சமீபத்தில் அருவருப்பாக இருக்கிறது என்ற கட்டுரைக்கு பின்னூட்டம் இட்டிருந்த தோழர் புதியவன் ராஜ் என்பவர், திமுகவை மட்டும் மிக மிக மோசமாக விமர்சனம் செய்திருப்பதாக வருத்தப்பட்டிருந்தார்.
அதிமுகவை விட, திமுக சவுக்கால் கூடுதலாக விமர்சிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையே. அதற்குக் காரணம், திராவிட இயக்கத்தை அடையாளப்படுத்தும் கட்சி திமுக என்பதால் திமுகவுக்கு மற்ற கட்சிகளை விட கூடுதல் பொறுப்பு உண்டு. மேலும், அரசியல் சாணக்கியத்தனத்தில் இந்தியாவில் உள்ள மற்ற எல்லா தலைவர்களையும் விட, மிகச்சிறந்தவராக கருணாநிதி இருந்தார் என்பதும், பல்வேறு பிளவுகளைத் தாண்டி, திமுக என்ற கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் என்பதனாலும், ஒரு சிறந்த அரசியல்வாதி இப்படி வீழ்ச்சி அடைந்து விட்டாரே என்ற கோபமும் ஒரு காரணம்.
இந்தக் கோபத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ள, இத்திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை சற்றே விரிவாகக் காணுவது அவசியம்.
அதிமுக கட்சியை திராவிட இயக்கத்தின் வடிவமாக பார்க்கவே முடியாது. கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதனால், வேறு வழியின்றி, எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி அது. எம்ஜிஆரின் சினிமாப்புகழால் வளர்க்கப்பட்ட கட்சி அது. அதிமுக தொடங்கப்பட்டதிலிருந்தே அதற்கென்று ஒரு தனிப்பட்ட கலாச்சாரமும், பண்பாடும் பேணி வளர்க்கப்பட்டன. அது என்னவென்றால், சுய சிந்தனை இல்லாமல், அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதே. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த, படித்தவர்கள் கூட, எம்.ஜி.ஆரின் துதிபாடிகளாகவே எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டார்கள். எதிர்த்து குரல் கொடுப்பது என்ற எண்ணம் ஏற்பட்டால் கூட, அவர்கள் ராமாவரம் தோட்டத்துக்கு அழைக்கப்பட்டு, எம்ஜிஆர் கையால் கும்மாங்குத்து வாங்குவார்கள். இதுதான் அதிமுகவின் பண்பாடு, கலாச்சாரம். ஒரே தலைவர், அவரன்றி ஒரு அணுவும் அசையாது என்ற கலாச்சாரத்தில் வளர்ந்ததால்தான், நடிகை என்ற பின்புலத்தால், கூட்டத்தைக் கூட்டுவதற்காக, எம்ஜிஆரால் ஒரு பேச்சாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதா இன்று அதிமுகவுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார். கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் ஒருவர் கூட, கட்சிக்கு தலைமை தாங்க முடியவில்லை.
எம்ஜிஆருக்கப் பின், அதிமுகவுக்கு தலைமையேற்ற ஜெயலலிதாவின் தலைமயின் கீழும், அடிமைகளின் விசுவாசமும், அடிமை எண்ணமும் பன்மடங்கு மேலோங்கியிருக்கிறதே தவிர, இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று ஒருவரைக் கூட அடையாளம் காட்ட முடியவில்லை. இந்த அடிமைகளின் எண்ணம் எந்த அளவுக்கு பாழ்பட்டு இருக்கிறதென்றால், ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலாவைக் கூட தலைவராக ஏற்றுக் கொள்வார்கள், ஆனால், நீண்ட நெடுங்காலமாக அரசியலில் இருக்கும் ஒருவரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நிலையிலேயே அதிமுக இருக்கிறது.
அதிமுகவுக்கு மாறாக, திமுகவுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. நீதிக்கட்சியில் தொடங்கி, தமிழகத்தில் ஒரு யுகப்புரட்சியையே ஏற்படுத்தியது திராவிட இயக்கம் என்றால் அது மிகையல்ல. அன்று திராவிட இயக்கம் ஏற்படுத்திய புரட்சியே இன்று வரை காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காலூன்றாமல் இருக்க வழி கோலியது.
1937ல் அப்போது சென்னை ராஜதானியை ஆண்ட காங்கிரஸ் கட்சி, ராஜாஜி உத்தரவின் பேரில் இந்தியைக் கட்டாயப்பாடமாக்கியது. இதனை எதிர்த்து நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அறிஞர் அண்ணா, கி.ஆ.பெ.விசுவநாதம், சாது சண்முகானந்த அடிகளார், ஈழத்து சிவானந்த அடிகளார், சாது அருணகிரிநாதர், மறைமலையடிகள் ஆகியோர் பங்கு பெற்றனர். பெரியாருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
நீதிக்கட்சி, வெள்ளையர்களின் துதிபாடிகளால் நிரப்பப்பட்டிருந்த நேரத்தில்தான் அண்ணா, சேலம் மாநாட்டில் புதிய தீர்மானங்களைக் கொண்டு வருகிறார். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் தரப்பட்ட சர், ராவ் பகதூர், திவான் பகதூர், ராவ் சாகேப் போன்ற பட்டங்களைத் துறக்க வேண்டும், கௌரவ மேஜிஸ்த்திரேட் பதவிகளை துறக்க வேண்டும், பெயருக்கு பின் உள்ள சாதிப் பட்டங்களை துறக்க வேண்டும், தென்னிந்திய நல உரிமைக் கட்சி (நீதிக் கட்சி) என்ற பெயரை மாற்றி இனி திராவிடர் கழகம் என்று அழைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அப்போதுதான் திராவிடர் கழகம் உருவாகிறது.
இந்த திராவிடர் கழகம், தமிழர் நலன், மொழிப்பாதுகாப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கைகளில் பயணிக்கிறது. ஆரம்பகாலத்தில் அண்ணாவோடு சரி சமமாக இருந்த தலைவர்கள் க.அன்பழகன், வி.ஆர்.நெடுஞ்செழியன், தவமணிராசன், இளம்வழுதி, கே.ஏ.மதியழகன், ஏ.பி.ஜனார்த்தனம் ஆகியோர்.
பின்னர் வந்து சேர்ந்தவர்களில் ஒருவர்தான் கருணாநிதி. அவரோடு திராவிடர் கழகத்தில் இணைந்தவர்கள் அரங்கண்ணல், அப்பாவு கோகுலகிருஷ்ணன், போன்வேறு போன்ற இளைஞர்கள். கருப்புச் சட்டை அணிவது திராவிடர் கழகத்தின் அடையாளம் என்று உருவாக்கப்பட்டது.
1946ல் இந்தி மீண்டும் கட்டாயமாக்கி காங்கிரஸ் அரசு உத்தரவிட்ட போது, மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. தொடர்ந்த இந்த இந்தித் திணிப்பு, தனி திராவிட நாடு என்ற கோரிக்கைக்கு வலு சேர்த்துக் கொண்டே வந்தது. இதன் தொடர்ச்சியாக சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு 14 அக்டோபர் அன்று கடலூரில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் திராவிட நாடு தனி நாடாக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1949ம் ஆண்டு 72 வயதுப் பெரியார் 26 வயதுள்ள மணியம்மை என்ற இளம்பெண்ணை பதிவுத் திருமணம் செய்ததே திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்படுவதற்கு வித்தாக அமைந்தது. பெரியாரின் இந்தத் திருமணம், திராவிடர் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
காலங்காலமாக, பெண் விடுதலை குறித்து, பட்டி தொட்டியெங்கும் பேசி வந்த திராவிடர் கழகத்தினர், பெரியாரின் இந்தச் செய்கையைக் கண்டு, கூனிக் குறுகினர்.
பெரியாரின் இந்த முடிவைக் கைவிடுமாறு, திராவிடர் கழகத் தொண்டர்கள் மாநிலமெங்கும் தந்தி அனுப்பினர். கடிதம் எழுதினர். இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை இதழுக்கு பொறுப்பாக இருந்த ஈவெகி சம்பத் வெளியேறினார். அண்ணாவோடு கலந்து பேசிய பிறகு, பெரியாரின் முடிவை மாற்றக் கோருவதென்று முடிவு செய்யப்பட்டு, கும்பகோணம் கே.கே.நீலமேகம் தலைமையில் என்.வி.நடராஜன், குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு, கடலூர் குருசாமி ஆகியோர் அடங்கிய தூதுக்குழு, அப்போது ஏற்காட்டில் தங்கியிருந்த பெரியாரைச் சந்தித்து அவர் முடிவை கைவிடுமாறு கோரினர். ஆனால், பெரியார் தன் முடிவைக் விடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்தத் தூதுக்குழுவினரும், கழக முன்னணித் தோழர்களும் அண்ணாவின் தலைமையில் சென்னை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் 3 ஜுலை 1949ல் கூடுகின்றனர். அவர்கள் கூடி, பெரியாருக்கு ஒரு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.
“இந்தச் சேதியாலே ஏற்பட்ட விளைவு, கண்ணீ…. தூய்மையுள்ளம் கொண்ட ஆயிரமாயிரம் இயக்கத்தாழர்கள் கண்ணீர் சொரிந்த வண்ணம் உள்ளனர்.
இந்தக் கண்ணீரை அவர் எதிர்ப்பார்த்திருப்பாரா ? அல்லது மதிக்கப்போகிறாரா… இது ஒரு புறமிருக்க எதற்கும் கலங்கா உள்ளம் படைத்த இளைஞர்கள் இந்தச் சேதி கேட்டு கண்ணீர் வடிப்பது போல வேறு எப்போதும் நடைபெற்றதில்லை. உலகச் சம்பவங்களிலேயே இதற்கு இணையானதாக வேறு ஒன்றைக் காட்டவும் முடியாது.
திருமணம் செய்வது சொந்த விஷயம்; வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வது கூட சொந்த விஷயம்தான். அதிலும் தலைவராய் உள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது, வயோதிகத்திலே செய்து கொண்டாலும் கூட கேட்டுத் திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ, கோபமடையவோ மட்டுமேதான் தோன்றுமேயன்றிக் கண்ணீர் கிணம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது பெரியாரின் திருமணச் செய்தி கேட்டு.
நாம் அவரை அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அரைத் தங்கள் குடும்பத் தலைவரென வாழ்க்கை வழிகாட்டியென ஏற்றுக் கொண்டு எந்த இயக்கத்தவரும் அதன் தலைவரிடமும் காட்டாத அளவு மரியதை உணர்ச்சியை, அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்.
நமது கண்களக்கு அவர் நமது மானத்தை மீட்டுத் தரும் மகானாக, நம்மை பன்னெடுங்க காலமாகக் கொடுமைப் படுத்தி வரும் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப் போர் புரியும் மாவீரராகக் காட்சி தந்து வந்திருக்கிறார்.
வாழ்க்கைப் பிரிச்சினையிலே அவர் மிகச் சிறப்பாகவும் மிகத் தெளிவாகவும், எடுத்துப் பேசி வந்த பகுதி திருமணத்தைப் பற்றியது. திருமண முறையிலே உள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவியாக்கும் கயமைத்தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும், அவர் ஆற்றியது போல வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.
உரையுடனா நின்றது… இல்லை ஊரே மாறிற்று… ரிஷிகள் வகுத்து வைத்து விட்டுப்போன திட்டங்களே மாறின. மகிழ்ந்தோம். பெருமை கொண்டோம். ஆணவம் கொண்டோம். பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்ததைக் கேட்டு கிழவர்கள் கலங்கினர். குமரிகள் குதூகலித்தனர். காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப்பருவத்திலே வாலிபப் பெண்ணை சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசை காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால் மானரோஷத்தில் அக்கறையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார், நமக்கெல்லாம் புது முறுக்கேற்றினார்.
பொருந்தாத் திருமணம் நாட்டுக்கு பெரியதொரு சாபக்கேடு என்று முழக்கமிட்டார். அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து தங்கபஸ்பம் தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார். தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே பொருந்தாத் திருமணம் யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்து தேட வேண்டிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் எடுத்தது.
என் போன்ற வயதானவர்கள் கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – அப்படியாவது ஒரு எண்ணம் வந்து தொலைந்தால், தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக ஒரு கிழத்தை பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே பச்சைக் கொடி போன்ற ஒரு பெண்ணை வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய பயதும், பக்குவமும் கொண்ட பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதா ? காரணம் ஆயிரம் காட்டட்டுமே… எந்த மானமுள்ளவன் அந்த மானமுள்ளவன் கல்யானத்தைச் சரியென்று சொல்லுவான் ? என்று அவர் பேசிய பேச்சை கேட்காத ஊரில்லை.
இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72ம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும் ?
அந்தோ ! எத்தனை பெரிய தாக்குதல் ! எத்துணை அவமானம் தரும் காரியம் ! இதற்கோ இவ்வளவு எழுச்சி பெற்றோம் ! இந்தப் பழியையும் ஏற்றுக்கொள்ளவோ இந்த அளவு வளர்ந்தோம் ! என்னே நம் நிலை ! என்னே நம் கதி ! எங்கே நமக்குப் புகலிடம் ! என்ன தான் நமக்கு எதிர்காலம் ! எதிரே பெரும் இருள் ! சுற்றிலும் கேலி பேசுவோர் ! இடையே நாம் ! நெஞ்சில் பெரும் வேதனை ! கண்களிலே நீர் ! கை கால்களிலே நடுக்கம் ! இதற்கோ இந்த வளர்ச்சி !
இதுதான் அண்ணாவின் அன்றைய மனநிலை. இதன் பிறகு உடனடியாக பெரியார் திருமண ஏற்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், கைவிடவில்லையென்றால் பொதுக்கூட்டம் போட்டு கண்டிக்க வேண்டி வரும் என்பதையும் வெளிப்படையாகவே அறிவித்து தீர்மானம் போட்டார் அண்ணா.
தொடரும்