சட்டம் ஒரு இருட்டறை என்பது கேப்டன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் இருட்டறையில்தான் அடைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சட்டத்தை இருட்டறையில் அடைப்பவர்கள் வேறு யாரும் இல்லை. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே.
வேளச்சேரி என்கவுன்டர் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், சிபிஐ விசாரணை கோரி தமிழக மக்கள் உரிமைக்கழகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட மனுவுக்கு, டிஜிபி ராமானுஜம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது பதில் மனுவில், இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 176 (1A)வின் படி காவல்துறையின் புலனாய்வோடு சேர்த்து நீதிவிசாரணையும், அதாவது மாஜிஸ்திரேட் விசாரணையும் நடைபெற வேண்டும் என்று உள்ளது. காவல் நிலை ஆணை எண் 151ன் படி, ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினால் போதும் என்று இருக்கும் போது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததன் காரணமே, வெளிப்படையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான். இந்த அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை தலைமைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 9வது குற்றவியல் நடுவர் விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறார். இது போக தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, சிபி.சிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இப்படி, விதிமுறைகளை மீறாமல் காவல்துறை நடந்துகொள்வதைப் பார்த்தாலே புல்லரிக்கிறதே….
சரி. ராமானுஜம் குறிப்பிடும் பிரிவு 176(1A) என்ன கூறுகிறது ?
“(1A) Where,-
(a) any person dies or disappears, or
(b) rape is alleged to have been committed on any woman,
while such person or woman is in the custody of the police or in any other custody authorised by the Magistrate or the Court, under this Code, in addition to the inquiry or investigation held by the police, an inquiry shall be held by the Judicial Magistrate or the Metropolitan Magistrate, as the case may be, within whose local jurisdiction the offence has been committed.”;
ஒரு நபர் இறந்தாலோ அல்லது காணாமல் போனாலோ, அல்லது பாலியல் வன்முறை நடந்ததாக புகார் வந்தாலோ,
அந்த நபர் அல்லது பெண், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில், அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரிலோ, நீதிமன்ற நடுவரின் உத்தரவின் பேரிலோ ஏதோவொரு கட்டுப்பாட்டில் இருக்கும் போது, காவல்துறை நடத்தும் புலன்விசாரணையோடு, எந்த இடத்தில் குற்றம் நிகழ்ந்ததோ, அந்த இடத்திற்குரிய நீதித்துறை நடுவர் விசாரணை நடத்த வேண்டும்.
இப்போது தெளிவாகும் ஒரு விஷயம், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நபர் இறந்தால்தான் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது.
சரி. வேளச்சேரி என்கவுன்டரில் இறந்த ஐந்து பேரும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தார்களா ? காவல்துறையின் கட்டுப்பாடு என்றால், கைது செய்யப்பட்டிருந்தார்களா, அல்லது கைது செய்யப்படுவதற்கு முன் காவல்துறையினரின் பிடியில் இருந்தார்களா ? இது குறித்து, இதே வழக்கில் திரிபாதி விரிவான பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
7. On 22.02.2012, on information, that the suspect identified in the video footage and a few others were seen in a house at Tamil Nadu Housing Board Colony, Velacherry, Respondent No.7, Assistant Commissioner of Police, Guindy Range, and Respondent No.6, Assistant Commissioner of Police, Madipakkam Range, proceeded to the place around 11.30 PM and mounted surveillance in the area. On being communicated of the information, Respondent No.5, DCP, Adyar reached the place and, after studying the are, planned to proceed with the verification of the identified suspect. On further confirmation of the presence of the suspect, the DCP, Adyar, leading the team, knocked at the door of the house at around 1.00 AM and directed the inmates to open the door. In spite of several warnings to open the door, in Hindi and vernacular, the persons staying in the house refused to open the door and, when insisted upon, opened fire indiscriminately, with the objective of causing injury to the police team, which had surrounded the house and causing a serious potential danger to the lives of innocent inhabitants in the area.
8. The area being thickly inhabited, the DCP, had warned the inmates of the house in Hindi and vernacular, to stop firing and surrender. In spite of such warnings, the inmates continued to fire at the Police team, causing bullet injuries to two Inspectors of Police, namely, respondent No.9, Ravi and respondent No.10, Christian Jayaseel. Thereupon, in the interest of protecting the lives of the public, as well as the police personnel, from such indiscriminate firing, the police team, left with no other option, returned fire and was forced to enter the house. Since the indiscriminate firing by the inmates continued, the police personnel also returned the fire, in the exercise of the right of private defence, during which five of the inmates sustained injuries. They were immediately rushed to Government Royapettah Hospital, for treatment where they were declared as brought dead.
22.02.2012 அன்று வீடியோவில் பார்த்த சந்தேகத்திற்கிடமான நபர் வேளச்சேரியில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்ததையடுத்து, கிண்டி உதவி ஆணையர், மடிப்பாக்கம் உதவி ஆணையர் ஆகியோர் அந்த இடத்திற்கு கிளம்பி, இரவு 11.30 மணி முதல் அந்த இடத்தை கண்காணிக்கத் தொடங்கினர். தகவல் சொல்லப்பட்டதையடுத்து, அடையாறு துணை ஆணையர் சம்பவ இடத்தை அடைந்து. அந்த இடத்தை நன்கு ஆராய்ந்து சந்தேகிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை சரிபார்க்கத் தொடங்கினார். (இரவு 12 மணிக்கு, அந்த இருட்டில், சுதாகர் எப்படி சரிபார்த்திருப்பார் ? அந்த அளவுக்கு அவருக்கு எக்ஸ்ரே கண்ணா ? இவர்கள் வெளியிட்ட வீடியோவே சந்தேகமா இருக்கிறது. பிறகு அதில் உள்ள நபரை எப்படி அந்த நள்ளிரவில் சுதாகர் கண்டுபிடித்தார். சுதாகரை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணராக்கி விட்டால், மக்களுக்கு எக்ஸ்ரே செலவு மிச்சம்) சந்தேகிக்கப்பட்ட நபர் அந்த வீட்டில் இருப்பதை உறுதி செய்த அடையாறு துணை ஆணையர், தனது டீமுடன், அந்த வீட்டின் கதவை நள்ளிரவு 1 மணிக்கு தட்டி, உள்ளே இருப்பவர்களை கதவைத் திறக்குமாறு சொன்னார். (இரவு 12 மணிக்கு சந்தேகிக்கப் பட்ட நபர் அந்த வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பதே யாருக்கும் தெரியாது. இந்த லட்சணத்தில் இந்தத் தகவல் உறுதி வேறு செய்யப்பட்டதாம்) நன்றாக கவனியுங்கள். 1 மணிக்கு கதவைத் தட்டி திறங்கள் என்று சொன்னார்களாம். இந்தி மற்றும் வட்டார மொழியில் பல்வேறு முறை கதவைத் திறவுங்கள் என்று சொன்ன பிறகும், உள்ளிருப்பவர்கள் கதவைத் திறக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டைச் சூழ்ந்துள்ள காவல்துறையினருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், சுற்றியுள்ள வீடுகளில் இருப்பவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்தோடும், கண்மூடித்தனமாக சுட்டனர். (அந்த வீடு இருப்பது ஒரு முட்டு சந்து. அந்த வீட்டிலிருந்து வெளியில் இருப்பவர்களையே சுட முடியாது. அப்படி இருக்கையில் சுற்றியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சுட்டார்களாம். திரிபாதியின் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை போங்கள்)
அந்த இடம், பொதுமக்கள் நெருக்கமாக இருக்கும் இடம் என்பதால், மீண்டும் அடையாறு துணை ஆணையர், சுடுவதை நிறுத்தி விட்டு சரணடையுங்கள் என்று உள்ளே இருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். (எவ்வளவு நல்லவர்கள் பாருங்கள் காவல்துறையினர். கொள்ளையர்கள் சுட்டபிறகு கூட, பதிலுக்கு சுடாமல் எவ்வளவு பண்பாக, சரணடையுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் பாருங்கள். இவர்களின் பண்பை நினைத்தால்…. அப்பப்பப்பா…) இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் உள்ளே இருந்தவர்கள் தொடர்ந்து போலீஸ் டீமைப் பார்த்து சுட்டவண்ணம் இருந்தார்கள். இவ்வாறு தொடர்ந்து சுட்டதில், ஆய்வாளர்கள் ரவி மற்றும் ஜெயசீலி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு, பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கவும், காவல்துறையினர் உயிரைப் பாதுகாக்கவும், வேறு வழியின்றி, திருப்பிச் சுட்டபடி கதவை வலுக்கட்டாயமாக திறந்து உள்ளே புகுந்தது போலீஸ் டீம். (எவ்வளவு நல்லவர்கள் பார்த்தீர்களா…. இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு காயம் ஏற்படும் வரை, அமைதியாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்) கதவைத் திறந்த பிறகும் உள்ளே இருந்தவர்கள் தொடர்ந்து சுட்டதால், வேறு வழியின்றி தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமையை பயன்படுத்தி திருப்பிச் சுட்டதில், உள்ளே இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதில் அவர்கள் இறந்து விட்டனர் என்று தெரியப்படுத்தப் பட்டது.
திரிபாதி சொன்னதையெல்லாம் படித்து விட்டீர்களா ? இதில் இறந்து போன ஐந்து பேர், எந்த இடத்தில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வருகிறார்கள் என்று சொல்லுங்கள்.
while such person or woman is in the custody of the police or in any other custody authorised by the Magistrate or the Court, under this Code
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 176 (1A) என்ன சொல்கிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டும். ஒரு நபர், காவல்துறையின் கட்டுப்பாட்டிலோ, நீதிமன்ற நடுவர் உத்தரவிலோ, நீதிமன்றத்தாலோ, குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் உள்ளபடி “கட்டுப்பாட்டில்” இருக்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ளபடி காவல்துறை கட்டுப்பாடு என்றால், அது கைது மட்டுமே. வேறு எந்த கட்டுப்பாட்டிலும் யாரையும் காவல்துறையினர் வைக்க முடியாது.
இந்த ஐந்து பேரையும் எப்போது காவல்துறை கைது செய்தது ? நீதித்துறை நடுவரின் விசாரணை எப்படி ஒரு மோசடி பார்த்தீர்களா ?
சரி… அதை விடுங்கள். மாஜிஸ்திரேட் விசாரணையாவது ஒழுங்காக நடத்தியிருக்கிறார்களா என்று பார்ப்போம்.
எந்த மாஜிஸ்திரேட் விசாரிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது ?
an inquiry shall be held by the Judicial Magistrate or the Metropolitan Magistrate, as the case may be, within whose local jurisdiction the offence has been committed.
“Within whose local jurisdiction the offence has been committed” என்றால், குற்றம் நடைபெற்ற இடம் எந்த மாஜிஸ்திரேட்டின் ஆளுகையின் (jurisdiction) கீழ் வருகிறதோ.. அந்த மாஜிஸ்திரேட் விசாரிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் கீதா ராணி 14வது நீதிமன்ற நடுவர். வேளச்சேரி வருவது, 18வது நீதிமன்ற நடுவர். அவர் சைதாப்பேட்டையில் இருக்கிறார். அவர் இருக்கும் போது ஏன் கீதாராணியிடம் இந்த விசாரணை கொடுக்கப்பட வேண்டும் ?
நீதித்துறை நடுவர் கீதா ராணி
எழும்பர் நீதிமன்ற வளாகத்தில் மட்டும் 10 நீதிமன்ற நடுவர்கள் இருக்கிறார்கள். சைதாப்பேட்டையில் ஒரு 10 நீதிமன்ற நடுவர்கள் இருக்கிறார்கள். இத்தனை பேர் இருக்கும் போது 9வது நீதிமன்ற நடுவரான கீதாராணியிடம் ஏன் இந்த விசாரணையை கொடுக்க வேண்டும் ? ஏனென்றால் நீதிமன்ற நடுவர் கீதாராணியின் புகழ் அப்படி.
கீதாராணி நடுவராக இருக்கும் எழும்பூர் 14வது பெருநகர நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து வருகிறது. அது ஒரு செக் மோசடி வழக்கு. அந்த வழக்கில் புகார் கொடுத்தவரை, 30.11.2009 அன்று குறுக்கு விசாரணை செய்கிறார்கள். அந்த குறுக்கு விசாரணையின் போது பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு வாய்தா மேல் வாய்தா வாங்கி, 22.07.2011 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது குற்றவாளியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு ஆவணங்களை பார்வையிடும்போது அதிர்ச்சியடைகிறார். ஏனென்றால் 30.11.2001 அன்று அவர் குறுக்கு விசாரணை செய்து பதிவான வாக்குமூலத்திற்கு பதிலாக வேறு ஆவணம் இருக்கிறது. 2009ல் அவர் குறுக்கு விசாரணை செய்யும் போது, மூன்று பக்கங்களுக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்ற ஆவணத்தில் வெறும் ஒன்றரை பக்கங்களே இருக்கின்றன. மேலும், அதில் சாட்சி சொல்லியவர் கையொப்பமோ, நீதிபதியின் கையொப்பமோ இல்லை.
நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிய அனுபவம் உள்ளவர்களுக்கு தெரியும். வாக்குமூலம் முடிந்ததும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் முன்பாகவே சாட்சியிடம் எல்லா பக்கங்களிலும் கையொப்பம் பெறப்படும். கடைசிப் பக்கத்தில் வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதி கையொப்பம் இடுவார்.
இந்த வாக்குமூலம் சாட்சியின் கையொப்பமோ, நீதிபதியின் கையொப்பமோ இல்லாமல், வெறுமையாக இருப்பதைப் பார்த்த வழக்கறிஞர் நீதிபதியிடம் புகார் தெரிவிக்கிறார். நீதிபதி, வழக்கை இழுத்தடிக்க காரணத்தை தேடாதீர்கள் என்று வழக்கை தள்ளி வைக்கிறார்.
மறுநாள், அந்த வாக்குமூலத்தின் நகல் வேண்டி கேட்டுப் பெறுகிறார் வழக்கறிஞர். அந்த நகலை வாங்கிப் பார்த்த வழக்கறிஞருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருக்கிறது. முதல் நாள் எந்த கையெழுத்தும் இல்லாமல் வெறுமையாக இருந்த வாக்குமூலம், மறுநாள் கையெழுத்தோடு இருக்கிறது. சாட்சி சொன்னவரின் பெயர் ஜகந்நாதன். ஆனால் ஜெயபால் என்பவர் கையெழுத்திட்டிருக்கிறார். அதுவும், படிக்காத நபர் எழுத்துக் கூட்டி போடும் கையொப்பம் போல இருக்கிறது. பின்பக்கம் பார்த்தால் நீதிபதியும் கையொப்பம் இட்டிருக்கிறார்.
2009ல் 14வது நீதிமன்ற நடுவராக இருந்தது வேறு நீதிபதி. 2011ல் நீதிமன்ற நடுவராக இருப்பது, தற்போது என்கவுன்டர் வழக்கில் விசாரணை நடத்தி வரும் அதே கீதாராணி தான்.
2009ல் பதியப்பட்ட வாக்குமூலத்தில் 2011ல் 14வது நீதிமன்ற நடுவரான கீதாராணி எப்படி கையெழுத்திட முடியும் ? மேலும், இரண்டாவது பக்கத்தில் சாட்சியின் கையெழுத்தே இல்லாத போது, கீதாராணி எப்படிக் கையெழுத்திட்டார் ?
நீதித்துறை நடுவர் கையொப்பமிட்ட இடம்
இதையெல்லாம் ஒரு புகாராக எழுதி, ஆவணங்களை திருத்திய 14வது நீதிமன்ற நடுவர் கீதா ராணி மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற பதிவாளர், மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு புகார் அனுப்பி…. ….. ….. …… ஒரு ஆண்டு ஆகப்போகிறது.
இதுதான் 14வது நீதிமன்ற நடுவர் கீதாராணியின் லட்சணம். என்கவுன்டரில் விசாரணை நடத்த கீதாராணி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது இப்போது புரிகிறதா ?
சரி. கீதாராணிதான் விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தது காவல்துறையினர் கிடையாதே. சென்னைப் பெருநகர தலைமை நீதித்துறை நடுவர்தானே (Chief Metropolitan Magistrate) முடிவெடுத்தார். இதற்கு காவல்துறையினரை எப்படி குற்றம் சொல்ல முடியும் என்ற கேள்வி எழலாம்.
சென்னைப் பெருநகர தலைமை நீதித்துறை நடுவராக இருப்பவர்.. கிள்ளிவளவன். இவர் எப்படிப்பட்டவர் தெரியுமா ?
அக்கா வசந்தி ஸ்டான்லி போலி ஷ்யூரிட்டிகள் கொடுத்து நீதிமன்றத்தை ஏமாற்றியதைப் பற்றி சவுக்கு வாசகர்கள் வசந்தமில்லா வசந்தி என்ற கட்டுரையில் படித்திருப்பீர்கள். இந்தக் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி, வசந்தி ஸ்டான்லிக்கு கொடுத்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று புகார் ஒன்று அளித்தார்.
இதைத் தொடர்ந்து, வசந்தி ஸ்டான்லி, நீதிமன்றத்தை அணுகி, தான் ஏற்கனவே கொடுத்த ஷ்யூரிட்டிகள் அனைத்தையும் மாற்றுகிறார்.
பிணைதாரர்களை (Sureties) மாற்றுவது பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 443 மற்றும் 444 ஆகியவை கூறுகின்றன.
443. Power to order sufficient bail when that first taken is insufficient.
If, through mistake, fraud, or otherwise, insufficient sureties have been accepted, or if they afterwards become insufficient, the court may issue a warrant of arrest directing that the person released on bail be brought before it and may order him to find sufficient sureties, and on his failing so to do, may commit him to jail.
444. Discharge of sureties.
(1) All or any sureties for the attendance and appearance of a person released on bail may at any time apply to a Magistrate to discharge the bond, either wholly or so far as relates to the applicants.
(2) On such application being made, the Magistrate shall issue his warrant of arrest directing that the person so released be brought before him.
(3) On the appearance of such person pursuant to the warrant, or on his voluntary surrender, the Magistrate shall direct the bond to be discharged either wholly or so far as relates to the applicants, and shall call upon such person to find other sufficient sureties, and, if he fails to do `so, may commit him to jail
பிரிவு 443 என்ன கூறுகிறதென்றால், கொடுக்கப்பட்ட பிணை போதுமானதாக இல்லாமல் போனாலோ, போலி என்று தெரியவந்தாலோ, நீதிமன்றம் குற்றவாளியைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்க வேண்டும். போதுமான பிணை கொடுத்தவுடன் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
444 என்ன சொல்கிறது என்றால், ஏற்கனவே பிணை கொடுத்த நபர்கள், அதிலிருந்து விலகிக் கொள்ள விரும்பினால், சம்பந்தப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து, வேறு பிணைதாரர்களை வழங்க உத்தரவிட வேண்டும், அப்படித் தவறினால், சிறைக்கு அனுப்பவேண்டும் என்று கூறுகிறது.
வசந்தி ஸ்டான்லியின் வழக்கு இந்த இரண்டிலுமே பொருந்தாது. வசந்தி ஸ்டான்லி தனது பிணைதாரர்களை மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் விண்ணப்பித்தபோது, நீதிமன்றம், அந்த விண்ணப்பத்தை நிராகரித்திருக்க வேண்டும் அல்லது, பிணைதாரர்களை நேரில் ஆஜராகச் சொல்லியிருக்க வேண்டும்.
ஒரு குற்றவாளி நீதிமன்றத்தின் முன் சென்று, எனது ஜாமீன்தாரர்களை மாற்றுங்கள் என்று கோருவதற்கு சட்டத்தில் வழியே இல்லை.
ஆனால், வசந்தி ஸ்டான்லியின் வேண்டுகோளை ஏற்று, பிணைதாரர்களை மாற்றுவதற்கு உத்தரவிட்டார் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிள்ளிவளவன். அதே கிள்ளிவளவன்தான், இன்றும் அந்தப் பதவியில் இருக்கிறார்.
இவர்தான் 14வது நீதிமன்ற நடுவர் கீதாராணியை என்கவுன்டர் குறித்து விசாரிக்க உத்தரவிட்டவர்.
இப்போது சொல்லுங்கள்…. ….. சட்டம் இருட்டறையில் இருக்கிறதா இல்லையா ?