தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் பெரும்பாலானவை பணம் கொடுத்து, பல்வேறு தகாத காரியங்களைச் செய்வதால் வெற்றி பெறுவதாக அறிவிக்கப் படுகின்றன.
அவ்வாறு நடைபெறாத போராட்டமாக இருந்தாலும், இரண்டு மணி நேரமோ, அல்லது மூன்று மணி நேரமோ, போராட்டத்தை நடத்தி அதை முடித்து விட்டு அறிக்கை விடும் போராட்டங்களையே தமிழக அரசியல் கட்சிகள் நடத்தி வந்துள்ளன.
இடதுசாரிக் கட்சிகள் கூட, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவதற்கு தயாராக இல்லை. ஒரு மணி நேர ஆர்ப்பாட்டமோ, அல்லது, இரண்டு மணி நேர தர்ணாவோ நடத்தினால், போதும் என்ற மனநிலைக்கு அக்கட்சிகளின் தொண்டர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.
இந்நிலையில், ஏழு மாதங்களாக தொடர்ந்து ஒரு போராட்டத்தை நடத்தி, அந்தப் போராட்டத்தை காவல்துறையின் உதவியோடு முறியடிக்க அரசு திட்டமிட்ட நிலையில், அதைக் கண்டு அஞ்சாது, தொடர்ந்து போராட்டம் நடத்தி, இறுமாப்போடு திரிந்து தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வைத்து, இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்று, இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும், அன்புத் தோழர் உதயக்குமார் மற்றும், அவரோடு இருக்கும் அத்துணை தோழர்களுக்கும் சவுக்கின் வாழ்த்துக்கள்.
உள்ளார்ந்த உணர்வுகளோடு, போராட்டங்களை முன்னெடுக்கும் மக்களின் முன், எத்தகைய அரசாங்கமாக இருந்தாலும், மண்டியிடத்தான் வேண்டும். அது, இறுமாப்பின் உச்சத்தில் இருக்கும் ஜெயலலிதா அரசாங்கமாக இருந்தாலும் சரி.