அன்பார்ந்த நண்பர்களே…
வாழ்த்துக்கள். புஷ்பராயன், நான் மற்றும் இதர 12 நண்பர்கள் பலவீனமாகியிருக்கிறோம். ஆனால், எழுந்து உட்கார்ந்து எங்களால் மக்களோடு பேச முடிகிறது. காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி இன்றோடு ஏழாவது நாள்.
மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ யாரும் எங்களை வந்து பார்த்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பார்க்கவும் வரவில்லை. நேற்று முன்தினம் (மார்ச் 23) எங்கள் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு மருத்துவர் குழு வந்தது, ஆனால் அரசு சுகாதாரத்துறையிலிருந்து யாரும் வரவில்லை. ஆனாலும், மார்ச் 19 அன்று போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எங்களோடு சேர்ந்து இடிந்தகரையில் குழுமியவண்ணம் உள்ளனர். 144 தடை உத்தரவின் காரணமாக, எங்களோடு இருக்கும் மக்கள் தங்களால் இயன்ற எளிமையான உணவை சமைத்துச் சாப்பிட்டடு இங்கேயே தங்கி உள்ளனர். புனித லூர்து ஆலயத்தின் எதிரே இருக்கும் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு இருக்கும் இந்த இடத்தை விட்டு வெளியேற அஞ்சியவண்ணம் உள்ளனர். வெளியே சென்றால், மீண்டும் உள்ளே வர முடியாதே என்ற அச்சத்தின் காரணமாக வெளியேறாமல் உள்ளனர்.
நானும் தோழர் புஷ்பராயனும், எப்போது மயக்கமடைவோம் என்று காவல்துறையினர் காத்திருக்கின்றனர். மயக்கமடைந்து மருத்துவ மனையில் அனுமதித்தால் அங்கே எங்களை கைது செய்யலாம் என்ற எண்ணத்தின் காரணமாகவே காவல்துறையினர் காத்திருக்கின்றனர். மக்கள் விரோத அரசுகள் எத்தனை கொடுமையாகிவிட்டன !!!
இதற்கிடையில் அணு உலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக 13 பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது. காவல்துறையின் அடக்குமுறைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கூடங்குளம் பகுதியில் இயல்பு நிலை இருப்பது போலக் காட்டுவதற்காக காவல்துறையினர் சில கடற்கரையோர கிராமங்களுக்குச் சென்று, மீன் பிடிக்கச் செல்லுமாறு வற்புறுத்துக்கின்றனர். இடிந்தகரை பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், மீறினால் வழக்குகள் பாயும் என்றும் தொடர்ந்து மிரட்டியவண்ணம் உள்ளனர். ஆனால், மக்கள் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல், தொடர்ந்து போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.
இது ஒரு போராட்டம். (ஆனால் அணு உலை ஆதரவாளர்கள் இதை “போர்” என்கின்றனர்) செல்வந்தர்கள், அதிகாரம் படைத்தவர்கள், மேட்டுக்குடி மக்கள், உயர்சாதியினர், ஆடம்பரவாசிகள், மெகா வளர்ச்சியை விரும்புபவர்களுக்கு இடையேயும், விளிம்புநிலை உழைப்பாளி மக்களுக்கு இடையேயும் நடக்கும் போராட்டம். அரசுகள் ரஷ்யாவின் லாபத்துக்காக போராடுகின்றனவே தவிர, மக்களுக்காக அல்ல. கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்துக்கு எதிரான ஒரு உணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த சில மாதங்களாக தொடர்ந்த மின்வெட்டை அமல்படுத்தி வருகின்றனர்.
இப்போது கூடங்குளத்தில் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மின் உற்பத்தி எப்போது தொடங்கும் என்பது தெரியாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கூடங்குளம் அணு உலை, தமிழக மின்வெட்டுக்கு தீர்வல்ல என்பதை இப்போதாவது மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அணு உலைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழக மக்கள், பேச்சிப்பாறை அணை நீர், கூடங்குளம் மறுசீராக்கும் நிலையம், ஆயுத வசதிகள், அணு ஆயுதங்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பற்றிய உண்மைகளை புரிந்து கொள்ளப் போகிறார்கள்.
நெருங்கிய, அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், ஒரு சிறு விபத்து கூட கோடிக்கணக்கான சகோதர சகோதரிகளின் வாழ்வையும், ஆரோக்கியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும். நாங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. அந்த வளர்ச்சியானது, தலைமுறை தலைமுறைக்கும் நன்மை பயக்கும்படி இருக்க வேண்டும் என்றே கோருகிறோம். நாம் வாழப்போகும் 40 ஆண்டுகளுக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக, வரப்போகும் தலைமுறைகளுக்கான இயற்கை வளங்களை விஷமாக்குவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. மிக மிக முற்போக்கான திட்டங்களையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, உலகின் தலைவனாக இந்தியா உருவாக வேண்டுமே தவிர, அமெரிக்க, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் அடிமையாக இருக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.
தற்போது அரசு எங்களைத் தாக்க மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்பு உள்ளது என்ற புதிய ஆயுதத்தை எடுத்திருக்கிறது. மாவோயிஸ்டுகளோடு தொடர்பு இருக்கிறது என்றும், நாங்கள் வன்முறையாளர்கள் என்றும் சித்தரிப்பதற்காக, போலியான ஆதாரங்களையும், சான்றுகளையும் உருவாக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த எட்டு மாதங்களாக, எவ்வித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம் என்பதை இந்த உலகமே அறியும்.
கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, இப்போராட்டத்தின் பின்னால் வெளிநாட்டு தூண்டுகோல் உள்ளது என்ற குற்றச்சாட்டு எப்படி பொய்யாகப் போனதோ, அதே போல இந்தக் குற்றச்சாட்டிலும் தோல்வியுறுவார்கள்.
சாமான்ய, விளிம்புநிலை மக்களுக்கு சுயசிந்தனை கிடையாது, அவர்களுக்கென்று சொந்தமான அறிவு கிடையாது, அவர்களால் தங்களுக்கென்று சிந்திக்க முடியாது, அவர்களால் தங்கள் உரிமைக்காக போராட முடியாது, அறவழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்த முடியாது, குறிப்பாக நாடார்கள், தலித்துகள், இசுலாமியர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துப் பிரிவினரும், சென்னை மற்றும் டெல்லியில் உள்ள கோடீஸ்வரர்களின் நலனுக்காக காவுகொடுக்கப்படக் கூடியவர்கள் என்றே அரசு கருதுகிறது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் அடிநாதமே இதுதான். இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
மக்கள் சக்தியா அணு சக்தியா ? மக்கள் சக்தியா அரசின் வலிமையா ? இந்திய மக்களே… தமிழக மக்களே நீங்கள் யார் பக்கம் என்பதை சிந்திப்பீர்…
இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினாலோ, முதுமையினாலோ நானும் இந்த மக்களும் இறந்து போகலாம். ஆனால், இந்த மாநிலம், இந்த நாடு, இந்த உலகம் உங்கள் சந்ததியினர் ஆகியோப் பற்றிச் சிந்தியுங்கள். இதுதான் மக்களுக்கான அரசியல். மார்ட்டின் நியோமாலர் என்ற ஜெர்மன் சித்தாந்தியின் தங்க வரிகளை உங்கள் சிந்தனைக்காக விட்டுச் செல்கிறேன்.
முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.
நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை.
பிறகு அவர்கள் தொழிற்சங்க வாதிகளுக்காக வந்தார்கள்.
நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி இல்லை.
அடுத்து அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.
நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் யூதன் இல்லை.
அடுத்து அவர்கள் எனக்காக வந்தார்கள்.
அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை.
எஸ்.பி.உதயக்குமார்
இடிந்தகரை
25.03.2012