தமிழகம் போல சாபக்கேடு பிடித்த மாநிலத்தை எங்குமே பார்க்க முடியாது ஒரு தனியான தீவு போல, நெருக்கடி அறிவிக்கப்பட்ட நிலையைப் போல ஒரு தாலுகாவில் உள்ள அத்தனை பேரின் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது…. ஆயிரக்கணக்கில் பெண்களும், குழந்தைகளும் வேறு எங்கும் நகர முடியாமல் முடக்கப்பட்டுள்ளனர்….. குடிநீர், பால், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டுள்ளது…. பத்திரிக்கையாளர்களைக் கூட உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்துள்ளனர்….
ஆனால் எந்த எதிர்க்கட்சியும் இது குறித்து கவலை தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதை விட ஒரு சாபக்கேடு இருக்க முடியுமா ?
கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்காதே, என்று ஏழு மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அம்மக்களின் மன உறுதியைக் குலைக்க வேண்டும் என்று, தொடர்ந்து மத்திய அரசு முயன்று வந்தது. போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றனர். போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வெளிநாட்டு ஏஜென்ட் என்றனர். போராட்டக்காரர்கள் நக்சலைட்டுகள் என்றனர். அமெரிக்க கைக்கூலிகள் நடத்தும் போராட்டம் என்றனர். மத்திய உளவுத்துறையை பயன்படுத்தி, போராட்டத்துக்குள் ஊடுருவி, போராட்டக்காரர்களுக்குள் குழப்பம் என்றனர்.
ஆனால், எந்த முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. அந்த மக்கள் உறுதியாக அணு உலையை இழுத்து மூடு என்ற தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். ஜெயலலிதா சொன்னபடியெல்லாம் தலையாட்டுவதற்கு அவர்கள் என்ன அதிமுகவின் எம்.எல்.ஏவா எம்.பியா ?
கூடங்குளம் மக்களின் இந்தப் போராட்டத்தை முதலில் ஆதரிப்பது போல வேடமிட்டார் ஜெயலலிதா. கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். பிறகு இவராக ஒரு வல்லுனர் குழுவை நியமித்தார். அந்த வல்லுனர் குழுவில் பேராசிரியர் இனியன் என்பவரைத் தவிர, மற்ற அனைவரும், அணு உலைக்கு ஆதரவானவர்களாக நியமித்தார். அந்தக் குழு அறிக்கை அளித்ததும் அந்த அறிக்கையைப் பற்றி ஒரு வார்த்தையும் வெளியில் சொல்லாமல் இருந்து விட்டு, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், இரவோடு இரவாக கூடங்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கில் போலீசாரை இறக்கி, அந்தப்பகுதியையை தனித் தீவாக ஆக்கினார்.
இது ஒரே நாளில் நடந்த சம்பவம் அல்ல. இதற்கு முன் இரண்டு முறை இடிந்தகரை பகுதிக்கு சென்று அந்த இடத்தில் எப்படி போராட்டத்தை ஒடுக்கலாம் என்று பார்வையிட்டு வந்தார் கூடுதல் டிஜிபி ஜார்ஜ். மாநில அரசு சார்பில் நிபுணர் குழு அறிக்கை அளிப்பதற்கு முன்பாகவே ஜார்ஜ் அந்த இடத்தை பார்வையிட்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதன் தொடர்ச்சியாகவே தற்போதைய அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டுள்ளன.
18 மார்ச் அன்று மாலை முதல் இடிந்தகரை பகுதியில் காவல்துறையினர் குவியத் தொடங்கினர். சங்கரன் கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த காவல்துறையினர் அவ்வளவு பேரும், இடிந்தகரைக்கு அனுப்பப்பட்டனர். முதல் கட்டமாக இடிந்தகரையை இணைக்கும் அத்தனை சாலைகளிலும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்தனர். காவல்துறையினர் குவிக்கப்பட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அங்கிருந்த மாதா கோவில் மணியை அடித்து, சுற்று வட்டார மக்களை வரவழைத்தனர். காவல்துறையினர் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
அன்று இரவு போராட்டப் பந்தலுக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பு துண்டிக்கப் படுகிறது. மறுநாள் 19 மார்ச் அன்று, போராட்டக் குழுவின் முக்கிய உறுப்பினரான வழக்கறிஞர் சிவசுப்ரமணியன் கைது செய்யப்படுகிறார். அவரோடு மேலும் ஏழு பேர் கைது செய்யப்படுகின்றனர். பிறகு மேலும் 195 பேர் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுள் முக்கியமான 11 பேர் மீது இந்தியாவுக்கு எதிராக போர் தொடுப்பது, தேசத் துரோகம், இரு பிரிவினருக்கு இடையே வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்படுகிறது.
மற்றவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுவது போன் பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்படுகிறது. முதலில் கைது செய்யப்பட்ட சிவசுப்ரமணியன், ராஜலிங்கம் உள்ளிட்டோர், இடிந்தகரையில் உள்ள காமராஜ் சிலைக்கு எதிரே நின்று கொண்டிருந்தபோது கைது செய்யப்படுகின்றனர்.
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனேயே, போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயக்குமாரை தொலைபேசியில் அழைத்த மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், போராட்டக்குழுவினர் எழுப்பிய கோரிக்கையில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அதனால் உடனடியாக அவரை உதயக்குமார் மற்றும் புஷ்பராயன் ஆகிய இருவர் மட்டும் சந்திக்க வருமாறும் கேட்டிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிலாக, ராதாபுரம் பயணியர் விடுதியில் சந்திக்கலாமே என்றதற்கு, இல்லை நீங்கள் இங்கேதான் வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அங்கே எங்களை வரவைத்து கைது செய்து விடுவீர்கள் என்று சந்தேகமாக இருக்கிறது என்று அங்கு செல்ல மறுத்திருக்கிறார் உதயக்குமார்.
18.03.2012 அன்று மாலை மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், ராதாபுரம் தாலுகா முழுவதிலும் 144 தடைச்சட்டம் பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் அப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு செல்லக் கூடாது என்றும் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.
மறுநாள் (20.03.2012) முதல் கூடங்குளத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இடிந்தகரையை நோக்கி வரும் அத்தனை வாகனங்களும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டன. தேசியத் தொலைக்காட்சிளின் ஓ.பி. வேன்கள் எனப்படும் நேரலைக் கருவிகள் வழியிலேயே தடுக்கப்பட்டன. இடிந்தகரையில் இருந்த பத்திரிக்கையாளர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். வருகை தந்து கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
திங்களன்று காலை முதலே இடிந்தகரையில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அத்தனை வழிகளும் தடுக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் என்பதால், அவர்கள் கடல் வழியாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். காவல்துறையினர் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கே திரண்டனர். குடும்பத்தோடு பெண்களும், குழந்தைகளும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு நேர்ந்த ஆபத்துக்கு எதிராக சிறை செல்லத் தயார் என்ற உறுதியோடு இருந்தனர்.
இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதால், அந்த போராட்டப் பந்தலில் இருந்த பெண்களும் குழந்தைகளும், உணவுக்கே அல்லாடும் சூழல் ஏற்பட்டது.
உண்ணாவிரதப் பந்தலில் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டருக்கு வழக்கமாக அருகாமையில் இருந்த பெட்ரோல் பங்கிலிருந்து டீசல் வாங்கப்படும். காவல்துறையினர் மிரட்டி அந்த பெட்ரோல் பங்க்கையும் மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்படும் செய்தி அறிந்ததும், உடனடியாக பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, இதற்கெதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது. சற்று நேரத்தில், பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்படவில்லை என்று, காவல்துறையில் உயர் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அறிவித்தனர்.
இதன் நடுவே, காவல்துறை ஐஜி ராஜேஷ் தாஸ், (பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும், முல்லைப்பெரியாறு தடியடிக்கும் காரணமான அதே ஒரிஸ்ஸாக்காரர்தான்) உதயக்குமார் சரணடைய வேண்டும் இல்லையென்றால் மக்களே அவரை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உள்ளே புகுந்து கைது செய்ய வேண்டிய தேவை ஏற்படும் என்று அறிவித்தார்.
18 மாலை முதல் இந்த அடக்குமுறைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி கூட, ஜெயலிலதா அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் மட்டுமே இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்து நாளேட்டைத் தவிர்த்து வேறு எந்த ஊடகமும் இந்தப் போராட்டம் குறித்து நியாயமான செய்திகளை வெளியிடவில்லை.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால் அதை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தியின் சார்பில், நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும், தலைமைச் செயலாளுருக்கும் புகார் மனு, பேக்ஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும், விரைவுத் தபால் மூலமாகவும் அனுப்பப் பட்டது.
இன்று காலை இந்தத் தடை உத்தரவை நீக்க உத்தரவிடும்படி கோரி, ஒரு பொதுநல வழக்கு, தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், இன்று அவசரமாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக விரைவாக விசாரிக்க வேண்டும் என்று காலையில் கோரிக்கை வைத்ததை ஏற்று, தலைமை நீதிபதி நாளை இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உத்தரவிட்டார்.
வியாழனன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் திமுக, மதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் என்று எத்தனையோ கட்சிகள் இருந்தும், அத்தனை பேரும் ஜெயலலிதா விரித்த வலையில் விழுந்து விட்டனர் என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.
விஜயகாந்த் தான் அணு உலைக்கு ஆதரவானவன் என்று அறிவித்து விட்டார். திமுக தலைவர் கருணாநிதியோ, ஏன் இன்னும் அணு உலை திறக்காமல் இருக்கிறது என்று ஜெயலலிதாவின் நோக்கத்தையே சந்தேகத்திற்குள்ளாக்கினார். இடது சாரிகளோ, ரஷ்யாவிலிருந்து கழுதை மூத்திரத்தை எடுத்து வந்தால் கூட, சிறப்பாக இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள்.
ஜுலை 2011ல் ஜெய்தாப்பூர் பகுதிக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் பூக்குஷிமாவுக்குப் பிறகு அணு சக்தி மின்சாரமே தேவையில்லை. மேலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் அதிக விலையில் உள்ளது. சிபிஎம் எப்போதும் அணு ஒப்பந்தத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. ஜெய்தாப்பூரையும் எதிர்ப்போம் என்று பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.
ஆனால் அதே மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு, கூடங்குளம் அணு உலையை திறப்பதென தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. ஏற்கனவே விஞ்ஞானிகள் கூடங்குளத்தை ஆராய்ந்து பாதுகாப்பானது என்று அறிக்கை அளித்தள்ளார்களாம். இதே போல ஜெய்தாப்பூர் அணு உலையையும் ஆராய்ந்து அறிக்கை அளித்தால், ஏற்றுக் கொள்ளுமா சிபிஎம்.
ஒரு மாநிலத்தில் ஒரு பகுதி மக்களை, தீண்டத்தகாதவர்கள் போல பாவித்து, 8000 காவல்துறையினரை அந்த இடத்தில் குவித்து மக்களை நடமாட விடாமல் செய்து, நெருக்கடி நிலை அறிவித்தது போன்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ள ஜெயலலிதாவை எந்தக் கட்சியும் கண்டிக்காதது தமிழ்நாட்டின் சாபக்கேடு.
பொதுநல வழக்கு தொடர்ந்ததன் விளைவாக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் உண்ணாவிரதப் பந்தலுக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இரவு 8 மணி அளவில், தமிழக டிஜிபி ராமானுஜம், “இடிந்தகரை கிராமத்திற்கு குடிதண்ணீர், பால், காய்கறி, முதலியவற்றை செல்லவிடாமல் காவல்துறையினர் தடை செய்து வைத்திருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அந்த கிராமத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை காவல்துறை நிறுத்தவோ அல்லது தடுக்கவோ இல்லை.
கூடங்குளத்தில் அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு மட்டுமே காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனரே தவிர, இடிந்தகரைக்கோ அல்லது வேறு எந்த கிராமத்திற்கோ அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்வதை தடுப்பதற்காக அல்ல” என்று அந்த செய்திக் குறிப்பில் ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சமீபத்தில் இலங்கைத் தீர்மானம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியை கபடவேடதாரி என்று வர்ணித்திருந்தார். இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, ராமானுஜத்திற்கு நன்றாகவே பொருந்தும். கடந்த 11 மாதங்களாக, தமிழகத்தில் நடந்த போலி என்கவுன்டர்களையும், பரமக்குடியில் நடந்தது போன்ற வன்முறைச் சம்பவங்களையும், இடிந்தகரையில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும், மவுன சாட்சியாக இருந்து வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவைகளுக்கு நேரடி ஆதரவையும் வழங்கி வரும் ராமானுஜம் காவல்துறையின் கபடவேடதாரிகளுக்கெல்லாம் தலைவராக இருந்து வருகிறார். உளவுத்துறை மற்றும் சட்டம் ஒழுங்குக்கான டிஜிபியாக இருக்கும் ராமானுஜம், இந்த அத்தனை சம்பவங்களுக்கும் நேரடியாக பொறுப்பானவர் ஆவார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படவில்லையென்றால் நந்திகிராம் மற்றும் சிங்கூரில் ஏற்பட்டது போன்ற பெரிய வன்முறை நடந்திருக்கும்.
“கூடங்குளத்தில் வன்முறை. போலீஸ் வேன்களுக்கு தீ வைப்பு”.
கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூடி, கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. நேற்று இரவு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேனுக்கு தீ வைத்தனர். தீயை அணைக்க வந்த போலீசார் மீது கம்புகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கினர்.
கலவரக்காரர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கலவரக் காரர்கள் தொடர்ந்து காவல் துறையினர் மீது தாக்குதல் தொடுத்த வண்ணம் இருந்தனர். தங்களை தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியின்றி காவல்துறையினர் முதலில் தடியடி நடத்தினர். அப்போதும் கலவரக்காரர்கள் தொடர்ந்து தாக்கவே, வேறு வழியின்றி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 5 பேர் இறந்தனர். இறந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்தவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.”
என்று தினமலரில் செய்தி வரும் சூழல் ஏற்பட்டிருக்கும். காவல்துறையினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இறுதியில் உயிரிழப்பது, அப்பாவி பொதுமக்களாகவே இருந்திருப்பார்கள்.