கூடங்குளம் நிகழ்வுகள் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினைகள்தான் என்ன?
ஆறு மாதக் காலப் போராட்டம் ஏறத்தாழ ஒரு முடிவுக்கு வந்தாகிவிட்டது. அணு உலையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேசத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்வலர்கள் இருவர் உட்பட சிலர் இன்னமும் சிறையில். வழக்குகள் வாபஸ் பெறப்படமாட்டாது என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கலாம் என்று மட்டும் கூறப்பட்டிருக்கிறது.
இன்னொருபுறம் உதயகுமார் கைது செய்யப்படக்கூடும் என்று செய்திகள். அவரது பாஸ்போர்ட் முடக்கப்படுகிறது. இனி வருங்காலங்களில் எல்லோருக்கும் நீதிமன்றப் படியேறி இறங்கவே நேரம் சரியாக இருக்கும்.
அப்படியானால் அணுமின் நிலையத்திற்கெதிரான போராட்டம்?
ஓ, போராடுவோமே. அது கைவிடப்படாது. அணு மின்நிலையம் மூடப்பட்டால்தான் ஓயும் என்கிறவர்கள் இடைப்பட்ட காலத்தில் அணுமின்நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சோதனைகளை அணுசக்தித்துறை முறைப்படி நடத்தியே ஆகவேண்டுமென தாங்கள் வற்புறுத்தவிருப்பதாகவும் தெரிகிவிக்கின்றனர்.
இன்னொருபுறம் பலரும் போராட்டம் மிகப்பெரிய வெற்றி என்ற ரீதியிலேயே பேசியும் எழுதியும் வருகின்றனர். வன்முறையைத் தவிர்த்து, மக்களை அணிதிரட்டி, ஒரு சில மாதங்களேனும் அரசை மிரளச் செய்ததே மாபெரும் சாதனை என்ற ரீதியில் முழங்கப்படுகிறது.
கூடங்குள எழுச்சியை வரவேற்றவர்கள், இன்று ஒரு ’state of denial’லில் இருக்கின்ற்னர், ஒன்றும் பெரிதாக மோசம் போய்விடவில்லை என்று சமாதானம் சொல்லிக்கொள்கின்றனர். இது எதிர்காலத்தில் அரசு பயங்கரவாதத்தை, அத்து மீறலை எதிர்கொள்ள உதவுமா என்ப்தே என் கேள்வி.
எந்த ஒரு போராட்டமும் முடிவுக்கு வரும்போது அதில் ஏதாவது சாதகமான் அம்சத்தைப் பிடித்துக்கொண்டு ஆஹா, இதோ பார் எதிரியை இந்த அளவு பணிய வைத்துவிட்டோம், நம்மால் இவ்வளவுதான் முடியும் என்று சமாதானம் சொல்லிக்கொள்வது ஒரு சடங்காகிவிட்டது.
முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பிறகும், வீரர்கள் வீழ்வதில்லை, விதைக்கப்படுகின்றனர், பாருங்கள் என்றேனும் ஒரு நாள்…. என்றுதானே தமிழார்வலர் பல்ர் பேசிவருகின்றனர்.
மக்கள் துவண்டுவிடக்கூடாது பாருங்கள் என்றும் ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது.
தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து அதிலும் ஏதோ வெற்றியைத் தேட முயலும்போது இரண்டுவிதமான் ஆபத்துக்கள் உருவாகக்கூடும். 1. போராட்டத்தை ஆதரித்து வந்தவர்களில் கணிசமான் பகுதியினர் நிகழ்வுகளை வேறு விதமாக புரிந்துகொள்ளும்போது, நம்மை ஏமாற்றுகின்றனர் என நினைத்து விலகிவிடலாம் 2. போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள், தோல்விகளுக்கான காரணங்களை சரியாகப் புரிந்துகொள்ளாவிடில், அடுத்தடுத்த கட்டங்களில் கைக்கொள்ளவேண்டிய அணுகுமுறைகளை செழுமைப் படுத்திக்கொள்ளமுடியாமல் போகலாம், அதன் விளைவாய் இன்னமும் மோசமான தோல்விகளைச் சந்திக்கநேரிடலாம். அது இறுதியில் மக்களையே பாதிக்கும் என்ற கவலையில் எழுந்ததே இக்கட்டுரை.
மனித குலம் எதிர்நோக்கும் பேரபாயங்களில் ஒன்று அணு ஆயுதங்கள். அவ்வாயுதங்களைத் தயாரிப்பின் ஒரு கட்டமே அணு மின் நிலையங்கள். எனவேயே அவை செயல்படுவது குறித்த விவரங்களெல்லாம் மூடு மந்திரமாகவே இருந்து வருகிறது.
அணுமின் நிலையத்தில் என்ன நடக்கிறது, உள்ளே இருப்பவர்களுக்கும், வெளியில் இருப்பவர்களுக்கும் என்னென்ன ஆபத்து, கதிரியக்கக் கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இறுதியில் மின்சாரம் தயாரிக்கும் செலவு விண்ணைத் தாண்டுகிறதே, இவ்வளவு பெருந்தொகை செலவழித்து, நாம் சரியாகக்கூட ஊகிக்கமுடியாத ஒரு யுகப்பேரழிவை நாமாக வரவழைத்துக்கொள்ளவேண்டுமா என்பன போன்ற கேள்விகளுக்கு, தலைகீழாய் நின்றாலும், ஆயிரக்கணக்கில், மக்கள் அழுதுபுரண்டாலும், முரண்டுபிடித்தாலும் ஆளும் வர்க்கங்கள் என்றும் பதில்சொல்லப்போவதில்லை. அந்நிலையை ஓரளவு மாற்றியது கூடங்குளம்.
அணுமின்நிலையங்க்ளுக்கெதிரான குரல்கள் தேய்ந்து மறைந்து போவதே வரலாறாக இருந்த பின்னணியில், கூடங்குள்ம் ஒரு புதிய அனுபவமே.
வல்லரசுக்கனவுகளில் திளைக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அவர்களது கைக்கூலிகள் அனைவருக்குமே கூடங்குள் இயக்கம் பேரதிர்ச்சியாக வந்தது. பெருமளவில் மக்கள் அணிதிரள்கிறார்கள். பெரிய அள்வில் வன்முறை இல்லை, ஆனால் இவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று மிரண்டு பல இரவுகள் தங்கள் உறக்கத்தையே பலர் இழந்திருக்கக்கூடும். அப்படி மிரளவைத்தது ஒரு சாதனைதான்.
நிபுணர் குழுக்களை அனுப்பி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு வருந்தி வருந்தி அழைத்தது இவையெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு, அனைத்துவித அரசு எதிர்ப்பாளர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியளித்ததும் உண்மையே.
ஆனால் இன்றென்ன என்பதுதான் கேள்வி. மீசையை முறுக்கிக்கொள்ளலாம், முண்டா தட்டலாம், அன்று அப்படிச் செய்தோமே என்று பெருமையடித்துக்கொள்ளலாம், அதைக் கடந்து?
போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது இரண்டு மூன்று முறை அங்கு சென்றுவந்த நான் இரத்தக் களறியில்தான் இது முடியும் என்று நினைத்தேன். துப்பாக்கி சூடில்லாமல், உயிரிழப்புக்கள் இல்லாமல் மக்களை அடக்கவியலாது என்று சொல்லிவந்தேன்.
ஆனால் எவருக்கும் லேசான காயம் கூட இல்லாமல், ஒரு கல்லெறி கூட இல்லாமல் அங்கே வாழ்க்கை மாமூலாகிவிட்டது, உயிர் பலி வாங்காமல் முடித்துகொண்டது உதயகுமாரின் திறமை, மனித நேயம் என்று வாதிடப்படுகிறது.
ஆனால் தவறு ஏதோ நிகழ்ந்துவிட்டது, மிக எளிதாக தப்பிக்க ஆட்சியாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என நான் வருந்துகிறேன்.
அவர்களே இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். எல்லாம் இனிதே முடிந்தது என்ற களிப்பில் இருக்கின்றனர். இனி எங்கேனும் அணுமின் நிலையம் கட்டத்துவங்கினால் எழக்கூடிய எதிர்ப்பினை எதிர்கொள்வதெப்படி என்று எவரும் பெரிதாகக் கவலை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
1980களின் பிற்பகுதியில் கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்டபோதும் எதிர்ப்பு எழத்தான் செய்தது. அகில இந்திய அளவில் அணுசக்தி எதிர்ப்பாளர்களுடன் ஒன்றிணைந்து கூட்டங்கள் போடப்பட்டன. பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. அப்போதும் இப்போதுபோலவே கிறித்தவ திருச்சபைகளின் நிதி உதவி கிடைத்தது.
திருச்சபையினர் ஏன் இத்தகைய போராட்டங்க்ளுக்கு உதவ்வேண்டும் என்பதற்கு தெளிவான விடையினை என்னால் தரவியலாது. மக்களின் பாதுகாவலராகவும் அறியப்படும் பாதிரிமார், மக்களில் சிலர் அச்சப்பட்டாலுங்கூட அவர்களுக்கான குரல் கொடுக்கவேண்டுமென்று நினைக்கலாம். தவிரவும் பொதுவாக கத்தோலிக்க திருச்சபையில் முன்னேற்றக் கருத்துடையவர்களும் கணிசமான் எண்ணிக்கையில் இருக்கின்றனர். மனித விடுதலைக்கான இறையியல் எனும் தத்துவம் கூட மார்க்சீயத்தின் பல கூறுகளை உள்வாங்கியதாகும்.
எதுவாயினும் சரி திருச்சபையின் முழு ஆதரவு அப்போதும் இருந்தது. இடிந்தகரை, அதை ஒட்டியுள்ள பல் பகுதிகளில் கூட்டங்கள். ஆர்ப்பாட்டங்கள். தூத்துக்குடியில் நடந்த் பேரணியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்துகொண்டார். அப்பேரணி பெரும் வெற்றிதான். ஆனால் அதன் பிறகு எதிர்ப்பு தளர்ந்தது. ஆர்வலர்களின் வேகம் தளரவில்லை, திருச்சபையின் ஆதரவும் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் மக்கள் . பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதறகு களத்திலிருந்தவர்கள் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கலாம். ஆனால் ஒரே ஆண்டில் எதிர்ப்பியக்கம் நின்றுபோனது உண்மை.
பல்லாண்டுகளுக்குப் பிறகு உதயகுமார் தலைமையில் போராட்டம் மீண்டும் முகிழ்த்தபோது அதற்குக் கிடைத்த மக்களாதரவு எல்லோரையையும் வியப்படையச் செய்தது. அவருடைய எளிமை, மக்களை அணி திரட்டிய பாங்கு, திருச்சபைகளின் தலைமைகளிடமும் பேணிய நல்லுறவு அனைத்துமே பாராட்டத்தக்கது.
ஆனால் கூடங்குளம் அணுமின்நிலையம் இயங்கவேண்டும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எனக்கு திருப்தி, எனவே மக்களும் திருப்தி அடையவேண்டியதுதான் என்ற ரீதியில் முதல்வர் ஜெயலலிதா அறிக்கைவிட்ட மறு நொடியே போராட்டம் கலகலக்கத்தொடங்கியதன் காரணம் என்ன?
அந்நேரம்வரை இது எங்களின் ஜீவாதாரப்பிரச்சினை, உயிரைக்கொடுத்தேனும் அணுமின் நிலையம் இங்கு உருவாவதைத் தடுப்போம் என்று சூளுரைத்தவர்கள், இப்படி அரசு செய்யலாமா, நீங்கள் எங்களைக் கைவிடமாட்டீர்கள் என்றல்லவா நம்பியிருந்தோம் இப்படி செய்துவிட்டீர்களே என்ற ரீதியில் முறையிடத்துவங்கினர். எங்களைப் பேச்சுவார்த்தைக்கூட அழைக்கமாட்டேன் என்கிறீர்களே என்று மனுப்போட்டனர். சிறையிலடைக்கப்பட்டிருக்கும் மக்கள் ஜாமீனில் விடுதலையாகக்கூடும் என்ற புரிதலோடு உண்ணாவிரத்ப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
முன்னாள் அணுசக்தி ஆணையத் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசனும் அடங்கிய ஓர் நிபுண்ர் குழு என்றவுடனேயே அடக்குமுறைக்கு ஜெ தயாராகிக்கொண்டிருக்கிறார் என்று எல்லோருக்குமே தெளிவாகியது. அப்போது தொட்ர்ந்து போராட்டக்குழு உறுப்பினர்களிடம், என்ன செய்வதாகத் திட்டம் எனத் தொடர்ந்து நச்சரித்தும் எனக்குக் கிடைத்த ஒரே பதில் – ’’பார்த்துக்கொண்டே இருங்கள் இறுதி வெற்றி நமக்கே. பல்வேறு திட்டங்கள் வைத்திருக்கிறோம்..’’ எனக்கு நம்பிக்கை வரவில்லை, ஆனால் களத்திலிருப்பவர்களிடம் வெளியிலிருக்கும் அனுதாபிகள் ஓரளவுக்கு மேல் கேள்விகள் கேட்கமுடியாதே. அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் அப்படியொன்றும் உருப்படியான திட்டங்கள் எதையும் அவர்கள் வைத்திருந்திருந்தால் இப்படி எல்லாம் பொசுக்கென்று முடிந்திருக்குமா?
இப்படியெல்லாம் கேட்டால், ரத்தக்களறி நிகழவில்லையே, எவரும் குண்டடிபட்டு சாகவில்லையே, அரசு பயங்கரவாததைத் தெருமுனைக்கூட்டங்களில் சாடமுடியாத எரிச்சலா என்று கூட சிலர் வியக்கலாம்.
எவ்வித மோதலும் இல்லாமல் போராட்டத்தை ஒத்திவைப்பதென்பதுதான் முதலிலிருந்தே திட்டம் என்றால் மக்கள் மத்தியில் வீரமுழக்கங்கள் ஏன் என்பதுதான் கேள்வி. கடற்கரையோர மீனவக்குடும்பத்தினர், குறிப்பாகப் பெண்கள், விஞ்ஞானத்தைப் புரிந்துகொண்டார்களோ என்னவோ, ஆனால் அனைவருமே கொதித்துப் போயிருந்தனர் என்பது உறுதி. அக்கோபாவேசத்தை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாத்துதான் ஏன்?
உண்ணாவிரதப்போராட்டம் வலுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கின்றன், மக்கள் அச்சப்பட்த்தேவையில்லை, போராட்டம் கைவிடப்படவேண்டும் என முதலில் அறிக்கைவிட்ட ஜெயலலிதா, மூன்றே நாட்களில் அச்சங்கள் களையப்பட்டபின்னரே அங்கே அணுமின்நிலையம் என்றார். உள்ளாட்சித்தேர்தல்கள் வரவிருந்த நிலையிலேயே அவ்வறிக்கை என்று தெரிந்தும் முதல்வரின் முடிவை உற்சாகத்துடன் வரவேற்றனர் போராட்டக்குழுவினர். அவரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் புரட்சித்தலைவி என்றெல்லாம் புகழ்பாடினார்.
அரசின் ஆதரவு தேவை என்பது சரி. அதற்காக எவ்விதக்கேள்வியையும் எழுப்பாமல் செய்தியாள்ர் மத்தியில் மறுபடி மறுபடி முதல்வர் தங்களைக்கைவிடமாட்டார் என்று வலியுறுத்தியது போராட்டத்தின் முதல் சறுக்கல்.
இரண்டாவது நிபுண்ர் குழுவில் அணுசக்தியை தீவிரமாக ஆதரிப்பவர்களுக்கு மட்டுமே இடமளித்த முடிவினை கடுமையாக விமர்சனம் செய்யாமல், மென்று விழுங்கி, எங்களுக்கு இன்னமும் நம்பிக்கையிருக்கிறது முதல்வர் மேல் என்று உத்யகுமார் ஏன் கூறவேண்டும்?
மக்களை நம்பித்தானே போராட்டம் துவங்கியது. எதற்காக முதல்வருக்கு, அதுவும் பொதுவாக தீவிர ஸ்டேடிஸ்ட் மன்ப்பான்மை கொண்ட ஜெவுக்கு, எதற்கு அப்படி ஒரு சிறப்பு ஒளிவட்டம்?
அது ஒரு தந்திரோபாயம்தான் என்று கூறிக்கொண்டாலும், தொடர்ந்து ஜெயலலிதா நிச்சயம் அணுமின் நிலையத்தைத் தடுத்து விடுவார் என்பது போன்ற பிரமையை உருவாக்கியது ம்கக்ளின் போர்க்குணத்தை மழுங்கடித்திருக்கவேண்டும்.
இன்னொருபுறம் இறுதிவாரங்களில் பல்வேறு அரசியல் அமைப்புக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.
ஆனால் அவ்வமைப்புக்களின் சுற்றுச் சூழல் பற்றிய புரிதலே கேள்விக்குறி, அவ்ற்றில் பலவற்றிற்கு அரசியல் உள்நோக்கமும் உண்டு, அவர்களுடைய குறிக்கோள்களுக்கு ஒத்துவராத எந்நிகழ்விலும் பங்கு பெற மறுப்பவர்கள், அவற்றின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியே, அப்படியிருந்தும் அவர்களுடன் கைகோர்த்தது அவற்றுக்குத்தான் பயன்பட்டிருக்கும். ஜெ அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட நிலையில் அவர்கள் தங்கள் ஆற்றலுக்குட்பட்டவ்ரைகூட போராட்டத்தில் இறங்கவில்லை.
ஆனால் ஒரு சிலர் இத்தகைய அமைப்புக்களுடன் மட்டுமல்ல ஏதோ சிறிய அளவில் அரசியல் இயக்கங்களாக் வளர்ந்தவற்றுடன் கூட கைகோர்த்து மாநில அளவில் பெரிய இயக்கமாய் வளர்த்திருக்க்வேண்டுமென வாதிடுகின்றனர்.
ஆனால் அணு எதிர்ப்பென்பது பரந்துபட்ட மக்களின் இயக்கமாய் மாறுவதற்கான் வாய்ப்புக்கள் குறைவே என்பது என் கருத்து. கூடங்குளத்திலேகூட பெரும் இயக்கமாக மாறியதற்குக் காரணம் ஃபுகுஷிமாதான். அவ்விபத்து நடந்திருக்காவிட்டால் அவ்வளவு பெரிய அளவில் மக்கள் அணிதிரண்டிருக்கவாய்ப்பில்லை. அப்படியிருக்கையில், ஏறத்தாழ அனைத்து முக்கிய அரசியல்கட்சிகளும் அணுசக்தியினை ஏதோ பெரும் வரப்பிரசாதமாக சித்தரித்து வ்ரும் நிலையில், அவர்களை மீறி அறைக்கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மாநிலம் த்ழுவிய இயக்கமாக போராட்டத்தை மாற்றியிருக்கமுடியாது என்றே தோன்றுகிறது.
சரி என்ன செய்திருந்தால் கூடங்குளத்தில் ஓரளவேனும் வெற்றி பெற்றிருக்கமுடியும்?
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
என்கிறது வள்ளுவம்.
நாம் எதிர்கொண்டிருப்பது அரசை, அணு ஆயுதங்களை ஒரு வித வெறியுடன் குவித்துக்கொண்டிருப்பவர்களுடன், ஏதோ ஒரு கட்டட்தில் நம்மை நசுக்கப்போகிறார்கள், எனவே நம்மால் முடிந்தவரை அணுசக்தியில் உள்ள் பிரச்சினைகளை வெளிப்படுத்தி, மக்களிடமிருந்து ஆள்வோர் மறைக்கும் பலவற்றை அம்பலப்படுத்தி, ஏதோ சில குறிப்பிடத்தகுந்த சலுகைகளையாவது பெற்று போராட்டத்தை விலக்கிக்கொள்வது என்ற வகையில் செயல்பட்டிருக்கலாம்.
முன்னாள் குடியரசுத்தலைவர் 200 கோடி ரூபாய் திட்டமென்றபோது அப்பகுதிமக்களின் வாழ்வு உண்மையிலேயே மேம்படும்வகையில், மீனவ இளைஞர்களுக்கென கடலியல் கல்லூரி, அப்பகுதி பெண்கள் ஆர்வம் காட்டும் செவிலியர் பயிற்சிக்கான கல்லூரி, கலாம் கூறியது போல் மருத்துவமனை போன்றவற்றை வலியுறுத்தி, கூடவே விபத்து நேர்ந்தால் காப்பீடு, அப்பகுதியில் தொடர்ந்து புற்று நோய் பரிசோதனை இப்படியெல்லாம் கோரியிருந்தால் அவையனைத்துமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம். அத்தகைய உடன்படிக்கை ஒரு மக்கள் சாசனமாக, ஒரு முன்னோடித் திட்டமாக் உருவாகியிருக்கலாம். ஆனால் எந்த லாபமும் இல்லாது ஆளை விட்டால்போதும் என்ற அளவில்தான் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்னொரு அம்சமும் இருக்கிறது, திருச்சபைகளின் ஆதரவை அதிகமாக சார்ந்திருந்ததும் ஒரு சிக்கல்தான், அந்நிர்வாகங்களால் ஓரள்வுக்கு மேல் அரசின் அழுத்தங்களை நிச்சயம் எதிர்கொள்ளவியலாது.
இதைப்பற்றியெல்லாம் போராட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டிருக்கலாம், ஏதோ சில வரையறைகளுக்குள்ளான போராட்டமே என்று அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்திருக்க்லாம். ஆனால் வெளியுலகிற்கு அதெல்லாம் தெரியாத நிலையில், சூசகமாகவேனும் தெரிவிக்கப்படாத நிலையில், போராட்டம் முடங்கிப்போயிருப்பது ஒரு தோல்வியாகவே பார்க்கப்படும். அத்த்கையதொரு புரிதல் எதிர்கால மக்கள் போராட்டங்களுக்கு பின்னடைவாகக் கூட அமையலாம். சில மாதங்கள் அனைத்திந்தியாவையும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த ஒரு பெரும் எழுச்சிக்கு இப்படி ஒரு முடிவென்பது சோகமே.
கானகன்