திடீரென்று இப்படி மகிழக் காரணம் என்ன ? இன்று சென்னை உயர்நிதிமனறத்தில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பே அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.
கடந்த டிசம்பர் 2011ல் சவுக்கு வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அந்தக் கட்டுரையில், கல்வித் தந்தை (?????) ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி எப்படி மோசடியாக அனுமதி பெற்றது என்பதையும், அந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மீது சிபிஐ வழக்கு தொடுத்து, அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகியதும், அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்கு அதை விசாரித்த நீதியரசர் ஆறுமுகசாமி முனைந்ததையும் பார்த்தோம். அன்று விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஆறுமுகசாமிதான் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும் அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவேயில்லை. நீதிமன்ற வட்டாரங்களில் விசாரித்ததில், அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதியரசர் ஆறுமுகசாமி விலகிக் கொண்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியின் சார்பில் ஆஜரான அதே யு.யு.லலித் இன்றும் ஆஜரானார்.
வழக்கு விசாரணை தொடங்கியதும், லலித் எழுந்து நான் இந்த வழக்கில் ஏற்கனவே விரிவாக வாதத்தை எடுத்து வைத்துள்ளேன். இப்போதும் விரிவான வாதத்தை எடுத்து வைக்கிறேன் என்றார். உடனே நீதிபதி, சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரனைப் பார்த்து, வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று கேட்டார். சந்திரசேகரன், இது மிகப்பெரிய ஊழல் வழக்கு. இதில் முக்கிய நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றார். நீதிபதி, எல்லா ஊழல் வழக்குகளிலும் முக்கிய நபர்கள் சம்பந்தப்படத்தான் செய்வார்கள். விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்று கூறுங்கள் என்று கூறினார்.
இது வரை 125 சாட்சிகளை விசாரித்துள்ளது சிபிஐ. 750 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றார். குற்றப்பத்திரிக்கை எப்போது தாக்கல் செய்வீர்கள் என்று கேட்டதற்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது, விரைவில் தாக்கல் செய்து விடுவோம் என்றார். எவ்வளவு விரைவாக தாக்கல் செய்வீர்கள் என்றதற்கு 2 மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம் என்றார்.
உடனே நீதிபதி, லலித்தைப் பார்த்து, விசாரணை முடியப்போகிறது. இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய இயலாது, ஆகையால், நீங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து முடிந்ததும் அதை ரத்து செய்ய மனுத் தாக்கல் செய்யுங்கள் என்றார்.
உடனே, லலித், மை லார்ட், எப்ஐஆரை ஒரே ஒரு முறை பாருங்கள். விசாரணை நடத்துவதற்கு இந்த வழக்கில் அவசியமே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் கொடுத்தும் சிபிஐ விசாரணையை முடிக்கவில்லை என்றார். அதற்கு நீதிபதி, விசாரணைக்கு ஆறு மாதம் தடை இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள் என்று சுட்டிக் காட்டினார்.
லலித் “அதற்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவில்லை” என்றார்.
நீதிபதி இது குறித்து சிபிஐ வழக்கறிஞரிடம் கேட்டதற்கு, தற்போது இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுத்தால் அனைத்தும் முடிந்து விடும். சிபிஐ வேலை செய்யும் முறையில் இருக்கும் நடைமுறை சிக்கல்களால் தாமதமாகிறது என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, என்ன சொல்கிறீர்கள் என்று லலித்திடம் வினவினார்.
லலித் “ஒரே ஒரு முறை எப்ஐஆரை பாருங்கள்” என்றார்.
நீதிபதி “இந்த வழக்கில் மார்ச் 2011ல் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவில், சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது. சிபிஐ புலன் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம். விரைவாக குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்றார்.
லலித் “அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியைப் பாருங்கள். ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இதிலிருந்தே வழக்கை இழுத்தடிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது” என்றார்
நீதிபதி “அந்த ஆணையில் சிபிஐ விசாரணையை நடத்தலாம் என்று உள்ளது. அப்படி ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தபின், எப்ஐஆரை எப்படி ரத்து செய்ய முடியும் என்று சொல்லுங்கள்” என்றார்.
லலித் “நீதிமன்றம் அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்து விட்டதாலேயே, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் எனது உரிமை பறிக்கப்பட்டதாக ஆகாது” என்றார்.
நீதிபதி “சரி அப்படியே வைத்துக் கொள்ளலாம். தற்போது புலன் விசாரணை முடியும் தருவாயை எட்டியுள்ளது. இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியும் என்று சிபிஐ தெரிவிக்கிறது. மேலும் தாமதமானாலும் அவர்கள் கால நீட்டிப்புப் பெற முடியும். இப்போது எப்ஐஆரை ரத்து செய்யலாமா என்ற கேள்வியே எழவில்லை. மேலும் சிபிஐ விசாரணையை தொடரலாம் என்ற இடைக்கால உத்தரவு வேறு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் எப்படி எப்ஐஆரை ரத்து செய்ய முடியும்” என்று கேட்டார்.
லலித் “அந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இந்த மனுவை தள்ளுபடி செய்யாமல் இருப்பதே, எப்ஐஆரை ரத்து செய்யக் கோரும் மனுதாரரது உரிமை பறிக்கப்படவில்லை என்ப நிரூபிக்கிறது. இதற்காகத்தான் சொல்கிறேன்… தயவு செய்து எப்ஐஆரை ஒரு முறை பாருங்கள்” (எத்தனை வாட்டியா சொல்லுவ………..) என்றார்.
இதையடுத்து நீதிபதி சுருக்கெழுத்தரை அழைத்து தீர்ப்பை படிக்கத் தொடங்கினார்.
சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரன் மற்றும் மருத்துவக் கல்லூரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு.லலித் ஆகிய இருவரது வாதமும் கேட்கப்பட்டது. புலன் விசாரணை முழுமையடைந்து வழக்கு குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யும் நிலையை எட்டி விட்டது. சிபிஐ வழக்கறிஞர் வழக்கு தொடர்வதற்கான அனுமதி கேட்கும் நிலையை (Sanction for prosecution) எட்டி விட்டது என்று தெரிவிக்கிறார். இந்த இடத்தில் சிபிஐ வழக்கறிஞர் எழுந்து ஒரு திருத்தம் சொன்னார்…. உடனே நீதிபதி, “நீங்கள் சொன்னதைத்தான் பதிவு செய்திருக்கிறேன்… புதிதாக ஒன்றும் எழுதவில்லை” என்றார்.
தொடர்ந்து நீதிபதி “வழக்கு இப்படி ஒரு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. ஆகையால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு முடிந்ததும் யு.யு.லலித் எழுந்து, “நான் சொன்ன வாதங்கள் எதையுமே தீர்ப்பில் பதிவு செய்யவில்லை” என்றார்
நீதிபதி “முக்கியமான வாதங்களை பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் என்ன சொல்ல முயன்றீர்களோ, அது பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
லலித் “இதற்கு முன் இவ்வழக்கை விசாரித்த நீதிபதியிடம், அனைத்து விபரங்களையும் விரிவாக எடுத்துரைத்தேன். அது எதுவுமே இதில் பதிவு செய்யப்படவில்லை” என்றார்.
நீதிபதி “ஒரு வழக்கின் தீர்ப்பில், எந்தப் பகுதியை பதிவு செய்ய வேண்டும், எந்தப் பகுதியை பதிவு செய்ய வேண்டாம் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது” என்றார்.
லலித் “முக்கியமான வாதங்களை ஏற்கனவே எடுத்துரைத்துள்ளேன். அவை தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை” என்றார்.
நீதிபதி “நீங்கள் எடுத்துரைத்த வாதங்கள் அனைத்தும் ஏற்னவே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே இன்று நீங்கள் சொல்லியவற்றை பதிவு செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறேன். ஏற்கனவே நீங்கள் எடுத்துரைத்த வாதங்கள் அனைத்தையும் இந்தத் தீர்ப்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தீர்ப்புக்கு தேவையான வாதங்களை மட்டும் தீர்ப்பில் குறிப்பிட்டால் போதும்” என்றார்.
லலித் மீண்டும் ஏதோ சொல்ல முயன்ற போது, அடுத்த வழக்கை அழையுங்கள் என்று நீதிமன்ற ஊழியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு சில வினாடிகள் நீதிபதியை விரக்தியோடு பார்த்து விட்டு, யு.யு.லலித், ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு கிளம்பினார். புது தில்லியின் பிரபலமான வழக்கறிஞர். உச்ச நீதிமன்றத்தில் பேர் சொன்னால் தெரியும் வழக்கறிஞர். 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜராக உச்ச நீதிமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நம்மைப் போய் இப்படிப் பேச விடாமல் செய்து விட்டார்களே…………. நாம் ஆஜராகியும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதே என்ற “வேகாத பருப்பின் வேதனை” லலித் முகத்தில் தெரிந்தது. வேதனையோடு வெளியேறினார்
கடந்த முறையைப் போல இந்த முறை யு.யு.லலித்துக்கு சிகப்பு விளக்கு பொருத்தி காரோ, அரசு பாதுகாப்பு அதிகாரியோ வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. .
இப்படிப்பட்ட ஒரு மூத்த வழக்கறிஞருக்கு எதிராக இந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறோமே என்ற மகிழ்ச்சி சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரனிடம் துளியும் காணப்படவில்லை. லலித்துக்கு மேல் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சந்திரசேகரனும் வெளியேறினார்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தோழர்களே…. மருத்துவக் கல்லூரி அனுமதி பெறுவதற்காக, மருத்துவக் கவுன்சில் ஆய்வுக் குழு வருகை தரும் அன்று மட்டும் பக்கத்து கிராமங்களில் இருந்து பொதுமக்களை வரவழைத்து, ஒரு நாள் மட்டும் நோயாளியாக நடிக்கச் சொல்லி அவர்களுக்கு தலா 100 ரூபாய் கொடுத்து, சென்னையில் உள்ள பிரபல மருத்துவர்களை வரச் சொல்லி, ஒரு நாள் மருத்துவப் பேராசிரியராக நடிப்பதற்கு அவர்களுக்கு தலா 20 ஆயிரம் கொடுத்து, எவ்வித உட்கட்டமைப்பு வசதியும் இல்லாத ஒரு மருத்துவக் கல்லூரியில் படித்து வெளிவரும் மருத்துவர்களிடம் நமது தாயாரையோ, தந்தையையோ, நமது பிள்ளைகளையோ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் நமது கதி என்ன ஆவது என்பதை மட்டும் சிந்தியுங்கள்.
ஜெகதரட்சகன் போன்ற பிரபலமான, பலம் பொருந்திய முதலைகள் ஊழல் வழக்கில் சிக்குவதே அரிதிலும் அரிது. அந்த முதலையையும் காப்பாற்ற நீதிமன்றங்கள் முனைந்தால் இதை விட வேதனையான விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா தோழர்களே….
ஜெகதரட்சகனிடம் புழங்கும் பணத்துக்கு ஒரு உதாரணம். ஒரு பிரபலமான தொலைக்காட்சியின் ஒரு ஆண்டு நிறைவின் போது, இந்தத் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள். அது சிறப்பாக பணியாற்றுகிறது என்று பிரபலங்களிடம் ஒரு நிமிடத்திற்கு பேட்டி எடுக்க ஒரு தொலைக்காட்சியின் குழு ஜெகதரட்சகனைப் பார்க்கச் சென்றிருக்கிறது. இவர்கள் அந்தச் செய்தியை எடுப்பது, அந்தத் தொலைக்காட்சிக்குத்தான் பெருமை மற்றும் தேவை. ஆனால் பேட்டியளித்து விட்டு, ஜெகதரட்சகன் அந்த நிருபருக்கு 5 ஆயிரம், கேமராமேனுக்கு 3 ஆயிரம், உதவியாளர்கள் மூவருக்கு தலா 2 ஆயிரம் கொடுத்துள்ளாராம்.
உழைத்துச் சம்பாதித்த எவனாவது இப்படிப் பணத்தை வாரியிறைப்பானா ? இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்குத்தான் நீதிமன்றம் காவலாக இருக்கிறது. என்ன செய்வது ?
இவ்வளவு முயற்சி செய்தும் இந்த வழக்கில் ஜெகதரட்சகன் நினைத்தது வெற்றி பெறவில்லை. அவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவார். அல்லது, இந்த வழக்கில் சாட்சி சொல்லியவர்களுக்கு லஞ்சம் கொடுப்பார். புலனாய்வு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பார். ஆனாலும், டிசம்பர் மாதத்திலேயே ஆழமாக குழி தோண்டிப் புதைக்கப்பட இருந்த ஒரு வழக்கை இன்று வரை உயிரோடு வைத்திருக்க நாமும் ஒரு சிறு கருவியாய் இருந்திருக்கிறோம்.
இதுதான் இன்றைய மகிழ்ச்சிக்குக் காரணம். மகிழ்ச்சி அடைய நமக்கு உரிமை உள்ளதுதானே தோழர்களே… ?