நல்லவேளையாக சுனாமிப் பேரழிவிலிருந்து தமிழகம் தப்பிவிட்டது. ஆனால் சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வானுயர்ந்த அலைகள் இந்தோனேசியாவோடு நின்றுபோனது பெரும் ஏமாற்றமாயிருந்திருக்கும். அந்த அளவு களேபரப்படுத்தின் இவ்விரண்டு தொலைக்காட்சிகளும்.
பொதுவாக தமிழர்களை உசுப்பேற்றுவதை ஒரு கடமையாகவே செய்துவரும் ஓர் இணைய தளம் கூட, தொலைக்காட்சி நிறுவனங்கள் அன்றைய செய்திகளை ஒளிபரப்பியது பீதியை உருவாக்கும் வகையில் அமைந்திருந்ததா என ஒரு கருத்துக்கணிப்பே நடத்தியது.
குறிப்பாக கலைஞர் மற்றும் சன் டிவிக்களின் திகில் கவரேஜ் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கே ஒருவித கலவரத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில் கலைஞர் டிவி தொகுப்பாளினி நிருபரிடம் கேட்கிறார்: வாபஸ் பெறப்பட்டது சரி, இருந்தாலும் மக்களின் பீதி அகன்றிருக்குமென்று நினைக்கிறீர்களா? வீடு திரும்பிவிடுவார்களா? சாலையில் போக்குவ்ரத்து இன்னமும் ஸ்தம்பித்துப்போய்தானே இருக்கிறது?
இனி பயமில்லை என்று அவரவர் வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரம் சன் 2004 காட்சிகளை திரும்பத் திரும்பப் போட்டுக்கொண்டிருந்தது.
எச்சரிக்கை தேவைதான். முன்னெச்செரிக்கையும் கூட. ஆனால் பீதியைக்கிளப்புவதால் உளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி சன்னோ கலைஞரோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கான அளவுகோலான டிஆர்பியே, எவ்விதக் காட்சிகள் ஒளிபரப்பாகின்றன என்பதைத் தீர்மானிக்கிறது என்பது உண்மையே.. டிஆர்பி வரிசைப் போட்டியில் எவ்விதத் தாக்கத்தினை ஏற்படுத்துகிறோம் என்ற பிரக்ஞை எத்தொலைக்காட்சிக்கும் இருப்பதாக்வே தெரியவில்லைதான்.
ஸ்டார், ஜீ போன்ற இந்தி சானல்களின் வழிதானே சன்னோ, கலைஞரோ?. ஜெ மட்டும் என்ன வாழ்கிறது? அப்படி இருக்கையில் சன்னை மட்டும் ஒரு கொடிய விரோதியாக நான் ஏன் சித்தரிக்கமுயலவேண்டும்?.
இன்று ஜெ ஆட்சியின் நெருக்கடியில், சன் குழும மற்றும் கலைஞர் குழுமச் சானல்களெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். அவற்றின் செய்திகளுக்கான டி.ஆர்.பி வீழ்ந்திருக்கலாம். ஆனால் அவை தமிழரின் சிந்தனையினை சீரழிக்கும் பணியினை நிறுத்தப்போவதில்லை.
திராவிடப் பாரம்பரியத்தில் வந்த தாங்கள், இன்றும் அறிவாலயத்தில் அலுவலகம் வைத்திருக்கும் நீங்கள், 24 மணி நேர ஒளிபரப்பில் ஐந்து நிமிடங்கள் கூட திராவிடக் கொள்கைகளைப் பரப்பவென ஒதுக்காமலிருப்பது நியாயமா என்று கேட்டபோது,, 90களில், அலட்சியமாக கலாநிதி மாறன் கூறியது: ”திராவிடக் கொள்கைகளைப் பற்றிக் கல்லூரிகளில் பேச அழையுங்கள். இரண்டு மணி நேரம் பேசுவேன். அது வேறு. இது பிசினஸ்…”
குங்குமம் தன் கட்டுப்பாட்டில் இருந்தபோது பெரிசுகளின் தலையீடு அதிகமாக இருந்ததாலேயே தான் அதிகம் எதையும் சாதிக்கமுடியவில்லை என்றும், டிவியைப் பொறுத்தவரை எவ்விதக் குறுக்கீடும் இருக்காது என்ற உறுதியின்பேரிலேயே தான் அதில் இறங்கியதாகவும் கூறினார் அவர், மேலும், அப்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டதால் நிறுவனம் செழிக்கிறதென்றார். அடுத்து அப்பேட்டியில் அவர் கூறியதுதான் உச்சகட்டம்:
”நாங்கள் இப்போது மலையாளத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறோம். உங்களுக்கு அது சரிப்பட்டு வராது, கேரளத்தில் படித்தவர்கள் அதிகம், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளால் ஆடியன்சைக் கட்டிப்போடும் உங்கள் தந்திரம் அவர்களிடம் செல்லாது என்றனர். ஆனால் இப்போது என்னாயிற்று? வென்று விட்டோமே…….இவர்கள் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வார்கள்?”
ஆம், நாம்தான் முகத்தை எங்காவதுவைத்துக்கொள்ளவேண்டும். நமது ரசனையை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்துவிட்டார்கள்.மாறன் சகோதரர்கள்..
திருவாளர் கருணாநிதி ஒன்றும் யோக்கியரல்ல, நமக்குத் தெரியும். ஆனால் வேடம் போடவாவது அவர் திராவிடம் பேசுவார். ஆனால் மாறன்களுடன் பிரச்சினை வந்து கலைஞர் டிவி வந்தபோது, அதிலும் மருந்துக்கும் கொள்கைப் பிரச்சாரம் இல்லையென்றால், காரணம் சன் டிவி அளவு நாமும் காசு பார்த்துவிடவேண்டுமென்ற எண்ணம்தான்.
புதிய டிவி என்ற அறிவிப்பு வெளியானவுடன், வாரிசு ஒருவரிடம் இது ஏதாவது வித்தியாசமாக இருக்குமா என்று ஒருவர் கேட்டபோது, அவர் உதட்டைப் பிதுக்கியவண்ணம், “நோ சான்ஸ்…எல்லாம் அதே குப்பைதான்..எங்களுக்கு ஆட் ரெவின்யூவேண்டாமா?” என்றார்.
அதாவது வழி காண்பித்துவிட்டார் கலாநிதி. அதிலிருந்து மாறினால் எங்களுக்கு நஷ்டம். அதை எதிர்கொள்ளத்தயாரில்லை என்பதுதான் பொருள்.
மாறன்களின் வெற்றி ஃபார்முலா என்ன? சினிமா, சினிமா, சினிமா. முடிவில்லாமல்.சினிமா. அப்புறம் பெண்களை அழவைக்கும் சீரியல்கள். அச் சீரியல்களில் மந்திரம், பூசை, இறைவனை வழிபட்டால் தீர்வு உண்டு என்பன போன்ற செய்திகள், அப்புறம் அபத்தக் களஞ்சியமான லியோனி டைப் பட்டி மன்றங்கள்….எவ்விதத்திலும் மக்கள் சிந்தித்துவிடக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் இதுதான் அவர்கள் ஃபார்முலா.
இப்படி ஈர்க்கப்படுபவர்களை திமுக சார்பு செய்திகளில் மூழ்கவைப்பது,ம் அவர்களிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம். நல்லவேளையாக அதில் அவர்கள் எப்போதும் வெற்றிபெற்றுவிடுவதில்லை.
திமுக ஆட்சியைப் பயன்படுத்தி தங்கள் கேபிள் நெட்வொர்க்கை வலுப்படுத்திக்கொண்டனர் மாறன்கள்.. மதுரை தினகரன் பிரச்சினைக்குப் பிறகு அரசு கேபிள் உருவானாலும், தாத்தாவை சரிக்கட்டி, அரசை ஓரங்கட்டினார்கள்.
ஜெ ஆட்சியில் அப்படிச் செய்யமுடியாமல் தங்கள் சாம்ராஜ்யத்தின் முக்கியமான தூணை இழந்து அவர்கள் தவிக்கின்றனர். அரசின் கட்டுப்பாட்டில் கேபிள் நெட்வொர்க் வருவது எவ்வளவு நல்லது என்பது வேறு பிரச்சினை. இந்த நேரத்தில் சன் பலவீனப்பட்டிருக்கிறது. அந்த அளவில் மகிழ்ச்சியே.
ஆனாலுங்கூட சன், கலைஞர் குழுமங்கள் மிக மோசமான முன்னுதாரணங்கள். தமிழ்ச் சமூக மதிப்பீடுகள் மலினமாவதற்கு முக்கிய காரணங்கள்.
ஜெயா டிவி பிராமணப் பண்பாட்டினை முன்நிலைப்படுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால் குறைந்த பட்சம் சினிமாவைத் தாண்டி ஏதோ சில விஷயங்களை அவர்கள் தொடுகின்றனர்.
சன்னோ, கலைஞரோ, பிராமணரல்லாதாரின் பண்பாட்டடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனரா என்றாலில்லை. மானாட மயிலாட ரகத்தில் சிறுவர், சிறுமியரை ஆடவிட்டு அவர்களை சிந்தனைகளை வக்கரிக்கவைத்து விளம்பரம் ஈர்க்கிறார்கள்,.
மார்கழி சீசனில் கலைஞரும் கர்நாடக இசை ஜோதியில் கலந்துவிடும். அப்போது கூட அவர்கள் தமிழிசைக்கு ஒன்றும் தனியிடம் அளிப்பதில்லை.
ஜெ, கலைஞர் மற்றும் சன் அனைத்துமே தங்களுக்கு வசதியாகத்தான் செய்திகள் வெளியிடும். நடுநிலையெல்லாம் இல்லை. ஓரளவு சன் மாற்று தரப்பு செய்திகளை ஒளிபரப்புவார்கள். ஆனால் ஸ்பெக்ட்ரத்தின் அனைத்து பரிமாணங்களை மக்களை உணரவைக்காது அது. தயாநிதி பற்றி ஏதாவது வெளியாகுமா என்ன?
ஆனால் செய்தி ஒளிபரப்பில் நடுநிலை என்பதைவிட நமக்கு கவலையளிக்கவேண்டிய விஷயம் இச் சானல்கள் மக்களின் சிந்தனையினை மழுங்கடிக்கின்றன, இளைஞர்கள் மனதில் பாலியல் வெறியையே தூண்டிவிடுகின்றன என்பதும்தான்,.
அந்த அளவில் சன், மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் மிகப் பெரிய சமூக விரோதிகளாக அடையாளங்காணப்பட்டு அவற்றிற்கெதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும்.
கலைஞர் டிவி கூட தள்ளாடுவதாகவே தகவல். ஆனால் மாறன்கள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுவிட்டனர். சீரழிக்கும் பணியைத் துவக்கியது என்பது மட்டுமல்லாமல் வெகுகாலம் அப்பணியை ஈவிரக்கமின்றை நிறைவேற்றுவார்கள் என்பதாலேயே அவர்களை மிகப் பெரும் சமூக விரோதியாக நாம் பார்க்கவேண்டும், வெற்றிபெற முடியாமல் போகலாம். ஆனால் ஏதோ ஒரு மட்டத்தில் நம்மை அருவருப்புடன் பார்க்கின்றனர் என்ற செய்தியாவது அந்நிர்வாகங்களை சென்றடையவேண்டும்.
இந்திய ஊடகங்கள் பற்றி மேலும் கூறவேண்டும். அது இன்னொரு கட்டுரையில்.
கானகன்