இன்று (02.04.2012) மாலை மூன்று மாத பிரிவுக்குப் பிறகு, சசிகலாவும், இளவரசியும், மீண்டும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைந்தனர். நுழைந்ததும் என்ன நடந்திருக்கும் ?
ஜெயலலிதா : வா சசி… எப்படி இருக்கே… ?
சசிகலா : என்னை விடுங்கக்கா… நீங்க எப்படிக்கா இருக்கீங்க…
ஜெயலலிதா : ஏதோ இருக்கேன் சசி… நீ இல்லாம நான் எப்படி சசி நல்லா இருக்க முடியும் ?
சசிகலா : மூணு மாசமா எப்படிக்கா என்னைப் பிரிஞ்சு இருந்தீங்க… (கண்களில் கண்ணீர்.)
ஜெயலலிதா : அழாதே சசி… அழாதே…. அரண்மனை ஜோசியர் நாம் பிரிந்திருக்க வேண்டும் என்று சொன்னதை நாம் எப்படி சசி மீற முடியும்… எப்படி மீற முடியும்… ? எனக்கு மட்டும் என்ன உன்னை பிரிந்திருக்க வேண்டும் என்று ஆசையா… எப்படித் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா ? நீ இல்லாம கடந்த மூணு மாசமா மந்திரி சபையைக் கூட மாத்தல தெரியுமா ? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிங்களுக்குக் கூட, தொடர்ந்து ஆறு மாசம் ஒரே இடத்தில வேல பாக்கலாம்னு திமிரு வந்துருச்சு….
சசிகலா : அதான் நான் வந்துட்டேன்ல… இனிமே டெய்லி மாத்தலாம்கா…
ஜெயலலிதா : இன்னைக்கே 20 ஐஏஎஸ் ஆபீசர்ஸ மாத்தி உத்தரவு போட்டுட்டேன் சசி.. நீ போனதுலேர்ந்து ட்ரான்ஸ்பர் போடாம டச் விட்டுப் போச்சு சசி.
சசிகலா : என்னப் பாக்காம எப்படிக்கா இருந்தீங்க… நான் சரியாவே சாப்பிடலை தெரியுமாக்கா ?
ஜெயலலிதா : நான் எங்கே சசி உன்னைப் பாக்காம இருந்தேன். அதான் இந்தப் பத்திரிக்கைக்காரங்க, டெய்லி உன்னைப் பத்தி இஷ்டத்துக்கு நியூஸ் எழுதி உன் போட்டோவ வேற போட்றாங்களே சசி… ஒரு நாள் தவறாம உன்னைப் பத்தி நியூஸ் வந்துக்கிட்டே இருந்துச்சே சசி….
சசிகலா : நானும் படிச்சேன்கா.. அதப் படிக்கும்போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சுக்கா. இவனுங்களுக்கு நம்ப நட்பப் பத்தி என்னக்கா தெரியும் ? பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே வளைச்சு வளைச்சு எழுதுனானுங்கக்கா ….
ஜெயலலிதா : உன்னை என்கிட்டேர்ந்து பிரிக்கிறதுல இவனுங்களுக்கு என்னதான் சந்தோஷமோ தெரியலை சசி.
சசிகலா : அக்கா…. என்னை கட்சிய விட்டு நீக்குனேன்னு அறிவிப்பு வந்ததும், பட்டாசு வெடிச்சு கொண்டாடுனாங்க பாத்தீங்களாக்கா
ஜெயலலிதா : நானும் பாத்தேன் சசி… எனக்கும் கஷ்டமாத்தான் இருந்துச்சு… ஆனா, நம்ப எதிர்காலத்த மனசுல வைச்சு, கம்முனு இருந்துட்டேன் சசி.
சசிகலா : அக்கா…. அந்த பட்டாசு வெடிச்சவங்கள சும்மா விடக்கூடாது அக்கா……
ஜெயலலிதா : கவலையே படாத சசி… வெடிச்சவங்க அத்தனை பேரோடு வீடியோ இருக்கு.. அத்தனை பேரையும் கூப்புட்டு, அவங்க வாயிலேயே பட்டாசை கொளுத்திப் போடுவோம்.. ஓகேவா ?
சசிகலா : என் மனசப் புரிஞ்சு நடக்கறீங்கக்கா…
ஜெயலலிதா : அதனாலத்தானே நான் உனக்கு அக்காவா இருக்கேன்..
சசிகலா : அக்கா… என்னை கட்சிய விட்டு நீக்கனதுக்கு கட்சிக்காரங்க ரொம்ப பேர் சந்தோஷப்பட்டாங்களாமே…
ஜெயலலிதா அவனுங்க கெடக்கறானுங்க விடு சசி… நாளைக்கு ஷகீலாவ கூட்டிட்டு வந்து, அதிமுகவுக்கு ஷகீலாதான் தலைவின்னு சொன்னா.. என்ன நடக்கும்னு நெனைக்குற ? “தென்னகம் காக்க வந்த பெண்ணகமே”, “புரட்சித் தலைவி ஆசி பெற்ற புரட்சியே” “போயஸ் தோட்டத்து புயலே” “அம்மாவைக் கவர்ந்த ஆன்மாவே”ன்னு போஸ்டர் அடிச்சு, பேனர் வைப்பாங்க… அடிமைகளைப் பற்றிப்பேசி நேரத்தை வீணாக்காதே சசி.
சசிகலா : அக்கா, நம்ப ரெண்டு பேர் சேந்து போட்ட நாடகத்த எல்லாரும் நம்பிட்டாங்கள்ள அக்கா ?
ஜெயலலிதா : நம்பிட்டாங்களாவா ? மூணு மாசமா வந்த, ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன், தமிழக அரசியல்னு எல்லா பத்திரிக்கையையும் எடுத்த வெச்சுருக்கேன். நீயே படிச்சுப் பாரு… நாகேஷ் காமெடியை விட பிரமாதமா இருக்கும்.
சசிகலா : அக்கா… இந்தப் பத்திரிக்கைகளையெல்லாம் ஏதாவது பண்ணணும்கா.
ஜெயலலிதா : என்ன பண்ணலாம்னு சொல்லு. எல்லா பத்திரிக்கையையும், அரசே ஏற்று நடத்தும். டாஸ்மாக் கடையில் மது வாங்குவோருக்கு பத்திரிக்கைகள் இலவசமா தரப்படும்னு ஒரு உத்தரவு போட்டுடவா ?
சசிகலா : அய்யோ.. வேணாம்கா.. பத்திரிக்கை சுதந்திரத்துல நாம தலையிடக் கூடாது.
ஜெயலலிதா : வேற என்ன பண்ணணும்கிற ?
சசிகலா : எல்லா பத்திரிக்கையும், தங்கத்தாரகை சசிகலா ன்னு கவர் ஸ்டோரி பண்ணணும்னு உத்தரவு போடுங்கக்கா. போடாத பத்திரிக்கைக்கு அரசு விளம்பரத்த நிறுத்தலாம்.
ஜெயலலிதா : விளம்பரத்த நிறுத்தறோம்னு சொன்னா, அமெரிக்க ஜனாதிபதி சசிகலான்னு கூட எழுதுவாங்க… நம்ப கவர்மென்ட் சசி… என்ன வேணாலும் பண்ணலாம்.
சசிகலா : அக்கா.. நம்ப ரெண்டு பேரு பிரிஞ்சதை நெனச்சு சந்தோஷப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏதாவது தண்டனை குடுக்கனும்கா.
ஜெயலலிதா : சசி… நீ இல்லாத இந்த மூணு மாசத்துல, பால் வெலை, பஸ் டிக்கெட், மின் கட்டணம்னு எல்லாத்தையும் உயர்த்திட்டேன். இனிமே உயர்த்தறதுக்கு எதுவுமே இல்லை சசி.
சசிகலா : பஸ்லயெல்லாம் ரெண்டு டிக்கெட் வாங்கணும்னு உத்தரவு போடுவோம்கா… பஸ்ல ஏறும்போது ஒரு டிக்கெட். இறங்கும்போது ஒரு டிக்கெட். ஏறுனா இறங்கித்தானே ஆகணும்.. இது கண்டக்டர் டிரைவருக்கும் பொருந்தும்னு சொல்லிடுங்கக்கா.
ஜெயலலிதா : அய்யோ… சசி…… உன்னை மாதிரி ஒரு மதியூகி தோழி இல்லாமத்தான் நான் தவிச்சுக்கிட்டு இருந்தேன்….. உடனே பண்ணிடலாம் சசி.
சசிகலா : அதே மாதிரி செருப்பு வரின்னு ஒன்னு போட்டு, செருப்பு போட்டா புதிய வரின்னு உத்தரவு போடுங்கக்கா. செருப்பு போட்டா வரியான்னு எல்லாரும் ஷு போடுவாங்க. நம்ப ராவணனை வச்சு ஒரு ஷு பேக்டரி ஆரம்பிச்சுடலாம். வரிக்கு வரியும் ஆச்சு. நமக்கு லாபமும் ஆச்சு. ஏற்கனவே ஏழைகள் செருப்பு போட மாட்டாங்க. அதனால, ஏழைகளின் வயித்துல அடிக்காத அரசுன்னு நமக்கு நல்ல பேரு கிடைக்கும்.
ஜெயலலிதா: பென்டாஸ்டிக் சசி…
சசிகலா : இந்த ஐடியாவையெல்லாம் உங்கக்கிட்ட சொல்லனும்னுதான் தவிச்சுக்கிட்டு இருந்தேன்கா… ஆனா மூணு மாசமா பிரிஞ்சுருந்ததால சொல்ல முடியலக்கா.
ஜெயலலிதா : அதான் வந்துட்டியே சசி.. இனிமே யாரு நம்பள பிரிக்க முடியும்…
சசிகலா : அக்கா… என் தம்பி, சொந்தக்காரங்க மேலயெல்லாம் போட்ட கேசு….
ஜெயலலிதா : அய்யோ… என் தங்கம்.. இதையெல்லாம் உண்மைன்னு நம்பிட்டியா.. நம்ப போலீஸு சசி.. நம்ப போடுன்னா போடுவாங்க.. விடுன்னா விடுவாங்க…. நாளைக்கே ராமானுஜத்த கூப்புட்டு எல்லா கேசையும் வாபஸ் வாங்க சொன்னா வாங்கிட்றாரு… இது ஒரு விஷயமா….
சசிகலா : அக்கா… வாபஸ் வாங்கறதோட விடக்கூடாதுக்கா… கம்ப்ளெய்ன்ட் குடுத்தவங்க மேல கேஸ் போடனும்.
ஜெயலலிதா : சசி… அதப்பத்தி கவலையே படாத… நம்ப போலீசை என்னன்னு நெனச்சுகிட்டு இருக்க ? வெட்டிட்டு வாங்கன்னா கட்டிட்டு வருவாங்க. கம்ப்ளெயின்ட் குடுத்தவங்க மேல கேசப் போடுங்கன்னு ஒரு வார்த்தை சொன்னா என்ன நடக்குதுன்னு பாறேன்… தன்னுடைய சொத்தை தானே அபகரித்துக் கொண்டு திவாகரன் என்பவர் மீது பொய்யான புகார் கொடுத்ததற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்னு பத்திரிக்கை செய்தி வெளியிடுவாங்க பாறேன்..
சசிகலா : அக்கா… அது எப்படிக்கா தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல போட முடியும் ?
ஜெயலலிதா: என்ன சசி…. 12 வருஷமா டெப்டி சிஎம்மா இருந்துருக்க… தெரியாத மாதிரி கேக்குற…. ஜட்ஜு மருமகன் மேல நாம கஞ்சா கேசு போடலியா ? கூடங்குளத்துல உண்ணாவிரதம் இருந்த ஆளுங்க மேல தேசத்துரோக வழக்கு போடலயா ? நம்ப போலீஸ்கிட்ட சொன்னா, ரேப் கேஸ்லேர்ந்து, கஞ்சா கேஸ் வரைக்கும் என்ன கேஸ் வேணாலும் போடுவாங்க…. இந்த விஷயத்தை சன் டிவிக்கு எக்ஸ்க்ளுசீவ்னு நியூஸ் குடுத்தா… போலீசே ஆச்சர்யப்பட்ற அளவுக்கு எப்படிப் பண்ணுவாங்கன்னு பாறேன்.
சசிகலா : அது மாதிரி பண்ணுங்கக்கா… அப்போதான் இவங்களுக்கெல்லாம் புத்தி வரும். சரி.. போலீஸ்ல யாரும் எதுத்துப் பேச மாட்டாங்களாக்கா ?
ஜெயலலிதா : என்ன சசி.. எதுத்துப் பேசற அளவுக்கு நேர்மையான அதிகாரிங்க இருக்காங்களா என்ன ? இவ்ளோ பேர் மேல கேஸ் போட்ருக்கோமே….. இத்தனை பேர சுட்டுக் கொன்னுருக்கோமே…. யாராவது எதுத்துப் பேசுனாங்களா ? இன்னும் சின்னப் பொண்ணாவே இருக்க சசி…. உனக்கு வெவரமே தெரியல..
சசிகலா : அக்கா எங்க சொந்தக்காரங்க மேல கேஸ் போட்ட எல்லா போலீஸ்காரங்களையும் ஏதாவது ஒரு இருட்டுப்பட்டிக்கு மாத்தணும்கா.
ஜெயலலிதா : அய்யோ சசி… தமிழ்நாடு மொத்தமுமே இருட்டுப்பட்டியாத்தானே இருக்கு… ? எங்க மாத்தறது….. ?
சசிகலா : அக்கா அப்போ தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தலாம்கா.
ஜெயலலிதா: அது கூட முடியாதே சசி….. தமிழ்நாட்டுல டாஸ்மாக் கடை இல்லாத ஊரே இல்லையே சசி… சத்தியமங்கலம் காட்டுல கூட நாலு கடை ஓபன் பண்ணிருக்கோமே சசி…. அந்தக் காட்டுல வேலை பாக்குற பாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆளுங்க வெளியில போயி அலையக் கூடாதுன்னு அங்கேயும் ஓபன் பண்ணச் சொல்லி நாந்தான் உத்தரவு போட்டேன்.
சசிகலா : அப்போ அவங்கள என்னதான்கா பண்றது ?
ஜெயலலிதா: அவங்க எல்லாரையும் அதிமுக எம்எல்ஏ ஆக்கிடலாம்.. என் வேன் பின்னாடியே ஓடி வரட்டும். இவ்வளவு கேவலமான பொழைப்பு பொழைக்கறதுக்கு செத்துடலாம்னு அவங்களே செத்துடுவாங்க.
சசிகலா : சூப்பர் ஐடியாக்கா.
ஜெயலலிதா : பின்ன நீயே யோசிச்சுப் பாரேன்.. பொதுக்குழுவிலே, உன் கூடவும், உன் சொந்தக்காரங்கக் கூடவும் யாரும் பேசக்கூடாது, அன்னந்தண்ணி பொழங்கக் கூடாதுன்னு நான்தான் சொன்னேன். அதை அப்படியே நம்பிக்கிட்டாங்க. இப்போ நீ திரும்பி வந்துட்ட. இதையும் ஏத்துக்குவாங்க. நாளைக்கு திரும்பி உன் கூட பேசக்கூடாதுன்னு சொன்னா அதையும் ஏத்துக்குவாங்க. ஒருத்தனாவது கேள்வி கேக்கறானான்னு பாரேன்.
சசிகலா : நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்…..
ஜெயலலிதா : எக்ஸாக்ட்லி…. சரி வா சசி…. உன் கூட சாப்பிட்டு மூணு மாசம் ஆச்சு.
சசிகலா : அக்கா… அக்கா…. சாப்டறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஐபிஎஸ் ஆபிசர்ஸ ட்ரான்ஸ்பர் போட்டுட்டு சாப்டப்போலாம்கா.
ஜெயலலிதா : ஓகே….. யாரை பர்ஸ்ட் மாத்தலாம் சொல்லு….
சசிகலா : சீட்டு குலுக்கிக் போடலாம்கா… மொதல்ல யாரு பேர் வருதோ… அவங்க கன்னியாக்குமரி…..
ஜெயலலிதா : எடுத்துக் குடு சசி… உனக்கில்லாததா….
சசிகலா : அக்கான்னா அக்காதான்……
மேலே நடந்த உரையாடல்கள் உண்மை என்று நம்பினால் அதற்கு சவுக்கு பொறுப்பல்ல.