ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து நீதிமன்றத்தையே கடிக்க ஆரம்பித்து விட்டார்களே என்று ஆச்சர்யப்படாதீர்கள். இது நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்.
இன்னும் எவ்வளவுதான் வேண்டும் என்ற கட்டுரையில் நெற்குன்றத்தில் உயர் உயர் அதிகாரிகளுக்கான வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்பட்டு அத்திட்டத்தில் உள்ள முறைகேடுகளையும், வீடு இருப்பவர்களுக்கு மேலும் சொத்து சேர்ப்பதற்காகவே இப்படி ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ள விவரத்தையும் விரிவாக எழுதியிருந்தது.
சவுக்கு பல முறை எழுதியிருந்தது போல, அரசியல்வாதிகளை விட, அதிகாரிகள்தான் அதிகாரம் படைத்தவர்கள், சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள்தான் எல்லா அரசுகளையும் இயக்குகிறார்கள் என்ற கூற்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையை ஒட்டி, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்ட்டிருந்தது. அந்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு, அதன்படி, வீட்டு வசதித்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் வீட்டு வசதி வாரிய செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இரு அதிகாரிகளும் தாக்கல் செய்துள்ள மனுவின் சாரம் … ….
1) நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டம் என்பது உயர் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சிறப்புத் திட்டம்.
2) அரசு விருப்புரிமைக் கோட்டா (Government Discretionary Quota) என்ற பிரிவின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தில் ஒதுக்கீடு பெறத் தகுதி படைத்தவர்கள் இல்லை என்று விதிமுறை உள்ளது.
3) சென்னை மாநகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
4) தனியார் நிறுவனங்களில் கொடுக்கும் ஊதியத்தை ஒப்பிடுகையில் அரசுத் துறையில் போதுமான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் பலர் தனியார்த்துறைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்ப்பதற்காகவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியர்கள் நிலத்தை தேர்வு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.
5) வாடகைக் குடியிருப்பில் இருக்கும் அரசு ஊழியர்கள் இட மாற்றம் செய்யப்படுவதால் அவர்கள் அரசு குடியிருப்பை மூன்று மாதத்தில் காலி செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கவே இத்திட்டம். நிரந்தரமான வீடு என்ற நிலை உருவானால், அவர்களின் வேலைத்திறன் மேம்படும்.
6) 1979ம் ஆண்டு அரசாணையில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுகளை பெறுபவர்களுக்கான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 2001ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில் இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
7) 28.10.2010 அன்று அகில இந்தியப்பணி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இந்த திட்டத்தைப் பற்றிக் கூறி, அவர்களை ஒரு லட்ச ரூபாய் 30.11.2010க்குள் கட்டுமாறு கோரியது. இந்நடவடிக்கைக்குக் காரணம் இத்திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள் தேவைப்படுகின்றன என்பதை அளவிடுவதற்காகவே… … அதனால் இத்திட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான தேவை அப்போது ஏற்படவில்லை. அதிகாரிகளுக்கான தேவை போதுமான அளவில் இல்லாமல் இருந்திருந்தால், இத்திட்டம் கைவிடப்பட்டிருக்கும்.
8) அதன் பிறகு விரிவான கலந்தாசனைகளுக்குப் பிறகே, 28.02.2011 அன்று இத்திட்டத்துக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளில் விற்கப்படாமல் உள்ள வீடுகள் 2001ம் ஆண்டு அரசாணையின் படி விற்கப்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே, மாநில அரசு ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கேட்டு, விளம்பரம் வெளியிடப்பட்டது.
9) ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு சதுர அடி ரூபாய் 2442/-க்கும் சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சதுர அடி ரூபாய் 2679/-க்கும் பாரபட்சமாக வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் உயர் அதிகாரிகளுக்கு கட்டப்படும் வீடுகள் 19 மாடிகளில் 608 வீடுகள் கட்டப்படுகின்றன. சாதாரண அரசு ஊழியர்களுக்கு கட்டப்படும் வீடுகள் 12 மாடிகளில் 288 வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் கட்டுமானப்பணிக்கான செலவை பகிர்கையில் உயர் அதிகாரிகளுக்கான வீடுகளில் ஒரு சதுர அடியின் விலை கூடுதலாக உள்ளது.
10) நெற்குன்றம் பகுதியில் சந்தையில் விற்கப்படும் வீடுகள் ஒரு சதுர அடி 5000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன என்பதற்கு காரணம் இருக்கிறது. பெரும்பாலான வீடுகள் மூன்று மாடி வீடுகளாக இருப்பதால், கட்டுமானச் செலவுகள் கூடுதலாக இருக்கும். ஆனால் நெற்குன்றம் திட்டம் 20 மாடிகளில் கட்டப்படுவதால், கட்டுமானச் செலவு குறையும். மேலும், வீட்டு வசதி வாரியம் லாப நோக்கமில்லாமல் செயல்படுகிறது. ஆனால் தனியார் கட்டுமானம் செய்பவர்கள் கூடுதல் லாபம் வைப்பார்கள்.
11) இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 462 அகில இந்தியப்பணி அதிகாரிகளுக்கும், 120 க்ரூப் 1 பிரிவு அதிகாரிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 288 குறைந்த வருவாய் அரசு ஊழியர்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரை 100 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய காரணங்களால் இந்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது அரசின் பதில் மனுவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். இத்திட்டம் அகில இந்தியப்பணி அதிகாரிகள் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கானது என்பதே தவறு. மிக மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள (1000த்துக்கும் குறைவு) அகில இந்தியப் பணி அரசு அதிகாரிகளுக்கு 452 வீடுகளாம். சென்னை நகரில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குறைந்த ஊதியம் வாங்கும் இதர அரசு ஊழியர்களுக்கு 288 வீடுகளாம். இது யாருக்கான திட்டம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
2) அரசு விருப்புரிமைக் கோட்டா (Government Discretionary Quota) என்ற பிரிவின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தில் ஒதுக்கீடு பெறத் தகுதி படைத்தவர்கள் இல்லை என்று விதிமுறை உள்ளது.
அரசு விருப்புரிமைக் கோட்டாவின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை என்ற குறைந்தபட்ச விதிகளைக் கூட இந்த அதிகாரிகள் பின்பற்றவில்லை என்ற விவரத்தை இன்னும் எவ்வளவுதான் வேண்டும் என்ற கட்டுரையில் சவுக்கு விரிவாகவே எடுத்துரைத்திருந்தது.
இது போல விருப்புரிமைக் கோட்டாவில் வீட்டு மனை பெற்றுக் கொண்டு நெற்குன்றம் திட்டத்திலும் மோசடியாக ஒதுக்கீடு பெற்ற அதிகாரிகளின் பட்டியலை எடுத்து சவுக்கு வீட்டு வசதித்துறைக்கு ஒரு புகார் மனு அனுப்பிய பிறகு, தற்போது, இவ்வாறு வீட்டு மனை பெற்றவர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் உள்ள ஒரு விதியைக் கூட பின்பற்றாத இந்த அதிகாரிகள் ஊருக்கு உபதேசம் செய்வது வேடிக்கை.
3) சென்னை மாநகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது
அலுவலக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், காவலர்கள், என்று சென்னை மாநகரில் லட்சக்கணக்கான ஊழியர்கள் சொந்த வீடு இல்லாமலும், அரசுக் குடியிருப்பில் வீடு கிடைக்காமலும், வாடகை வீடுகளில் இன்றும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது. செல்வாக்கு மிக்க ஊழியர்கள் மந்திரிகளைப் பிடித்து, அரசுக் குடியிருப்பில் வீட்டு ஒதுக்கீடு பெற்று விடுகிறார்கள். இதர ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது.
லட்சக்கணக்கான ஊழியர்களுக்காக 288 வீடும், ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள உயர் உயர் அதிகாரிகளுக்காக 452 வீடுகளும் கட்டுவது யாருக்கான திட்டம்.
உயர் அதிகாரிகளை எடுத்துக் கொண்டீர்களேயானால், அவர்கள் மற்றவர்களைப் போல, அரசுக் குடியிருப்புக் கிடைக்காமலோ, வாடகை வீட்டிலோ அல்லாடுவது இல்லை. சென்னையில் மட்டும் எடுத்துக் கொண்டால், நந்தனம் டவர்ஸ் ப்ளாக், கீழ்ப்பாக்கம் டவர்ஸ் ப்ளாக், சாப் கேம்ஸ் வில்லேஜ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கென்று, சென்னையில் பல்வேறு இடங்களில் உயர் குடியிருப்பு கட்டப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிரவும், 70 சதவிதிதத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், சென்னையிலேயே சொந்த வீடு வைத்துள்ளார்கள். ஐபிஎஸ் அதிகாரிகளில் பலர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜாங்கிட் போட்ட பல்வேறு திட்டங்களில் மணப்பாக்கம் போன்ற இடங்களில் இடம் வாங்கியுள்ளனர். இவர்களுக்காக அரசு நிலத்தில் கட்டப்படும் நெற்குன்றம் போன்ற ஒரு அயோக்கியத்தனமான திட்டத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
4) தனியார் நிறுவனங்களில் கொடுக்கும் ஊதியத்தை ஒப்பிடுகையில் அரசுத் துறையில் போதுமான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் பலர் தனியார்த்துறைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்ப்பதற்காகவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்களில் கொடுக்கப்படும் ஊதியத்தைப் போல அரசு நிறுவனங்களில் கொடுக்கபடுவது இல்லை என்பது உண்மைதான். ஆனால், தனியார் நிறுவனங்களில் இல்லாத எத்தனை சலுகைகள் அரசு அதிகாரிகளுக்கு உள்ளது ? அரசு அதிகாரிகளுக்கு உள்ள இந்த சலுகைகளை தனியார் நிறுவன ஊழியர்கள் அனுபவிக்க முடியுமா ? ஊதியம் குறைவாக இருக்கிறது என்று அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனங்களுக்கு செல்வதைத் தடுப்பதற்காகவே இத்திட்டமாம். சவுக்கு என்ன சொல்கிறதென்றால், நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம். தாராளமாக தனியார் நிறுவனத்துக்கு செல்லுங்கள். மக்கள் வரிப்பணத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியமாவது மிச்சமாகும்.
இது தவிரவும், இந்த வாதமே அயோக்கியத்தனமானது. கடந்த பத்தாண்டுகளில் 10க்கும் குறைவான அதிகாரிகளே, வேலையை விட்டு விட்டு தனியார் நிறுவனத்துக்கு சென்றிருக்கிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் கூட, குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே செல்கிறார்கள். புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளில் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டு, விசாரணை வரும் என்று அஞ்சி விருப்ப ஓய்வில் சென்ற ராமசுந்தரம்,ஐஏஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சிக்கி தப்பி ஓடிய எம்விஎன்.சூர்ய பிரசாத் ஐபிஎஸ் போன்ற ஒரு சில அதிகாரிகளே இவ்வாறு சென்றிருக்கிறார்கள். இதைக் காரணம் காட்டி இப்படி ஒரு அயோக்கியத்தனமான திட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள் என்றால், இவர்களை என்னவென்று சொல்வீர்கள் ?
5) வாடகைக் குடியிருப்பில் இருக்கும் அரசு ஊழியர்கள் இட மாற்றம் செய்யப்படுவதால் அவர்கள் அரசு குடியிருப்பை மூன்று மாதத்தில் காலி செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கவே இத்திட்டம். நிரந்தரமான வீடு என்ற நிலை உருவானால், அவர்களின் வேலைத்திறன் மேம்படும்.
இந்த வாதம் எவ்வளவு சொத்தையான வாதம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. அரசு ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்தவதற்காக இந்த வீட்டு வசதித் திட்டம் என்றால், வீடு கிடைக்காத மற்ற அரசு ஊழியர்களின் வேலைத்திறன் குறைந்தால் விட்டு விடுவார்களா ? அடிக்கடி வீடு மாற்றுவதால், என்னால் சரியாக வேலை பார்க்க முடியவில்லை என்று எந்த அரசு ஊழியர் வீட்டு வசதித் துறையிடம் புகார் மனு கொடுத்தார் ?
6) 1979ம் ஆண்டு அரசாணையில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுகளை பெறுபவர்களுக்கான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 2001ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில் இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இருப்பதிலேயே மிக மிக அயோக்கியத்தனமான வாதம் இதுதான். 1979ம் ஆண்டு அரசாணை என்பது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீடுகளை ஒதுக்கீடு பெறுவதற்கு என்னென்ன விதிமுறைகள் என்பது குறித்த ஒரு அரசாணை. அந்த அரசாணையில்தான், ஏற்கனவே வீடு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது, 21 வயது நிரம்பியவர்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. இந்த 1979ம் ஆண்டு அரசாணைதான் இன்று வரை, தமிழக வீட்டு வசதி வாரியத்தின் ஒதுக்கீடுகள் அத்தனைக்கும் வழிகாட்டியாக உள்ளது.
2001ல் வெளியிடப்பட்ட அரசாணையின் நகல் கீழே தரப்படுகிறது.
இந்த அரசாணை வெளியிடப்பட்ட சூழல் என்னவென்பதை அந்த ஆணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்கப்படாமல் தேங்கியுள்ள வீடுகள் / அடுக்கமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டு மனைகளை விரைவில் விற்பது குறித்து அமைச்சர் (வீட்டு வசதி) அவர்கள் தலைமையிலும், தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுக்களின் பரிந்துரைகளை அரசு கவனமாக ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு ஆணைகள் வெளியிடப்படுகிறது.
1) வீட்டு வசதி வாரியத்தால் 30.06.2000க்கு முன் கட்டி முடிக்கப்பட்டு, 31.12.2000 அன்று வரை விற்பனை ஆகாமல் உள்ள வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டி முடிக்கப்பட்ட தேதியில் இருந்து அது விற்கப்படும் நாள் வரைக்கான வட்டி முதலாக்கம் செய்வதை நீக்கி திட்டம் முடிக்கப்பட்ட போது நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கலாம்.
2) திட்டம் செயல்படுத்தப்பட்ட உடன், மனைகள் / வீடுகள் / அடுக்கமாடி குடியிருப்புகள் ஆகியவைகளை ஒதுக்கீடு செய்யும் போது முதல் முறையில் ஏற்கனவே உள்ள வாரிய விதிமுறைகளைப் பின்பற்றி குலுக்கல் நடத்தப்பட வேண்டும். அதன் பின், விற்கப்படாமல் உள்ள மனைகள் / வீடுகள் / அடுக்கமாடி குடியிருப்புகளை நடப்பில் உள்ள கீழ்கண்ட விதிமுறைகளைத் தளர்த்தி முதலில் வருவோர்க்கு முதலில் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
(அ) மனுதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
(ஆ) மனுதாரர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
(இ) ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யக்கூடாது.
இந்த அரசாணை தெளிவாகக் குறிப்பிடும் விஷயம் என்னவென்றால், வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டு விற்கப்படாமல் உள்ள வீட்டு மனைகளுக்கு மட்டுமே விதிமுறைகள் தளர்த்தப்படும் என்பது.
நெற்குன்றத்தில் எத்தனை வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன ? விற்பனை ஆகாமல் உள்ள வீடுகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள விதி தளர்த்துதலை, எடுத்த எடுப்பிலேயே அனைத்து அதிகாரிகளுக்கும் எப்படி பொருத்த முடியும் ? வீட்டு வசதி வாரியத்தின் பதில் மனுவின் படியே 28.10.2010 அன்று உயர் உயர் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பமும் 1 லட்ச ரூபாய் கட்டணமும் பெறப்பட்டது. அவ்வாறு விண்ணப்பங்களைப் பெறுகையிலேயே வீடுகள் விற்பனை ஆகாமல் இருந்தால், அந்த வீடுகள், ஏற்கனவே வீடு உள்ளவருக்கு வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லவா ?
இந்த உயர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் எங்காவது ஒரு இடத்தில் இந்த நிபந்தனை குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதைப் பாருங்கள்.
7) 28.10.2010 அன்று அகில இந்தியப்பணி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இந்த திட்டத்தைப் பற்றிக் கூறி, அவர்களை ஒரு லட்ச ரூபாய் 30.11.2010க்குள் கட்டுமாறு கோரியது. இந்நடவடிக்கைக்குக் காரணம் இத்திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள் தேவைப்படுகின்றன என்பதை அளவிடுவதற்காகவே… … அதனால் இத்திட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான தேவை அப்போது ஏற்படவில்லை. அதிகாரிகளுக்கான தேவை போதுமான அளவில் இல்லாமல் இருந்திருந்தால், இத்திட்டம் கைவிடப்பட்டிருக்கும்.
8) அதன் பிறகு விரிவான கலந்தாசனைகளுக்குப் பிறகே, 28.02.2011 அன்று இத்திட்டத்துக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளில் விற்கப்படாமல் உள்ள வீடுகள் 2001ம் ஆண்டு அரசாணையின் படி விற்கப்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே, மாநில அரசு ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கேட்டு, விளம்பரம் வெளியிடப்பட்டது.
எத்தனை வீடுகள் தேவைப்படுகின்றன என்பதற்காக கடிதம் அனுப்பிய வாரியம், இத்திட்டத்திற்கான விதிகள் பிறப்பிக்கப்பட்ட 28.02.2011க்குப் பிறகு, இந்த அதிகாரிகளிடமிருந்து புதிய விண்ணப்பங்களை ஏன் பெறவில்லை ? புதிய விண்ணப்பங்கள் ஏதும் பெறாமலேயே 30.04.2011 அன்று குலுக்கல் நடத்தி, உயர் உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்தது எதனால் ? எஸ்டிமேட்டுக்காக விண்ணப்பம் பெறுகையில் 1 லட்ச ரூபாய் கட்டுங்கள் என்று எதற்காக சொல்ல வேண்டும் ? இது போலப் பல கேள்விகள், அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் எழத்தான் செய்கின்றன.
9) ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு சதுர அடி ரூபாய் 2442/-க்கும் சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சதுர அடி ரூபாய் 2679/-க்கும் பாரபட்சமாக வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் உயர் அதிகாரிகளுக்கு கட்டப்படும் வீடுகள் 19 மாடிகளில் 608 வீடுகள் கட்டப்படுகின்றன. சாதாரண அரசு ஊழியர்களுக்கு கட்டப்படும் வீடுகள் 12 மாடிகளில் 288 வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் கட்டுமானப்பணிக்கான செலவை பகிர்கையில் உயர் அதிகாரிகளுக்கான வீடுகளில் ஒரு சதுர அடியின் விலை கூடுதலாக உள்ளது.
1000த்துக்கு குறைவாக இருக்கும் உயர் உயர் அதிகாரிகளுக்கு 19 மாடிகளில் வீடு. லட்சக்கணக்கில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 12 மாடிகளில் 288 வீடு. குறைந்த வருவாய்ப் பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 20 மாடிகளில் 2000 வீடுகள் கட்ட வேண்டாம் என்று யாராவது வீட்டு வசதி வாரியத்தைத் தடுத்தார்களா ? அதிக வீடுகள் கட்டி, குறைந்த விலையில் அதிக அரசு ஊழியர்களுக்குக் கொடுத்தால் மகிழத்தானே செய்வார்கள். இவர்கள் ஒரு அயோக்கியத்தனத்தை செய்து விட்டு, எப்படி நியாயப்படுத்தகிறார்கள் பாருங்கள்.
11) இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 462 அகில இந்தியப்பணி அதிகாரிகளுக்கும், 120 க்ரூப் 1 பிரிவு அதிகாரிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 288 குறைந்த வருவாய் அரசு ஊழியர்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரை 100 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
100 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாலேயே, ஒரு அயோக்கியத்தனமான திட்டம், நியாமான திட்டமாகி விடாது. 462 வீடுகளை உயர் அதிகாரிகளுக்கும் 288 வீடுகளை குறைந்த வருவாய் அரசு ஊழியர்களுக்கும் தருகிறோம் என்று எப்படிக் கூசாமல் சொல்கிறார்கள் பாருங்கள்.
நெற்குன்றம் தொடர்பாக கடந்த முறை கட்டுரை எழுதிய பிறகு, அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்று விட்டு, திருட்டுத் தனமாக நெற்குன்றம் திட்டத்திலும் ஒதுக்கீடு பெற்றிருந்த அதிகாரிகளின் திருட்டுத்தனத்தை குறிப்பிட்டு அவர்கள் ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு கேட்டு புகார் மனு அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், 31 அதிகாரிகளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை சவுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.
சி.பி.சிங் ஐஏஎஸ், ஆர்.விஜயக்குமார் ஐஏஎஸ், வி.கே.ஜெயக்கொடி ஐஏஎஸ், அபினவ் குமார் ஐபிஎஸ், ஆபாஷ் குமார் ஐபிஎஸ், கே.எஸ்.நீலகண்டன் ஐஎப்எஸ், சி.எச் பத்மா ஐஎப்எஸ், இறையன்பு ஐஏஎஸ், கே.சண்முகம் ஐஏஎஸ், ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ், எம்.சாய் குமார் ஐஏஎஸ், டாக்டர்.எஸ்.சுவர்ணா ஐஏஎஸ் ஆகிய அதிகாரிகள், தாங்களாகவே முன்வந்து நெற்குன்றம் ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரியிருக்கிறார்கள்.
இந்த அதிகாரிகளுக்கு சவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
திரு.நட்ராஜ் அவர்கள் டிஎன்பிஎஸ்சி சேர்மேனாக நியமிக்கப்பட்டவுடன், சவுக்கு நெருடலோடு வாழ்த்துகிறோம் என்ற கட்டுரையை எழுதியிருந்தது. அந்தக் கட்டுரையில், திரு.நட்ராஜ் அவர்களுக்கு பெசன்ட் நகரில் விருப்புரிமைக் கோட்டாவின் கீழ் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எழுதப்பட்டிருந்தது. இதற்கு நட்ராஜ் தரப்பிலிருந்து, அந்தச் செய்தி தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் இடம், நட்ராஜ் அவர்களால், சாதாரண பொதுமக்களோடு சேர்ந்து விண்ணப்பித்து பெறப்பட்ட இடம் என்றும், விருப்புரிமைக் கோட்டாவின் கீழ் பெறப்பட்டதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வீரப்பன் என்கவுன்டருக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு க்ரவுண்டு நிலத்தில் இதுவரை எந்த கட்டுமானமும் செய்யப்படவில்லை என்றும், டிஎன்பிஎஸ்சி பதவி முடிவடைந்ததும், அந்த இடத்தில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. சவுக்கில் தவறாக எழுதப்பட்டதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு, தற்போது நெற்குன்றம் ஒதுக்கீட்டை சரண்டர் செய்ததற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு நடந்தும், பெயரைக் குறிப்பிட்டு புகார் அனுப்பியும், சென்னை மாநகர ஆணையர் திரிபாதியின் ஒதுக்கீடு இது வரை ரத்து செய்யப்படவில்லை என்பதுதான். ஏற்கனவே சென்னை முகப்பேரில் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம், திரிபாதி, புதுக்கோட்டை எஸ்.பியாக இருந்தபோது, அப்போது அதிமுகவில் இருந்த அமைச்சர் ரகுபதியின் காலைப் பிடித்து சேவகம் செய்ததற்காக திரிபாதிக்கு விருப்புரிமைக் கோட்டாவில் வழங்கப்பட்டது.
ஆனால், திரிபாதியின் ஒதுக்கீடு மட்டும் நெற்குன்றத்தில் ரத்து செய்யப்படாத மர்மத்தை நேர்மையான அதிகாரி என்று எல்லோரும் சொல்லும் பணீந்திர ரெட்டிதான் விளக்க வேண்டும்.
இப்போது தலைப்புக்கு வருவோம். அரசு பதில் மனுவில் பல இடங்களில் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்ற ஊழியர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்பதற்காக தொடுக்கப்பட்டது அல்ல. மனுதாரர் புகழேந்தி தனது மனுவில் எந்த இடத்திலும் நீதிமன்ற ஊழியர்களுக்கு வீட்டு மனை கொடுக்க வேண்டும் என்று கோரவில்லை. பிறகு ஏன் நீதிமன்ற ஊழியர்கள் மீது வீட்டு வசதி வாரியத்திற்கு இப்படி ஒரு கரிசனம் ?
ஏனென்றால், கடந்த முறை ஜனவரி மாதத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தற்போதை தலைமை நீதிபதி…. எங்கள் நீதிமன்ற ஊழியர்களுக்கு வீடு ஒதுக்குங்கள் என்று பல முறை அரசுச் செயலாளரிடம் நானே கோரியிருக்கிறேன். சென்னையிலும், புறநகரிலும், இடமே இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால், அதிகாரிகள் மட்டும் இப்படி பங்கு போட்டுக் கொள்கிறீர்கள்” என்று கூறினார்.
இதை மனதில் வைத்தே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட என்று நான்கு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்தவர் நீதிமன்ற ஊழியர்களைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடாத நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது, உயர்நீதிமன்றத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாகவே கருத முடியும். நீதிமன்ற ஊழியர்கள் எத்தனை பேருக்கு இவ்வாறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியுமா ? இரண்டு பேருக்கு. அந்த இரண்டு பேரும், நீதிமன்ற ஊழியர்கள் என்பதற்காக ஒதுக்கீடு பெறவில்லை. சென்னையில் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் விண்ணப்பித்தது போல, அவர்களும் விண்ணப்பித்ததில் அவர்களுக்கு குலுக்கலில் இந்த இடம் கிடைத்திருக்கிறது. இதை நீதிமன்ற ஊழியர்களுக்காக சிறப்பு ஒதுக்கீடு செய்தது போல எப்படி அயோக்கியத்தனமாக வாதாடுகிறார்கள் பார்த்தீர்களா ? நீதிமன்ற ஊழியர்களுக்கென்று தனியாக ஒதுக்கீடு செய்யப்படாத வரையில், அவர்கள் கால்நடை பராமரிப்புத் துறை, காவல்துறை, வனத்துறை போன்ற மற்ற அனைத்துத் துறை அரசு ஊழியர்களையும் போலவே கருத முடியும். இவ்வாறு இருக்கையில் நீதிமன்ற ஊழியர்கள் இருவர் ஒதுக்கீடு பெற்றதை மட்டும் இவ்வாறு தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் வேறு என்னவாக இருக்க முடியும் ?
இவ்வாறு குறிப்பிட்டதை தலைமை நீதிபதியோடு சேர்ந்து அமர்ந்திருந்த நீதிபதி சிவஞானம் கண்டு பிடித்து விட்டார். அரசு வழக்கறிஞரைப் பார்த்து, “இது வரை எந்த இடத்திலும் நீதிமன்ற ஊழியர்கள் என்று நீங்கள் குறிப்பிடவில்லை. இது குறித்து வெளியிடப்பட்ட விளம்பரத்திலும் நீதிமன்ற ஊழியர்கள் என்று குறிப்பிடவில்லை. இப்போது திடீரென்று நீதிமன்ற ஊழியர்கள் என்று குறிப்பிடுகிறீர்களே” என்று கேட்டார். அசடு வழிந்த அரசு வழக்கறிஞர், மற்ற ஊழியர்களைப் போல நீதிமன்ற ஊழியர்களும் விண்ணப்பித்து பெற்றிருக்கிறார்கள் என்றார்.
அரசு சார்பில் இந்த வழக்கில் வாதாடுவதற்காக, டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வந்திருந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜுன் 25 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்த அயோக்கியத்தனமாக கொள்ளைக்காரத் திட்டத்தை ரத்து செய்யத்தவறினால், இவ்வழக்கு உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்படும் என்பதை சவுக்கு இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.
நம்மிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது ?