கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தைத் தனிமைப்படுத்த தீவிரவாதப் பூச்சாண்டி காட்டுவதில் காவல்துறை மூலம் இந்திய, தமிழக அரசுகள் ஈடுபட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மார்ச்- 19 தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டமும்., மார்ச் – 23 பகத்சிங் தூக்குமேடை நாளில் நெல்லை – பாளை சவகர் திடலில் நடைபெற்ற இடிந்தகரைப் பயணப் போராட்டம் ஆயிரம் பேருக்கு மேல் கைதானது மக்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கி வருகிறது. தமிழக அரசின் கியூ பிரிவு காவல் துறை போராட்டத்தை தீவிரவாதத் தொடர்பு எனச் சித்தரிக்க 8 மாதங்களாக அறவழியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புரட்சிகர இளைஞர் முன்னணியின் ஈரோடு – சென்னிமலை தோழர் முகிலனை கைது செய்தனர்.
மார்ச் – 23 பாளை – இடிந்தகரை பயணத்தில் கலந்து கொண்டு தடையை மீறி வைகோ, சீமான், கொளத்தூர் மணி மற்றும் பலர் தலைமையில் கைதான சதீஷ் என்பவரை அன்று மாலையே கைது செய்தனர். பாளை – தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமைச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு நள்ளிரவில் இராஜபாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புரட்சிகர இளைஞர் முன்னணி – முகிலன், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை – சதீஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – வன்னி அரசு மூவரும் நக்சல்கள் என காவல்துறை ஊடகங்கள் மூலம் தொடர்ந்து பரப்புவதன் மூலம் 8 மாதங்களாக நடைபெற்று வரும் அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழக அரசு. முதலில் கைது செய்யப்பட்ட முகிலனிடம் ஒரு கடிதம் இருந்ததாகவும், அக்கடிதம் சதீஷால் முகிலனுக்கு எழுதப்பட்டதாகவும், அக்கடிதத்தில் உதயகுமார் லாயக்கில்லை போராட்டத்தை தீவிரமாக்குவோம், வன்னி அரசு உதவி செய்வார் என இருந்ததாகவும் சம்பந்தமில்லாதவர்களைச் சம்பந்தப்படுத்திக் கற்பனைக் கதையைப் புனையவதன் மூலம் காவல்துறை போராட்டக் குழுவிற்கும் நக்சல்களுக்கும் தொடர்பிருப்பதாக கதைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர், தாய்மண் இதழ் பொறுப்பாளரான வன்னி அரசை சம்பந்தப்படுத்திக் காவல்துறையும், தமிழக அரசும் தங்களது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை ஒருபுறமும், போராட்டக் குழுவை ஒடுக்குவதற்கு தீவிரவாதத் தொடர்பு என சித்தரிப்பது மறுபுறமும் என முயற்சிக்கிறது. மத்திய அரசின் காங்கிரஸ் அமைச்சர்களின் கிறித்தவர்கள் போராட்டம் எனற மதவாதப் பிரிவினைப் பிரச்சாரத்தை முறியடித்து, அந்நியத் தொடர்பு எனும் பழியை முறியடித்து, தொண்டு நிறுவனங்களின் உதவி எனும் பிரதமரின் குற்றச்சாட்டை முறியடித்து தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தை தமிழக அரசின் காவல்துறை நக்சலைட் தொடர்பு, தீவிரவாதத் தொடர்பு எனச் சொல்வதும் முறியடிக்கப்படும்.
உழைக்கும் மக்களின் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் பல்வேறு அரசியல் சக்திகளின் ஆதரவுடன் வெற்றி பெறும். சர்வதேச அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தின் அங்கமாக நடைபெறும் மராட்டியம் செய்தாபூர் அணுஉலை எதிர்ப்புப் போராட்டமும், கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும். * கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். குவிக்கப்பட்டுள்ள காவல்துறை, துணை இராணுவப் படைகள் திரும்பப் பெற வேண்டும். * மின்சார உற்பத்தி எனும் பெயரால் அணுகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள் உற்பத்திக்கான அணுஉலைகளை எதிர்த்துப் போராடும் மக்களுக்குத் துணை நிற்போம்! * தமிழகத்தின் மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்கப் போராடுவோம்! * அணுகுண்டு, அணு எதிர்ப்புப் போராட்டங்களை கீழ்த்தரமான அணுகுமுறைகள் மூலம் அணுகும் இந்திய, தமிழக அரசுகளுக்கு எதிராகப் போராடுவோம்! * அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வீரமிக்க மக்கள் போராட்டத்திற்கும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் தன்னலமற்ற அரசியல் போராட்டங்களுக்கும் தமிழக மக்கள், அணு சக்தி எதிர்ப்பாளர்கள், சனநாயக சக்திகள், ஊடக நண்பர்கள் துணை நிற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் ) மக்கள் விடுதலை அறைகூவல் விடுக்கின்றது.
தோழமையுடன்,மீ.த.பாண்டியன்
தமிழ் மாநிலச் செயலாளர்
இ.க.க ( மா – லெ ) மக்கள் விடுதலை