அண்ணாவின் அறிக்கைக்குப் பிறகு பெரியார் தன் முடிவை மாற்றிக் கொள்ளாதது மட்டுமல்ல… திராவிடர் கழகத்தின் வாரிசு என்ற மணியம்மையை அறிவிக்கப் போகிறார் என்று செய்திகள் பரவுகின்றன. இதை உண்மை என்று அறிவித்து பெரியார் அறிக்கையும் விடுகிறார்.
வெகுண்டெழுந்த அறிஞர் அண்ணா, “பெரியாரே… இப்படி ஓர் அநியாயமான கொள்கைக்கு முரணான, மக்கள் நகைக்கத்தக்க பொருந்தாத் திருமணம் செய்து கொள்கிறீரே.. இது சரியா என்று கேட்கிறோம்.
போடா போ… நான் திருமணம் மட்டுமா செய்து கொள்ளப் போகிறேன் இயக்கத்தையே மணியம்மையிடம் ஒப்படைக்கிறேன். அப்படி ஒப்படைப்பதற்காகவே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறுகிறார் பெரியார்.
கழகத்தில் அதிக காலம் பணியாற்றியவர்கள் உண்டு. திறமையானவர்கள் உண்டு. சொத்தை, சுகத்தை இழந்தவர்கள் உண்டு. கண்ணையும் கருத்தையும் இழந்தவர்கள் உண்டு, இவர்கள் யாவரும் வாரிசாக்க முடியவில்லை. இவர்களில் யாருக்கும் இயக்கத்தை நடத்திச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
எந்த முறையில் ? பெரியாரின் துணைவியாகும் முறையில். என்ன தகுதியால் ? பெரியார் அறிக்கையில் கூறியபடி, “நான் 5, 6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும், உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து வந்திருக்கின்றதுமான மணியம்மை”.
திராவிடர் கழகத்துக்கு வாரிசு நியமிக்கும் முறை குறித்து அண்ணா “வாரிசு முறை எதற்கு ? யார் செய்யும் ஏற்பாடு ? எந்தக் காலத்து முறை ? ஐதராபாத் நிஜாமுக்கும்,ஆதீனகர்த்தாக்களுக்கும் ஏற்பட வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை.
ஒரு இயக்கத்துக்கு வாரிசு ஏற்படுத்துவது என்பது ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானா ? அல்லது நடைமுறையிலே வெற்றி தரக்கூடியதுதானா ? திராவிடக் கழகம் அதற்கென உள்ளதாகக் கூறப்படும் சொத்து என்பது இன்னொருவருக்கு வாரிசு முறைப்பட தரப்பட வேண்டிய காட்டு ராஜாங்கம்தானா ? இதற்காகத்தானா “வெள்ளிக் குண்டுகளை வீசுங்கள்… வேலை நடப்பதைப் பாருங்கள்” என்று விடுதலை முழக்கமிட்டது ?
இதோ விரட்டப்படுகிறோம். நாம் கட்டிய கோட்டையிலிருந்து, நாம் பாடுபட்ட கழகத்திலிருந்து, தந்தை மக்களை விரட்டியடிக்கிறார். புதிய “வாரிசு” தேடிக் கொண்டு, திக்கற்றவர்களாகி, திகைப்புண்டவர்களாகி, பாடுபட்டதின் பலனைப் பறிகொடுத்துவிட்டு, குடிபுகுந்த குமரி கோலோச்ச முற்படுவது கண்டு, குமுறி, குன்றி, கோவெனக் கதறிக் கொண்டு நமது வீட்டை விட்டு வெளியேறுகிறோம்.” என்று தனது மனக்குமுறலை வெளியிட்டார் அண்ணா.
இதையடுத்து அண்ணா தலைமையில், எண் 7, பவழக்காரத்தெரு, சென்னையில் அண்ணா தலைமயில் கூடிய கூட்டம் “திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் திருமணத்திற்குப் பிறகு கழகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டபடியாலும், இந்நிலையை மாற்ற ஜனநாயக முறைப்படி பெரியார் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யாமல் கழகத்தை செயலாற்றதாக்கி இருப்பதாலும், இப்பொழுது இருக்கின்ற நாட்டு நிலையில் இந்த மாதிரியான மந்த நிலைமை இந்நாட்டு மக்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிதும் ஊறு பயக்கும் என்று இக்கமிட்டி கருதுவதாலும், கழகக் கொள்கைகளம், இலட்சியமும் நசுக்கப்பட்டுப் போகும் என்று அஞ்சுவதாலும் நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்பவும், உடனடியாக வேலைகளைத் துவக்கி நடத்தவும், நாம், “திராவிடர் முன்னேற்றக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுவதென இக்கமிட்டி தீர்மானிக்கிறது.
காலையில் பவழக்காரத் தெருவில் கூடி எடுக்கப்பட்ட முடிவின் படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க விழா, சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டது.
அந்த விழாவிலே, கொட்டும் மழையில் பேசினார் அண்ணா. “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும். படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை, திராவிடத்தை செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள், திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத் தான் குறிக்கும். இரு பூங்காக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்ககத் தேவையில்லை, அவசியமும் இல்லை. எது புஷ்பித்தாலும் மாலையாகப்போவது திராவிடத்துக்குத்தான் என்ற எண்ணம் வர வேண்டும்”
இதுதான் திமுகவின் தொடக்கம். திமுக தொடங்கிய சில நாட்களிலேயே திராவிட நாடு இதழைத் தொடர்ந்து நடத்துவதற்கு 3000 ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிடுகிறது. இத்தொகையைக் கட்டாவிட்டால், பத்திரிக்கை நின்று விடும் என்ற நிலையில், மக்களிடம் பணம் வசூலித்து, 3000 ரூபாயைக் கட்டகிறார் அண்ணா. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு விதித்துள்ள 3000 ரூபாய்க் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என்று உத்தரவிடப்படுகிறது. அப்போது என்ன நடந்தது தெரியுமா ? அந்த 3000 ரூபாயையும், வசூலிக்கப்பட்ட பொதுமக்களிடம் திருப்பி அளிக்கிறார் அண்ணா.
அண்ணா எழுதிய “ஆரிய மாயை” என்ற நூலுக்கு காங்கிரஸ் அரசாங்கம் தடை விதித்தது. இதையடுத்து அண்ணா கைது செய்யப்பட்டார். இதையடுத்து தமிழகமெங்கும் நடந்த போராட்டங்களின் விளைவாக அண்ணா விடுதலை செய்யப்ட்டார். அடுத்ததாக அண்ணா எழுதிய “இலட்சிய வரலாறு“ என்ற புத்தகத்துக்கும் தடை விதிக்கப் பட்டது. ஏ.வி.ஆசைத்தம்பி எழுதிய “காந்தியாக சாந்தியடை“ என்ற புத்தகத்துக்கும் தடை. புலவர் செல்வராஜ் எழுதிய “கருஞ்சட்டை ஒழிய வேண்டுமா ? “ என்ற புத்தகத்துக்கும் தடை.
இதனைத் தொடர்ந்து, டால்மியாபுரம் ரயில்நிலையத்துக்கு கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு என்று தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்ட, பல்வேறு திமுகவினர் தண்டனையடைகிறார்கள்.
1957ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், முதன் முறையாக திமுக போட்டியிடுகிறது. 142 இடங்களில் போட்டியிட்டு, 15 இடங்களில் திமுக வெற்றி பெறுகிறது.
இதன் பிறகு கட்சி சந்தித்த மிகப் பெரிய பிரிவு ஈவெகி சம்பத் அவர்களின் பிரிவு. அண்ணாவோடு ஏற்பட்ட கருத்த வேறுபாடு காரணமாக, பிரிந்து “தமிழ் தேசியக்கட்சி” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
1962ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அறிஞர் அண்ணா தேர்தலில் தோல்வியடைந்தார். இது வரை, தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக இருந்த இடதுசாரிகளின் தாக்கம் சரிவடைந்து, திராவிடக் கட்சி அந்த இடத்தைக் கைப்பற்றியது.
தொடர்ந்து நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற திமுக, 1967ல் 138 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
திமுகவின் கொள்கைகள் சரியோ தவறோ, திமுக இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. பெரியார் ஒரு வேளை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால், திமுக என்ற இயக்கம் தோன்றுவதற்கு பெரிதான காரணம் இல்லாமல் போயிருக்கக் கூடும்.
மணியம்மையை திராவிடர் கழகத்தின் வாரிசு என்று பெரியார் அறிவித்தவுடன், அறிஞர் அண்ணா எப்படிக் கொதித்துப் போனார் என்பதை கட்டுரையின் தொடக்கத்திலே படித்திருப்பீர்கள். இப்படித் துவங்கப்பட்டதுதான் திமுக.
இப்படிப்பட்ட வரலாறு உள்ள திமுக, இன்று எத்தகைய வீழ்ச்சியை அடைந்திருக்கிறது ? எந்தக் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திமுக வீறு கொண்டு எழுந்ததோ, அதே காங்கிரஸ் கட்சியால், நெருக்கடி நிலையின் போது சொல்லொன்னாத் துயருக்கு ஆளாகியது திமுக. திமுக கரை வேட்டியோடு சாலையில் நடமாடியவர்களையெல்லாம், காவல்துறை கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட திமுக தலைவர்கள், கடும் சித்திரவதைக்கும் தாக்குதலுக்கும் உள்ளானார்கள்.
அந்த நெருக்கடி நிலையில் நடந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான காங்கிரஸ் கட்சித் தலைவி இந்திராவின் காலில் சரணடைந்தார் கருணாநிதி. வண்டி வண்டியான ஆதாரங்களுடன், எம்.ஜி.ஆரும், மற்ற சில அரசியல் கட்சித்தலைவர்களும், வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை தன்அரசியல் வாழ்வையே அழித்து விடும் என்று பயந்த கருணாநிதி இந்திராவிடம் சரணடைந்தார்.
எம்.ஜி.ஆர் மறைவடையும் வரை, கருணாநிதி நடத்திய எத்தனையோ தகிடுதத்தங்கள் அவருக்கு ஆட்சியை மீட்டுத் தரவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989ல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, அப்போது வரை, திராவிட இயக்கத்தின் அடித்தளமான கொள்கைகளுக்கு முழுமையாக எதிரானவராக மாறிப்போய் விடவில்லை.
1990ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டதும், 1991ல் ராஜீவ் மறைவுக்குப் பிறகு வந்த தேர்தலில், திமுக வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. அப்போது அமலில் இருந்த தடா என்ற கொடிய சட்டத்தின் கீழ், திமுக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் ராஜீவ் கொலைக்கே திமுகதான் காரணம் என்ற பிரச்சாரமும் அவிழ்த்து விடப்பட்டது. 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதியிடம், முதுமை காரணமாகவோ, அல்லது வேறு காரணமாகவோ மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின.
திமுக என்ற இயக்கம் முழுமையான அழிவை நோக்கிச் சென்றது 2006ல் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகுதான். முழுப் பெரும்பான்மைக்கு சில எம்எல்ஏக்கள் குறைவாக இருந்த காரணத்தினால், சிறுபான்மை ஆட்சி நடத்தி வந்த கருணாநிதி, திராவிட இயக்கத்தின் வரலாற்றுக்கு நேர் எதிரான நடவடிகைகளில் இறங்கத் தொடங்கினார். 2006ல் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்திலெல்லாம், இப்போது அவர் வேண்டும், வேண்டும் என்று போரும் ஈழம் குறித்து பேசியிருக்கலாம். அப்போது இணக்கமாகவே இருந்த மத்தியில் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களிடம் சொல்லி, இலங்கையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்திருக்கலாம்.
2008ல் இலங்கையில் போர் தொடங்கியதுமே, தமிழர்களுக்கு எதிராக சிங்கள வெறி கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பது, ஆட்சியில் இருந்த கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும்.
2006 தொடக்கத்திலேயே, கட்சிக்குள் இரு மகன்களின் ஆதிக்கம் வெளிப்படையாக விரிவடையத் தொடங்கியது. கருணாநிதிக்கு அடுத்தபடியாக திமுகவின் முகமாக ஸ்டாலின் மட்டுமே இருந்து வந்தார். இதற்குப் போட்டியாக, தென் மண்டலத்தில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்ட அழகிரி, தன் தம்பி ஸ்டாலினை நேரடியான எதிரியாகப் பார்த்தார்.
2007 முதலே, அழகிரி, ஸ்டாலினுக்கு இணையாக, கட்சியில் கனிமொழியையும் வளர்த்து விட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் கருணாநிதி இறங்கினார். அந்த முயற்சியின் வெளிப்பாடுகளே, சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள்.
மாறன் சகோதரர்கள் தங்கள் பங்குக்கு கட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தரவில்லை. கட்சியில் மூன்றாக அணிகள் பிரிந்து, ஒரே குடும்பத்திற்குள் கட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி வெளிப்படையாக தெரியத் தொடங்கியது.
2011ல் ஆட்சி இருந்தவரை குடும்பத்தை ஒட்டி வைத்திருந்த பசை, ஆட்சி கைவிட்டுப் போனதும், விரிசல் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியது.
இன்று அழகிரி மற்றும் ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் மோதல்களை ஊடகங்கள் விரிவாக விவாதித்துக் கொண்டுள்ளன. கருணாநிதிக்குப் பிறகு தலைமைப் பொறுப்பு அழகிரி அல்லது ஸ்டாலினிடமே வந்தடையும், இவர்கள் இருவரில் வெற்றி பெறப்போவது யார் என்ற நிலையே இன்று திமுகவில் நீடிக்கிறது.
அழகிரி, ஸ்டாலின், மற்றும், கனிமொழியை விட திறமையான பேச்சாளர்களும், நிர்வாகிகளும், திமுகவில் இருந்தாலும் இவர்களில் ஒருவர் கூட, அடுத்த கட்ட தலைவர்களாக கருதப்படுவது இல்லை என்பதே, திமுகவின் வீழ்ச்சி.
கருணாநிதிக்கு அடுத்தபடியாக ஒரு ஆகர்ஷிக்கப் பட்ட தலைவராக உருவான வைகோவை, தன் உயிரை பறிக்கத் திட்டமிடுகிறார் என்று குற்றம் சுமத்தி வெளியேற்றினார் கருணாநிதி. வைகோவுக்குப் பிறகு, திமுகவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் கட்டத் தலைவர்களே அற்றுப்போய் விட்டார்கள்.
அறிஞர் அண்ணா தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் மதியழகன், சம்பத், சிபி.சிற்றரசு, ஏவிபி.ஆசைத்தம்பி, டிகே.சீனிவாசன், என்.வி.நடராஜன், காஞ்சி கலியாண சுந்தரம் என்று பல்வேறு தலைவர்கள் இருந்தனர். ஒருவர் இல்லாவிட்டாலும் அடுத்தவரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் அளவுக்குத்தான் அன்று திமுக இருந்தது.
அழகிரியா, ஸ்டாலினா, கனிமொழியா என்ற மூன்று பெயர்களைத் தவிர்த்து திமுகவுக்கு அடுத்து தலைமையேற்க ஒரே ஒரு தலைவர் திமுகவில் உண்டா ? திராவிட இயக்கத்தின் வேராக இருந்த திமுக, திராவிட இயக்கத்தின் எச்சமாக இருக்கும் அதிமுகவைப் போலவே வீழ்ச்சியடைந்துள்ளது இன்று. திமுகவின் கொள்கைகள் சரியோ தவறோ… அது தமிழக அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாத ஒன்று. ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உழைப்பிலும், உயிர்த்தியாகத்திலும் உருவான இயக்கம் திமுக.
ஒரு ரயில் நிலையத்துக்கு தமிழ்ப்பெயர் வைப்பதற்காக தமிழகமெங்கும் இயக்கம் நடத்தி, துப்பாக்சிச் சூட்டைச் சந்தித்து உயிர்த்தியாகம் செய்த இயக்கம் திமுக. நேருவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக, தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி தடியடி பட்ட இயக்கம் திமுக. இப்படிப்பட்ட ஒரு இயக்கம், மாநிலத்தில் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு லட்சத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகையில் வாளாயிருந்திருக்குமா ? அறிஞர் அண்ணா அமைதி காத்திருப்பாரா ?
அந்த திமுகவின் இன்றைய நிலை வேதனையான வீழ்ச்சிதானே….
நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர்கள்.
ஒருபுறம் கலைஞரை விட இந்திராவின் அதிகமாக காலில் விழுந்தது எம்.ஜி.ஆர் தான்… மற்றொருபுறம் சர்காரியா கமிசனின் ஆஜராகி தாங்கள் கொடுத்துள்ள புகார்களுக்கு விளக்கம் அளியுங்கள் என்று எம்ஜிஆர்,க்கு சம்மன் அனுப்பிய போது, குற்றச்சாட்டுகள் அனைத்தும் தன்னுடையது அல்ல என்று பிறண்டு போன எம்.ஜி.ஆர்’ஐ குறிப்பிட்டே ஆக வேண்டும்.
எம்.ஜி.ஆரின் கவர்ச்சிகரமான அரசியலுக்கு பின்னால் தங்களை இணைத்துக்கொண்ட சாதியமும், மதவாதமும் திமுகவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததே, கலைஞர் பிறண்டு போனதற்கான சாட்சியங்கள். இதன் விளைவுகள் தான் திமுக கவர்ச்சிகரமான அரசியல் பாதைக்கு மடை மாற்றிவிட்டன…