கருணாநிதியைப் பற்றி எழுதிச் சலித்து விட்டது. கருணாநிதி இன்று ஒரு நடை பிணம். அவர் எப்போதோ இறந்து விட்டார். ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் 2ஜி பணத்தை எண்ணிக்கொண்டிருந்த அன்றே கருணாநிதி இறந்து விட்டார். தமிழக மீனவர்களை பேராசைக்காரர்கள் என்று அழைத்த அன்றே இறந்துவிட்டார். 2ஜி ஊழலுக்கான முழுப்பொறுப்பு, ஆ.ராசாதான், தன் மகள் கனிமொழி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று ராம் ஜெத்மலானி வாதிட்ட அன்றே இறந்து விட்டார். இப்படிப்பட்ட ஒரு பிணத்தை விமர்சனம் செய்வது சவுக்குக்கு இழுக்கு என்ற காரணத்தாலேயே தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் கருணாநிதியை விமர்சனம் செய்து எழுதுவதை சவுக்கு தவிர்த்து வந்தது.
ஆனால் இன்று கருணாநிதி உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தை படிக்கும் போது, ரத்தம் கொதிக்கிறது. தமிழக வீட்டு வசதி வாரியத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில், அதிமுக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக, அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார். அக்கடிதம் அப்படியே தரப்படுகிறது.
“2011ஆம் ஆண்டு மே திங்களில் ஆட்சிக்கு வந்த பிறகும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் அ.தி.மு.க.வினர் வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்ற குற்றச்சாட்டு, தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடுகள் அல்லது மனைகள் தி.மு. கவைச் சேர்ந்தவர்களுக்கும், தி.மு.க தலைமைக் கழகத்திலே பணியாற்றுபவர்களுக்கும், முதல் அமைச்சரிடம் பாதுகாவலர்களாகப் பணியாற்றியவர்களில் ஒரு சிலருக்கும் முறைகேடாக வழங்கப்பட்டு விட்டன என்பதாகும்.
அந்தக் குற்றச்சாட்டுக்கு பல முறை ஆதாரப்பூர்வமாக முறைப்படி இந்த வீடுகள் அல்லது மனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், தவறு எதுவும் நடைபெறவில்லை என்றும் சட்டப் பேரவையிலும், வெளியிலும் சுட்டிக்காட்டியதோடு, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த யார் யாருக்கு அந்த வீடுகள் அல்லது மனைகள் வழங்கப்பட்டன, எந்தெந்த அதிகாரிகளுக்கும், ஏன் அ.தி.மு.க. தொழிற்சங்க அமைப்பு ஒன்றுக்கேகூட வழங்கப்பட்டன என்பதையெல்லாம் விளக்கமாக எழுதிய பிறகும், பேரவையில் அந்தத் துறையின் அமைச்சருக்கு குற்றச்சாட்டு கூறுவதைத் தவிர வேறு எதுவும் பேசுவதற்கு வக்கற்ற நிலையில், அவர்களது “அம்மா”வை அகமகிழச் செய்வதற்காக சொன்ன குற்றச்சாட்டினையே மீண்டும் கூறி அது ஏடுகளில் வெளிவந்துள்ளது.
அண்ணா அறிவாலய அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு 5 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான நிலம் 1.48 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு. வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான நிலம், மற்றவர்களுக்கு என்ன விலைக்கு வழங்கப் பட்டதோ அதே விலைக்குத்தான் அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றுவோருக்கும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான அந்த மனைகள் எவ்வளவு ரூபாய்க்கு விற்கலாம் என்று அரசின் நிதித் துறைச் செயலாளரும் இடம் பெற்றுள்ள வாரியத்தினால் முடிவெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்ட பிறகுதான் அந்த வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, அறிவாலயத்திலே பணியாற்றுவோர் என்பதால் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் குறைத்து மதிப்பிட்டு இவர்களுக்காக வழங்கப்படவில்லை. முன்மாதிரிகளின் அடிப்படையில், முறைப்படி, விதிகளுக்குட்பட்டே வழங்கப்பட்டது. அறிவாலயத்திலே பணியாற்றுவோர் என்பதற்காக சிறப்புச் சலுகை எதுவும் காட்டப்படவில்லை.
அதுமாத்திரமல்ல; நான் முதல் அமைச்சராக இருந்த போது என்னிடம் பாதுகாவலர்களாக பணியாற்றிய சிலருக்கு வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகள் தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் தரப்பட்டதில் என்ன தவறு?
அவர்களுக்கு தரப்படக் கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா? அல்லது அந்த மனைகளுக்கு உரிய விலை பெறாமல் வழங்கப்பட்டுவிட்டதா? அல்லது மற்றவர்களைவிட விலை குறைத்து தரப்பட்டுவிட்டதா? அல்லது அ.தி.மு.க. ஆட்சியிலே இவர்களைப் போல பணியாற்றியவர்களுக்கு இதுபோன்ற வீடுகள் அல்லது மனைகள் வழங்கப்படவே இல்லையா ?
ஏன், அரசு செயலாளர்களாக இருந்தவர்களுக்கு, முதலமைச்சர் இல்லத்திலே பணியாற்றியவர்களுக்கு, அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றியவர்களுக்கு, அவர்களது உறவினர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் வழங்கப்பட்டதே கிடையாதா? அவர்களுக்கெல்லாம் வீட்டு மனைகளை வழங்கிய போதே, மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதைவிட அதிகத் தொகை நிர்ணயம் செய்தா வழங்கப்பட்டது? முதலமைச்சரிடம் பாதுகாவலர்களாக பணியாற்றியவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் வழங்கப்பட்டது குறித்து உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு ஒன்று தொடுக்கப் பட்டு, நீதிபதி அவர்களே அந்த வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டார்.
எனினும் மீண்டும் மீண்டும் அ.தி.மு.க. அரசு அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு விருப்புரிமையின் கீழ் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீடுகள், மனைகளில் 15 சதவிகிதம், தி.மு.க ஆட்சிக் காலத்திலே மட்டுமல்ல, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் 10 சதவிகிதமாக இருந்த இந்த ஒதுக்கீட்டு அளவு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் 15 சதவிகிதமாக ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது அதிகப்படுத்தினார். இன்னும் கூற வேண்டுமேயானால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த விருப்புரிமை முறை பற்றி சிலர் குறை கூறியவுடன், அந்த அரசு விருப்புரிமையே இனி ரத்து செய்யப்படும் என்று திமுக ஆட்சியில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில், ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போதுதான், தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணன், ஐ.ஏ.எஸ்.க்கு 1993ஆம் ஆண்டு 4,115 சதுர அடி, அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மகன் கே.எஸ். கார்த்தீசனுக்கு பெசண்ட் நகர் பகுதியில் 1995ஆம் ஆண்டு 4,535 சதுர அடி, முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமீலாவுக்கு கொட்டி வாக்கத்தில் 1993ஆம் ஆண்டு 2,559 சதுர அடி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதி தம்பிதுரைக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம், அ.தி.மு.க. வின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம், 2004ஆம் ஆண்டு தேவாரம், ஐ.பி.எஸ்., கே.விஜயகுமார், ஐ.பி.எஸ்., ஆர். நடராஜ், ஐ.பி.எஸ்., உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சோழிங்கநல்லூரில் தலா 4,800 சதுர அடி, முதல் அமைச்சரிடம் செயலாளராக இருந்த டி. நடராஜன் ஐ.ஏ.எஸ்.க்கு 1995ஆம் ஆண்டு திருவான்மியூரில் 6,784 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. இவ்வாறு கொடுத்ததை தவறு என்று நான் கூறவில்லை.
ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்ந்து வழக்கமாக வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீட்டு மனைகள் வழங்கப்பட்டு வருவதைப் போலத் தான், தி.மு.க ஆட்சியிலும் வழங்கப்பட்டன. இது வழக்கத்திற்கு மாறானதோ, விதிமுறைகளை மீறியதோ எதுவும் இல்லை. அதை எடுத்து வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப இந்த ஆட்சியினர் குற்றம் சாட்டுவதால், அ.தி.மு.க. ஆட்சியில் இத்தகைய வீட்டு மனைகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற விவரங்களை நான் தெரிவிக்க வேண்டியதாயிற்று.
இவ்வாறு வீடு பெற்ற வேறு சில பெயர்களையும் சொல்ல வேண்டுமேயானால், சி.ஆர். சரஸ்வதி, பி. காளிமுத்து, ஐ.பி.எஸ்., மாலிக் பெரோஸ்கான் ஐ.ஏ.எஸ்., சி.ஆர். ராஜேஷ், தங்கத் தமிழ்ச் செல்வன், பி.ஏ. ராமையா ஐ.ஏ.எஸ்., அனுராதா காதி ராஜீவன் ஐ.ஏ.எஸ்., எஸ். கபிலன் ஐ.ஏ.எஸ்., எச்.பி.என். ஷெட்டி ஐ.ஏ.எஸ். அவர்களின் மகன் டாக்டர் தீபக், கே. செல்வராஜ், மார்கபந்து, குருவிக்கரம்பை சண்முகம், கோவைத் தம்பி, ராகவன் ஐ.ஏ.எஸ்., ராமதாஸ் ஐ.ஏ.எஸ்., இன்றைய மேயர் சைதை துரைசாமி, வரதராஜூலு ஐ.ஏ.எஸ்., அவர்களின் மகன் சியாம் சுந்தர், சீனிவாசன் ஐ.ஏ.எஸ்., ஏ.ஆர். வெங்கடேசன், எல். சுதாகர் ரெட்டி, ஆதி ராஜாராம், இக்பால் முகமது ஐ.பி.எஸ்., லால் ரெய்னா சைலோ ஐ.ஏ.எஸ்., சரஸ்வதி எம்.எல்.ஏ., பால்கங்காவின் மனைவி சந்திரிகா, திருமதி மல்லிகா எம்.எல்.ஏ., ஆறுமுகம் எம்.எல்.ஏ., மோகன் ராவ், டி.என். ரெங்கநாதன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். ஓட்டுநர் பூபதி, ஏ.பி. முகமது அலி ஐ.பி.எஸ்., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. மோகன் துணைவியார் பி. பூங்காவனம், எஸ். ஆண்டித் தேவர் மனைவி பிலோமினா, வி.எஸ். பஞ்சவர்ணம், ஆர். கண்ணன் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.பி. பாஸ்கரனின் மனைவி பி. உமா, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ். அன்பழகனின் துணைவியார் வி. தமிழரசி, முதல்வரின் செயலாளர் எஸ்.எஸ். ஜவகர் பாபு ஐ.ஏ.எஸ்., வி. ராமு ஐ.ஏ.எஸ்., எஸ். போஸ், ஐ.ஆர்.எஸ்., இன்னும் பட்டியல் நீளமாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மனைகளைப் பெற்றவர்கள் என்று பார்த்தால் பி. செந்தில், கீதா, கே. சுந்தர்ராஜ், பி.வினோத் குமார், டி. பாலமுருகன், டி. பாலசுப்ரமணியன், டி. சக்திவேல், எம். லெட்சுமிகாந்தன், பி. மாணிக்கவாசகம், எஸ். சுந்தரேசன் என்று பட்டியல் போய்க் கொண்டே இருக்கின்றது. ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்சில் பணியாற்றியவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் வீட்டு மனைகள் இலவசமாகவே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது.
அதுமாத்திரமல்ல, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பாதுகாப்பு அதிகாரிகளாகப் பணியாற்றிய ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், திருமலைச்சாமி, பெருமாள்சாமி, வீரபெருமாள் போன்றவர்களுக்கும், இன்னும் அவர்கள் வீட்டிலேயே இருந்த கிருஷ்ணமராஜ், அசோகன், பாலாஜி, வடிவேல், சுப்பிரமணியம் போன்ற காவலர்களுக்கு அரசின் விருப்புரிமை அடிப்படையில்தான் இந்த வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் இத்தனை வீட்டு மனைகள் வாரி வழங்கி முறைகேடு நடைபெற்றது என்று பேரவையில் அந்தத் துறையில் அமைச்சர் வெளியிடாதது ஏன்? எதிர்க்கட்சியினர் அதைப்பற்றி விளக்கமளிக்க அனுமதி தர மறுப்பதேன்? ஆனால் தற்போது அதை பெரிய குற்றமாகக் கூறி அந்த மனைகளைப் பெற்றவர்களின் இல்லங்களுக்குச் சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிடுவதும், அதனை சில ஏடுகள் வேண்டுமென்றே புழுதிவாரித் தூற்றும் நோக்கத்தோடு பெரிய அளவிலே விளம்பரம் செய்வதும் நியாயமா என்பது தான் நம்முடைய கேள்வி.
வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டிலே மாத்திரமல்ல; கோவையிலே குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சில வீடுகளில் ஏதோ குறைபாடு என்றதும், முறைப்படி திமுக ஆட்சியிலேயே அதற்கான நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு, அந்தத் துறையின் அமைச்சரே நேரில் சென்று அண்ணா பல்கலைக் திமுகத்தின் தொழில் நுட்பப் பேராசிரியர்களை அணுகி அவர்களின் கருத்துக்களையும் பெற்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டப்பேரவையிலேயே இந்தப் பிரச்சினையை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. வினர் எழுப்பியபோது, அந்தத் துறையின் அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார். ஆனால் அதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு குடிசையிலும் கொள்ளை, கோட்டையிலும் கொள்ளை என்றெல்லாம் அடுக்கு மொழியில் அவதூறு பேசுவதும், அதற்குப் பதிலளிக்க திமுகவினர் எழுந்தால் அனுமதி மறுப்பதும் கூண்டோடு வெளியேற்றுவதும் என்ன நாகரிகமோ?
கோட்டையிலே அமர்ந்து கொண்டு இன்று கொள்ளை அடிப்பது யார்? கொடை நாட்டை கொள்ளை அடித்தவர்கள் யார்? சிறுதாவூரை கொள்ளை அடித்தவர்கள் யார்? 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து விட்டு, பெங்களூரு நீதி மன்றத்திலே வாய்தா கேட்டு வழக்கு விசாரணையை பல்லாண்டு காலமாக இழுத்தடித்துக் கொண்டிருப்பவர் யார்? சுற்றியிருந்த வர்கள் மீதெல்லாம் அன்றாடம் கொள்ளையடித்த புராணங்கள் புகார்களாக வந்து கொண்டிருக்கிறதே? இவையெல்லாம் ஊருக்குத் தெரியாது என்ற நோக்கில் எப்படியோ வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டோம் என்ற இறுமாப்போடு, அவையின் முன்னவரே எதற்கெடுத்தாலும் அவையில் அமைதியை உண்டாக்குவதற்குப் பதிலாக அவரே 2 ஜி, அலைக்கற்றை ஒதுக்கீடு என்றெல்லாம் வாய் நீளம் காட்டுவதுதான் அவையை நடத்துகின்ற இலட்சணமா? அலைக் கற்றை வழக்கு நடந்து கொண்டிருக்கிறதே தவிர தீர்ப்பு வழங்கப்பட்டு விடவில்லையே? அலைக்கற்றை அனுமதி பெற்றவர்களிடம் கலைஞர் தொலைக்காட்சி கடன் பெற்று – அந்தக் கடனையும் வங்கிகள் மூலமாக முறைப்படி காசோலையாகப் பெற்று, பிறகு வட்டியுடன் காசோலையாகவே திரும்ப அந்தக் கடனையும் அடைத்ததற்குப் பிறகும், அந்தத் தொலைக் காட்சி நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளில் எந்தவிதமான தொடர்பும் இல்லாத, அதே நேரத்தில் அதிலே ஒரு பங்குதாரராக மட்டும் இருந்த நிலையில் அதை பெரிய தவறு இழைத்து விட்டதைப் போல – “பெங்களூரு” வழக்கைப் போல பேரவையிலே சொல்லி வருகிறார் பன்னீர்ச்செல்வம்! அலைக்கற்றை பற்றிய வழக்கு இந்திய உச்ச நீதி மன்றம் உள்ளிட்ட நீதி மன்றங்களிலே நடந்து கொண்டிருக்கும் போது பேரவையில் பேசக் கூடாது என்ற மரபினைக் கூட, அவையின் முன்னவரே மதிக்க வில்லை என்றால், பாவம், அவர் அப்படியெல்லாம் அடாவடியாகச் செயல்பட்டால்தான் முதல்வரின் நம்பிக்கையைப் பெற முடியும், தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியும் என்ற நிலைதானே அங்கே உள்ளது.”
சவுக்கு வாசகர்கள் பலர் சென்னையில் உள்ளீர்கள். சென்னை மாநகரில் இன்றும் வீடில்லாமல் சாலையிலும், கூவம் நதியோரமாகவும் பல ஆண்டுகளாக குடியிருக்கும் ஆயிரக்கணக்கானோரை பார்த்திருக்க முடியும். தமிழக மக்கள் உரிமைக் கழக அலுவலகம் இருக்கும் பாரிமுனையின் சந்துகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் வசிப்பவர்கள் இருக்கிறார்கள். நமது அலுவலகத்துக்கு கீழே குடியிருக்கும் ஒரு பெண்மணி, சவுக்கிடம், “நான் நாப்பது வருசமா இங்கதான்யா இருக்கேன்… இப்போதான் ஐகோர்டுக்கு காம்பவுன்ட் கட்டிட்டாங்க. முன்னாடியெல்லாம் மழை பெஞ்சா நாங்க புள்ளக்குட்டியோட ஐகோர்டுக்குள்ளதான் ஒண்டிக்குவோம்” என்று பழைய வரலாறை சொல்லியிருக்கிறார். அவரது மகள், மகன், இங்கேதான் பிறந்தார்கள். அவர்களுக்கு திருமணமும் இங்கேதான் நடந்திருக்கிறது.
தினந்தோறும், பாரிமுனை வீதிகளின் நடைபாதைகளில், சீசனுக்கேற்றார்ப் போல, பொம்மைகள், கர்சீப்புகள், அகல் விளக்குகள் விற்பது, கூலி வேலைகள் செய்வது என்று அவர்கள் வாழ்வு இன்றும் அன்றாடம் காய்ச்சிகளாகத்தான் இருக்கிறது. அந்த அம்மையாரிடம், தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்….. பெண் பிள்ளைகளை வைத்துள்ளீர்களே… கழிப்பிட வசதி உள்ளதா என்று கேட்டதற்கு, இரவு நேரங்களின் அங்கேயே தங்கி அந்தக் கட்டிடத்தைப் பார்த்துக் கொள்வதால், அங்கே இருக்கும் அலுவலக கட்டிடங்களில் தரைத்தளத்தில் உள்ள கழிப்பிடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளார்கள் என்று கூறினார்.
ஐந்து முறை முதலமைச்சர் என்று வாய் கிழிய பீற்றிக்கொள்ளும் கருணாநிதி 40 ஆண்டுகளாக இவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படாமல் இருப்பதற்காக வெட்கிச் சாக வேண்டும். ஆனால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, இரண்டு வீடுகளையும் முதல்வரின் இல்லமாக அறிவித்து, மனைவி, துணைவி என்று வெளிப்படையாக அறிவிப்பு செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் கருணாநிதியைப் போன்ற நபர்களிடம் வெட்கத்தையும், சுயமரியாதையையும் எதிர்ப்பார்க்க முடியுமா ?
இதில் ஒரு வேதனை என்ன தெரியுமா ? சவுக்கு மேலே குறிப்பிட்ட அந்தப் பெண்மணி, தீவிர திமுக அனுதாபி. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டதற்கு, சாகும் வரை சூரியனுக்குத்தான் வாக்களிப்பேன் என்றார். இதுதான் கருணாநிதியின் பலம். தமிழகத்தின் சாபக்கேடு.
அறிவாலயத்தில் உள்ளவர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படவில்லை. அனைவருக்கும் கொடுக்கப்டும் விலைக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறாரே கருணாநிதி … ….. அறிவாலயத்தில் வேலைபார்ப்பவருக்கு சமூக சேவகர் என்ற போர்வையின் கீழ் அரசு நிலத்தை ஒதுக்கியது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் ? அறிவாலயத்தில் வேலைபார்க்கிறார் என்பதற்காக, கருணாநிதி அவரது கோபாலபுரம் வீட்டையோ, தர்மாம்பாளின் சிஐடி காலனி வீட்டையோ கொடுத்திருந்தால் நமக்கு என்ன மனக்குறை இருக்கப்போகிறது ?
“நான் முதல் அமைச்சராக இருந்த போது என்னிடம் பாதுகாவலர்களாக பணியாற்றிய சிலருக்கு வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகள் தரப்பட்டுள்ளன. அவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் தரப்பட்டதில் என்ன தவறு ? “ என்று கேட்கிறார் கருணாநிதி. ஐந்து வருடங்களாக கருணாநிதியின் வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்றார்கள் ட்ராலி பாய்ஸ் என்பதைத் தவிர அவர்கள் வேறு என்ன சிறப்புப் பணியைச் செய்திருக்கிறார்கள். சவுக்கு ஏற்கனவே பல முறை அம்பலப்படுத்தியது போல, கையில் பணமில்லாமல் ட்ராலி பாய்ஸ் மூவருக்கும் இடம் ஒதுக்குகிறார் கருணாநிதி. அவர்கள் அதை இன்னொருவருக்கு விற்பனை செய்து, தலா 20 லட்சம் ரூபாய் லாபம் அடைகிறார்கள். கருணாநிதியின் வண்டியைத் தள்ளிச் சென்றதற்காக இப்படி மக்கள் சொத்தை விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பதற்கு ட்ராலி பாய்சுக்கு என்ன உரிமை இருக்கிறது ?
அவர்களுக்கு வீட்டு வசதி வாரிய மனைகள் தரப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறாரென்றால், கருணாநிதிக்கு என்ன துணிச்சல் இருக்க முடியும்…. பொதுமக்களை மடையர்கள் என்று நினைத்தாலோ ஒழிய, இப்படி ஒரு அறிக்கையை விட வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் வேலையே ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்லிக் கொண்டு, தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவதுதான். அதிமுக ஆட்சியிலும், வீட்டு வசதி வாரிய மனைகளும் வீடுகளும், சொம்படிக்கும் அதிகாரிகளுக்கும், தொண்டர் அடிப்பொடிகளுக்கும், ஜால்ரா வித்வான்களுக்கும், அதிமுக அடிமைகளுக்கும் வழங்கப்பட்டது என்பது உண்மைதான். திமுக அரசில் சமூக சேவகர் என்ற போர்வையில் முறைகேடு நடந்தால், அதிமுக அரசில், வீரப்பனை தேடுகிறோம் என்ற போர்வையில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களுக்கும், மலைவாழ் மக்களை துன்புறுத்தியவர்களுக்கும், நல்ல பதவிகளில் ஊழல் செய்ததால் பனிஷ்மென்ட் போஸ்டிங்காக சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டவர்களுக்கும், அதிகாரி வீட்டில் சப்பாத்தி சுட்டுக் கொடுத்த காவலருக்கும், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம், ஒரு படி பதவி உயர்வு, மற்றும் இரண்டு க்ரவுண்டு மனை என்று வழங்கியவர் ஜெயலலிதா. தொண்டர் அடிப்பொடிகளுக்காக மக்கள் சொத்துக்களை அள்ளி இறைப்பதில், கருணாநிதிக்கு ஜெயலலிதா துளியும் சளைத்தவர் அல்ல.
ஆனால் 2006 முதல் இருந்த திமுக ஆட்சியில் நடந்ததைப் போல, வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடுகள் எப்போதுமே நடந்தது இல்லை என்பதுதான் உண்மை.
2008ல் சவுக்கு அரசுப் பணியில் இருந்தபோதுதான், ட்ராலி பாய்ஸுக்கு வீட்டு மனை ஒதுக்கப்பட்ட தகவல் கிடைத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அது தொடர்பான தகவல்களையும் எடுக்க முடியவில்லை. கடும் முயற்சிக்குப் பிறகு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனை எண்ணைக் கண்டுபிடித்து, அந்த இடத்துக்கு நேரில் சென்று, ஒரு நாள் முழுவதும் அலைந்து அந்த மனையை கண்டுபிடித்து, முதன் முதலாக மக்கள் தொலைக்காட்சியில் ட்ராலி பாய்ஸுக்கு வீட்டு மனை ஒதுக்கிய விவகாரத்தை செய்தியாக வெளிவரச் செய்தது சவுக்குதான்.
அதன் பிறகு, அரசுப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னால் வேறு என்ன வேலை ? முழு நேரமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வீட்டு வசதி வாரிய வீடுகளை அம்பலத்திற்கு கொண்டு வருவதுதான் முழு நேர வேலையாகப் போய் விட்டது. அதற்குப் பிறகு கிடைத்த தகவல்கள், ட்ராலி பாய்ஸ் மட்டுமில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், உயர் உயர் அதிகாரிகள், கருணாநிதியின் தொண்டர் அடிப்பொடிகள் என, ஒட்டு மொத்த விட்டு வசதி வாரியமும் சூறையாடப்பட்டிருந்த விபரம் தெரிய வந்தது.
கோபாலகிருஷ்ணன், செல்வராஜ் போன்ற பல்வேறு சமூக ஆர்வலர்களோடு சேர்ந்து, கடுமையாக உழைத்ததன் பலனாகத்தான், ஊடகங்களில் பெரிய அளவில் செய்திகளை வரச்செய்து கருணாநிதியே வேறு வழியில்லாமல், விருப்புரிமைக் கோட்டா என்ற பிரிவையே ரத்து செய்தார்.
மொழிப்போர் தியாகிகள், உண்மையான சமூக சேவை செய்பவர்கள், போன்றவர்களுக்கு ஒதுக்குவதை விட, வீடில்லாமல் சாலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு வீடு வழங்குவதற்கே அரசு நிலங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், நக்கீரன் காமராஜின் மனைவி, சிஐடி காலனி தர்மாம்பாளின் வீட்டில் வேலை செய்யும் டேனியல், ஜாபர் சேட்டின் மனைவி போன்றோருக்கு சமூக சேவகர் என்ற பெயரில் ஒதுக்கீடு செய்ததைப் போன்ற அயோக்கியத்தனத்தைச் செய்து விட்டு அதை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறார் கருணாநிதி.
ஜெயலலிதா பெங்களுரு வழக்கை இழுத்தடித்து வாய்தா மேல் வாய்தா வாங்குகிறார் என்கிறார் கருணாநிதி. ஜெயலலிதா வழக்கை இழுத்தடிப்பது உண்மைதான். குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, அந்த வழக்கிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்வதற்கு வாய்தா மேல் வாய்தா வாங்குவது இயல்பே. ஜெயலலிதா பெங்களுரு நீதிமன்றத்துக்கு சென்று, நான் குற்றவாளி… ப்ளீஸ் அரெஸ்ட் மீ……. என்று சொல்வார் என்று எதிர்ப்பார்க்க முடியாது.
அதே நேரத்தில், இந்தியாவின் மிக மிகச் சிறந்த நீதியரசர்களின் ஒருவரான, நீதிமான் சர்க்காரியா, விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று வியந்து போய் சொல்லியிருக்கிறார் என்றால், அது கருணாநிதியின் திறமையையே காட்டுகிறது. மிக மிக சிறந்த நீதிமான் என்பதாலேயே, கருணாநிதி மீது சுமத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் அத்தனையையும், ஆதாரங்கள் இல்லை என்று தள்ளுபடி செய்து, இரண்டே இரண்டு குற்றச்சாட்டுகளில் மட்டும் ஆதாரம் உள்ளது என்றும், கருணாநிதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார் சர்க்காரியா.
“நேருவின் மகளே வருக….. நிலையான ஆட்சி தருக…..” என்று இந்திராவின் காலில் விழுந்தது யார் ? நெருக்கடி நிலையில், தன் மகனின் உயிரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிட்டிபாபுவின் கல்லறையில் ஈரம் காய்வதற்குள் இந்திராவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைந்தது எதனால் ? சர்க்காரியா பரிந்துரைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தானே… ….. நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து விடுதலை வாங்கியிருந்தால், கருணாநிதி ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று அழைக்கலாம்…. காலில் விழுந்து வழக்கிலிருந்து தப்பித்தவர் பேசலாமா ?
ஜெயலலிதா 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தார் என்று பேசும் கருணாநிதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த ஆவணங்களின் படி, இரண்டு மனைவிளோடும் சேர்த்து 41 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சினிமாவுக்கு கதை வசனம் எழுதியே இன்று 41 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறாரா கருணாநிதி ? இவருக்கு எப்படி 41 கோடி ரூபாய் வந்ததோ, அதே வழியில்தான் ஜெயலலிதாவுக்கும் 66 கோடி ரூபாய் வந்தது. ஜெயலலிதாவாவது வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார்…. கருணாநிதி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.
கருணாநிதியின் இது போன்ற அறிக்கைகளை படிக்கையில், கடுமையான கோபம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், வாயில் கம்பளிப்பூச்சி விழுந்த அருவருப்பு ஏற்படுகிறது, திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து வெளியே வரமுடியாமல் தமிழகம் தவிப்பதைக் கண்டு ஆற்றாமை ஏற்படுகிறது. திமுகவின் வளர்ச்சியைப் பார்த்து, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், தமிழகத்தில் விஷக்கிருமிகள் புகுந்து விட்டன என்று சொன்னது கருணாநிதியின் இன்றைய அறிக்கையைப் பார்க்கையில் உண்மயோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
வாயில் விழுந்த கம்பளி பூச்சிய எடுத்து உள்ளே விட்டுக்க ?
ஜெயலலிதா மற்றும் அவ எடுப்பு ,, தொடுப்புகள பற்றி பேசும்போது மட்டும் உனக்கு வாயில் அல்வா விழும் ! இல்ல ?
வாயில் விழுந்த கம்பளி பூச்சிய எடுத்து உள்ளே விட்டுக்க ?
ஜெயலலிதா மற்றும் அவ எடுப்பு ,, தொடுப்புகள பற்றி பேசும்போது மட்டும் உனக்கு வாயில் அல்வா விழும் ! இல்ல ?