இந்தியா முழுமைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க முடியுமா ? அப்படித்தான் ஒரு தடை உத்தரவு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
19.03.2012 அன்று பிறப்பிக்கப் பட்ட உத்தரவில் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆணையில், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று மத்தியக் குழு, மாநிலக்குழு ஆகியவை சான்று அளித்த விபரங்களையும், இதைத் தொடர்ந்து மாநில அரசு 19.03.2012 முதல் கூடங்குளம் பகுதியில் அணு உலைப் பணிகள் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து “இந்நிலையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு உதவுவதோடு, கூடங்குளம் பகுதி பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களைத் தடுப்பதற்கும், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சட்டப்படி பணிபுரிபவர்களைத் தடுக்காமல் இருப்பதற்காகவும், அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டும், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டும், எந்தவிதமான கலவரங்களும் ஏற்படாமல் தடுப்பதற்கும், பொது அமைதியை பாதுகாப்பதற்கும், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு உதவி செய்தும், அவர்களை தூண்டி விடுவதுமான அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் நபர்கள் 19.03.2012 மாலை 3.00 மணி முதல் 02.04.2012 மாலை 3.00 மணி வரை இராதாபுரம் வட்ட எல்லைக்குள் நுழையத் தடை விதித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 (1)ன் கீழ் இந்தத் தடை ஆணை பிறப்பிக்கப்படுகிறது” என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் இரா.செல்வராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 (1) என்ன சொல்கிறது ?
(1) In cases where, in the opinion of a District Magistrate, a Sub-divisional Magistrate or any other Executive Magistrate specially empowered by the State Government in this behalf, there is sufficient ground for proceeding under this section and immediate prevention or speedy remedy is desirable, such Magistrate may, by a written order stating the material fact of the case and served in the manner provided by section 134, direct any person to abstain from it certain act or to take certain order with respect to certain property in his possession or under his management, if such Magistrate considers that such direction is likely to prevent, or tends to prevent, obstruction, annoyance of injury to any person lawfully employed, or danger to human life, health or safety, or a disturbance of the public tranquility, or a riot, or an affray.
உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்று கருதும்போது, ஒரு மாவட்ட நீதிபதி (மாவட்ட ஆட்சியர்), இது போன்ற ஆணை வெளியிடுவதற்காக காரணங்களை குறிப்பிட்டு எழுத்துபூர்வமான ஆணையின் மூலம், சம்பந்தப்பட்ட நபர் ஒரு குறிப்பிட்ட காரியத்தையோ, அவர் வசம் உள்ள குறிப்பிட்ட சொத்து தொடர்பாகவோ, ஒரு காரியத்தை செய்யக்கூடாது என்பதை அந்த ஆணையின் மூலம், ஒரு ஆபத்தையோ, பொது அமைதிக்கு ஏற்படும் பங்கத்தையோ, உயிருக்கு ஏற்படும் ஆபத்தையோ, பாதுகாப்புக் குறைவையோ, பொது அமைதிக்கு ஏற்படும் குந்தகத்தையோ, கலவரத்தையோ பிரிவு 134ல் உள்ளபடி அதை வெளியிட்டு, தடுக்கலாம் என்று கூறுகிறது.
தற்போது நெல்லை மாவட்ட ஆட்சியரின் 144 தடையாணையின் சாராம்சத்தை ஆராய்வோம்.
ஒரு ஆபத்தையோ, பொது அமைதிக்கு ஏற்படும் பங்கத்தையோ, உயிருக்கு ஏற்படும் ஆபத்தையோ, பாதுகாப்புக் குறைவையோ, பொது அமைதிக்கு ஏற்படும் குந்தகத்தையோ, கலவரத்தையோ தடுக்கும் பொருட்டு, அது தொடர்பான காரணங்களை எழுத்துபூர்வமாக பதிவு செய்த பிறகு தடை உத்தரவு பிறப்பிக்கப் பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தடையாணையில் இது போன்ற சம்பவங்கள் – அதாவது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும், கலவரத்தை ஏற்படுத்தும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும், பாதுகாப்புக் குறைவு ஏற்படுத்தும் எந்தச் சம்பவங்களையும் குறிப்பிடவில்லை. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்ற போராட்டமானது, எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. அப்படி இருக்கையில் பொது அமைதிக்கு ஆபத்து என்று எந்த சம்பவத்தை மாவட்ட ஆட்சியர் குறிப்பிட முடியும் ?
“கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு உதவி செய்தும், அவர்களை தூண்டி விடுவதுமான அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் நபர்கள் 19.03.2012 மாலை 3.00 மணி முதல் 02.04.2012 மாலை 3.00 மணி வரை இராதாபுரம் வட்ட எல்லைக்குள் நுழையத் தடை விதித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 (1)ன் கீழ் இந்தத் தடை ஆணை பிறப்பிக்கப்படுகிறது” என்று நெல்லை மாவட்ட ஆட்சியரின் ஆணை குறிப்பிடுகிறது.
அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் நபர்கள் என்று பொத்தாம் பொதுவாக ஒரு ஜனநாயக நாட்டில் எப்படி தடை விதிக்க முடியும் ? உதாரணத்திற்கு, டெல்லியில் உள்ள ஒருவர், அணு உலைக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்றால், அவர் ராதாபுரம் தாலுகாவில் நுழைய முடியாது. இது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்தியாவின் அத்தனை குடிமக்களையும் ஒரு தாலுகாவில் நுழையக்கூடாது என்று உத்தரவிட எந்தக் கொம்பனுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. நீதிமன்றங்கள் உட்பட. நெருக்கடிகாலத்தில் கூட, இது போன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதில்லை.
அடுத்ததாக, ஒருவர் அணு உலைக்கு ஆதரவானவர் அல்லது எதிரானவர் என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும் ? இது இந்தியக் குடிமக்கள் அனைவரையும் ராதாபுரம் தாலுகாவினுள் நுழைய தடை விதிக்கும் ஆணையே தவிர வேறு ஒன்றும் இல்லை. தனி நபரைத் தடுப்பதை விடுங்கள். அரசியல் கட்சிகள் நுழையக்கூடாது என்று உத்தரவிடுவது எப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை என்பதை சிந்தித்துப் பாருங்கள் ?
மக்கள் வாக்களித்து முதலமைச்சராகி விட்டதனாலேயே, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தனக்கு அடிமை என்றும், தமிழ்நாடு தனக்கு மட்டுமே சொந்தம் என்றும் நினைக்கும் அகங்காரத்தின் விளைவே இது போன்ற ஆணைகள்.
சரி. பிரிபு 144 (1)ன் படி வெளியிடப்பட்ட ஆணை உரிய முறையில் வெளியிடப்பட்டதா என்பதைப் பார்ப்போம். இந்தப்பிரிவின் படி வெளியிடப்படும் தடையாணை, பிரிவு 134ல் உள்ளபடி வெளியிடப்பட வேண்டும் எனக் கூறுகிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம்.
பிரிவு 134 என்ன கூறுகிறது ?
(1) The order shall, if practicable, be served on the person against whom it is made, in the manner herein provided for service of a summons.
(2) If such order cannot be so served, it shall be notified by proclamation, published in such manner, is the State Government may, by rules, direct, and a copy thereof shall be stuck it up at such place or places as may be fittest for conveying the information to such persons.
(1) இந்த ஆணை சாத்தியமாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு சம்மன் வழங்குவதன் மூலம் கொடுக்கப்பட வேண்டும்.
(2) அப்படி சாத்தியம் இல்லாத பட்சத்தில், இந்த ஆணை ஒரு வெளியீட்டின் மூலம், மாநில அரசு வெளியிடும் விதிகளின் படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியும் விதத்தில் பொது இடத்தில் ஒட்டப்படுவதன் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார் ? கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு உதவி செய்து, அவர்களைத் தூண்டி விடுவதுமான அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் நபர்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வெளியிட்டுள்ள அறிக்கையில் “எந்தவிதமான வன்முறைக்கும் இடம் இன்றி அவர்கள் போராடும்போது, அங்கே பத்தாயிரம் காவலர்களைக் கொண்டு போய்க் குவிக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த வட்டாரத்தையே, ஒரு இராணுவ முகாமைப் போல ஆக்கி, பொதுமக்களை பீதி அடையச் செய்து, எந்தச் சாலையிலும் மக்கள் போக முடியாத அளவுக்கு, அடக்குமுறையைத் தமிழக அரசு ஏவி உள்ளது.
சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடும்போதுதான், இப்படிக் காவல்துறையைக் கொண்டு, பொதுமக்களை மிரட்டுகின்ற அக்கிரமம் நடக்கும். தங்கள் உயிர்களையும், தங்கள் சந்ததியினரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று, தரும யுத்தம் நடத்தி வருகின்ற அப்பகுதி வாழ் மக்கள் மீது, காவல்துறை அடக்குமுறையை ஏவுமானால், விபரீதமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவான நிலையையே வைகோ எடுத்துள்ளார். அப்படி இருக்கும் போது, இந்த தடையாணை வைகோவுக்கு பொருந்துமா என்றால் பொருந்தும். இந்த ஆணை வைகோவுக்கு வழங்கப்பட வேண்டுமா இல்லையா ? நிச்சயம் வழங்கப்பட வேண்டும். எழுத்தாளர் அருந்ததி ராய், மேதாபட்கர், வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், பினாயக் சென், அருணா ராய், நீதிபதிகள் ராஜேந்தர் சச்சார், பி.பி.சாவந்த், போல எண்ணற்றவர்கள் இந்த நாசகார அணு உலைக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒருவருக்குக் கூட இந்த தடையாணை வழங்கப் படவில்லை. தடையாணையின் நகல்கள் யாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது தெரியுமா ?
1) அரசுச் செயலர் பொது (சட்டம் & ஒழுங்கு)
2) காவல்துறை துணைத் தலைவர், திருநெல்வேலி சரகம்
3) காவல்துறை கண்காணிப்பாளர், திருநெல்வேலி
4) சார் ஆட்சியர், சேரன்மகாதேவி
5) வருவாய் வட்டாட்சியர், ராதாபுரம்
6) காவல் ஆய்வாளர், கூடங்குளம், உவரி, ராதாபுரம், திசையன்விளை, பழவூர்.
இவர்களா அணு உலை எதிர்ப்பாளர்கள்…. இவர்கள் அத்தனை பேரும், ஜெயலலிதா அரசின் அடிமைகளாயிற்றே… ? இவர்களுக்கு இந்த நகலை வழங்கி மாவட்ட ஆட்சியர் என்ன செய்யப் போகிறார் ? நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, நேற்று, உதயக்குமாரை தொலைபேசியில் அழைத்து, நீங்கள் மட்டும் சரணடையுங்கள். தனியே சரணடைந்தால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். (புத்திசாலித்தனமா பேசுறாராம்….) உதயக்குமார் அவரிடம், நான் சரணடையத் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால் மக்கள் என்னைத் தனியே சரணடைய விட மாட்டேன்கிறார்கள். மக்கள் அனைவரும் கைதுக்கு தயாராக இருக்கிறார்கள். நீங்கள் அத்தனை மக்களையும் ஏற்றிச் செல்வதற்கு போதுமான பேருந்துகளையும், இரண்டே இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் அனுப்புங்கள். எந்தவிதமான தள்ளு முள்ளும் இல்லாமல், நாங்கள் அமைதியாக அந்தப் பேருந்துகளில் ஏறிச் செல்கிறோம்” என்று கூறியிருக்கிறார். ஆனால், விஜேயேந்திர பிதாரி கடும் கோபத்துடன், “நான் உங்களிடம் பேசுவது இதுதான் கடைசி முறை” என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். (இவுரு பேசலன்னு யாரு அழுதா ? என்னமோ டெலிபோன்ல பேசி சன் ம்யூசிக்ல புது பாட்டு போட்ற மாதிரி பிகு பண்ணிக்கிறாரு ? ஏடிஜிபி ஜார்ஜ் உதயக்குமார் கிட்ட பேசுன்னா பேச மாட்டாரா இவுரு ?)
நெல்லை மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதாரி
இப்படி இந்த ஆணையை ரகசியமாக அரசு வைத்திருப்பதன் காரணம் என்ன ? தடையாணையை வெளியிட்டால், அதை வைத்து, நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்று விடுவார்கள் என்ற காரணத்தாலேயே….. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சொல்லாமல் இப்படி ஒரு ஆணையை வெளியிட்ட காரணத்தாலேயே, இந்த ஆணை செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி தொடுத்திருந்த பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக மேலும் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்து, மூத்த வழக்கறிஞர்கள் வைகை மற்றும் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆகியோர் வாதாடினார்கள்.
புகழேந்தி சார்பாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதடினார். அவர் பேசுகையில், இந்தியாவில் யாருமே நுழைய முடியாது என்று தடையுத்தரவு பிறப்பிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்தத் தடையாணையும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக இந்தத் தடையாணை பிறப்பிக்கப்படுகிறது என்பதும் தெளிவுபடுத்தப் படவில்லை. ஏழு மாதங்களாக அமைதியாக நடக்கும் ஒரு போராட்டம், வன்முறையை ஏற்படுத்தும் என்ற ஊகத்தின் அடிப்படையில் தடையாணை பிறப்பிக்க முடியாது என்றார்.
வழக்கறிஞர் வைகை மற்றும் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆகியோர், “கூடங்குளத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது போன்று உள்ளது. அங்கே இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான தண்ணீர், பால், மின்சாரம் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு ஜனநாயக நாட்டில், ஒட்டுமொத்தமாக யாருமே ராதாபுரத்தில் நுழையக்கூடாது என்று தடையாணை பிறப்பிப்பது சட்டவிரோதம்” என்று வாதாடினார்.
அரசத் தரப்பில் அப்போது பேசிய, அரசுத் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை யாரும் தடுக்கவில்லை என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பை கொடுத்தார். அரசு நியாயமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. தேவையில்லாமல் இந்த பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
மத்திய அரசின் சார்பாக ஆஜரான ரவீந்திரன், நியாயமான முறையில்தான் இந்த தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு சிறு பகுதி. அணு உலை ஆதரவாளர்கள் பெரும் பகுதி உள்ளனர். அவர்கள் ராதாபுரத்தில் நுழைந்தால், இரு தரப்புக்கும் கலவரம் ஏற்படும். அதனால்தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். (என்ன ஒரு கண்டுபிடிப்பு ?) சரி…. இதை சொல்ல வேண்டியது மாநில அரசு அல்லவா ? இவர் எதற்காக சொல்கிறார் ?
இடைக்கால உத்தரவாக, அரசுத் தரப்பு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது தடுக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சொல்வதை அரசு உறுதி செய்யும் என்று நம்புகிறோம். அதன் அடிப்படையில் இடைக்காலத் தடை வழங்கப்படவில்லை, என்று உத்தரவிட்டு, திங்களன்று இறுதித் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஒரு கருத்தை வலியுறுத்தி அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதற்குக் கூட உரிமையில்லாத வகையில் நெருக்கடி நிலையா பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ?
உதயக்குமார் உள்ளிட்ட கிராமத்தினர், நியாயமற்ற காரணத்துக்காகவே போராடுவதாக வைத்துக் கொண்டாலும், அவர்களுக்கு போராடுவதற்கான அந்த உரிமையை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்றதே ?
அணு உலை செயல்படுவதால் எங்களின் வாழ்வாதாரம் மற்றும் எங்கள் சந்ததிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும என்று நம்பும் அந்த மக்களை போராடவிடாமல் காவல்துறையினரைக் கொண்டு ஒடுக்குவது எந்தவிதத்தில் சரியாக இருக்க முடியும் ?
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கும் வரை அணு உலை வேலைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்த ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக் குவித்து, கூடங்குளம் மக்களை ஒடுக்க நினைப்பதன் பின்னணியில் உள்ள ரகசிய ஒப்பந்தம் பெங்களுரில் போடப்பட்டதா ?
கைது செய்யப்பட்டவர்களுக்கு வழக்கறிஞரைச் சந்தித்து சட்ட உதவி பெறும் உரிமை, கொலைக்களமான இலங்கையில் கூட உறுதி செய்யப்பட்டிருக்கும் போது, கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மட்டும் அது மறுக்கப்படுவது ஏன் ?
இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது என்ற இறுமாப்பில் மக்கள் போராட்டங்களை காவல்துறையினரைக் கொண்டு ஒடுக்கி விடலாம் என்று ஜெயலலிதா நினைப்பாரேயானால், அது பகற்கனவே…. எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க, ஜனநாயக சக்திகளும், உழைப்பாளி மக்களும், நிச்சயம் உறுதுணையாக நிற்பார்கள். இந்தியத் தலைநகர் டெல்லி உள்ளிட்ட நான்கு இடங்களில் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக நடைபெறும், உண்ணாவிரதப்போராட்டமே இதற்குச் சான்று.
ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்குத்தான் இழப்பதற்கு ஏராளமாக இருக்கிறது. இடிந்தகரை மக்களிடம், தங்கள் உயிரைத் தவிர வேறு இல்லை. அதையும் இழப்பதற்கு அந்த மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.