days. This shows that there was some anxiety on the part of the respondents not to allow the petitioner to enjoy the freedom that he gained on 8.11.2011 on account of the bail orders.
வெளிநாட்டவர்களுக்கான முகாமில் மனுதாரர் அடைக்கப்பட்டிருக்கும் விதத்தையும், அரசு பதில் மனுவில் பத்தி 14ல் சொல்லியிருக்கும் விஷயங்களும், இந்த நீதிமன்றத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. 08.11.2011 அன்று மனுதாரருக்கு ஜாமீன் கிடைக்கிறது. மனுதாரரை முகாமில் அடைக்க வேண்டும் என்று 08.11.2011 அன்றே ஐஜி கடிதம் எழுதுகிறார். அரசு மறுநாளே 09.11.2011 அன்று இதற்கான உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த ஆணை மனுதாரருக்கு 11.11.2011 அன்று செங்கல்பட்டு சிறப்பு முகாம் மூலமாக வழங்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் மனுதாரர் முதலில் முகாமில் அடைக்கப்பட்டு 2 நாட்கள் கழித்தே அதற்கான உத்தரவு வழங்கப்படுகிறது. ஜாமீன் பெற்றதன் மூலமாக 08.11.2011 அன்று மனுதாரருக்கு கிடைத்த சுதந்திரத்தை அவருக்கு வழங்கக் கூடாது என்று அரசுத்தரப்பில் கவலை இருந்ததைப் பார்க்க முடிகிறது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே மனுதாரரை செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்குள் வைத்து இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குகிறார்கள். இந்த விபரத்தை நீதிமன்றத்தில் தெரிவித்ததும், நீதியரசர் ராமசுப்ரமணியம், செங்கல்பட்டு நீதித்துறை நடுவரை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடுகிறார்.
The report discloses (a) that there were no external injuries; (b) that as per the Accident Register copy available in the hospital, the petitioner was assaulted by one policeman on 14.2.2012 at around 2.00 P.M., in the camp; and (c) that as per the statement given by the petitioner, he was assaulted by two unknown persons in the camp. Interestingly, the copy of the Accident Register forwarded by the Chief Judicial Magistrate shows that though no external injuries were reported, the petitioner had vomited blood. In the statement given by the petitioner to the Chief Judicial Magistrate, he had very clearly indicated the fact that the persons who assaulted him, did so in the name of the Inspector General of Police. All these facts go to show that the petitioner, who is lodged in the special camp, had been physically assaulted. But it appears that no first information report was lodged and no enquiry conducted. Special Camp is obviously a protected area and the Special Tahsildar has responsibility for ensuring the safety and security of the inmates. The fact that the petitioner was assaulted in the special camp is an indication that there is something more than what meets the eye. A Constitutional Court cannot turn a blind eye to such happenings. Therefore, I am of the view that necessary directions are to be given even while quashing the impugned order.
நீதித்துறை நடுவர் அளித்த அறிக்கையின்படி, மனுதாரருக்கு வெளிப்புறக் காயங்கள் இல்லை. விபத்துப் பதிவேட்டின்படி, மனுதாரர் 14.02.2012 அன்று மதியம் 2 மணிக்கு ஒரு போலீசால் அடிக்கப்டுகிறார். மனுதாரர் வாக்குமூலத்தின் படி, அவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் தாக்கப்டுகிறார். நீதித்துறை நடுவர் அனுப்பியுள்ள விபத்துப்பதிவேட்டின் நகலின்படி, மனுதாரருக்கு வெளிப்புறக் காயங்கள் இல்லாவிட்டாலும், அவர் ரத்த வாந்தி எடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்த மனுதாரர், தன்னைத் தாக்கியவர்கள் ஐஜியின் பேரைச் சொல்லித் தாக்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விபரங்கள், மனுதாரர் தாசில்தாரின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய சிறப்பு முகாமினுள்ளேயே தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. ஆனால், இது தொடர்பாக எப்ஐஆரும் தாக்கல் செய்யப்படவில்லை, எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை.
பாதுகாக்கப்பட்ட பகுதியினுள்ளே மனுதாரர் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதே, இந்த விஷயத்தில் வெளிப்படையாக தெரியாத மர்மம் இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அமைக்கப்பட்ட ஒரு நீதிமன்றம் இந்த விஷயத்தை புறந்தள்ள முடியாது.
41. In view of the above, the writ petition is allowed, the impugned order is set aside and the respondents are directed to allow the petitioner to move out of the special camp. The first respondent shall look into the complaints made by the petitioner, in order to avoid an impression that serious allegations against higher officials would get wiped under the carpet.
மேற்கூறிய காரணங்களை வைத்து மனுதாரரை முகாமுக்குள் அடைத்த ஆணை ரத்து செய்யப்படுகிறது. உயர் அதிகாரிகள் மீதான புகார்கள் விசாரிக்கப்படாமல் மூடி மறைக்கப்படும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அரசு மனுதாரர் கூறியுள்ள புகார்களை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதியரசர் ராமசுப்ரமணியம்.
இந்தத் தீர்ப்பு எப்படி இருக்கிறது ? சரி, அந்த உயர் அதிகாரி யார் என்று தெரிந்து கொள்ள சவுக்கு வாசகர்களுக்கு ஆர்வமாக இருக்கும் தானே ? அவர் வேறு யாருமல்ல… ஸ்நேக் பாபு என்று அழைக்கப்படும் சைலேந்திர பாபுதான் அது.
இந்தத் தீர்ப்பு சிறப்படைவதற்கான காரணம் என்னவென்றால், மனுதாரர் கருணை ராஜ் தனது மனுவில் சைலேந்திரபாபுவை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரவில்லை. இவ்வாறு கோரிக்கை இல்லாத பட்சத்தில், நீதிமன்றம், இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.
ஒரு ரிட் மனு விசாரணைக்கு வரும்போது, குதிரைக்கு வடிவாளம் போட்டது போலல்லாமல், எல்லா விஷயங்களையும் அலசி நியாயம் வழங்குவதே ஒரு நீதிமன்றத்தின் பணி. அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் மீறப்படும் போது, அதில் தலையிடுவது நீதிமன்றங்களின் தலையாய கடமை மட்டுமல்ல, அடிப்படை பணி.
ஆனால், ஒரிரு நீதிபதிகளைத் தவிர, பெரும்பாலான நீதிபதிகளை “கவர்மென்ட் சர்வன்ட்” சிண்ட்ரோம் என்ற வியாதி பீடித்திருக்கிறது. கவர்மென்ட் சர்வன்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன தெரியுமா ?
தனியார் நிறுவனங்களில் பணிக்கு சேருபவர்கள் அனைவருக்குமே நமது பணி நிரந்தரம் இல்லை என்பது தெரியும். ஆகையால் அவர்கள் பணிப்பாதுகாப்பைப் பற்றி பெரிதான கவலை கொள்வது கிடையாது. ஆனால் அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு பணி நிரந்தரம் என்ற நினைப்பு பணியில் சேர்ந்த நாள் முதலாகவே உண்டு. இந்த அடிப்படையிலேயே அவர்களின் சிந்தனைப் போக்கு இருக்கும். இதன் காரணமாக அவர்கள் எப்போதும், தங்களின் வேலை, சம்பளம், ஓய்வூதியம், பதவி உயர்வு போன்ற சிந்தனைகளிலேயே உழன்று கொண்டிருப்பார்கள். புதிதாக சிந்தித்து, புதிய முயற்சிகளை எப்போதும் எடுக்க மாட்டார்கள். எந்த விவகாரமாக இருந்தாலும், இதற்கு முன் என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே பின்பற்றுவார்கள். மேலதிகாரிகள் சொல்பவற்றை கடவுளின் சொல்லாக நினைத்துக் கொள்வார்கள். எந்தக் காரியத்தைச் செய்தாலும், அது மேலதிகாரிக்கு நிறைவாக இருக்குமோ, இருக்காதோ என்ற பயத்திலேயே செயல்படுவார்கள். அரசு அலுவலகங்களில் ஒரு கோப்பில் முடிவெடுக்க ஆண்டுக்கணக்கில் கால விரயம் ஆவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இது போன்ற கவர்மென்ட் செர்வன்ட் சின்ட்ரோம்தான் பெரும்பாலான நீதிபதிகளை பாதித்திருக்கிறது. தங்களை விட மூத்த நீதிபதிகள் கோபித்துக் கொள்வார்களோ… உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ…. அரசாங்கத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ….. நமக்கு எதற்கு வம்பு… வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து விடலாம்.. நாம் எதற்கு இந்த வழக்கில் முடிவெடுக்க வேண்டும், என்ற மனப்பாங்கிலேயே பெரும்பாலான நீதிபதிகள் இருக்கிறார்கள்.
இதனால்தான் போலி என்கவுன்டர்களில் விசாரணை வேண்டும் என்று 2010 பிப்ரவரியில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழக போலீசார் தங்கு தடையின்றி சுட்டுக் கொன்று கொண்டே இருக்கிறார்கள்.
திண்டுக்கல்லில் நடந்த என்கவுன்டரைப் பற்றி வரும் செய்திகள் சென்னையில் நடந்ததை விட அப்பட்டமான கொலை இது என்பதையே ஊர்ஜிதப்படுத்துகின்றன.
மதுரை செய்தியாளர்களிடம் காவல்துறையினர் சொல்லிய கதை என்னவென்றால், அந்த லாட்ஜில் தங்கியிருந்த வரிச்சூர் செல்வம் கேங்கை பிடிக்க மதுரை டீம் அங்கு சென்றதாம். ஒரு இன்ஸ்பெக்டர் அந்த அறைக்கள் நுழைந்தவுடன், அவரை உள்ளே இழுத்து, அவர் முதுகில் அந்த ரவுடிகள் குத்தினார்களாம். அவர் காலில் கத்தியால் கீறினார்களாம். உடனே, “தற்காப்புக்காக” போலீசார் சுட்டார்களாம். அதில் சுனோஜ் என்பவர் இறந்து விட்டாராம்.
இப்படி ஒரு அப்பட்டமான அம்புலிமாமா கதையை சொல்வதற்கு காவல்துறைக்கு துணிச்சல் வந்ததற்கு காரணம் என்ன ? இந்த நீதிமன்றங்கள் தான். வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
திருக்கோவிலூர் பழங்குடி இருளர் பெண்கள் பாலியல் வன்முறை வழக்கையே எடுத்துக் கொள்வோமே. அந்தப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது நவம்பர் 2011ல். இதில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கு விசாரணைக்கு வந்த நவம்பர் 28 அன்றே சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசு 20 பிப்ரவரி 2012 அன்று பதில் மனு தாக்கல் செய்தது. அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்த டிஜிபி ராமானுஜம், நள்ளிரவில் பெண்களை அழைத்துச் சென்றது உண்மை, ஆனால் பாலியல் வன்முறைக்கு அவர்கள் ஆளாக்கப்படவில்லை, இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியிருந்தார்.
இதற்குப் பிறகு இந்த வழக்கில் நீதிமன்றம் விசாரிக்க என்ன இருக்கிது ? சிபிஐ விசாரணைக்கு அனுப்புகிறோம், அல்லது இல்லை வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று இரண்டில் ஒன்று சொல்ல வேண்டியதுதானே… ? அந்தப் பழங்குடியினப் பெண்கள் பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார்கள் என்றே ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். இரவு 12 மணிக்கு பெண்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ஒரே காரணத்துக்காகேவே அந்தக் காவல்துறையினர் சிறை செல்ல வேண்டாமா ?
அரசு வழக்கறிஞருக்கு உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளி வைக்கும் நீதிமன்றத்தை என்னவென்று சொல்வீர்கள் ? குற்றம் நடந்து 5 மாதங்கள் கழித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் சிபிஐ அதிகாரிகள் தான் எப்படி புலன்விசாரணை செய்வார்கள் ? காவல் துறையினர் தடயங்களையும், சாட்சியங்களையும், முழுமையாக அழித்த பின்னர் எப்படி விசாரணை செய்யும் சிபிஐ ?
இப்போது சொல்லுங்கள்…. இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி ? காவல்துறையினரா ….. நீதிமன்றங்களா ?