ராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் வாழ்நாள் சிறைக் கைதியாக இருந்து வருபவர் நளினி. வாழ்நாள் சிறைக் கைதிக ஆண்டுதோறும் விடுதலை செய்கையைல் தன்னை மட்டும் விடுதலை செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தொடர்ந்து வழக்காடி வருகிறார் நளினி.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2010ல் நளினியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியது திமுக அரசு. நளினி தரப்பில் இக்குற்றச்சாட்டு மறுக்கப்பட்டது. சிறையிலிருந்து தான் முன் விடுதலை செய்யப்படுவதை தடுப்பதற்காவே இது போன்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டு தன் மீது புனையப்பட்டுள்ளதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நளினி, அப்போது வேலூர் சிறையில் கண்காணிப்பாளராக இருந்தவர் மற்றும் சில சிறை அதிகாரிகள், சிறைக்குள் புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை சில கைதிகள் கடத்தி வருவதை தான் சுட்டிக் காட்டியதால் தன்னை பழிவாங்குவதாகவும், வேலூர் சிறையில் சாரதா என்ற பெண்மணியை சக கைதிகளும், சிறை நிர்வாகிகளும், நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததை தான் தலையிட்டு தடுத்ததால் கோபமடைந்த சிறை நிர்வாகம் தன்னை இப்படிப் பழிவாங்குவதாகவும் நளினி தெரிவித்தார். சாரதா என்ற பெண்மணி தாக்கப்பட்டதை நளினி தலையிட்டு, அவரது வழக்கறிஞர் புகழேந்தி மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், பாதிக்கப்பட்ட சாரதாவுக்கு 50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதும், வழக்கு தொடுத்த புகழேந்தியை பாராட்டியதும் தீர்ப்பில் பதிவாகி உள்ளது.
இதையடுத்து, சிறையில் நளினிக்கு தினமும் பல்வேறு தொந்தரவுகளை அளித்து வந்தது வேலூர் சிறை நிர்வாகம். சுமூகமான சூழல் வேலூர் சிறையில் நிலவாத காரணத்தால், நளினியே தனது விருப்பத்தின் பேரில், தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று, சிறை நிர்வாகம், ஜுன் 2010ல் புழல் சிறைக்கு மாற்றியது.
வேலூர் சிறையில் மரண தண்டனைக் கைதியாக உள்ள நளினினியின் கணவர் முருகனை மாதந்தோறும் சந்தித்து வந்த நளினி, இந்த மாற்றத்தால் சந்திக்க முடியாமல் இருந்தார்.
செப்டம்பர் 2011 அன்று நளினி மீண்டும் வேலூர் சிறைக்கே மாற்றப்பட்டார். சிறையில் இருந்தபடியே தபால் மூலம் பட்டப்படிப்பை முடித்த நளினிக்கு, பட்டதாரி என்ற அடிப்படையில் 99ம் ஆண்டிலேயே சிறையில் முதல் வகுப்பு வசதிகளை வழங்க, ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த “தடா” நீதிமன்றம் உத்தரவிட்டது. அது முதல் நளினிக்கு தொடர்ந்து சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட்டு வந்தன.
முதல் வகுப்பு வசதிகள் என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. தனியாக செய்தித்தாள், சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை விட, சற்றே மேம்பட்ட உணவு, இரவு நேரத்தில் சப்பாத்தி போன்ற வசதிகள் மட்டுமே.
ஆனால் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட நளினிக்கு முதல் வகுப்பை வழங்க சிறை நிர்வாகம் மறுத்தது. தனக்கு மீண்டும் முதல் வகுப்பு வசதிகளை வழங்குமாறு மனு ஒன்றை அளித்தார். ஆனால் இந்த மனுவின் மீது எந்தவிதமான உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நளினி. அப்போது பதில் மனு தாக்கல் செய்த சிறை நிர்வாகம், நளினியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் நளினியின் முதல் வகுப்பு வசதிகள் நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து நளினி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சிறையில் தவறு செய்யும் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு சிறை விதிகள் 303 மற்றும் 304 வகை செய்கின்றன. இந்த விதிகளின் படி, ஒரு கைதி செய்த சிறைக் குற்றத்தை தீர விசாரித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் விளக்கம் கேட்க வேண்டும். விசாரணை அறிக்கை, விளக்கம் கேட்பு ஆகிய நடைமுறைகள் முடிவடைந்த பிறகே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று உள்ளதை சுட்டிக் காட்டினார்.
விசாரணை நடைபெறவில்லை என்பதை ஒப்புக் கொண்ட அரசு வழக்கறிஞர், நளினியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது, அதனால் தண்டனை கொடுக்கப்பட்டது என்று வாதிட்டார்.
15 மார்ச் 2012 அன்று இவ்வழக்கில் தங்கள் தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் மோகன் ராம் மற்றும் அக்பர் அலி,
“சிறை விதிகள் 304ன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவில்லை என்பது அரசின் பதில் மனுவிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டதா என்பதைப் பற்றிய சிறு முணுமுணுப்புக் கூட, பதில் மனுவில் இலலை. நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கோப்புகளை சமர்ப்பியுங்கள் என்று உத்தரவிட்டதாலேயே அந்தக் கோப்பு நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் கோப்பினை பரிசீலனை செய்ததில், வழக்கமாக சிறை அதிகாரிகள் ஒப்பிக்கும் வாக்குமூலங்கள் மட்டுமே உள்ளன. மனுதாரர் முன்னிலையில்,அவரை வைத்துக் கொண்டு எந்த விதமான விசாரணையும் நடைபெறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. மேலும் மனுதாரர் தரப்பின் விளக்கத்தை பெறுவதற்கான முயற்சிகளையும் எடுக்கப் படவில்லை.
இது போன்ற நடைமுறைகளைக் கையாளாமல், மனுதாரருக்கு வழங்கப்பட்ட தண்டனையானது சட்ட விரோதமானது மட்டுமல்ல, உடனடியாக ரத்து செய்யப் பட வேண்டியது.
ஆகையால், மனுதாரருக்கு வழங்கப்பட்ட முதல் வகுப்பை நிரந்தரமாக ரத்து செய்து, 28.05.2010 அன்று சிறை நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு தொடர்ந்து முதல் வகுப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
இறுதியாக, மனுதாரர் தொடர்ந்த வழக்கை அனுமதிக்கிறோம். வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும்.” என்று உத்தரவிட்டனர்.
“உடனடியாக” என்று உத்தரவிடப்பட்டது 15 மார்ச் 2012 அன்று. இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்து, ஒரு மாதம் கடந்த நிலையில், இன்றும் நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்படவில்லை.
சவுக்கு பலமுறை சொன்னது போல, அரசாங்கத்தை நடத்துவதும், இயக்குவதும் அதிகாரிகளே…. நளினிக்கு சிறையில் முதல் வகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று, கருணாநிதியோ, ஜெயலலிதாவோ உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பணிகளில், இது போன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வாய்ப்பு மிகக் குறைவு. இது போன்ற அற்பத்தனமான வேலைகளில் ஈடுபடுவது அரசு அதிகாரிகளே.
ஒரு உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த ஒரு உத்தரவை, துச்சமாக மதித்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் அதை அமல்படுத்தாமல் இருக்கும் துணிச்சல் ஒரு சிறையின் கண்காணிப்பாளராக இருக்கும் ராஜலட்சுமிக்கு எப்படி வந்தது ? மத்திய உளவுத்துறையின் பின்புலமும், உறுதுணையும் இல்லாமல், ஒரு சாதாரண சிறைக் கண்காணிப்பாளருக்கு நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விடும் துணிச்சல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அன்னை சோனியாவின் மனதைக் குளிர்விப்பதற்காக மத்திய உளவுத்துறை கொடுக்கும் நெருக்கடியில், ராஜலட்சுமி இப்படிப்பட்ட ஒரு அப்பட்டமான மீறலை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே கருத வேண்டியதுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை புரிந்திருக்கிறீர்கள், உடனடியாக நளினிக்கு முதல் வகுப்பு கொடுங்கள் என்று கோரி, ஒரு தாக்கீதை, நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் இன்று வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ளார்.
21 ஆண்டுகளாக, சிறையில் அடைத்து வதைக்கிறார்கள். சிறையில் சட்டபூர்வமான உரிமைகளைக் கூட வழங்காமல், நளினியை தொடர்ந்து சித்திரவதை செய்யும் இந்த அதிகாரிகள் மனிதர்கள்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது.