தோழர் கானகன் கூடங்குளம் போராட்டம் தொடர்பாக எழுதியிருந்த கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள். ஆதரவாகவும், எதிராகவும். இரு தரப்பு வாதங்களும், கடுமையாகவே இருக்கின்றன.
தோழர் கானகனின் கட்டுரையிலிருந்து தெரிய வந்த விஷயங்களில் முக்கியமானது, இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அவருக்கு இருந்த அக்கறை, கவலை, ஆதங்கம். மேலும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்ற ஆற்றாமை, சரியான நேரத்தில் முடிக்கவில்லையே என்ற மனக்குறை. அந்தக் கட்டுரையின் சராமாக புரிந்து கொண்ட விஷயங்கள்… …
1) இந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
2) போராட்டம் மோசமான பின்னடைவைச் சந்தித்த நிலையில் ஒரு விதமான Self denialல் இருக்கிறார்கள்.
3) போராட்டம் தோல்வியைத் தழுவிய பிறகும், அதை ஒப்புக் கொள்ள மறுத்து ஏதோ வெற்றி அடைந்தது போலப் பேசி வருகிறார்கள்.
4) கூடங்குளம் போராட்டம், அணு உலை குறித்த ஆபத்துக்களை விவாதப்பொருளாக்கியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.
5) அரசாங்கத்துக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் போராட்டம் முடிவடைந்திருப்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவு.
6) ஜெயலலிதாவை நம்பி போராட்டம் மோசம் போனது. ஜெயலலிதாவை நம்பியிருக்கக் கூடாது.
7) அப்துல் கலாம் 200 கோடி சலுகைகளை அறிவித்த போது, அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதை தவற விட்டு விட்டார்கள்.
கூடங்குளம் போராட்டம் என்பது, இந்தியாவில் இது வரை நடைபெற்ற போராட்டங்களிலேயே ஒரு முக்கியமான, குறிப்பிடத்தக்க போராட்டம் என்பதை யாரும் மறுக்கவியலாது. இன்றைய, தாராளமயமாக்க, நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் ஒரு சாதாரண அரங்கக் கூட்டத்திற்கு 50 பேரை திரட்டுவது என்பதே ஒரு சாகசமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில், சில ஆயிரம் மக்களை தொடர்ச்சியாக 7 மாதங்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபட வைத்தது ஒரு மிகப்பெரிய சாதனை.
மற்ற போராட்டங்களை விட இந்தப் போராட்டம் சிறந்ததாக இருப்பதற்கான காரணம், இந்தியாவையே சமீபத்தில் உலுக்கிப் போட்ட அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்குக் கிடைத்த மீடியா ஆதரவை பார்க்க வேண்டும். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த 11 நாட்களும், தேசிய ஊடகங்கள் 24 மணி நேரமும், இந்தியாவே ஸ்தம்பித்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கின. இந்த ஊடக முக்கியத்துவத்தைப் பார்த்து, அனைத்து அரசியல் கட்சிகளும் நடு நடுங்கிப் போயின என்றால் அது மிகையாகாது. அத்தனை கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. நாடெங்கும் இருந்து நிதி வந்து குவிந்தது. காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளர்கள், அன்னா ஹசாரேவைப் பற்றியும், அவர்கள் குழுவினரைப் பற்றியும் அவதூறு பேசினாலும், பிரதமர் அவர்கள் போராட்டத்தை மதிக்கிறேன் என்றே பேசினார்.
ஆனால் கூடங்குளம் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். போராட்டம் தொடங்கிய நாள் முதல் அவதூறுதான். கிறித்துவர்கள் நடத்தும் போராட்டம் என்றார்கள். வெளிநாட்டுச் சதி என்றார்கள். உதயக்குமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்றார்கள். உதயக்குமார் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருக்கிறார் என்றார்கள். நாராயணசாமி மத்திய அரசு விசாரணை நடத்துகிறது என்றார். பல கோடி வாங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றார். உதயக்குமார் பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் வாயை மூடிக்கொண்டார். இது வரை ஆதாரங்களை தெரிவிக்கவில்லை. உச்சகட்ட அயோக்கியத்தனமாக, பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா மற்றும் ஸ்கான்டிநேவிய நாடுகளில் இருந்து கூடங்குளம் போராட்டத்துக்கு பணம் வருகிறது என்றார். மன்மோகன் சிங்குக்கு உதயக்குமார் அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை.
நேற்று வரை அமெரிக்காவின் அடிமையாக, வல்லாதிக்க திமிர் பிடித்த ஜார்ஜ் புஷ்ஷின் அடிமையாக இருந்த இதே மன்மோகன்சிங் அமெரிக்காவிலிருந்து பணம் வருகிறது என்றார்.
ஊடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்…. குறிப்பாக தினமலர். உதயக்குமார் மற்றும் போராட்டம் நடத்தும் முன்னணித் தோழர்களின் தொலைபேசி எண்ணை முதல் பக்கத்தில் போட்டு அவர்களை மிரட்டியது. உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு, திருட்டுத்தனமாக உணவு உண்கிறார்கள் என்று எழுதினார்கள். இப்படி ஒரு பொய்யை முதல் பக்கத்தில் வெளியிடும் அளவுக்கு தினமலர் தரம் தாழ்ந்து போனது. சன் டிவி, தன் பங்குக்கு உதயக்குமாருக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு இருக்கிறது என்றது.
மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கம்யூனிச இயக்கங்கள், கூடங்குளம் மக்களுக்கு அறிவுரை கூறின. அணு உலையை ஏற்றுக் கொள்ளுமாறு இலவச ஆலோசனைகளை வழங்கின.
இத்தனை எதிர்ப்புக்களையும் தாண்டி, இந்தப் போராட்டம் இந்தக் கட்டத்துக்கு வந்திருப்பது ஒரு மிகப்பெரிய வெற்றி என்றே சவுக்கு கருதுகிறது.
போராட்டம் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்ட நிலையில் ஒரு விதமான சுய மறுப்பில் இருக்கிறார்கள் என்று தோழர் கானகன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைகளின் போது, நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்களைப் பார்த்து, கேட்கும் சில தர்மசங்கடமான கேள்விகள் ஒரு வித மகிழ்ச்சியை கொடுக்கும். அந்தக் கேள்விகளை பத்திரிக்கைகளில் செய்தியாக்கி, அது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துமாறு செய்வது வழக்கம். திமுக அரசின் அரசு வழக்கறிஞராக இருந்த ராஜா கலிபுல்லா, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை பத்திரிக்கைகளில் பேட்டி கொடுக்க வேண்டாம் அறிவுறுத்துமாறு நீதிபதிகளிடம் பல முறை, கேட்டிருக்கிறார். ஆனாலும் அந்த விஷயங்களை செய்தியாக்குவது வழக்கம்.
இது போல அரசு வழக்கறிஞரிடம் கேள்வி கேட்கும் இந்த நீதிபதிகள், எதுவும் செய்ய மாட்டார்கள்…. நியாயம் வழங்க மாட்டார்கள் இந்த வழக்கை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்வார்கள், அல்லது தள்ளுபடி செய்வார்கள் என்பது தெரியாதா ? 2008ம் ஆண்டு முதல் எத்தனை வழக்குகள் ஒன்றும் இல்லாமல் போயிருக்கின்றன தெரியுமா ? ஆனால், நீதிமன்றத்தில் வாதங்களின் போது நடக்கும் சிறு சம்பவங்களை செய்தியாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதில் ஒரு சிறு இன்பம் ஏற்படத்தான் செய்கிறது. இறுதியாக வெற்றி பெறப்போவது அரசுகளே என்பது நன்றாகத் தெரிந்தும் அந்த சிறு இன்பங்கள், தொடர்ந்து வேலை பார்ப்பதற்கான ஊக்கத்தை கொடுக்கின்றன. இது ஒரு வகையான சுய மறுப்பு என்பது நன்கு தெரிந்தும், இந்த ஊக்கம் இல்லாவிட்டால், தொடர்ந்து வழக்கு போடுவதற்கு அயற்சி ஏற்படும் என்பதை உணர்ந்தே இந்த சுயமறுப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டியதாக உள்ளது.
அந்த வகையில் கூடங்குளம் போராட்டத்தை ரத்தக் களறி இல்லாமல் ஒரு முடிவுக்கு கொண்டுவந்ததை வெற்றியாகக் கொண்டாடாவிட்டால் சோர்ந்து போக மாட்டோமா ?
அடுத்ததாக, கூடங்குளம் போராட்டம் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், போராட்டம் முழுமையாக நின்று போகவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ? நீதிமன்றத்தில் அணு உலைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யக் கோரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் அணு உலையை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன, அதனால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அணு சக்தி அமைவிடம் (IAEA) மனு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அந்த தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அரசாங்கத்துக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பதில் உண்மை உள்ளது. அதே நேரத்தில், அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக சாமான்ய மக்களை, இந்த காட்டுமிராண்டிப் போலீசிடம் அடிவாங்க வைக்க முடியுமா ? உயிர்களை பலி கொடுக்க வைக்க முடியுமா ? பரமக்குடியில் நடைபெற்றது போல, கவலையே படாமல் மக்களை குருவிகளைப் போல சுட்டிருப்பார்கள். அதனால், இது நாடு தழுவிய அளவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்தான். அதற்காக உழைப்பாளி மக்களை, பெண்களை, குழந்தைகளை பலியாக்க முடியுமா ?
உண்ணாவிரதம் இருப்பவர்களை தேசத்திற்கு எதிராக போர் தொடுக்கிறார்கள் என்று வழக்கு தொடுக்கும் ஒரு காட்டுமிராண்டி அரசாங்கத்திடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு பின்வாங்குவதைத் தவிர வேறு என்ன வழி ?
ஈழத்தில் தந்தை செல்வாவின் அமைதிப் போராட்டத்தை அங்கீகரிக்காத சிங்கள அரசின் போக்குதானே ஆயுதப்போராட்டத்துக்கு வழி வகுத்தது ? இந்தியாவின் வனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடுவதை அமைதியாக எதிர்த்த பழங்குடியின மக்களை போலீசைக் கொண்டு ஒடுக்குவதால்தானே அவர்கள் நக்சலைட்டுகள் பக்கம் சாய்கிறார்கள் ? எழுத்தாளர் அருந்ததி ராய் சொல்வது போல, உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று பார்வையாளர்கள் இல்லாத போது, உண்ணாவிரதம் எப்படி சரியான போராட்ட வழிமுறையாக இருக்க முடியும் ?
ஜெயலலிதாவை நம்பி போராட்டம் மோசம் போனது என்ற குற்றச்சாட்டு தவறு. தோழர் கானகனே கூறியது போல, அது ஒரு போர்த்தந்திரமே. ஜெயலலிதா மக்களை நேசிக்கும் அரசியல்வாதி என்று யாருமே நம்பவில்லை. உள்ளாட்சித் தேர்தல்களுக்காகவும், சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்காகவும், மத்திய அரசை மிரட்டுவதற்காகவுமே கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பது போல நடித்தார் என்பதை இடிந்தகரையில் உள்ள அனைவருக்கும் தெரியும். உதயக்குமாருக்கும் தெரியும். போராட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா முனையும் போது, அந்த முடிவை போராட்டத்துக்கு சாதகமாக பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் ? ஜெயலலிதா எப்படி நடித்தாரோ, அதே போல போராட்டக் குழுவினரும் நடித்தார்கள் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது ?
அப்துல் கலாமையெல்லாம் ஒரு ஆள் என்று பேசுவதே தவறு. அப்துல் கலாமை ஒரு கடவுள் போல, அவர் கூடங்குளம் போனால் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து அவரை அனுப்பிய மத்திய அரசாங்கத்துக்கு கூடங்குளம் மக்கள் சரியான பதிலடி கொடுத்தார்கள். அவர் கொடுத்த 200 கோடி ரூபாய் லாபம் என்று நினைத்தால், தற்போது ஜெயலலிதா கொடுத்துள்ள 500 கோடி அதை விட லாபம் என்றல்லவா பார்க்க வேண்டும் ?
இத்தனை நாட்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் ஓரளவுக்கு, தற்காலிகமாகவாவது கூடங்குளம் அணு உலைப் பணிகளை நிறுத்தி வைத்ததோடு அல்லாமல், அணு உலைகளின் ஆபத்துக்களை விவாதப் பொருளாக்கியிருப்பது முதல் சாதனை. கல்பாக்கம் மக்களைப் போன்றவர்கள் நாங்கள் அல்ல. வரக்கூடிய ஆபத்தினை முன்னதாகவே எதிர்க்கிறோம் என்று முன்னெச்சரிக்கையாக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து, இறுமாப்பான அரசாங்கங்களை இறங்கி வந்து பேச வைத்தது இரண்டாவது சாதனை.இத்தனை ஊடக எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டு, பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து, மக்களின் உறுதியை குலைக்க மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் இணைந்து எடுத்த அத்தனை முயற்சிகளையும் சமாளித்து, ரத்தக்களறி இல்லாமல், இந்த அளவுக்கு இந்தப் போராட்டத்தை இன்னமும் உயிரோட்டத்தோடு வைத்திருப்பது மூன்றாவது சாதனை. கூடங்குளம் மக்களைப் பார்த்து, அணு உலை அமையவிருக்கும் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பது நான்காவது சாதனை. அணு உலை போன்ற நாசகார விவகாரங்களை மக்களிடத்தில் திணிப்பதில், காங்கிரஸ், பாஜக மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டுகளும் மக்கள் விரோதிகளே என்று அம்பலப்படுத்தியது ஐந்தாவது சாதனை.
பாதி நிறைந்த குடுவையை, பாதி காலியாக இருக்கிறது என்று பார்க்காமல், பாதி நிறைந்திருக்கிறது என்று பார்க்கும் அணுகுமுறையே பொதுவாழ்வில் இருப்பவர்களை, சோர்வடையாமல், மென்மேலும் உந்துதலோடு பணியாற்ற உதவும். தோற்று விட்டோம் என்று, தோல்வியிலேயே உழல்வோமானால், விரக்தியும், வேதனையும் மட்டுமே மிஞ்சும்.